தொடர்கள்
தொடர்கள்
மிடில் பெஞ்சு - 1 - இந்துமதி

20211018184000957.jpg

எனது குழந்தை பருவத்தில், டீச்சர் விளையாட்டுகளில் அம்மாவின் பழைய புடவைகளை கட்டி கொண்டு டீச்சராக விளையாடிய நாட்கள் எல்லாம் ஆசிரியை ஆக வேண்டும் என்பது தான் வாழ்வின் லட்சியமாக இருந்தது. ஆசிரியர், தான் தப்பு செய்தால் கண்டிப்பார்கள். அவர்களுக்கு இந்தs சமுதாயத்தில் தனி மரியாதை உண்டு என்று மனதில் ஆழமாய் பதிந்து போயிருந்தது. சற்றே வயது வந்த பிறகு, மாவட்ட ஆட்சி தலைவர் ஆக வேண்டும் என்ற என் அப்பாவின் ஆசையை, நானும் எனக்கானதாய் வரித்து கொண்டேன். பள்ளி இறுதியை நெருங்கிய போது... இயற்பியலும், வேதியலும் புரியாமல் நொண்டி அடித்ததால் மருத்துவராகி விடலாம் என்று நினைத்தேன். மருத்துவம் கிடைக்காததால் கடைசியில் படித்தது பொறியியல், ஆனால் மனதிற்கு மிகவும் பிடித்ததென்னமோ தமிழ் இலக்கியம்.

இது எனக்கு மட்டும் இல்லை நிறைய பேருக்கு நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. எது நமக்கானது என்றே தெரியாமல் இருப்பது, எப்போதுமே நடுவிலேயே நிறுத்தப்படுவது. பள்ளியில் உயரத்தின் அடிப்படையில் நிற்கவைகையில் குள்ளமாகவும் இருந்ததில்லை, உயரமாகவும் இருந்ததில்லை. உயரத்தில் கடைசியில் இருந்து நான்காவது இதுதான் என் இடம், இதனால் அதிக கவனம் பெற முடியாது என்றபோதும், அதைப் பற்றிய கவலைகள் எனக்கு இருந்ததில்லை. எப்போதாவது நாம் எதையாவது சிறப்பாய் செய்துவிட்டால், அப்போது ஒரு பாராட்டு கிடைக்காதா என்று ஏங்கும் மனம், அப்போது ஏனோ நம்மை திரும்பி பார்க்க ஆள் இருக்காது.

ஆசிரியர்களுக்கு பிடித்த அல்லது அவர்கள் மறக்க முடியாத மாணவ(ன்)வியாக இருப்பதற்கு சில தகுதிகள் வேண்டும். ஒன்று மிக சிறப்பாய் படிப்பவர்கள் - அவ்வளவு வேர்வை சிந்தி உழைப்பவள் இல்லை நான், பாட புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வந்து விடும். அதே கதை புத்தகம் என்றால் விடிய விடிய வாசிக்கும் ஆள். இரண்டு - அதிக அழகாய் இருத்தல் வேண்டும் - இந்தப் பகுதி விபத்துகள் நிறைந்தது. கடந்து விடலாம், மூன்று - அதிக குறும்புகள் செய்பவராய் இருத்தல் வேண்டும் அல்லது தைரியமாய் பேசத்தெரிந்தவராய், இதிலையாவது வரலாம் என்றால், ஆசிரியர்களை கண்டால் பயமுண்டு. அவர்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்லி முடிக்கும் முன்பே கால்கள் கிடுகிடுக்கும். குறும்புகள் எல்லாம் செய்தாலும் வெளி தெரியாது. அதனால் இதுவும் சரிபட்டு வராது. நான்கு - படு முட்டாளாய் இருத்தல் வேண்டும், அப்படி இருந்தாலும் நம்மை மறக்க மாட்டார்கள். ஆனால் ஏதோ கொஞ்சம் புரிவதால் இதன் கீழும் நாம் வரமாட்டோம்.

