தொடர்கள்
கதை
‘ஆட்டோ-ரினியூவல்’ - வெ.சுப்பிரமணியன்

20211019153746650.jpeg

அவர் அமர்ந்திருந்த ‘கண்ணாடி’ அறையின் வாசலில் நின்று கொண்டிருந்த என்னை, உள்ளே வரும்படி சைகையால் அழைத்தார், அந்த வங்கியின் மேளாளர். “சார் ஐயாம் ராகவன்… இந்த பாங்கிலே என் பென்ஷன் அக்கவுன்ட் இருக்கு. போன வாரம் உங்க ‘ஹெட்’ ஆஃபீஸ்லே இருந்து, ‘பிராஞ்ச் மேனேஜரை’ பார்க்கச் சொல்லி, என் மொபைலுக்கு மெஸேஜ் வந்துது” என்றேன்.

“நான் போனவாரந்தான் இந்த பிராஞ்சுக்கு டிரான்ஸ்வர் ஆகி வந்தேன். அதான் உங்களை உடனே ஐடென்டிஃபை பண்ண முடியல்லே. சாரி… சார்” என்ற வங்கி மேனேஜரிடம், என் அக்கவுன்ட் பாஸ்புக்கை குடுத்தேன்.

“தீபாவளியெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா சார்?” என்று என்னை விஜாரித்தவர், “அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, நீங்க முப்பது லட்சம் ரூபாயை, நம்ம பாங்கிலே, ஃபிக்ஸட் டெப்பாசிட்டா போட்டிருக்கீங்க” என்றார்.

“ஆமாம்… அந்த டெப்பாசிட் எல்லாமே என் சம்சாரம் ‘மைதிலி’ பேர்லதான் போட்டிருந்தேன்” என்றேன் நான்.

“உங்க மனைவி பேர்ல போட்டிருக்கிற அந்த டெப்பாஸிட், இந்த மாதக் கடைசியிலே மெச்சூராகுது. அதை ‘ஆட்டோ-ரினியூவல்’ பண்ணலாமா, இல்லே உங்க அக்கவுன்ட்ல ‘கிரிடிட்’ குடுக்கலாமான்னு, கன்ஃபர்ம் பண்ணத்தான், உங்களை நேர்ல வரச்சொன்னோம்” என்றார் மேனேஜர்.

“மைதிலியை ஒரு வார்த்தை கேட்டுவிட்டு நாளைக்கு பதில் சொல்லலாமே” என்று நான் நினைத்தேன். அதர்க்குள், “சார்… ஜுவெல்-லோன் செக்‌ஷனுக்கு வாங்களேன்” என்று ஒரு வங்கி ஊழியர், மேனேஜரை அழைத்தார்.

“எக்ஸ்கியூஸ்-மீ, ராகவன் சார்… ஜுவெல்-லோன் செக்‌ஷன்ல என்னன்னு பார்த்துட்டு உடனே வரேன். நீங்க டெப்பாஸிட்டைப் பத்தி யோசிச்சு வைங்க” என்று சொல்லிவிட்டு போனார் மேனேஜர்.

நான்… என் வீட்டுக்குப் போனேன். தீபாவளிக்கு முன்னும் பின்னுமாக, பெய்த மழை சற்று ஓய்ந்து, இன்றுதான் சூரியவெளிச்சம் பரவியது. என் தர்மபத்தினி மைதிலியோ… தோய்த்த துணிகளை கொடிகளில் மாட்டி, கிளிப்போட்டுவிட்டு வந்தாள்.

“மைதிலி… என்னோட பென்ஷன் பெனிஃபிட்ஸை, உன்பேர்ல பாங்கிலே போட்டிருந்தேனே, அந்த டெப்பாஸிட் விஷயமா… உங்கிட்டே பேசணும். ‘கைவேலை’ இருந்தா முடிச்சுட்டு வாயேன்” என்றேன்.

“அந்தப் பணம் பாங்கிலேயே கிடக்கட்டுமே. அதை எதுக்கு எடுப்பானேன்?” என்றாள்.

“அதுக்கில்லேம்மா, ஐந்து வருஷத்துக்கு முன்னாடி எஃப்.டிக்கு, ஏழரை பர்ஸென்ட் வட்டி குடுத்தாங்க. ஆனா… இன்னிக்கு இன்ட்ரெஸ்ட் ‘ஐஞ்சு’ சதவீதமா குறைஞ்சுபோச்சு. அதான் இன்வெஸ்ட்மென்டை மாத்தி பண்ணலாமான்னு உன்னை ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்” என்றேன்.

“எனக்கு யோசிக்க ஒரு நாள் டைம் வேணும்” என்று சொல்லிவிட்டு, ‘தீர்ப்பை ஒத்திபோட்ட ஜட்ஜுபோல்’ எழுந்து, அடுப்படிக்குப் போனாள் மைதிலி.

