அழைப்பு மணியின் ஓசையைக் கேட்டதும், கண்களைத் திறந்து கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தேன்.
காலை மணி பத்து. எழுந்து போய், கதவைத் திறந்ததும், ரெகுலராக மளிகை சாமான் கொண்டு வருபவர், உள்ளே வந்தார்.
“சார், இந்த மாதம் உங்கள் வீட்டுக்குத் தேவையான மளிகை சாமானை சூப்பர் மார்க்கெட்டிலிருந்து கொடுத்து விட்டாங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பலானார்.
“பில்லைக் குடுங்க, காசு தரேன். வாங்கிட்டுப் போயிடுங்க” என்றேன்.
அவரோ, “காசா? அப்படின்னா என்ன? நான் ‘விரதம்’. இன்னிக்கு அதெல்லாம் சாப்பிட மாட்டேன்” என்று என்னை குழப்பிவிட்டு போய்விட்டார்.
குழப்பத்துடன் கதவை பூட்டப்போன என்னிடம், “சார் அம்மா ஊருக்குப் போய் மூணு மாதம் ஆச்சு, இன்னும் வரலீங்களா?” தேங்காயும், கத்தரிக்காயும் கொண்டு வந்திருக்கேன். தலைச்சுமை ஜாஸ்தியா இருக்கு. ஒரு கை தாங்கி எறக்கி உடுங்க சார்” என்றாள், வழக்கமாக காய் கொண்டுவரும் பாட்டி.
“எனக்கு ஒரு ஆளுக்கு என்ன, கால் கிலோ கத்தரிக்காயும் ஒரு தேங்காயும் குடு” என்று சொல்லிவிட்டு, பணம் எடுக்க உள்ளே போனேன்.
“எவ்வளவு ஆச்சு?” என்று கேட்டுக்கொண்டு வெளியே வருவதற்குள், கூடையை எடுத்துக்கொண்டு கண்மறையும் தூரம் போயேவிட்டாள். சரி, அடுத்த தடவை, சேர்த்துக் கொடுக்கலாம் என்று காய்களை உள்ளே எடுத்து வைத்தேன்.
பல் தேய்த்து, முகம் கழுவிக் கொண்டிருந்த என்னை, “ஸார்” என்று அழைத்தபடியே, பேப்பர் ஏஜென்ட் வாசலில் நின்று கொண்டிருந்தார்.
‘இதோ வரேன்” என்ற என்னிடம், “சார், போன மூணு மாதமா போட்டிருந்த பழைய பேப்பர்களை கட்டி வைங்க. நாளைக்கு நான் “குட்டியானை” வண்டியைக் கொண்டு வரேன். அதிலேயே, உங்க பேப்பரையும் கட்டி ஏத்திடலாம்” என்றார்.
கிளம்பப் போனவரிடம், “பேப்பர் காசை வாங்கிட்டுப் போயிடுங்க” என்ற என்னை, வினோதமாக பார்த்தபடியே, “காசா? அப்படீன்னா என்ன?” என்றவர், நான் சுதாரிக்கும் முன்பே போய்விட்டார்.
“ஏன் சார், இவ்வளவு நேரம் தூங்கிட்டீங்களே? உடம்பு சரியில்லையா? மாமி ஊருக்கு போனதிலிருந்து வேளா-வேளைக்கு சாப்பிடாம உடம்பை கெடுத்துக்கிறீங்க. நான் காலையிலேயே இரண்டு வாட்டி வந்துட்டேன். நீங்க எந்திரிக்காததாலே, பாலை திரும்ப எடுத்துகிட்டுப் போயிட்டேன்” மூச்சு விடாமல் சொல்லிவிட்டு, வழக்கம் போல் ஒரு சின்ன பாத்திரத்தில் பாலை ஊத்தினாள், பால்காரி மாரியம்மா.
