காவிரிமைந்தன்
எதிர்நோக்கி என் விழிப்படலம் ஏங்குகிறது பார்!!
அன்பிற்கினியவளே!
கனிந்துருகும் காதல்மனம் உனைக் காணாவிடில் வாடிவிடும்! ஓடோடி வந்துவிடு! உயிரே என்னில் கலந்துவிடு!
போய்வருகிறேன் என்று நீ சொன்னாலும்.. ஏதோ ஒரு வகையில் சிறுபிரிவு மனம் தாங்க வழியின்றி.. சரி என்கிறேன்.. இடையிடையே வந்து உன் முகம்காட்டிப்போவாயே.. என்று கையில் உள்ள ஊடகங்கள் ஒன்றைக்கூட விட்டுவிலகாமல் காத்திருந்தேன்!
நினைந்துருகும் கோலங்களை நீ காண நினைத்தாயோ?
நேற்று இன்று நாளை என்று நாட்களைத்தான் ஓட்டுகின்றேன்!
உயிர்ப்பறவை கூட்டுக்குள் அடம்பிடிக்கும் கதையெல்லாம் கண்மணியே உனக்கென்ன தெரியாதா?
கணக்கின்றி கவலைகள் கைவரிசை காட்டிநிற்க.. கடுந்துயரின் பிடியினிலே எனைவிடுத்துச் சென்றாயே!
உன் நிலையும் அப்படித்தான் என்று உணருகின்ற போதிலும்.. இன்றாகிலும் நீ வந்துவிட மாட்டாயா என எதிர்நோக்கி என் விழிப்படலம் ஏங்குகிறது பார்!!
அன்பின் ஸ்வரம்கூட்டி ஆனந்தராகம் மீட்டும் உந்தன் குரலன்றி உயிர்வாழ்ந்து என்ன பயன்? வழியெலாம் உனைத்தேடி அலைகின்றேன் நானடியோ!
உன் வருகையொன்றே எந்தன் துயர்தீர்க்கும் என்பதை நீ கேளடியோ!
நினைவலைகள் துள்ளித்துள்ளி நெஞ்சுக்குள் விழுகிறது! நீ தந்த முத்தங்களை எண்ணி எண்ணி மகிழ்கிறது!
மையலிலே விழுந்தபோது மெளனம்கூட நமக்குப் போதும்!
உன் மான்விழிகள் வாய்திறந்து மற்றகதை கூறும்! கூறும்!!
ஈரமது இதழ்களிலே இன்பரசம் தருகிறது! போதையது என்பதனைப் போகப் போக ஒத்துக் கொண்டேன்!
வேர்வரைக்கும் நீர்வார்க்கும் ஜீவநதி காதலென்றே நான்வரைந்த மடல்களிலே ஓராயிரம் முறை சொன்னேன்!
எனக்குள்ளே நீயிருந்து எத்தனைக் கேலி செய்தாய் தெரியுமா?
சரி.. சரி.. வந்துவிடுகிறேன் என்று உன் குரல்கேட்ட மாயத்தை நான் உணர்ந்தேன்!
யார் யார்க்கு என்பதெல்லாம் தேவனவன் போட்ட கணக்கு என்பதனை இப்போதும் உணர்கின்றேன்..
என்னை உன்னிடம் சேர்த்ததனால்!
Leave a comment
Upload