அடுத்தநாள் காலையில் “அண்ணா… வாவா… எங்கே நீ வராமப் போயிடுவியோன்னு ஒரே கவலையா இருந்தது” என்ற மைதிலியை பின்தொடர்ந்து, அவளின் ஒரே உடன்பிறப்பான ‘வைத்தி’ உள்ளே வந்தார்.

“என்ன மாப்பிள்ளே… சௌக்கியமா?” என்ற வைத்தியிடம், “நீங்க வரப்போவதாக ‘மைதிலி’ எங்கிட்டே சொல்லலியே” என்றேன்.

“என் அண்ணா… நம்மாத்துக்கு வரதுக்கு, யார்கிட்டே பெர்மிஷன் வாங்கணும்” என்று ஆரம்பித்தாள் மைதிலி.

“மாப்பிள்ளே… சொந்த தங்கையான ‘சூர்ப்பணகை’ கேட்டதும், ‘ராவணேஸ்வரன்’ ஓடோடிப்போய் ஹெல்ப் பண்ணலியா? அந்த மாதிரி ‘அண்ணா… உதவின்னு’ மைதிலி எனக்கு நேத்து ராத்திரி ஃபோன் பண்ணியிருந்தா. பொழுது விடிஞ்சும் விடியாததுமா, ஓடோடி வந்துட்டேன் பார்த்தேளா… இதுதான் ரத்தபாசங்கிறது” என்று பீத்தியது அந்த ‘ஊமைக்குசும்பு’ மச்சினர்.

“அதென்னமோ உங்க ‘கம்பாரிஸன்’ பொருத்தமா இருக்கு. ஏன்னா… நீங்க இரண்டுபேரும் ‘அசுரகணங்களாச்சே’ என்ற என்னை முறைத்தாள் மைதிலி.

“அவர் கிடக்கராரண்ணா… நீ உன்னோட ‘திட்டத்தை’ அவராண்டை சொல்லு. அவரை ஒத்துக்க வைக்கவேண்டியது என்னோட பொறுப்பு. உன் மாப்பிள்ளைகிட்டே பேசிண்டிரு. நான் புதுசா இறங்கிண்டிருக்கிற டிக்காஷன்ல உனக்கு காஃபி போட்டு எடுத்துண்டு வரேன்” என்ற மைதிலி அடுப்படிக்குப் போனாள்.

“மாப்பிள்ளே… ரிட்டையர் ஆயிட்டா, அதோட கடமை முடிஞ்சுடுத்து, வாழ்க்கை அஸ்தமிச்சுப் போச்சுன்னு, அக்கடான்னு உட்கார்ந்தாத்தான், சகல வியாதிகளும் மனுஷாளுக்கு வருதுன்னு, என்னோட ‘ஒண்ணுவிட்ட சித்தப்பா’ சொல்லிண்டே இருப்பார்” என்ற வைத்தியிடம் “எனக்கொண்ணும் வியாதி இல்லையே” என்றேன்.

“மனுஷன் சாகறவரையில், அவனுக்குள்ளே சம்பாதிக்கணுங்கிற ‘நெருப்பு’ எரிஞ்சுண்டே இருக்கணும். அப்போதான் அவன் ஆக்டிவா, ஹெல்த்தியா இருப்பான்” என்ற ‘அகராதி’ வைத்தியை எரிச்சலுடன் பார்த்தேன்.

“முப்பத்தைஞ்சு வருஷமா, கவர்மென்ட் ஆப்பீஸ்லே ‘நாயா-பேயா’ உழைச்சுட்டு, இப்போதான் ஐஞ்சு வருஷமா தக்குனூண்டு ‘பென்ஷன்’ வாங்கி, வயித்தை கழுவிண்டு, அக்கடான்னு, நிம்மதியா இருக்கேன். அதுக்கு வேட்டு வைக்கத்தான் நீங்களும் உங்க ‘அசட்டுத் தங்கையுமா’ எதோ ஐடியா போட்டிருக்கேள்னு நினைக்கிறேன்” என்றேன்.

“நமக்கு கல்யாணமான நாளிலே இருந்து, என்னோட அண்ணாவை ‘கரிச்சு’ கொட்டறதே உங்களுக்கு பழக்கம். தங்கையும், மாப்பிள்ளையும் சௌபாக்கியத்தோட சௌக்கியமா இருக்கணும்னு, என்னோட அண்ணா இலவசமா ‘சஜெஷன்ஸ்’ குடுப்பதிலே என்ன தப்பு” என்று என்மீது சீறினாள் மைதிலி.

