தொடர்கள்
பொது
திருப்பத்தைத் தருமா, திருப்புகழ் நியமனம்? - ஆர். நூருல்லா (மூத்த பத்திரிகையாளர்)

சென்னை மெட்ரோ மாநகர வெள்ள மேலாண்மை மற்றும் தணிப்பு ஆலோசனைக் குழுத் தலைவராக வி. திருப்புகழ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

மாநிலத் தலைநகர மக்களை நிரந்தர நிம்மதியில் திளைக்க வைக்க, திருப்புகழைத் தமிழக அரசு முன்னிலைப்படுத்திக் காட்டியிருக்கிறது.

யார் இந்த திருப்புகழ்? இவருக்கு ஏன் பெரும்புகழ்? பணி அனுபவங்களில் அந்த அளவுக்கு என்ன பக்கபலம்? திருப்புகழ் நியமனச் செய்தியைப் படித்தத் தமிழக மக்கள் இப்படித்தான் தமக்குள் அளவளாவிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் வன வாசப் பணிகளில் வாழ்ந்து கொண்டிருந்த இறையன்பு, திமுக ஆட்சியில் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தகுதியோடு திகழ்கிறார். அவரின் அண்ணன் தான் திருப்புகழ்.

ஐஏஎஸ் தகுதி பெற்ற திருப்புகழ், குஜராத்தில் தன் பணி வாழ்வில் பவனி வந்தார். அவரின் அர்ப்பணப் பணியில் லயித்துப் போன நரேந்திர மோடி, தனது அரசுப் பணிகளின் அத்தியாவசியச் சேவைகளில் அவரைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

குஜராத் மாநிலத்தின் செய்தித்துறை இயக்குனராகத் திருப்புகழ் பணியாற்றி வந்த காலம் அது. திருப்புகழை நரேந்திர மோடி அழைத்து, “சென்னைக்குச் செல்லுங்கள்... செய்தித்துறையின் அதிகாரிகளைச் சந்தியுங்கள், அவர்களின் செய்தித்துறைத் திட்டங்களில் ஈடுபாடு காட்டுங்கள். ஊடகங்களோடு அந்தத் துறை அதிகாரிகள் எத்தகைய ஈடுபாடு வைத்து, திட்டங்களை மாநில மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவற்றை நாம் குஜராத் மாநிலத்திலும் அமல்படுத்தலாம்” என்று திருப்புகழுக்கு நரேந்திர மோடி ஆணையிட்டார்.

அதன்படி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக ‘திருப்புகழ்’ வந்திருந்தார். செய்தித்துறை இயக்குநரைச் சந்தித்தார், உரையாடினார். அரசுத் தரப்பு அணுகு முறைகளை அறிந்துகொண்டார். அவை எப்படி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்று தெரிந்து கொள்ளச் செய்தியாளர்களையும் சந்திக்க வேண்டும் என்று விரும்பினார். அத்தகைய சூழலில் செய்தித்துறை இயக்குனரின் வழிகாட்டுதலின்படி திருப்புகழ் என்னைத் தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தியாளர் அறையில் சந்தித்தார். தனது பயணத் திட்ட நோக்கத்தைத் தெரிவித்தார்.

நானும் அவருடன் தீவிர ஈடுபாடு காட்டிச் செய்தித் துறையின் திட்டங்களை மட்டுமல்ல; இச்செயல்பாடுகளால் செய்தியாளர்கள் எத்தகைய ஒத்துழைப்பைப் பெறுகின்றனர், மக்களுக்குப் பயன்படக்கூடிய செய்திகள் எப்படிச் சென்று சேர்ந்து கொண்டிருக்கின்றன என்பது பற்றிய அனைத்து விவரங்களையும் சொல்லி காட்டினேன். செய்திக் களத்தில் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டினேன். பரிபூரணத் திருப்தியோடு திருப்புகழ் திரும்பிச் சென்றுவிட்டார்.

கொடுத்த காரியத்தை முடித்துக் காட்டியதில் அம்மாநில முதலமைச்சருக்கு முழுமையான மகிழ்ச்சி. அவரே நாட்டின் பிரதமரான போது, திருப்புகழை டெல்லிக்கு அழைத்துக் கொண்டார்.

தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் இணைச் செயலாளர் பொறுப்பில் பணியமர்த்தப்பட்டார். ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்புகொண்டு அம்மாநிலத்தின் பேரிடர் சார்ந்த பல்லாண்டு கால வரலாற்று நிகழ்வுகளை அவர் ஒரு மாணவனைப் போல் படித்துத் தேர்ந்தார்.

கடந்த முறை தமிழகத்தைப் புயல் தாக்கியபோது, மத்திய அரசின் பார்வையாளராக வந்து சென்னை பாதிப்புகளை ஆய்வு செய்தார். இப்போதோ... மாநில அரசின் பங்காளராகிச் சென்னைச் சீற்றத்தில் மாற்றம் கொண்டுவர முயல்கிறார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் புதுடில்லியில் இருந்தேன். திருப்புகழைத் தேடிப் போய்ப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆர்வம் மேலிட்டது. அதற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், சேலத்தில் எங்கு பேச்சு போட்டி நடந்தாலும் அதில் நான் கலந்து கொள்வது வழக்கம். எனக்கு முதல் பரிசு கிடைப்பதில்லை. ஏனென்றால் அந்த பரிசைத் தட்டிச் செல்வதற்கு திறமையான உரைவீச்சு நாயகி வந்துவிடுவார். அந்தப் பெண்மணியின் பெயர் பைங்கிளி. சாரதா கல்லூரியில் பேராசிரியை ஆகிப் பின் பணி ஓய்வு பெற்றுவிட்டார். பேச்சுப் போட்டிக் களத்தில் நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதுண்டு. அவரைப்போலவே அவரின் தங்கை இன்சுவையும் எழுச்சிகரமான கல்வித்துறை நாயகியாகவே பவனி வந்தார். இவர்களின் சகோதரர்தான் திருப்புகழ். திருப்புகழின் தம்பிதான் இறையன்பு.

மேலாண்மை ஆளுமைகளில் ஈடுபாடு காட்டும் அளவுக்கு வெற்றிகரமான, நேர்மையான வாழ்க்கையை பெற்றுத் தருகின்ற அந்த குடும்பத்தாரோடு பழகி இருந்த காரணத்தால், திருப்புகழைத் தேடிச் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரான நவாஸ் கனி சகிதம் திருப்புகழைச் சந்தித்தேன்‌. தேசிய இயற்கைப் பேரிடர் மேலாண்மைத் தலைமையகத்தில் உள்ள அவரின் பணியறையில் தான் பார்த்தோம். (இந்த படம் இத்துடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.)

2021101911571171.jpg

என்னை அவரிடம் மீண்டும் ஒரு முறை அறிமுகப்படுத்திக் கொண்டேன். நவாஸ் கனியை அறிமுகம் செய்து வைத்தேன். தமிழக மக்களின் பிரதிநிதியாவென அன்புடன் அளவளாவினார்.

“நான் அரசியல்வாதி அல்ல. எனினும் மக்களுக்குப் பணியாற்ற இறைவன் எனக்கு ஐந்தாண்டு காலம் வாய்ப்பளித்துள்ளான். இதை உள்ளன்போடு பயன்படுத்த விரும்புகிறேன். எங்கள் குடும்பத் தொழில் வருமானமே போதிய அளவுக்கு உள்ளது. ஆகவே அரசியலை வைத்து நான் சம்பாதிக்க மாட்டேன். தயவு செய்து தமிழக மக்களுக்கு உதவுங்கள்” என்று நவாஸ் கனி பேசிய போது திருப்புகழ் நெகிழ்ந்தார்.

எங்கள் வேண்டுகோளை ஏற்று அவர் ராமநாதபுரம் தொகுதியில் மீனவர்கள் சந்திக்கும் இயற்கை பேரிடர்கள் பற்றி விரிவாக விவாதித்தார். இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசு எந்தத் திட்டங்களை எல்லாம் வைத்திருக்கிறது என்று விளக்கினார். அவை ஒவ்வொன்றின் பணிப் பலன் மற்றும் பணப் பயன் தமிழகத்துக்குக் கிடைக்கும் வகையில் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.

