காஞ்சி பெரியவரின் பிரத்தியேக அருளை என் தந்தை பெற்ற வரலாற்றை தரிசித்தோம். கலைவாணர் பாராட்டிய கவிஞரின் கலைத்திறமையை வணங்கினோம். அப்துல் கலாம்ஜி வெகுவாக ரசித்து, என் தந்தை கௌரவிக்கப்பட்டதை, வில்லிசையின் மகுடமாக போற்றினோம்.
என் தந்தையின் வில்லிசை நிகழ்வில் கடம் விநாயக்ராம், டிரம்ஸ் சிவமணி வாசித்ததை – ‘நாதத்தில் பேதமில்லை’ எனும் அவர்களின் மனதை மக்களின் மனதில் பதியவைத்தோம்.
இப்போது நான் சொல்லப் போகும் ஒரு மிகச்சிறந்த கலைஞர் – நடிகர் – பத்மபூஷண் விருதுபெற்ற ஞானி, என் தந்தைமீது அன்பு வைத்த உள்ளம் – அவர்தான், உலக நாயகன் கமல்ஹாசன்!
சுமார் 5 வருடங்களுக்கு முன், ஒரு நாள் மாலை திடீரென எனது கைபேசி மணி ஒலித்தது. என் தந்தை, அப்போது மிக நலமாக இருந்தார். எனது கைபேசியில் பேசியது யார், தெரியுமா..? நடிகர் கமல்ஹாசனின் உதவியாளர் மூர்த்தி.
அவர் என்னிடம், ‘‘அம்மா… உங்களிடம் கமல் சார் பேசணும்னு சொன்னார். ஒரு படம்… அதில், உங்கள் தந்தை வொர்க் பண்ணணும். அதைப் பத்தி உங்களிடம் பேசணும்னு கமல் தெரிவித்தார்!’’ என்றார் பிஏ மூர்த்தி.
அப்போது நான் வெளியே வேறொரு ஒலிப்பதிவில் இருந்ததால், உடனடியாக கமல் சாரிடம் பேச முடியவில்லை! வீட்டுக்கு திரும்பி, கமல் சாரின் பிஏவை தொடர்பு கொண்டு பேசினேன்.
அவர், ‘‘அம்மா… உங்கள் தந்தையுடன் கமல் சார் அலுவலகத்துக்கு வரவேண்டும். ஒரு நல்ல படம்… அதில் உங்கள் தந்தையின் வில்லுப்பாட்டு இடம்பெற வேண்டும் என கமல் சார் விரும்புகிறார்!’’ என்றார் பிஏ மூர்த்தி.
பல்லாண்டுகள் திரைத்துறைக்கு என் தந்தை தந்த இடைவெளி… இவர்களின் அழைப்பை அன்போடு ஏற்று, அவர்கள் வில்லிசைக்கு தரும் முக்கியத்துவம் அறிந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்துக்கு மனநிறைவோடு நாங்கள் குடும்பமாக சென்றிந்தோம்.
அலுவலகத்தில் டைரக்டர் ரமேஷ் அரவிந்த், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் எங்களுடன் உடனிருந்தனர். அறைக்குள் நுழைந்த கமல் சார், என் தந்தைக்கு வணக்கம் கூறி, எங்களுக்கு வாழ்த்து கூறி அமர்ந்தார்.
ஆஹா… என் தந்தை, கமல் சார் மற்றும் எங்களுக்கு இடையே சுமார் 4 மணி நேர உரையாடல் மிக அற்புதமாக அமைந்தது!
என் தந்தையிடம் கமல் சார் பேசும்போது, ‘‘ஐயா… உங்க வாழ்த்தும் வாழ்த்து வில்லிசையும் எங்களுக்கு வேணும்! நாங்க ‘உத்தம வில்லன்’னு ஒரு படம் பண்ணப்போறோம். அதில் ஹீரோ உத்தம வில்லன் அறிமுகமே வில்லுப்பாட்டுதான்… அதை பண்ணப்போறது உங்க குடும்பம்தான்!’’ என்றார் மகிழ்வுடன். இரண்டு இமயங்கள் ஒன்றோடு ஒன்று உரையாடும்போது கிடைத்த அனுபவங்களை – உடனிருந்த நாங்கள் பொக்கிஷமாக கருதினோம்.
