தொடர்கள்
அனுபவம்
மயக்கும் மப்புட்டோ! - மகேஷ் லக்ஷ்மி நாராயணன்

மூணு நாலு வருஷமாவே என் மகன் மொஸாம்பிக் வரச் சொல்லி கூப்பிட்டுகிட்டே இருந்தான். இந்த முறை நான் சரின்னு சொல்ல, ஜூலை 31 அன்று நானும் என் மனைவியும், மருமகள் மற்றும் பேத்தியுடன் கிளம்ப அனைத்து ஏற்பாடுகளையும் என் மகன் செய்தான்.

ஆகஸ்ட் 1 விடிகாலை கத்தார் ஏர்வேஸ்ல பயணம் ஆரம்பித்தோம். சென்னைலேருந்து தோஹா நாலரை மணி நேர பயணம். ஏர்போர்ட்ல நுழைஞ்ச உடனே செக்யூரிட்டி செக்!.

அந்த ஏர்போர்ட்ல ஒரே ஒரு ஹோட்டல்தான் இருக்கு. நாங்க போனப்ப அதுல ரூம் கிடைக்கல. வெளியில போய் தங்கறதும் கஷ்டம், அதனால லாஞ்சுலயே இருக்கறதா முடிவாச்சு. லாஞ்சுல இருபது மணி நேரம் காலத்தை ஓட்டணும்.
ஹமாத் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் பிரம்மாண்டமா இருக்கு. பல கடைகள், உணவகங்கள், குழந்தைகளுக்கு விளையாடறதுக்கு ப்ளே பார்க் முதற்கொண்டு சகல வசதிகளும் இருக்கு. ரெஸ்ட் ரூம், குளியல் அறைகள் ரொம்ப சுத்தமா பரமாரிக்கறாங்க. ஆனால் இண்டர்நெட் வசதி மட்டும் இல்லை.
இருபது மணி நேரம் போனதே தெரியலை. அடுத்த ப்ளைட்டு, எட்டு மணி நேர பயணம். டென்ஷன் இல்லாமல் ஃப்ரீயா உட்கார்ந்தோம். திடீர்னு என் மனைவி “எந்திரிங்க.. எந்திரிங்க..!” அப்படின்னு உலுக்கறா.

“என்ன ஆச்சு?”ன்னு கேட்டா...

“மப்புட்டோ வந்துட்டோம் லக்கேஜை எல்லாம் பார்த்து இறக்குங்க .! நீங்க தோஹால தூங்க ஆரம்பிச்சவர்தான்”னு சொல்ல...

மப்புட்டோல இறங்கி... அங்கேயும் செக்யூரிட்டி செக், இமிக்ரேஷன் முடிஞ்சு பாஸ்போர்ட்ல மொஸாம்பிக் எண்ட்ரின்னு முத்திரை வாங்கிண்டு ஒருவழியா வெளியே வந்தோம். அங்கே என் பையன் காரை வச்சுண்டு தயாரா இருந்தான்.
சென்னையைவிட மப்புட்டோ 3.30 மணி நேரம் பின் தங்கி இருக்கும். அதனால் பெரிய அளவில் ஜெட் லாக் இருக்காது.

சரி...

முதல்ல மொஸாம்பிக் பற்றி மேலோட்டமா பார்த்துடுவோம் –
தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள்ல தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, தான்ஸானியா ஆகிய நாடுகளுக்கு மத்தியில மொஸாம்பிக் இருக்கு இதோட தலைநகரம் மப்புட்டோ.

வாஸ்கோடகாமா 1498ல் இந்நாட்டை கண்டுபிடிச்சப்புறம், படிப்படியா போர்ச்சுக்கீசியர்கள் இங்கு குடியேறிட்டாங்க. அப்புறமா அங்கு இருந்த அனைத்து அரபு சுல்தானங்களையும் கைப்பற்றி தங்களோட காலனி ஆதிக்கத்தின் கீழ கொண்டு வந்துட்டாங்க. 1975-ல் போர்ச்சுக்கல் காலனி ஆதிக்கத்துலேருந்து மொஸாம்பிக் முழுமையா விடுதலை அடைஞ்சது. Muça Alebique (முக்கா அலபிக்) என்ற சுல்தானின் பெயரை தழுவி மொஸாம்பிக்னு இந்த தேசத்த அழைக்கறாங்க. இந்த நாட்டோட முதல் பிரஸிடெண்ட் Samora Moisés Machel. அவருக்கு நகரின் மத்தியில சிலை இருக்கு.

