நான் பருவமழை , நான்கு வார்த்தை பேச வந்தேன்
நற்றமிழர் அனைவருமே தமிழோடு நலம்தானா ?
பொற்காலம் என்றெல்லாம் அந்நாளில்
பொய்க்காமல் திங்களிலே மூன்று முறை பொழிந்து வந்தேன்
மும்மாரி என்றெல்லாம் மகுடமிட்டார் அந்நாளில்
‘மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்’ என்றெல்லாம் பாடி வைத்தார்
மண்குளிர பொழிந்த போது மக்கள் எல்லாம் மனம் குளிர்ந்தார் .
மகசூலை பெருக்கி விட்டு பசியின்றி வாழ்ந்து வந்தார்
அந்நாளில் மாமன்னர், நான் தங்கி ஓய்வெடுக்க
ஆங்காங்கே ஏரியென்றும் குளமென்றும் அமைத்து வைத்தார்
பாய்ந்து வந்து பலன் கொடுக்க ஆறென்றும் நதியென்றும்
வாய்க்கால்கள், கால்வாய்கள் திட்டமிட்டு கட்டமைத்தார்
அளவோடு பகிர்ந்து கொள்ள அணைகளையும் கட்டி அதை
அன்றாடம் பராமரித்து கண் போல காத்து வந்தார்
நீரோட அவர் அமைத்த பாங்கான பாதையிலே
ஆறாக நானோடி அனைவரது தாகம் தீர்த்தேன்
ஏரோட்டும் உழவர்களின் ஏற்றத்தைக் காண்பதற்கும்
ஆலோலம் பாடிக் கொண்டு வயல் நோக்கி பயணித்தேன்
ஊரார்க்கு உயிர் கொடுத்தேன், பயிர்க்கெல்லாம் பால் வார்த்தேன்
எல்லோரும் தெய்வமென எனை வணங்க மகிழ்ந்திருந்தேன்
இந்நாளில் என் மீது ஏதேதோ பொய்மொழிகள்...
இடியோடு மின்னலைப்போல் என் இதயம் தாக்கினவே
உயிர்களை நான் பறித்தேனாம்; உடமைகளை அழித்தேனாம்
ஊரெல்லாம் வெள்ளம் என்ற வடிவில் வந்து சிதைத்தேனாம்
அந்நாளில் மழைவரும் நாள் மாதவனும் அறியாரே
இந்நாளில் அப்படியா,எத்தனையோ விஞ்ஞானம்
காற்றழுத்தம் மையம் கொள்ளும் கடல் எங்கே?இடம் எங்கே?
கடுமையான புயலாகி எத்திசையில் நகர்ந்து வந்து
எத்துணை வேகத்தில் எங்கெங்கு தாக்கும் என்று
அத்துணை விவரங்களையும் விஞ்ஞானம் கணக்கெடுக்க
துல்லியமாய் ஊடகங்கள் துப்பறிந்து தெரிவித்தும்
தூக்கத்தில் ஆழ்ந்து விட்டால், துயருக்கு நான் பொறுப்பா?
ஊராண்ட நல்லவர்கள் திட்டமிட்டு கட்டமைத்த
ஆறுகளில் மணற்கொள்ளை, அணைகளிலோ கதவில்லை
ஏரிகளில் கரை இல்லை, கரை இருந்தால் உடையும் நிலை
நதியெல்லாம் நகரமயம், வழியெல்லாம் கான்கிரிட் குன்று
வாய்க்காலில் தூர்வாரும் நிலை இல்லை, நினைவில்லை
வயலெல்லாம் மூழ்கினாலும் வடிவதற்கு வழியில்லை
நான் தங்கி இருப்பதற்கும், நாள் பார்த்து வருவதற்கும்
நல்லோர்கள் அமைத்ததெல்லாம் சுயநலத்தால் அழித்து விட்டால்
எந்த வழி நான் வருவேன், எப்படித்தான் பலன் தருவேன்
கண்டபடி பாயவிட்டால் கண்ணீர்க்கு நான் பொறுப்பா?
பாரெல்லாம் படைத்தெடுத்து வளர்க்கின்ற தாய் நானே
பெற்றவளே,பிள்ளைகளின் இன்னுயிரை அழிப்பேனா?
நன்கு சிந்தியுங்கள், நலம் காண விழையுங்கள்
சுயநலத்தை விட்டொழித்து,சீராக வாழ்வதென்றால்
வளமெல்லாம் நான் கொடுத்து,வாழ்வெல்லாம் நான் காப்பேன்
இல்லமெல்லாம் பால் பொங்கி மகிழ்ந்திருக்க வழியமைப்பேன்
நீரின்றி உலகமில்லை, நெஞ்சில் இதை மறவாதீர்
Leave a comment
Upload