அப்போதே அலைபேசி மூலமாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டார். அந்த மாவட்டத்தின் பிரச்சனைகளை நீண்ட நேரம் விவாதித்தார். தீர்வுகளைப் பற்றிய ஆலோசனைகளை வழங்கினார். நிதியை மத்திய அரசிடமிருந்து மாநில அரசு எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நுட்பத்தைச் சொல்லிக் கொடுத்தார். வெறுங்கையோடு அவரைச் சந்திக்கச் சென்ற நாங்கள் திருப்தியோடு திரும்பி வந்தோம்.

முதல் சந்திப்பிலேயே முழுமையான ஈடுபாடு காட்டி, மக்கள் நலப்பணிகளில் அவர் லயித்து உழைத்த அந்த பாங்கு, அவரின் குடும்பப் பாரம்பரியப் பெருமையின் அடையாளமாகத் திகழ்ந்தது.

தேசியப் பேரிடர் மேலாண்மைப் பணிகளில் இருந்துப் பின் உயர் பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டு, பணிக் காலத்தை நிறைவு செய்து முடித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் சென்னை சந்தித்து வரும் மழைக் காலப் பேரிடரால் மாநிலத் தலைநகர் மக்கள் மனமொடிந்து கிடக்கின்றனர். துன்பத்தில் துவளும் அந்த துயர்மிகு மக்களை மீட்டெடுக்க ஆபத்பாந்தவனாக திருப்புகழ் வந்து இருப்பதாகவே விபரம் தெரிந்தவர்கள் கருதுகிறார்கள்.

“தலைமைச் செயலாளர் இறையன்பு தன் அண்ணனுக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் விட்டார்” என்று வாதம் செய்யும் வசை வாணர்கள் கூட இருக்கக்கூடும். அத்தகையோரின் வாய்ச் சவடால்களைத் திருப்புகழின் திட்டங்கள் அடக்கி ஒடுக்க வைக்கும் என்ற நம்பிக்கை ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல; அவரை அறிந்தவர்களுக்கும் இருக்கிறது.

சென்னை மாநகரில் தேர்தல் காலங்களில் திடீர் குடிசைகள் முளைப்பது என்பது அரசியல் அனாச்சாரங்களில் அடையாளம் என்றாகி விட்டது. பெரும்பாலான குடிசைப் பகுதிகள், நீர் வழித் தடத்திலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மழை வெள்ளக் காலங்களில் தண்ணீர் தங்கும் பள்ளத் தளங்களிலும் ஆக்கிரமிப்பு கொண்டுள்ளன.

வாக்காளர்களைக் கவர்வதற்காகவே வாழ்க்கை நடத்துகின்ற அரசியல் தலைவர்களின் இறுக்கப் பிடிக்குள் இந்த குடிசைகள் விளங்கி வருகின்றன. இயற்கைப் பேரிடர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் இந்த ஆக்கிரமிப்புக் குடிசைக் குடியிருப்புகளும் ஒன்று. இவற்றை அகற்றவேண்டும். நீர் தேங்குவதைத் தடுத்து நிறுத்தி, நீரோட்டத்திற்கு வழிவகுத்து, அந்த தண்ணீரைக் கடலில் கலப்பதற்குத் தடையின்றிச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

திருப்புகழ் தலைமையிலான குழு இதில் ஈடுபடும் போது ஏற்படுகின்ற அரசியல் பிரச்சினைகளை அவர் எப்படி எதிர் கொள்ளப் போகிறார், அவரின் சீரிய களப்பணிகளுக்கு அரசு எப்படி ஒத்துழைத்த போகிறது என்பனவெல்லாம் சிந்தனையைச் சுணங்க வைக்கின்ற செயல்பாடுகள். மாநகராட்சிக்கான பொதுத் தேர்தல் நெருங்கி வருகின்ற காலகட்டத்தில் முக்கியமான வாக்காளர்களாக இருக்கும் குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவது தமக்கு ஆபத்தானது என ஆட்சியாளர்கள் நினைக்கக்கூடும். அத்தகைய தேர்தல் வியூகத்தில் இருந்து ஒதுங்கி, திருப்புகழின் திட்டங்கள் எப்படி எழ முடியும் என்பது அவருக்கு எதிர் நின்றுள்ள சவாலாகும்.

காலம் இருக்கிறது. காத்திருப்போம். கண்டறிவோம்.