20211015202015916.jpeg
இங்க போர்ச்சுகீஸ் மொழி அரசு மொழியா இருக்கு. சீனர்களும், இந்தியர்களும் அதிக அளவுல இருக்காங்க.

ரோடு எல்லாம் சுத்தமாவும் ஒழுங்கா இருக்கு. மப்புட்டோ, மொஸாம்பிக்கோட தலைநகரம்ங்கறதால ரொம்ப கவனம் எடுத்து பராமரிக்கறாங்க. ரோடு எல்லாம் வசதியா இருக்கறதால கார் ஓவர் ஸ்பீடுல போனா கோழி மாதிரி அமுக்கிடுவாங்க. ரோடு ரூல்ஸை எல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணனும்.
இங்கே இருக்கற மரங்கள்லேருந்து காய்ந்த சருகுகள் கூட கீழே விழாது. காரணம் இலையுதிர் காலம் வர்றதுக்கு முன்னாடியே ரோடு ஓரமா இருக்கற மரங்களை எல்லாம் ஒரு இலை விடாம சுத்தமா கிளை கிளையா வெட்டி விட்டுடுவாங்க. இலையுதிர் காலம் முடிஞ்சதும் எல்லாம் துளிர் விட்டு பார்க்க அழகா இருக்கும்.
இங்கே இருக்கற ஜனங்கள் ரொம்பவும் அன்பா பழகறாங்க. இவங்களோட வாழ்க்கை முறை வாரம் முழுவதும் கடுமையா உழைக்கறது. சனி ஞாயிறுகளில் ரொம்ப ஜாலியா சுத்தறதுன்னு இருப்பாங்க. பிராய் அப்படிங்கற கரி அடுப்பை எடுத்துகிட்டு வெளியில போய் அங்கேயே சமைச்சு சாப்பிட்டு, சரக்கு அது இதுன்னு கொண்டாட்டம்தான்.

இங்கே ரொம்ப நீளமான கடற்கரை இருக்கு... கடல் தண்ணி காலை நேரத்துல கரை வரைக்கும் இருக்கும், மதியத்துக்கு மேல 500 அடி உள்வாங்கிடும். இங்க உள்ள மக்கள் காசு இருந்தா கல்யாணம் பண்ணுவாங்களாம். இல்லைனா சேர்ந்து வாழ்வாங்களாம். இருவருக்கும் குழந்தை பிறந்தால், அது சட்டபூர்வமான கல்யாணமாகிடும். கிறிஸ்துவ மதம்தான் பிரதானம். இங்க கிறிஸ்துமஸ் தவிர வேறு பண்டிகைகள் கிடையாது.

இங்க மக்கள் ஒண்ணு பரம ஏழையா இருப்பாங்க. இல்லேன்னா பெரிய பணக்காரங்களா இருப்பாங்க. பப்ளிக் டிரான்ஸ்போர்ட் அந்த அளவுக்கு சொல்லிக்கறா மாதிரி கிடையாது. நம்ம ஊர் ஷேர் ஆட்டோ மாதிரி ஷாப்பா அப்படின்னு வேன் வரும். எப்போவாவது பப்ளிக் பஸ் வரும். மத்தபடி கால்நடைதான். இங்கே டூ வீலர்ல யாரும் போறதே கிடையாது. கார்தான் பிரதானம். டிரெயின் சர்வீஸ் எல்லாம் சொல்லிக்கற மாதிரி கிடையாது..
காய்கறி, பழங்கள், பால் இப்படி முக்கியமான அயிட்டங்கள் தென் ஆப்ரிக்காலேருந்து இறக்குமதி ஆயிட்டே இருக்கும்.

