தொடர்கள்
தொடர்கள்
நல்லதோர் வீணை செய்தே - 5 - வேங்கடகிருஷ்ணன்

20201027203141892.jpg

வசுந்தராவுக்கு என்ன ஆச்சு?

யதேச்சையாக.. நான் அன்று சீக்கிரமே அலுவலகத்திலிருந்து வந்துவிட்டேன்.

5 நிமிடம் சீக்கிரம் வந்தாலே மிகவும் சந்தோஷமடையும் என் மனைவி முகத்தில் சந்தோஷத்திற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. மாறாக குழப்பமும், அழுகையும் வெடித்துவிடும் நிலையில் இருந்தது. நான் ஏன் என்று கேட்டவுடன், அவள் கூறிய விஷயம் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

என் மனைவியின் ஒன்று விட்ட தங்கை வசுந்தரா. அவள் தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் என்ற செய்தி தான் அது. அவளும் என் மனைவியும் மிகுந்த நெருக்கமானவர்கள். அதனால் என் மனைவிக்கு இந்த விஷயம் பேரதிர்ச்சியாக இருந்தது.

“தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவளுக்கு என்ன பிரச்சனை? எல்லாவற்றையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளும் அவளுக்கு என்னிடம் கூட சொல்லிக்கொள்ள முடியாத அளவிற்கு என்ன விஷயம்?” என என் மனைவி திரும்பத் திரும்ப என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தாள்.

வசுந்தரா பேருக்கு ஏற்ப மிகவும் அழகானவள். அதிர்ந்து ஒரு வார்த்தைகூட அவளுக்கு பேசத் தெரியாது. மிகவும் பயந்த சுபாவம் . திருமணமாகி அவள் சென்ற இடமும் மிகவும் வசதியான இடமே. அவளின் மாமியார் குடும்பமும் அவளை நன்றாகவே பார்த்துக்கொண்டது. அழகான இரண்டு குழந்தைகள், கணவரோ கைநிறைய சம்பளம் வாங்குபவர். அவளின் கணவர் குடும்பமும் எங்களுடன் நல்ல உறவிலே இருந்தது. அவர் எங்களிடம் கூட மிக நன்றாக பழகுவார். எல்லோருக்கும் உதவி செய்பவர் என கேள்விப்பட்டிருக்கிறோம்.

நானும் என் மனைவியும் விரைந்து மருத்துவமனை சென்றோம். நல்லவேளை தவறாக ஒன்றும் நடந்துவிடவில்லை. வசுந்தராவின் உடன் பிறந்தவர்கள் ஐவரும் அருகிலேயே இருந்தனர். அனைவரும் வசுந்தராவின் கணவரிடம் பேசிக்கொண்டிருந்தனர். வசுந்தரா மருத்துவமனையில் யார் கேட்கும் கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. என் மனைவியைப் பார்த்ததும் அவள் விழியோரங்களில் கண்ணீர். அது, தான் பிழைத்திருக்கக் கூடாது என்பதை கூறியது... அதை நான் கவனிக்கத் தவறவில்லை. எனினும் நான் அங்கு எதையும் பேச விரும்பவில்லை.

இரண்டொரு நாட்கள் சென்றதும் நானும் என் மனைவியும் வசுந்தராவின் வீட்டிற்கு சென்றோம். அப்போது அவள் என் மனைவியிடம், தன் தற்கொலை முயற்சிக்கான காரணத்தைக் கூறி அழுத விஷயம், எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. நாங்கள் இவ்வளவு நாள் யாரை மிக கண்ணியமான, அன்பான கணவனாக நினைத்தோமோ, அவர் தான் இந்த தற்கொலை முயற்சிக்கு காரணம். அவர் பெரிய இடங்களில் தான் நினைத்த வேலைகளை முடித்துக்கொள்ள வசுந்தராவின் அழகை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி இருக்கிறார்.

அவர் நம் குடும்பத்தில் எடுத்த நல்ல பெயரால் தன்னை இவ்வாறு துன்புறுத்துகிறார் என்று ஜாடைமாடையாக வசுந்தரா தன் பெற்றோரிடமும் சகோதரர்களிடமும் கூறியும், அவர்கள் இவளை நம்பவில்லை. அதனால்தான் இந்த முடிவெடுத்ததாகவும், இனிமேலும் தன்னால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ முடியாதெனவும் அழுத்தமாகக் கூறினாள்.