முதல் பெஞ்சும் கடைசி பெஞ்சும் பெரும் கவனம், ஏனோ நடு பெஞ்சு பெறுவதில்லை. நம்மை ஆசிரியர்கள் நினைவு வைத்துக்கொள்வது இருக்கட்டும், நமக்கு நெருங்கிய தோழமைகள் தவிர வேறு எவருமே நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். மேற்சொன்ன நான்கில் எதிலுமே வராத மாணவர்கள் தான் வகுப்பில் நிறைய பேர் இருப்பார்கள், அப்படிப்பட்டவர்களின் நானும் ஒருத்தி. அதற்காகவெல்லாம் நான் வருந்தியதே இல்லை. நடு பெஞ்சின் வசதி நமக்கு தானே தெரியும். இதில் எனக்கு வருத்தமான விஷயம் என்னவென்றால், நானே எப்போதாவது தான் வீட்டுப்பாடம் செய்திருப்பேன். அன்று பார்த்து மொத்த வகுப்பும் வீட்டுப்பாடம் செய்யாமல் அடிவாங்கும் போது, நாம் மட்டும் உட்காந்திருந்தால் நம் நண்பர்கள் எல்லாம் நம்மை விரோத பார்வை பார்ப்பார்களே என்று அஞ்சி அன்றும் அடிவாங்க நேரும், அப்போது தான் இனி வீட்டுப்பாடம் செய்யவே கூடாது என்ற வீர சபதம் எடுக்க தோன்றும்.

மிடில் பெஞ்சில் பல நன்மைகள் உண்டு, பொதுவாக ஆசிரியர்கள்... முதல் பெஞ்சையோ அல்லது கடைசி பெஞ்சையோ தான் பார்த்தபடி பாடமெடுப்பார். அதனால் நடு பெஞ்சில் அமர்ந்து சிலர் தூங்குவது, பசித்தால் யாருடைய சாப்பாட்டு பையையாவது எடுத்து உணவை கபளீகரம் செய்வது, முன்னால் அமர்ந்து கவனிக்கும் நட்புகளை வம்புக்கு இழுப்பது என்று பல ரகளைகள் நடந்தேறும், அதே போல மொத்த வகுப்பும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது வரும் போது, கடைசி பெஞ்சில் இருந்து அல்லது முதல் பெஞ்சில் இருந்து தொடங்கி நடுவுக்கு வருவதற்கு முன்பே பல நாட்கள் வகுப்பே முடிந்து போயிருக்கும். வாழ்க்கையிலும் சுவாரஸ்யமான மிடில் பெஞ்ச் காலமென்று ஒன்று உண்டெனில் அது கல்லூரி காலம் தான். நம் கல்லூரி காலங்களில் பயன்படுத்திய சீருடைகள், கிடைத்த பரிசுகள், முகிழ்த்த காதல்கள், பரிமாறி கொண்ட வாழ்த்தட்டைகளை, எல்லாம் எடுத்து பார்க்கும் போது திரும்பி அந்த நாட்களுக்கு பயணித்த உணர்வு வருமல்லவா! அப்படியான எனது பொக்கிஷ பொழுதுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அப்போதெல்லாம் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதினால் மட்டும் போதாது... கூடவே மருத்துவத்திற்கும் பொறியியலுக்கும் தனியாய் நுழைவு தேர்வுகள் உண்டு. இந்த நுழைவு தேர்வுக்கு, நம்மை தயார் செய்ய பல பயிற்சி மையங்கள் (கோச்சிங் சென்டர்கள்) படையெடுத்தத்துண்டு. இது போக சில பள்ளிகளில் குழந்தைகளை வீட்டிற்கே அனுப்பாமல் இரவெல்லாம் படிக்க வைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல வேளை நான் படித்த பள்ளியில், இந்த கற்பித்தல் முறை எதுவும் வழக்கத்தில் இல்லாததால் அதிக சுமையின்றி கழிந்தன நாட்கள். நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்பிற்கு எங்கள் ஊரிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரம் உள்ள நகருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. எங்கள் வகுப்பின் தோழர், தோழியர் சுமார் இருபது பேர் சேர்ந்ததால் வாடகை வேனில் கிளம்பி போவோம். வழி நெடுக வரும் வயல்களும், வாழை தோட்டங்களும், குளங்களும் அங்கே நிற்கும் பெயர் தெரியா பறவைகளும், கூடவே வேனில் ஒலிக்கும் மெல்லிசையும் சேர்ந்து மனதிற்குள் சுகந்தமான உணர்வுகளை ஏற்படுத்தும். எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்குமோ என்ற பதற்றமின்றி ஒரு சுற்றுலா செல்வதை போல மகிழ்வாய் கழித்த நாட்கள் அவை.