சாலைகளில் ஓரத்தில் ஓவியர்கள் கண்கவர் ஓவியங்களை வரைந்து விற்பனை செய்யறாங்க.

மரத்தாலான சிற்பங்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கலைப் பொருட்கள், கிளிஞ்சல், சங்கு கலைப்பொருட்களை ஆங்காங்கே விற்பனை செய்யறாங்க.

மப்புட்டோவுல நிறைய தமிழர்கள் இருக்காங்க. தமிழ்ச் சங்கம் கூட இருக்கு.
மப்புட்டோவுல 60 வருடமான ஒரு சிவன் கோவில் இருக்கு.. இங்கே ஒரு வட இந்தியர் குருக்களா இருக்கார்.

20211015202444382.jpeg
கானா கஸானா அப்படிங்கற ஓட்டல் இருக்கு. இங்கே இந்திய உணவுகள் கிடைக்கும். சூடாவும் சுவையாவும் இருக்கு.
20211015202523612.jpg
கேலக்ஸி இண்டர்நேஷனல் அப்படிங்கற இன்னொரு இந்திய உணவகத்துக்கும் போயிருந்தோம். இங்கேயும் உணவு சூடாவும் சுவையாவும் கிடைக்கும்.
பையா மால் அப்படிங்கற ஷாப்பிங் மால் கடற்கரையை ஒட்டி இருக்கு. இங்கே கிடைக்காத விஷயமே இல்லை.

நமாஷா அப்படிங்கற ஊர்ல ஒரு உயிரியல் பூங்கா இருக்கு. வட இந்தியர் பெரிய அளவுல செலவு பண்ணி ஆரம்பிச்சிருக்கார். மிருகங்கள் கம்மி தான்.
20211015202710485.jpg
நமாஷா போற வழியில ஒரு நீர்வீழ்ச்சி இருக்கு. ரொம்ப பெரிசு இல்லேன்னாலும் இயற்கை சூழல் நல்லா இருக்கு.
20211015202811169.jpg
அடுத்து பிலேன். இது ஒரு அழகான ரிசார்ட். இங்கே ரூம் எடுத்து ஒரு நாள் தங்கினோம். கடல்ல அலையே இல்லாம ஏரிக்கரை மாதிரி அமைதியா இருக்கு. இது ஒரு பேக் வாட்டர் ஏரியாவாம். இரவு நேரத்தில் பார்க்க கண்கொள்ளா காட்சியா இருந்தது. காலைல சூரியோதயம் பார்க்க அதைவிட பிரமாதமா இருக்கு.

20211015203305210.jpg

கைவினை கலைஞர்கள் கடற்கரையை ஒட்டி ரூம் வாசல்லயே வந்து கைவினைப் பொருள் செஞ்சு தர்றாங்க.

இந்த பேக்வாட்டர்ல ஒரு கிலோமீட்டர் தூரம் போட்ல போனால் ஒரு தீவு மாதிரி இடம் இருக்கு. மலை சூழ்ந்த இடம் பார்க்க அழகா இருக்கு. ஆள் அரவமற்று அமைதியான இடம். குழந்தைகள் பரந்து விரிந்து இருக்கும் மணல் பகுதியில் ஜாலியா விளையாடினாங்க அந்தப் பக்கம் ஆர்ப்பரிக்கும் இந்துமாக்கடல் இருக்கு.