நாங்கள் இருவரும் அவள் இனி தன் குழந்தைகளை மனதில் கொண்டு வாழவேண்டும் என்றும் நடந்த தவறுக்கும், அவளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை, மற்றும் அவளுக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் தேவையில்லை எனவும் கூறி தேற்றினோம். அது மட்டுமின்றி உடனேயே அவள் பிறந்த குடும்பத்தாரிடம் இதுபற்றி பேசி சட்டப்படி அவள் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வைத்தோம். பிறகு அவளையும் மன நல ஆலோசகரிடம் அழைத்துச்சென்று, அவளை அந்த மனக்காயத்திலிருந்து மீட்டோம்.

இன்று அவள் ஒரு சுதந்திரப் பறவையாக, ஆசிரியர் பணியில் சேர்ந்து ஒரு நல்லாசிரியராக இருக்கிறாள். தன் குழந்தைகளையும் நல் முறையில் வளர்த்து, அவர்களின் வாழ்க்கையில் அவள் ஒரு பெரும் பங்கை வகிக்கிறாள்.


20201027203459693.jpg

மன நல மருத்துவர் டாக்டர். ஸ்மிதா ராஜனிடம் இந்த கதையை பற்றியும், அந்த பிரச்சனையின் தீர்வு பற்றியும் கேட்டபோது அவரின் கருத்து இது.

மனைவியை ஒரு பண்டமாற்றாக உபயோகித்து காரியம் சாதிக்கும் வருந்தத்தக்க செயல் இந்தியா முழுவதும் வழக்கத்தில் இருக்கிறது. இதற்குக் காரணம் பெண்களை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும் ஆண்கள் இருப்பது மட்டுமல்ல, தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வழியில்லாமல் அதற்கு இணங்கிப்போய்விடும் பெண்களும் தான்.

இந்த கதையை பொறுத்தவரை இதற்கு சரியான வழி, நம்பிக்கையான ஒருவரை ஆதரவாக பற்றிக்கொள்வதுதான். அவர்களால் தான் உடலாலும் மனதாலும் அந்தப் பெண்ணிற்கு (இந்த கதையின் நாயகி வசுந்தராவிற்கு) ஆதரவு அளிக்க முடியும். தேவை எழும்போது உடனே இந்த ஆதரவு மனிதரை தொடர்பு கொள்வது மிகவும் அவசியம். அது உங்கள் உறவோ, நட்போ அல்லது தெரபிஸ்டாகவோ இருக்கலாம். இந்தக் கதையை பொறுத்தவரை வசுந்தரா ஒரு மனநல உதவி எண்ணையோ, இதற்கெனவே உள்ள சுய உதவிக் குழுவினையோ தொடர்புகொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. இங்கெல்லாம் தொடர்புகொண்டு, தங்கள் அடையாளம் மறைத்து பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள முடியும். தீர்வு உடனே கிடைக்காவிட்டாலும் மனதிலிருந்து பெரிய பாரம் குறைந்து, ஒரு நிம்மதி பிறக்கும். தற்கொலைக்கு தூண்டும் எண்ணங்கள் மனதில் தோன்றாது. இது போன்ற குழுக்களிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பரைப் போல் வீட்டிற்கு வந்து கண்காணிக்கவும், பிரச்சனையை புரிந்து கொள்ளவும் தன்னார்வலர்கள் முன் வருவார்கள். இது போன்ற குழுக்கள் இந்தியா முழுவதும், கிராமங்களில் கூட இருக்கின்றன.

மனநல மருத்துவ மொழியில், தவறுசெய்வதன் மூலமோ, மற்றவர்களை துன்புறுத்தியோ அதில் சந்தோஷம் அடைபவர்களுக்கு சாடிஸ்ட் என்று பெயர். ஆகையால் இந்த கதையில் வரும் வசுந்தராவின் கணவருக்கும் ஒரு மனோதத்துவ நிபுணரின் உதவி நிச்சயம் தேவை படுகிறது. ஒருவரை தன் செயல் முடிக்க ஒரு கருவியாகவோ, தூண்டில் புழுவாகவோ உபயோகப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு அவர்களும் உடன் பட வேண்டும் என்பதால், இது அவர்களின் சம்மதத்தோடுதான் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளப்படும்.