“ஐந்து ரூபாய்க்குத்தானே பால் ஊத்தியிருக்கே?” - என்று கேட்ட என்னிடம், ‘அது என்ன ரூபாய்?’ என்று அதிசயமாக கேட்டாள். “போய் காஃபியை போட்டு குடிங்க சார், அப்போதுதான் தூக்க கலக்கம் சரியாகும்” என்று அறிவுரை சொல்லியபடி சென்றுவிட்டாள்.
சூடாக காஃபியை போட்டு வைத்துக்கொண்டு, அன்றைய செய்தித்தாளை படிக்க ஆரம்பித்தேன். தலைப்புச் செய்தியே, அதிர்ச்சியை கொடுத்தது.
“தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து “கூட்டாட்சியை” அமைக்க ஒப்புக்கொண்டன”. அந்த அடிப்படையில், முதலமைச்சராக எந்த எம்.எல்.ஏ வேண்டுமானாலும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவருக்கு எந்த அதிகாரமோ இலாக்காவோ கிடையாது.
வெற்றி பெற்ற, அனைத்துக்கட்சியினை சேர்ந்தவர்களுக்கும், மொத்தமுள்ள ஐம்பது மந்திரிப் பதவிகளும், “சீட்டுக் குலுக்கல்” முறையில் எடுக்கப்பட்டு, இலாக்காக்கள் பிரித்துக் கொடுக்கப்படும். ஒவ்வொரு அமைச்சரும், சீட்டுக்குலுக்கல் முறையில், மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை, துணையமைச்சர்களாக அமர்த்திக் கொள்ள வேண்டும். அமைச்சர் அல்லது துணையமைச்சர்களிடம் “ஊழல் புகார் அல்லது மந்தமான செயல் திறன்” நிரூபிக்கப்பட்டால், சம்மந்தப்பட்டவரின் தொகுதியில், அவருக்கு அடுத்தபடியாக ஓட்டு வாங்கி, அவரிடம் தேர்தலில் தோற்றவர், அவ்வமைச்சரின் பதவியினை ஏற்றுக் கொள்ளுவார்.”
தேர்தலில், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளரே, ஆளுனராகி, மற்ற அமைச்சர்களுக்கு, பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று செய்தி போட்டிருந்தது.
செய்தித்தாளை படிக்கப்படிக்க ஆச்சரியத்தில் கண்கள் மலர்ந்தன. என்னை நானே ஒரு தடவை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். அதற்குள், பசி வயிற்றைக் கிள்ளியது.
கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பகல் பன்னிரெண்டு. அலை பேசியை எடுத்து “ஆன்லைன்” மூலமாக, ஒரு வெஜிடேரியன் சாப்பாடு ஆர்டர் பண்ணிவிட்டு, செய்தித்தாளில் படித்தது உண்மையா இல்லை பிரமையா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில், “ஆன்லைன்-சர்வீஸின்” டெலிவரி பையன், வாசலில் இருந்த படியே என்னிடம் ‘ஃபுட்-பார்சலை’ நீட்டினான். ‘பில் எவ்வளவு’ என்று கேட்ட என்னை, வினோதமாக பார்த்தபடியே, ‘பில்லா?’ என்று கேட்டுவிட்டு, அவன் வந்த பைக்கில் ஏறி, சிட்டாய் பறந்துவிட்டான்.
“ஐயோ! இங்கே என்ன நடக்கிறது? ‘அடப் பரந்தாமா’ என் மண்டையே வெடிச்சுடும் போலிருக்கே” என்று என்னுள் இருந்து ஆன்மா அலறியது.
அடுத்த நொடி, வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து “நாரதர்” வேஷம் போட்டபடியே, கையில் தம்புராவுடன் ஒருவர், இறங்கி என்னை நோக்கி வந்தார்.
வந்தவர் ரொம்பக் கூலாக, “இப்போது நீங்கள்தானே “பரந்தாமா” என்று கூப்பிட்டீர்கள். ‘மகாவிஷ்ணு’ இன்னமும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருப்பதால், ஶ்ரீதேவி நாச்சியார் என்னை அனுப்பி, உங்கள் குறைகளை கேட்டுவரச் சொன்னார்கள். ஏன் பரந்தாமனை அழைத்தீர்கள்?” அவர் பேசிமுடித்தார்.