“மாப்பிள்ளே… கோடம்பாக்கத்திலே என்னோட ஃபிரண்டு ஒருத்தன், சினிமா இண்டஸ்டிரீயிலே, புரொடக்ஷன் மேனேஜரா இருக்கான். அவங்கிட்டே உங்களை ‘ஒட்டவைச்சேன்னா’, அவன் உங்களை நடிக்க வைச்சு, ‘எங்கேயோ’ கொண்டுபோய் நிறுத்திடுவான்” என்று சொல்லிவிட்டு, வாயில் மென்றுகொண்டிருந்த தாம்பூலத்தை கொப்புளித்து துப்ப எழுந்து போனது என் ‘வில்லங்க’ மச்சினன்.

“ஏண்டி மைதிலி… இந்த ‘கிறுக்கு’ புத்திங்கிறது, உன் குடும்பத்துக்கே உண்டான ‘பரம்பரை’ வியாதியா? இத்தனை வயசுக்கு மேல என்னை சினிமாவிலே நடிக்கச் சொல்லறீங்களே. சரி… நானும் நடிக்க சம்மதிக்கிறேன்னு வைச்சுக்க. ‘காதல் சீன்ஸ், டூயட் சாங்ஸ்’ இதிலே எல்லாம் பல ஹீரோயின்ஸை ‘தொட்டு, தூக்கி, தட்டாமாலை சுத்தி’ நடிக்க வேண்டியிருக்குமே!. பத்து தடவை ரீடேக் எடுத்தாங்கன்னா நான் பழகிண்டிருவேன். ஆனால்… உனக்குத்தான் சங்கடமாவும் சங்கோஜமாவும் இருக்கும்… பரவாயில்லையா?” என்றேன்.

“மாப்பிள்ளை என்ன சொல்லறார் மைதிலி?” என்று கேட்டுக்கொண்டே வந்த வைத்தியிடம், “சும்மா இல்லாம ‘சொறிஞ்சுவிட்ட’ மாதிரி, எதுக்கு ‘இப்பபோய்’ மைதிலியிடம் இந்த ‘சினிமா’ ஆசையைக்காட்டி, தூபம்போடறேள்” என்று சிடுசிடுத்தேன்.

“நேத்திக்கு சாய்ங்காலம், மைதிலிதான் எங்கிட்டே, “அண்ணா… என் ஆத்துக்காரர் கையிலே ‘முப்பது லட்சம் ரூபாய்’ சுளையா வந்திருக்கு. அதை திரும்பவும் பாங்கிலேயே போட்டா, ‘வட்டி’ ரொம்ப கம்மியா கிடைக்குமாம். நீதான் பணத்தைப் ‘பெருக்க’ ஏகப்பட்ட ஐடியாக்களை யார் யாருக்கோ அள்ளி வீசறியே. உன் மாப்பிள்ளைக்கு எதாவது ஐடியா தரமாட்டியான்னு கேட்டாள்” என்றது என் ‘சவிடால்’ மச்சினர் வைத்தி.

“ஏண்டி… ‘ஓட்டைவாய்’ மைதிலி. நம்மோட ‘ஃபைனான்ஸியல் ஸ்டிரெங்த்தை’ மூன்றாம் மனுஷாளிடம் சொல்லுவியா?” என்றேன்.

“அப்படிச் சொல்லாதீங்கோ மாப்பிள்ளே… உங்களாண்ட ஏகப்பட்ட திறமைகள் ஓளிஞ்சுண்டிருக்கு. அதை வெளி உலகத்துக்கு ‘எக்ஸ்போஸ்’ பண்ணி உங்களை இன்னும் ‘உசரத்திலே’ வைச்சு அழகு பார்க்கலாம்னு, ஒரு நல்ல இன்டென்ஷன்லதான் சொன்னேன்” என்று ‘டுபாக்கூர்’ வைத்தி சொல்லவும், ‘மைதிலி’ உற்சாகமானாள்.

“ஃபைனலா சொல்லறேன். என்ன ஆனாலும் பரவாயில்லை… என்னோட அண்ணா கூப்பிடற எடத்துக்கு போயிட்டு வாங்கோ… இல்லாட்டி…” என்று கண்ணை கசக்க ஆரம்பித்தாள் மைதிலி.

“சரி வருவது வரட்டும். விதி வலியது. இருந்தாலும் ‘ஹீரோ’ காரெக்டரைத் தவிர, வேற எந்த ‘சைடு ரோலுக்கும்’ ஒத்துக்கக் கூடாது” என்ற உறுதியோடு, என் ‘புளுகாண்டி’ மச்சினன் வைத்தியின் பின்னாடியே கோடம்பாக்கத்துக்குப் போனேன்.

சில சந்து பொந்துகளைத் தாண்டி, ‘கஜா புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயர் பலகையுடன் இருந்த ஒரு சின்னக் கட்டிடத்துக்குள் நுழைந்தோம்.