ஒரு பாடி தெரபிஸ்ட் (body therapist) என்ற முறையில் என் கருத்து என்னவென்றால் பெண்களுக்கு, அவர்கள் உடம்பே அவர்களுக்கு கோயில். ஒரு DMT (Dance movement therapist) என்ற வகையில் நான் சொல்வது, உங்கள் உடம்புக்கு அதிகாரம் அளியுங்கள். உங்கள் உடம்பை ஓர் கோவிலாக கொண்டாடுங்கள். அதில் உணர்வு பூர்வமாக, உடல் சார்ந்து என்ன நடக்க வேண்டும் என்பது உங்களின் மனது - உடம்பு கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். இது போன்ற, வெளியிலிருந்து நிகழ்த்தப்படும் துன்புறுத்தல்கள் / அத்துமீறல்கள் குறித்து உங்களால் ஒரு நிலைப்பாடு எடுக்க முடிதல் வேண்டும். அது, உங்கள் மனது, உடம்பு கட்டுப்பாட்டினால் மட்டுமே நிகழும்.

உங்கள், கணவருக்கோ / மனைவிக்கோ உங்கள் உடம்பின் மேல் கட்டுப்பாடு இருப்பதாக நீங்கள் நினைக்கும் வரையில் இவ்வாறு பணிந்துபோய் அவர்களுக்கு உடன் படுவதைத் தவிர வேறு வழியில்லை. நமது உடம்பை கோவில் போல நாம் மதித்தால் தான் மற்றவரும் அதை மதிப்பார்கள். அதில்லாமல் அவர்தானே / அவள்தானே என்று நாம் சொல்லும்போது, அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆகிவிடும். ஆகையால் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படுதல் என்பது வெறும் பொருளாதார அதிகாரம் மட்டும் அல்ல. அந்த பெண்ணுடைய ஆளுமையும், அவர்கள் உடம்பின் மீதான அதிகாரமும் சேர்ந்ததுதான். இல்லை என்று சொன்னால், நிச்சயமாக அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இல்லையென்றால், இல்லை தான். திருமண பந்தத்திலும் இருவருக்கிடையேயான எல்லைகள் நிச்சயம் வகுக்கப்படவேண்டும். ஒரு தெரபிஸ்ட்டாக இங்கு நான் சொல்வது, குற்றம் செய்தவர் தண்டனை பெறுவதைவிட முக்கியம், அவர்கள் மனதளவில் திருந்தவேண்டும் என்பது தான். ஒரு மனோதத்துவ நிபுணரின் உதவி கண்டிப்பாக அந்த கணவருக்கு தேவை. கணவன் - மனைவிக்கு இடையேயான உறவு சிக்கல்கள் சரி செய்யப்பட்டு, அந்த உறவு நல்ல வகையில் தொடர நிறைய வாய்ப்பு இருக்கிறது.

இதில் மனைவியும் தவறு செய்யக்கூடும். அவளுடைய அதிகபட்ச பாலியல் தேவைக்காக வெளியே வேறு உறவினை நாடவும் கூடும். ஆகவே இது ஆண், பெண் இருவருக்கும் நடக்கக்கூடும். இதற்கு அவர்கள் ஒரு தெரபிஸ்டிடம் போகவேண்டும். விவாகரத்து செய்யவேண்டிய அவசியம் இல்லை. எவ்வளவு விரைவாக இது சரி செய்யப்படுகிறதோ, அவ்வளவு விரைவாக அந்த உறவு சீராகும். அதே சமயம் ஒவ்வொரு பெண்களுக்குள்ளும் நமது உடம்பு, நமது கோயில், இதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்குத்தான் இருக்கிறது என்கிற கருத்து மனதிலும் உருவாதல் அவசியம்.

‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்பதை மீறி எனக்கு என் உரிமைகள் உண்டு என்பதை ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டும். இதை நமது பெற்றோர்கள் மற்றும் நமது கல்வி முறையால்தான் சரி செய்ய முடியும். இந்த கதை அழகாக சொல்வதும் இதே கருத்தினை தான்.