தொடர்கள்
தொடர்கள்
தொடர்கள் திரை நாயகிகள் - 23 - தி. குலசேகர்

சத்தம் போடாதே, கேளடி கண்மணி

20211018184527891.jpg

‘இரண்டாம் உலகப்போருக்கு பிற்பாடு தோன்றிய தொழில் புரட்சியின் காரணமாக ஏராளமான தொழிற்சாலைகள் மேலை நாடுகளில் தோன்ற ஆரம்பிக்கின்றன. அப்படியாக முதலாளித்துவ சமுதாயம் உருவாகிறது. அந்த நேரத்தில் அதற்கான வேலையாட்கள் போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை. ஏராளமான ஆண்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டிருந்ததே காரணம். அப்போது பெரும் சம்பளம் தந்து வீட்டிற்குள் அடைந்து கிடந்த பெண்களை வெளியே கொண்டு வர வேண்டிய தேவை முதலாலித்துவ வர்க்கத்திற்கு தேவையாகிறது. கெட்டதில் நடந்த நல்லது.

அப்படியாகவே மேலை நாட்டு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். சொந்த காலில் நிற்கிறார்கள். படிக்கிறார்கள். பெண் உடல் அரசியல் நிமித்தம் பெண்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டிருந்த கற்பு என்கிற கற்பிதத்தை தங்களின் அகராதியில் இருந்து தூக்கி கடாசுகிறார்கள்.’


20211018184652254.jpg

‘சத்தம் போடாதே’ கதையில் நாயகி பத்மபிரியாவிற்கு, தான் ஆணாதிக்க சமூக நியதிகளுக்கு கட்டுப்பட்ட பெண் என்கிற உணர்வு வந்து வந்து உறுத்திக் கொண்டே இருக்கும். அவளால் அதிலிருந்து வெளிவர முடிவதில்லை. அந்த திரைநாயகி எப்படி யோசிக்கிறாள் என்று பார்ப்போம்.

அவள் ஒரு சைக்கோவை திருமணம் செய்து கொள்கிறாள். அவனின் ஓவர் பொஸசிவ்னெஸ் என்கிற பாசாங்கு வார்த்தைக்கு பின்னால் இருக்கிற பெண் உடம்பு, ஆணின் உரிமை என்று நம்புகிற பழமையோடிப்போன நம்பிக்கை ஒளிந்திருக்கிறது.

அவன் இம்பொட்டன்ட் ஆக இருக்கிறான். வேறு குழந்தையை தத்தெடுக்கிற யோசனை படி ஒரு குழந்தையை தத்தெடுத்து, பிற்பாடு அந்தக் குழந்தையை தன் குழந்தையாக அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே என்று அந்தப் பெண், அந்தக் குழந்தையின் கனவுகள் அத்தனையையும் ஆசை வார்த்தை காட்டி விட்டு உடைத்தெறிகிறாற்போல், அவனுக்காக திரும்ப அதே அனாதை ஆசிரமத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறாள்.

அந்த நாயகிக்கு அது குறித்த குற்றவுணர்வு தோன்றாதா? சைக்கோ காதலன் செய்த டார்ச்சர் காரணமாக, அவனை பற்றிய நினைவு வருகிறபோதெல்லாம் கை நடுங்கும். நாயகியின் நடுக்கத்தை நாயகன் பிருதிவிராஜ் சரி செய்வதெல்லாம் சரி.

அந்த நாயகிக்கு, அந்த அனாதை குழந்தையை மறுபடி எடுத்து வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் ஏன் வரவில்லை.

சுயநலம். குழந்தையை எடுத்து வளர்க்க நினைத்தது ஆணாதிக்க மனோநிலையில் ஒரு சமூக அங்கீகாரத்திற்காக மட்டும் தான். அன்பினால் அல்ல. இப்போதுள்ள நாயகனும் இன்ஃபெர்டைலாக இருக்கிற பட்சம், மீண்டும் அவள் வேறொரு குழந்தையை ஆணாதிக்க சமூகம் மலடி என்று சொல்கிற சொல்லில் இருந்து தப்பித்து, இந்த ஆணாதிகக் சமூகத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக தத்தெடுக்க யத்தனிக்க கூடும்.