“என்ன கண்றாவிடா இது, என்னடா நடக்குது இங்கே?” என்று நினைத்தேன். என் மைண்ட் வாய்ஸை கேட்டுவிட்ட நாரதரோ, தன் அதரங்களில் புன்னகையை தவழவிட்டுக்கொண்டே, சொல்லத் தொடங்கினார்.
“ஐயா, இப்போது நடக்கும் ‘கல்பம்’ (பிரம்மாவின் பகல் பொழுது) ஸுவேத வராக கல்பம் என்று பெயர். இந்த கல்பத்தின் ஏழாவது ‘மன் வந்திரத்தை, ‘வைவஸ்வத – மன் வந்திரம்’ என்பர்.
ஒவ்வொரு மன் வந்திரத்திற்குள்ளும் பல சதுர்யுகங்கள் இருக்கும். அதன்படி, இந்த வைவஸ்வத மன்வந்திரத்துள், இருபத்தொன்பதாவது ‘சதுர் யுகம்’ நடக்கிறது.
ஒவ்வொரு சதுர்யுகத்துள்ளும், நான்கு யுகங்கள் உள்ளன. அதில் நான்காவது யுகமான கலியுகத்தின், 5123ஆம் ஆண்டில்தான் தாங்கள் இப்போது வசித்து வருகின்றீர்கள்” என்றார்.
பேசிக்கொண்டே போனவரிடம், “என்ன சார் கதை விடுறீங்க? காலண்டரை நல்லாப் பாருங்க, மே மாசம் 2021ன்னு போட்டிருக்கா? இப்போதான் பேப்பர்லே தமிழகத்திலே ‘சர்வ கட்சி ஆட்சின்னு’ போட்டிருக்கிறதை படிச்சுட்டு குழப்பத்திலே இருக்கேன். இதுல நீங்க வேற காலண்டரையே மாத்தி, வருஷத்தையும் போட்டு சொதப்பிறீங்களே” என்று சற்று எரிச்சலோடு கேட்டேவிட்டேன்.
உடனே நாரதரோ, “சார், உங்க சம்சாரம், உங்களோட மருமகளுக்கு பிள்ளைப்பேறுகால உதவிக்காக, பிள்ளை வீட்டுக்குப் போய் மூணு மாசத்துக்கும் மேல ஆயிடுச்சு. இங்கே தனியா இருக்கிற நீங்க, சரியான நேரத்துக்கு சாப்பிடறது, தூங்கறதுன்னு இல்லாம, சும்மா டிவியே கதின்னு, ஒரு நாளைக்கு மூணு சினிமாப்படம் பாக்கறீங்க. நேத்திக்கு ராத்திரி, டைரக்டர் ஶ்ரீதரின் – ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சினிமாவை பார்த்தீங்களா? அப்படியே நேற்று இரவு தூங்கும் முன்னர், உங்களுக்கும், உங்களுடைய பூர்வ ஜென்ம நினைவுகள் வந்தால் எப்படியிருக்கும்னு கற்பனை பண்ணிகிட்டே தூங்கிப் போயிட்டீங்க.
அதுதான், போன 28ஆவது கலியுகத்தில, நீங்கள் வாழ்ந்தப்போ, நடந்த, பூர்வ ஜென்ம நினைவுகளும், பழக்கங்களும், உங்களுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டன. நீங்களும் அதெல்லாம், இந்த 29ஆவது கலியுகத்தில், நடப்பதாக எண்ணி உங்களை குழப்பிக்கிறீங்க” என்றார்.
அவர் இப்படிச் சொல்ல... மேலும் குழம்பிப் போனேன். அவரே தொடர்ந்து சொன்னார்...