“வாய்யா… வைத்தி” என்றவனிடம், “நான் நேத்திக்கு ராத்திரி சொன்னேனே… என் மாப்பிள்ளை... ‘முப்பது லட்சம்’, அந்த பார்ட்டி இவர்தான்” என்றது என் மச்சினர்.

“ஓ… நம்ம படத்துல, ‘ஹீரோ’ ரோலுக்கு ஏத்தவர்னு சொன்னியே! அந்த ‘ராகவன்’ சாரா?” என்றவனை, “இவர்தான் என் நண்பர் கஜா” என்று என்னிடம் அறிமுகப்படுத்தியது, ‘அசட்டு’ வைத்தி.

“மிஸ்டர் ராகவன்… நீங்க என் ‘தோஸ்து’ வைத்தியோட ரிலேஷன். அதனாலதான் உங்களையும் என்னோட புரொடக்ஷன் யூனிட்ல ‘ஃபைனான்ஸியரா’ சேர்த்துக்கிறேன்” என்றான் கஜா.

“நான் எதோ ‘ஹீரோ’ ரோல்ல நடிக்கப் போறதா சொல்லித்தான், வைத்தி என்னை இங்கே கூட்டிகிட்டு வந்தார்” என்றேன்.

“ஆமாம் ராகவன்… அதுக்குத்தான்… முதல்ல உங்களை ஹீரோவா வைச்சு, படம் எடுக்கணும்னா, ‘பணம்’ வேண்டாமா?” என்றான் கஜா.

“இங்கே பாரு கஜா… பேசினபடி என் கமிஷன் ‘பத்தாயிரத்தை’ வெட்டு, எனக்கு அடுத்த வேலையிருக்கு” என்றது என் ‘குசும்பு’ மச்சினன்.

“டேய்… பசங்களா, டாக்குமென்டை எடுத்துகிட்டு, அப்படியே வைத்தியோட கமிஷனையும் கொண்டாங்கடா” என்று கஜா கத்தினான்.

‘பணத்தை’ வைத்தியிடம் குடுத்த கஜா… ‘கடன் பத்திரத்தை’ என்னிடம் நீட்டினான். “சினிமா தயாரிக்க நான் ‘கஜாவிடம்’ முப்பது லட்சம் ரூபாய் ‘லோன்’ வாங்கியதாகவும், அதற்கு ஈடாக, மைதிலியின் பெயரில் பாங்கில் உள்ள டெப்பாசிட் தொகையை, அடமானம் வைத்திருப்பதாகவும், அந்த பத்திரத்தில் எழுதியிருந்தது”.

என்னைச்சுற்றி அடியாட்களை வைத்துக்கொண்டு, கடன் பத்திரத்தில், என்னை கையெழுத்து போடச்சொல்லி மிரட்டினான் அந்த ‘கஜா’. “என்ன வைத்தி இதெல்லாம்?” என்றேன் நான்.

“என் தங்கையை கல்யாணம் பண்ணின்டு வந்த நாள்முதலா, என்னை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினே? போனவாரம், வெத்தலை சீவல் வாங்க ‘பத்துரூபாய்’ கேட்டதுக்கு ‘தரமுடியாதுன்னு’ சொன்னியே. அதான்…” என்று சொல்லி கொக்கரித்தது அந்த ‘ரெண்டுங்கெட்டான் வைத்தி’.

“உங்க சண்டையை அப்புறமா போட்டுக்கங்க” என்ற கஜா… ‘கையெழுத்து போடு’ என்று என்னை மிரட்டினான்.

“உயிரே போனாலும், நான் ‘கையெழுத்து’ போட மாட்டேன்” என்று கதறினேன்.

“நீங்க ஒண்ணும் கையெழுத்து போடவேண்டாம் மிஸ்டர் ராகவன். ‘டெப்பாசிட் டாக்குமென்டுக்கு பின்னாடி உங்க ‘மனைவி’ கையெழுத்து போட்டாப்போதும்” என்ற பாங்க் மேனேஜரின் குரல் கேட்கவும், கண்களைத் திறந்தேன்.

“நான் அந்த லோன் செக்‌ஷனுக்கு போயிட்டு வரதுக்குள்ளே, ‘குட்டித் தூக்கமே’ போட்டீங்களா மிஸ்டர் ராகவன்” என்ற மேனேஜரிடம், ‘அசடு’ வழிந்தேன்.

“சார்… அந்த டெப்பாஸிட்டை. ‘ஆட்டோ-ரினியூவல்’ பண்ணிடுங்க என்று மேனேஜரிடம் சொல்லிவிட்டு, வங்கியிலிருந்து வீடு திரும்பினேன்.