‘கேளடி கண்மணி’. விடோயரான எஸ்.பி. பாலசுப்ரமணியமும், இளம்பெண் ராதிகா இருவரும் காதலுறுகிறார்கள். எஸ்.பி.பி-யின் மகள் அஞ்சுவிற்கு, ராதிகாவை தன் இறந்து போன அம்மா கீதா இருந்த இடத்தில் வைக்க மனம் ஒப்பவில்லை. பொசஸிவ்னெஸ் காரணமாக ராதிகாவை அம்மாவாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள், பாலசுப்பிரமணியமும் மகளின் அறியாமையை புரிய வைக்க முயற்சிப்பதில்லை. அவளின் இரண்டுங்கெட்டான் பிடிவாத பருவம் காரணமாக இருக்கலாம். ராதிகாவும் தன் விருப்பத்தை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு வேறு எங்கோ கண் காணாத இடம் தேடி சென்று விடுகிறார். இருபது வருடத்திற்கு, அஞ்சு தனக்கு வந்திருக்கும் நோயின் நிமித்தம் விரைவிலேயே தன்னுடைய காதலனை பிரிந்து விடுவோமோ என்கிற அச்சத்தில், பதின்பருவத்தில் தன் அப்பாவின் காதலை பிரித்த விசயம் இப்போது எங்கிருந்தோ வந்து உறுத்துகிறது. தன் காதலனோடு சேர்ந்து எப்படியாவது ராதிகாவை தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் அப்பாவோடு சேர்த்து வைக்க நினைக்கிறார். நினைத்ததை செய்தும் முடிக்கிறார்.

இந்தக் கதையில் எஸ்.பி.பி கையறுநிலையில் இருந்தாலும், தன் மகளின் அறியாமையால், பிடிவாதத்தால், ராதிகாவிற்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல், அவரை விட்டு பிரிந்து செல்கிறார். அதன் பிறகு அது குறித்து எந்தவித வருத்தமும் கொண்டவராக தெரியவில்லை. ராதிகாவிற்கு என்னவாயிற்று என்றெல்லாம் அவர் ஒருபோதும் நினைத்து பார்ப்பதில்லை. ராதிகா என்கிற திரை நாயகி ஒரு கன்னியாகவே தன்னுடைய அடுத்த இருபது ஆண்டுகள் கிட்டத்தட்ட தன் இளமை பருவம் முழுக்க தன்னை ஏற்றுக்கொள்ள இயலாத காதலனை நினைத்துக்கொண்டு எங்கோ ஒரு மூலையில் தனிமையில் வாழ்ந்திருக்கிறார். அது குறித்து இந்தச் சமூகமும் எந்தக் கவலையும் கொண்டதாக தெரியவில்லை.

20211018184825152.png

ர். சூடாமணியின் ‘இறுக மூடிய கதவு’ சிறுகதையில் நாயகியே தன் மகனிடம் கைம்பெண்ணாக இருக்கிற நாயகி தனக்கு அனுசரனையாக இருக்கிற தன் காலஞ்சென்ற கணவனின் நண்பனோடு காதலுறுகிறாள். அவரின் பதின்பருவ மகனிடம் தன் மறுமணம் பற்றி பேசுவார். அவனுக்கு ஆணாதிக்க ஆணின் பெண் உடம்பு ஒரு ஆணின் சொத்து.. அவன் இறந்தே போயிருந்தாலும், கையாலாகாமல் போயிருந்தாலும் அவள் உடம்பு அவனின் சொத்து என்கிற ஆணாதிக்க மனோநிலையை மரபணுவின் நீட்சியில் அந்த விடலை பையன் வெளிப்படுத்துவான். அவளால் அவனுக்கு புரிய வைக்க முயன்று தோற்றுப் போவாள். அதன் பிறகு அவனுக்காக தன் மனதில் உதித்த காதலை வெளிப்படுத்தாமல் மறைத்து கொள்வாள். மருகுவாள். அந்தக் காதலின் நினைவோடேயே வாழ்வாள். ஒரு கட்டத்தில் நாயகிக்கு அதற்கு மேல் வாழவே பிடிப்பதில்லை. நோய்மையுறுகிறாள். படுத்த படுக்கையாகிறாள். மருத்துவர் அவரை சோதித்து பார்க்கையில் அவருக்கு உடம்பு ரீதியாக ஒரு பிரச்னையும் இல்லை. அவர் நினைத்தால் தான் அவர் பிழைக்க முடியும். அவருக்கு வாழ விருப்பமில்லை என்று சொல்கிறார். இப்போது வளர்ந்திருக்கும் அந்த மகனுக்கு அத்தனையும் புரிகிறது. தன்னுடைய பதின்பருவத்தில் எத்தனை பெரிய மடத்தனத்தை அம்மாவின் வாழ்க்கையில் நிகழ்த்தி இருக்கிறோம் என்பது புரிகிறது.

