தொடர்கள்
கதை
காவலதிகாரம்... - பா. அய்யாசாமி

20211019153855607.jpeg

ஐயா, நீங்க எல்லோரும் போராடுகிற விஷயம் நியாயமானதுதான். ஆனால், முன்னறிவிப்பு இல்லாம இப்படி பேருந்துகளை மறித்திங்க, நான் நடவடிக்கை எடுத்தாக வேண்டியிருக்கும், தயவு செய்து கலைந்து போய்விடுங்கள் எனக் கெஞ்சிக் கொண்டியிருந்தார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்.

ஹலோ! ஹலோ சீர்காழி சீர்காழி.. எஸ்.பி லைன்ல இருக்காரு என வயர்லெஸ் அலறியது.

ஐயா! சொல்லுங்க! என்றார் ஆய்வாளர்.

என்னய்யா நடக்குது சீர்காழியிலே? நீங்க எங்க இருக்கீங்க? எனக் கேட்டார்

சீர்காழி தாலுக்காபிஸ்ல மறியலில்தான் ஐயா இருக்கேன்.

மறியல் பண்றாங்க, அவங்கக்கிட்டே என்ன பேசிகிட்டு இருக்கீங்க? அத்தனை பேரையும் இம்மிடியட்டா அரஸ்ட் பண்ணுங்க என உத்தரவிட்டார்.

ஐயா, அவங்க எல்லோரும் ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியருமாக இருக்காங்கய்யா.. பள்ளிக்கு அருகே அமைய இருக்கிற டாஸ்மாக் கடை வரக்கூடாதுன்னு எதிர்க்கிறாங்க.

இருந்தா என்னய்யா? மறியல் பண்றது மட்டும் சட்ட விரோதம் இல்லையா? பென்சனை வாங்கிக்கிட்டு சிவனேனு இல்லாம நம்மை டென்சானாக்கிறதே இவங்க வேலையாகிட்டு, அரெஸ்ட் பண்ணி பதினைந்து நாள் உள்ளே வச்சா ஒழுங்க இருப்பாங்க! எல்லாரையும் கைது பண்ணிட்டு ரிப்போர்ட் பண்ணுயா, என்று உத்தரவிட்டார்.

ஐயா, தயவு செய்து கலைந்துப் போய்விடுங்கள். என்னன்னு தெரியலை எஸ்பி ரொம்ப கோவமா இருக்காரு. உங்கள் அனைவரையும் கைது செய்யச் சொல்கிறார் என்ற ஆய்வாளர்,

நீங்க என்னோட முன்னாள் தமிழ் ஆசிரியர், இதோ பின்னாடி இருக்கிறவங்க என் அப்பா கூட வேலைப் பார்த்தவங்க. உங்களையெல்லாம் எப்படி கைது செய்வேன்? எஸ்பியோ வடநாட்டுக்காரர், இதெல்லாம் பார்க்கமாட்டார். நான் என்ன செய்ய சொல்லுங்கள்? எனக் கூட்டத்தைப் பார்த்து கேட்டார் ஆய்வாளர்.

அதெல்லாம் நீங்க யோசிக்காதீங்க தம்பீ, எங்களை கைது பண்ணுங்க... அப்பத்தான் விஷயம் பெரிதாகும், அந்தக் கடையை அங்கே வரவிடாமல் செய்யமுடியும் என்றனர் தீர்க்கமாக.

டிஎஸ்பியிடம் சென்று நடந்தவற்றை எல்லாம் எடுத்து ஆய்வாளர் கூறியதும்,
அவரும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

நீங்கள் எல்லாரும் எங்களக்கு நன்கு அறிமுகமானவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், வங்கி, வருவாய், மின்வாரிய துறை ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்தான், முக்கியமாக நானும் இந்த ஊரைச் சேர்ந்தவன்தான். உங்களை கைது செய்து கஷ்ட்டப்படுத்துவதை எங்களால் யோசிக்க கூட முடியலை, ஆகையால் கலைந்து செல்லுங்கள்.
இங்கே அந்தக் கடை வராமல் செய்ய என்னால் ஆனதைச் செய்வேன் என்று கூறிக்கொண்டு இருக்கையில்,

டிஎஸ்பியின் போனில் வந்தார் மாவட்ட எஸ்பி.

நீங்கள் எல்லாம் அரசின் காவலர்கள், அரசின் கொள்கை முடிவுக்குதான் பாதுகாப்பு கொடுக்கவேண்டும். அந்தக் கடை அங்கே வந்தே தீரும், இது மாவட்ட ஆட்சியரின் உத்தரவு. போராடும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என எச்சரித்தார்.

ஐயா, நாங்கள் அரசின் காவலர்கள்தான், ஆனால் அதற்கு முன்னே நாங்கள் இந்நாட்டின் குடிமக்கள். இது எங்கள் ஊர், எங்களுக்கும் இந்தக் கடை இங்கே வருவதில் துளி கூட உடன்பாடில்லை. நியாயமான விஷயத்திற்காக போராடும் அவர்களை எங்களால் கைது செய்ய முடியாது. ஆதலால், ஒட்டுமொத்த சீர்காழி தாலுகா காவல் நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட காவலர்களாகிய நாங்கள் முப்பது பேரும் பணியிடம் மாற்றம் கோரி இன்றே விண்ணப்பம் அளிக்கின்றோம் என்று எஸ்.பி-யிடம் உறுதியாக கூறினார் துணை கண்காணிப்பாளர்.

கைத்தட்டலின் ஓசை கூட்டத்தில் அதிர்ந்து, தொலைக்காட்சி ஊடே இந்தச் செய்தி தலைமை செயலகம் வரை எட்டியது.

போலீஸ் வாழ்க! வாழ்க!! போலீஸ் வாழ்க!!
என்ற கோஷம் முதல் முறையாக போராட்டக்காரர்கள் எழுப்பியது, அனைத்து ஊடகங்கிலும் விவாதப் பொருளானது.

இந்த செய்தி தமிழ்நாட்டையே உலுக்கிவிடும், கடை இங்கே இனி வாராது என்றுக் கூறி போராடியவர்களை நம்பிக்கையோடு கலைந்துச் செல்லுங்கள் என நம்பிக்கையூட்டினார் டிஎஸ்பி மணிமாறன்.