“போன 28ஆவது கலியுகத்தில், ‘பணம்’ தான் எல்லாம். போட்டி, பொறாமை, கொலை, கொள்ளை, ஜாதி மற்றும் இன வேறுபாடுகள், மதச்சண்டைகள், பொய், திருட்டு, நேர்மையற்ற பல அரசியல்வாதிகள், ஒழுக்கமற்ற பல ஜனங்கள், ஒற்றுமையில்லாத பல உறவுகள், உண்மையில்லாத பல நட்புகள், மாசடைந்த சுற்றுச்சூழல், மன அல்லது உடல் வியாதிகள், இயற்கை மற்றும் செயற்கை பேரிடர்கள் – என்று அனைத்து துன்பங்களும் பரந்து-விரிந்து இந்த பூமியில் இருந்தது. கூடவே, கொரோனா - கிருமியும் இருந்தது.
ஆனால், இந்த 29ஆவது கலியுகத்தில், மேற்சொன்ன எதுவுமே இந்த பூமியில் கிடையாது. ‘அன்பு’ மட்டுமே எங்கும் நிலவுகிறது. அதுமட்டுமல்ல, ‘பணம்’ என்ற வார்த்தைக்கே இப்பூமியில் இடமில்லை” என்றார்.
நாரதர் சொன்னதும்தான், காலையிலிருந்து யாருமே ஏன் ‘காசு-பணம்’ கேட்கவில்லை என்று புரிந்தது.
“சரி நான் கிளம்பட்டுமா” என்று சொல்லிவிட்டு, நாரதர், அவர் வந்த காரில் ஏறி போய்விட்டார்.
வாசல் கதவைப் பூட்டிவிட்டு, வீட்டுக்குள் வருவதற்காக திரும்பினேன். என்ன ஆச்சரியம்!!! எனது கை-கால்களும், உடம்பும், அப்படியே காற்றில் கரைந்து, உருத்தெரியாமல் அழிந்து போனது!!!
அடுத்த வினாடி...
அழைப்பு மணியின் ஓசை கேட்டது. கண்களைத் திறந்து கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தேன். காலை மணி பத்து. ‘அட, இவ்வளவு நேரம், கண்டதெல்லாம் வெறும் கனவா?’ என்று எண்ணியபடியே, எழுந்து போய், கதவைத் திறந்ததும், ரெகுலராக மளிகை சாமான் கொண்டு வருபவர், உள்ளே வந்தார்.
“ஸார், நீங்க கொடுத்த லிஸ்டுபடி, மளிகை சாமானை கொண்டு வந்திருக்கேன். பில், மூவாயிரத்து ஐநூறு ரூபாய். இப்பவே காசைத் தர்றீங்களா” என்றார் ‘சூப்பர் மார்க்கெட்டின்’ ஸர்வீஸ்-மேன்.
வாசலில் போட்டு வைத்திருந்த அன்றைய செய்தித்தாளை எடுத்துப் பார்த்தேன். முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக, “தமிழகத்திலும் ஆட்சி அமைப்பதில் இழுபறி – எம்.எல்.ஏக்களுடன் குதிரை பேரம்” என்று போட்டிருந்தது.
“ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த தொழிலதிபர் தலைமறைவு” என எழுதியிருந்த செய்திக்கு கீழே, “கணவன் – மனைவி சண்டையில் சமாதானம் செய்யப் போனவருக்கு அரிவாள் வெட்டு” என்று கட்டம் கட்டி, நியூஸ் போட்டிருந்தார்கள்.
செய்திகளை படித்ததும், மனதில் ஏற்பட்ட ரௌத்திரத்தால், ‘பேசாம இந்த 28ஆம் கலியுகம் முழுவதும் தூங்கிவிட்டு, 29ஆவது கலியுகம்”] தோன்றியதும் எழுந்திருக்கலாம்’ என்று முடிவு செய்து, மீண்டும் போர்வைக்குள் புதைந்தேன் நான்!
Leave a comment
Upload