மகனுக்கு தாய் மீது இடிபஸ்காம்ப்ளக்ஸ், மகளுக்கு தந்தை மீது எலக்ட்ரா காம்ப்ளக்ஸ் சற்றேனும் எல்லோருக்குமே இயற்கையில் இருக்கவே இருக்கிறது என்கிறது மனோதத்துவம்.

அதன் நிமித்தம் அவன் அறிந்தும் அறியாமல் செய்த பாதகம், அவனுக்குள் குற்றவுணர்வாக கிடந்து உறுத்துகிறது. அதற்காக இப்போது பிராயச்சித்தம் தேடிக் கொள்ள அவன் நினைக்கிறான். அது ஒன்றே அம்மாவை காப்பாற்ற உள்ள மார்க்கம். அல்லது அம்மா நிச்சயம் சில நாட்களில் நிறைவேறாத காதலின் நிராசையோடு மரித்து போவாள் என்பது அவனுக்கு விளங்கி விடுகிறது.

20211018184930103.jpg

கேளடி கண்மணி’யில் மகள் என்கிற பெண்ணிற்குள் இருக்கிற ஆணாதிக்க மனோநிலை காட்டப்படுகிறது. இறுக மூடிய கதவு சிறுகதையில் மகன் என்கிற ஆணிற்குள் இருக்கிற ஆனாதிக்க மனோநிலை காட்டப்படுகிறது.

அம்மாவின் டைரியில் அம்மாவின் காதலர் பற்றிய விவரத்தை தேடுகிறான். அம்மாவின் டைரி எங்கும் அவரின் காதலன் பற்றிய பதிவுகளே. அம்மாவின் அதை அவன் வளர்ந்ததும் புரிந்து கொண்டு, அதற்காக வெட்கப்படுவான். அவனே அம்மாவின் காதலரை தேடிக் கண்டுபிடித்து சேர்த்து வைப்பான்.

அப்போது ஒரு அற்புதமான நிறைவுக்காட்சியை சூடாமணி எழுதி இருப்பார். நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுடைய மத்திம வயதில் சந்தித்துக் கொள்கிற அந்தக் காதலனை பார்த்ததும், நாயகியை விட்டு பிரிந்து கொண்டிருந்த உயிர் திரும்ப அவளுக்குள் புத்துயிர்ப்பு கொள்வதையும், அவளின் காதலனை அவளுக்காகவே அவளின் நினைவுகளோடு காத்திருக்கிற காதலனை பார்த்ததும் நீண்ட நாட்களுக்கு பிறகு அப்படியொரு மலர்ச்சியான புன்னகையை அவள் வெளிப்படுத்துகிறதிலிருந்து புரிந்து கொள்கிறான். அந்த நொடியில் அந்த மகனின் மனதில் அழுத்திக் கொண்டிருந்த குற்றவுணர்ச்சி அவனிடமிருந்து விடை பெறுகிறது. அது ஒரு அற்புதமான தருணம். அவனின் ஆணாதிக்க மனோநிலையிலிருந்து சமத்துவ மனோநிலைக்கு அவனின் மனதை அவன் தாயின் அழுத்தமான காதல் நகர்த்துகிறது. அவர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிரைவஸிக்கு இடைஞ்சலாக தான் இருப்பதை அப்போது உணரும் நாயகியின் மகன், தன் அம்மாவை அவளின் காதலனோடு தனியாக விட்டுவிட்டு அந்த அறையின் கதவை வெளிப்புறமாய் சாத்திவிட்டு, வெளியே வந்து நிம்மதி பெருமூச்சு விடுகிறான். அப்போது அவனையும் அறியாமல் அவன் கண்கள் சிலிர்த்து ஈரம் பாரிக்கிறது.