அநேகமாய் என்னுடன் படித்த பலர் கருத்தாக படித்து, நல்ல பொறியியல்/மருத்துவ கல்லூரிகளில் எல்லாம் இடம் வாங்கிய படிப்பாளிகள். தினமும் பயிற்சி வகுப்பில் சிறு தேர்வு வைப்பார்கள், முதலில் விடை தாள் தருவார்கள், பின்பு தான் கேள்விகளை தருவார்கள். கேள்விகள் வரும் முன்பே, நானும் என் தோழியும் பதில் எழுதி இருப்போம், ABCD யில் எதாவது ஒன்றில் பென்சிலால் வண்ணம் தீட்ட வேண்டியது தான், அதற்கு எதற்கு கேள்விகள்? அழகியல் உணர்வோடு செய்ய வேண்டியது தானே (கோலம் போல) என்ற பொதுக் கருத்துடன் செயல்படுவோம். சமயத்தில் 25 கேள்விகள் மட்டுமே இருக்கும். கேள்வி தாளுக்கு நாங்கள் 50 பதில்களை கூட வண்ணம் தீட்டியதுண்டு.

இப்போது வீட்டில் இருந்தபடியே சுலபமாய் செய்து முடித்து விடும் விஷயம், அப்போது ஒரு திருவிழாவை போல் நடந்தது. நான் கல்லூரியில் சேர்ந்த நாட்களில் எல்லாம் கல்லூரியை தேர்ந்தெடுப்பதே மிகப் பெரிய கொண்டாட்டமாய் தான் நடக்கும். இதற்காக சென்னைக்கு ரயிலேறி வந்ததே பரவசமான உணர்வு, அந்த பருவத்திற்கே உரிய ஆச்சர்யத்துடன் நகரத்தையும், மனிதர்களையும் கவனித்தபடி என் தந்தையுடன் பயணித்த அந்த அற்புத ரயில் பயணத்தை, இப்போதும் நினைத்து மலர்கிறது மனம். தன் கைகளுக்குள் பொத்தி வளர்த்த மகளை, படிப்புக்காக வெளியில் அனுப்புவது சரிவருமா... அவள் பாதுகாப்பாக இருப்பாளா போன்ற பல பதட்டங்களுடன் இருந்தனர் என் பெற்றோர். கல்லூரியை தேந்தெடுக்க நாங்கள் போன போது, நான் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுத்தேன், என் தந்தை வேறு ஒன்றை தேர்ந்தெடுத்தார். நான் தேர்தெடுத்திருந்த கல்லூரியில் சீட்டுகள் வேகமாய் குறைந்து கொண்டே வந்தது. கடைசி இரண்டு சீட்டுகள் மட்டுமே மிச்சமிருந்த நிலையில், தன்னுடைய ஆசை தான் நிறைவேற போவதாய் என் தந்தை நினைத்திருக்க... அந்த இரண்டு சீட்டில் ஒன்று கிடைத்து என்னுடைய ஆசையே நிறைவேறியது. எனக்காக செலவழிக்க என் தந்தை தயாராக இருந்தாலும், குறைந்த பட்சம் ஒரு இலவச சீட்டாவது எடுப்பது தான் அவர்களை பெருமை படுத்தும் என்று கருதினேன் நான்.