20211015203852435.jpg
அடுத்து சாலமங்கா. இங்கே நதிக்கரைல சிவன் கோவில் இருக்கு. இது நூறு வருஷங்களுக்கு மேல பழைமையான கோவிலாம். இங்கே ராமர், சீதை, லஷ்மணர், ஆஞ்சநேயர் மூர்த்திகள் இருக்கு. இங்கே இருக்கற அரச மரம் ரொம்ப பிரம்மாண்டமா இருக்கு. தினமும் மதியம் அன்னதானம் நடக்கறது. நம்ம இந்திய உணவு சுடச்சுட பரிமார்றாங்க. இங்கேயும் ஒரு வட இந்தியர் அழகா பராமரிக்கறார். நூறாண்டுகளுக்கு முன்னாடி ஒரு பாபா இங்கே வந்து தவம் பண்ணினதா சொல்றாங்க. இங்கே கோவில் கட்டணும்னு முடிவு பண்ணி அவர்தான் ஆரம்பிச்சதா சொல்றாங்க. அவருக்கும் ஒரு சிலை இருக்கு.
20211015204131559.jpg
சாலமங்கா போற வழியில Maputo Elephant Reserve இருக்கு. சாலையில் கார் போகும்போதே வழியில் அவ்வப்போது யானைகள் குறுக்கிடும். நாம் வண்டியை ஆஃப் செஞ்சுட்டு அப்படியே நின்னா அதுபாட்டுக்கு போயிடும். அப்படித்தான் நாங்க போனபோது சற்று தூரத்தில் ஒரு யானைக் கூட்டம் குறுக்கே போனது. அங்கங்கே மான்களும், ஒட்டகச்சிவிங்கிகளும் சுதந்திரமாக மேய்ந்து கொண்டிருந்தன.
20211015204236723.jpg
கத்தாம்பேங்கற ஊர்ல சீனாகாரங்களுக்கு ஒரு பெரிய சிமெண்ட் ஆலை இருக்கு. மப்புட்டோவையும் கத்தாம்பேவையும் இணைக்கற மாதிரி ஒரு பிரம்மாண்டமான பாலத்தை சீனா கட்டிக் கொடுத்திருக்கு. இந்த பாலம் கட்டறதுக்கு முன்னாடி படகு மூலம்தான் பயணம் போய்கிட்டிருந்தாங்களாம். கார் மாதிரி வண்டி போறதுக்கு ஃபெரி அப்படிங்கற மினி கப்பல்கள்ல காரை கொண்டு போவாங்களாம்

20211015204320950.jpeg
போந்தா தோரா. இதுவும் ஒரு ரிசார்ட்தான். தென் ஆப்பிரிக்கா பார்டர்ல இருக்கு.
கடலை ஒட்டி மலை. மலைல மர வீடுகளை அங்கங்கே பில்லர் போட்டு கட்டி வச்சிருக்காங்க. நான்கு சக்கரம் வச்ச மோட்டார் பைக் மாதிரி வண்டி வாடகைக்கு கிடைக்கும். அதை ஓட்டறதே த்ரில்லிங்கா இருக்கும். கீழே ஒரே மணல்.

20211015204406806.jpg
போந்தா தோராவுக்கு தென் ஆப்பிரிக்காலேருந்து நிறையபேர் வர்றாங்க. அழகான ஆழமில்லாத கடற்கரை ரொம்ப அழகா இருக்கு.

எட்டு பத்து பேரா சேர்ந்து போட் சவாரி போலாம். இங்க இருக்கற ரெசார்ட்ல எல்லாம் நாமே சமைக்க

மளிகை, கறிகாய் எல்லாம் கொண்டுபோனால் அங்கேயுள்ள அடுப்புல. நாமே சமைத்து சாப்பிடலாம்.

சென்ட்ரல் மார்க்கெட், மிகப்பெரிய மார்க்கெட். இது காய்கறி முதல் இறைச்சி, மீன் முதற்கொண்டு அனைத்தும் கிடைக்கும்

20211015204518889.jpeg
மொத்தத்தில் மாசு இல்லாத காற்று, நீர். மனதை மயக்கும் ரம்மியமான, அமைதியான பூமி. மனித வளம், மண் வளம், கனிம வளம் நிறைந்த நாடு மப்புட்டோ.

சென்னை கிளம்ப வேண்டிய நாள் வந்துவிட்டது. மப்புட்டோவை பிரிய மனமில்லை. அக்டோபர் 1ம் தேதி மப்புட்டோவிலிருந்து கிளம்பி 3ம் தேதி சென்னை வந்து சேர்ந்தோம்.

இந்த முறை நான் எதிர்பார்த்த மாதிரி ஜன்னலோர சீட் கிடைத்தது சந்தோஷமாக இருந்தது.