கைம்பெண்ணாக இருக்கிற இந்த சிறுகதையின் நாயகி தன்னுடைய மகன் பதின்பருவத்தில் இருக்கிறபோது தன்னுடைய காதலை தெரிவிக்கிறாள். விடோயராக இருக்கிற ‘கேளடி கண்மணி’ நாயகன் தன் மகளிடம் தன் காதலை தெரிவிப்பதை விட இது துணிச்சலானது. மேலும் ‘இறுக மூடிய கதவில்’ வருகிற நாயகி இறுதி வரை மனதிற்குள் தன் காதலை தேக்கி வைத்து இருக்கிறாள். அந்த நிறைவேறாத காதல் தருகிற வெம்மையை தாளாமல் தானே தன்னை மாய்த்துக் கொள்ள நினைக்கிறாள். அதாவது தனக்கு தன் காதலனை பிரிந்து வாழ்கிற வாழ்க்கை சகித்துக் கொள்ளக் கூடியதாக இல்லை என்பதை அவள் வெளிப்படுத்துகிறாள். அந்த விசயமும் ரொம்பவே துணிச்சலானது தான்.

இயக்குநர் வஸந்த் ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தை இயக்கியபோது, அந்த அளவிற்கு திரை நாயகியை 90 காலக்கட்டத்தில் சித்தரிக்க கூடிய சூழல் இல்லாமல் இருந்திருக்கலாம். இப்போதும் அதே நிலமை தான் அப்படியான திரை நாயகிகளுக்கு இருக்கிறது என்பதே ஆகப் பெரிய சோகம். அந்த துயரமான சமூகநிலை நிச்சயம் மாற்றப்பட வேண்டும் தான்.

ழுத்தாளர் ஜெயந்தன் எழுதிய ஒரு சிறுகதையில் இதே மாதிரியான சம்பவம் நிகழும். இதே மாதிரி அதிலும் காதலர்கள் பிரிந்து விடுவார்கள். பிற்பாடு இருபது வருடத்திற்கு பிறகு இதே மாதிரி அம்மா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற போது, அவளுக்கு அவளின் காதலனை பார்க்க விருப்பம் இருப்பதை உணர்ந்து கொள்ளும் வளர்ந்த மகன், அவரை தேடிக் கண்டுபிடித்து வரவழைப்பான். அப்படியாக புறப்பட்டு வரும் அந்த மத்திம வயதில் இருக்கிற காதலன் ரயிலில் வருவார். காதலியின் மகன் இப்போது அவரை ஆரத்தழுவி அப்பா என்று வாய் நிறைய அழைப்பான். சட்டென அவருக்கு விழிப்பு தட்டும். ரயில் காதலியின் ஊர் வந்து சேர்ந்திருக்கும். காதலியின் மகன் முன்னால் வந்து நின்று அவரை பார்த்து ‘வாங்க அங்கிள்’ என்பான்.

மொத்தத்தில் பெண் உடம்பால் அளக்கப்படுகிற விசயம் தான் இதில் ஊடாடுகிறது. பெண் உடம்பானது ஆணின் உடமை. ஆணின் சொத்தாகவே ஆணாதிக்க சமூகத்தில் பாவிக்கப்படுகிறது. அதிலிருந்து படிப்படியாக பெண்கள் மீண்டு, என் உடம்பு என் உரிமை என்று ஒருமித்து முழங்குகிற தருணம், இங்கே பெண்+ஆண் சமத்துவம் மலர்வதோடு, பெண்கள் அறிவாலும், அன்பாலும் அளக்கப்படுவார்கள். அறிவாலும், அன்பாலும் பிரதானப்படுத்தப்படுவார்கள்.

20211018185046704.jpg