வாழ்வென்பது அனுபவங்களின் தொகுப்பு தான், வாழ்வை திரும்பி பார்க்கும் போது நாம் கவலையற்று துள்ளி திரிந்த காலமாய் நிச்சயம் நமது கல்லூரி காலங்கள் இருந்திருக்கும். பள்ளிக்கும் வேலைக்கும் நடுவில் உள்ள இந்தக் கல்லூரி வாழ்வு ஆக சிறந்த தருணங்களை பரிசளிக்க கூடியது. தான் விரும்பிய மேல்படிப்பு கிடைக்க வேண்டி பல மகிழ்வுகளை தள்ளி வைத்துவிட்டு தான் பள்ளி இறுதியை முடிக்க வேண்டி இருக்கிறது. கல்லூரியில் சிலருக்கு விரும்பிய படிப்பு கிடைத்திருக்கும், பலருக்கு புதிதாய் விரும்பாத ஒன்றை பரிசளித்திருக்கும் காலம். எது எப்படி இருந்தாலும், அதை எல்லாவற்றையும் மாற்றி விடுகிற வித்தையை செய்து விடும் தோழமை. இன்று பெருந்தொற்றால் மனங்களும் உடல்களும் முடங்கி இருக்கும் நிலையில், கல்லூரியை பற்றிய முகாந்திரங்கள் ஏதுமின்றி ஆன்லைன் வகுப்பில் மட்டுமே காலம் கழிக்கும் இளைஞர்கள், காகித மலர்களை தான் நுகர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தம் வாழ்வில் பல அற்புதமான தருணங்களை தவற விடுகிறார்களே என்று மனம் வருந்துகிறது. பல விஷயங்களுக்கு இன்று கணினி மாற்றாக வந்திருக்கலாம். ஆனால், மனம் முழுவதும் விகசித்து பரவும் மகிழ்ச்சியை, ஆச்சர்யத்தை, பயத்தை, ஆசுவாசத்தை எல்லாம் அனுபங்களால் மட்டுமே நமக்கு தர இயலும்.

வயது முதிர்ச்சி அடையும் போது.... நம் மனங்கள் மகிழ்ச்சியை மறுதலிக்கிறது, ஏதாவது ஒரு காரணத்தை தூக்கி பிடித்து கொண்டு துக்கம் கொண்டாடுகிறது. ஆனால், வாலிபம் என்பது பறவை குஞ்சுக்கு முளைத்த புது றெக்கை போல மகிழ்ச்சியை மட்டுமே தேடி அலையும் பருவம். பல புதிய நட்புகளும், சூழல்களும் கூட்டில் இருந்து வானத்தில் பறக்கும் சுதந்திரத்தையும், வல்லூறுகளுக்கான எச்செரிக்கையையும் ஒருங்கே தரவல்லது. எனது கல்லூரி காலம் எனக்குள் மலர்த்திய மலர்களை பற்றி எழுத விளைகிறேன், அதன் வண்ணங்களையும், வாசனையையும் நான் நுகர்ந்தபடியே கையளிக்க நினைக்கிறது என் இதயம். எனினும் வாடுவதும் பின்பு மொட்டு விட்டு மலர்தலும் பூக்களுக்கு இயல்பு தானே, அப்படியே மனிதர்களுக்கும். இந்த என் நினைவு பாதையில் என்னுடன் பயணிக்க வரும் உங்களுக்கு என் மனதில் அடியாழத்தில் ஊறிக் கொண்டிருக்கும் மகிழ்வின் ஊற்றினை அகழ்ந்தெடுத்து தருகிறேன். அந்த அனுபவங்கள் உங்களையும் பரவசபடுத்ததும்.

20211018184108194.jpg