முன்னதாக, என் தந்தையுடன் இயக்குநர் ஆர்.சி.சக்தி உதவியாளராக இருந்தபோது, நடந்த பழைய நினைவுகள் சிலவற்றை கமல் சாரிடம் என் தந்தை நகைச்சுவையாக பகிர்ந்துகொள்ள… கமல் சாருடன் அனைவரும் சேர்ந்து ரசிக்க, மகிழ்ச்சியான உரையாடல்!
அப்போது நடைபெற்ற ஒரு விஷயம் என்னை வியக்க வைத்தது. என் தந்தையிடம், ‘‘ஐயா… வில்லிசையின் அனைத்து வர்ண மெட்டுகளையும் பாடுங்க!’’ என்றார் கமல் சார்.
என் தந்தை – நான் – மகன் கலைமகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து பலப்பல பாடல்கள் பாடிக் காண்பித்தோம். பின்னர் சில சோலோ பாடல்களை நானும் மகன் கலைமகனும் பாடினோம். அதிஅற்புத ரசனை கமல் சாருக்கு!
எங்களின் பாடல்களை வெகுவாக ரசித்து பாராட்டிய கமல் சார், திடீரென… ‘‘ஐயா, நான் பாடுறேன் – தந்தனத்தோம் என்று சொல்லியே…’’ என பாட ஆரம்பித்தார். ஆஹா… அற்புதம்..!
‘எத்தனையோ வேலைப் பளுவுக்கு இடையே இவரால் எப்படி திடீரென தந்தனத்தோம் என்று சொல்லியே என வில்லிசை ராகத்துடன் பாட முடிந்தது?’ என்று வியந்த நான்…
‘‘அண்ணா… எனக்கு ரொம்ப வியப்பா இருக்கு! நாங்கள் வில்லிசை கலைஞர்கள்… தந்தனத்தோம் பாடலை நினைவு வைத்திருப்போம். இத்தனை வேலைக்கு மத்தியில், நீங்கள் எப்படி ஞாபகம் வைத்து மனப்பாடமாக பாடுகிறீர்கள்..?’’ – கமல் சாரிடமே கேட்டுவிட்டேன்.
அவர் சொன்ன பதில் – ‘‘அம்மா… இன்று, நேற்று கேட்ட பாடலா அது! வானொலி வந்த நாள் முதல் உங்கள் தந்தை பாடும் இப்பாடலை, நான் சிறுவனாக அவ்வை சண்முகம் அண்ணாச்சியின் பாசறையில் பயின்றபோது, பக்கத்து வீட்டு வானொலியில் பலமுறை கேட்டு மனப்பாடம் செய்த பாடலாயிற்றே!
மேலும் உங்கள் தந்தை ரொம்ப மூத்தவர், பெரியவர்… அவர் பாடும் வில்லுப்பாட்டு அரிய கலை! எத்தனையோ ஆண்டு காலம் ஐயாவின் வில்லிசையின்மீது நான் கொண்ட பிரியம்தான், இன்று உத்தம வில்லன் படத்தில் ஐயாவின் வில்லிசையைக் கொண்டுவர வேண்டும் என நினைக்க வைத்தது!
உங்கள் தந்தை, கலைவாணரின் சிஷ்யர்… அவருக்கு, இயக்குநர் ஆர்.சி.சக்தி சிஷ்யர்… நான் மறக்க முடியாதபடி, என்னை ஆர்.சி.சக்தி மேலே கொண்டு வந்தார்… ஆக – கலைவாணர், கவிஞர் சுப்பு ஆறுமுகம், இயக்குநர் ஆர்.சி.சக்தி, நடிகர் கமல்ஹாசன் – இது ஒரு கலை பாரம்பரியம்!’’ என ஒரே மூச்சில் கமல் சார் பெருமையுடன் சொல்லி முடித்தார். அவரது பதில், என்னை தலைநிமிர வைத்தது!
சந்திப்பின் முடிவில், ‘‘உத்தம வில்லன் கதை டிஸ்கஷன் இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பிப்போம்!’’ என கமல் கூறி, எங்கள் குடும்பத்தினரை அன்புடன் வழியனுப்பி வைத்தார்.
கதை டிஸ்கஷனில் நடந்ததை அடுத்த வாரம் சுவையாக எடுத்துக் கூறுகிறேன். அதுவரை…
– காத்திருப்போம்
Leave a comment
Upload