தொடர்கள்
ஆன்மீகம்
கண்ணப்ப நாயனார்!! - ஆரூர் சுந்தரசேகர்.

கண்ணப்ப நாயனார்

எந்தவித வழிபாட்டு முறையும் தெரியாமல், தனக்கு தெரிந்தபடி, இறைச்சியை படைத்து சிவபெருமானை வழிபட்டு, பின் மெய்யான பக்தியில் தன்னையே மறந்து தன் கண்ணையே விருப்பத்துடன் கொடுத்த கண்ணப்ப நாயனார், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார்.

சிவனுக்கே கண் தானம் வழங்கியதால், கண்ணப்ப நாயனார் என்று அழைக்கப்பட்டார். பக்தியின் உச்சத்துக்கு கண்ணப்ப நாயனார் சிறந்த உதாரணமாக கூறப்படுகின்றார். பிறப்பால் உயர்வு - தாழ்வில்லை என்பதையும் கண்ணப்ப நாயனார் மூலமாக சிவபெருமான் காட்டியருளினார்.

“கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன்” - என்று சுந்தரமூர்த்தி நாயானார் திருத்தொண்டத் தொகையில் கூறியுள்ளார்.

கண்ணப்ப நாயனார் பிறப்பு:

தொண்டை மண்டலத்து வேங்கடக்கோட்டத்தைச் சார்ந்ததும் காளத்தியைச் சூழ்ந்ததுமான பொத்தப்பி என்னும் மலைநாட்டில் உடுப்பூர் (உடுப்பூர் என்னும் இத்தலம் தற்போது உட்டுகூர் என்று வழங்குகின்றது) என்னும் ஊரில் வேடர் குலத் தலைவனாக இருந்த நாகனார், தத்தை தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே மிகவும் வலிமை வாய்ந்தவனாக இருந்ததால் அவனுக்குத் திண்ணன் என்று பெயரிட்டனர்.

இவர் சிறு வயது முதலே வேடர் குல மரபிற்கு ஏற்ப வில், வேல், ஈட்டி, முதலான ஆயுதங்களை கையாளவும், மற்றும் வில்வித்தையிலும் சிறந்து விளங்கினார். இவர் தன்னுடைய பதினாறாவது வயதை எட்டியவுடன் ஒரு நல்ல நாள் பார்த்து வேட்டையாடும் கலையை இவரது தந்தை இவருக்குக் கற்பித்தார். அதன்பின் நாகனாருக்கு வயதாகவே திண்ணன் வேடர்குலத் தலைவனாகப் பொறுப்பேற்றார்.

கண்ணப்ப நாயனார் பக்தி:

ஒரு நாள் திண்ணன், நாணன், காடன் ஆகிய நண்பர்களோடு வேட்டையாட காட்டிற்கு சென்றார். அப்பொழுது ஒரு காட்டுப்பன்றி ஒன்று வேட்டைக்காக விரித்த வலைகளை அறுத்துக்கொண்டு ஓடியது. அதனை துரத்திச் சென்ற மூவரும், எப்போதும் வேட்டையாடும் காட்டை விட்டு வெகுதூரம் ஓடிச்சென்று திருக்காளஹஸ்தி மலையடிவாரத்தில் ஒரு காட்டு புதருள் மறைந்த அந்தப் பன்றியைத் திண்ணன் தம் குறுவாளால் வெட்டி வீழ்த்தினார்.

காட்டுக்கும், மலைக்கும் அந்தப் பக்கம் பொன்முகலி என்ற நதி இருப்பதாக நாணன் கூறவே, அவனும் திண்ணனும் தண்ணீர் எடுத்து வருவதற்காக அங்கே சென்றனர். அங்கே ஓடும் பொன்முகலி ஆற்றையும் ஓங்கி உயர்ந்திருந்த திருக்காளத்தி மலையைக் கண்டு திண்ணன் பரவசம் அடைந்தார்.

திண்ணனின் (கண்ணப்ப நாயனார்) முற்பிறப்பு நற்செயல் பலன்கள் அவரை அந்த மலைக்கு அழைத்துச் சென்றன. மலைக்கு மேல் சென்று மலை உச்சியில் இருக்கும் குடுமித்தேவர் (சிவன்) கோயிலைக் கண்டார். அங்குச் சிவபெருமான் சுயம்புவாக அவதரித்து இருப்பதைக்கண்டு தன்னைப் பற்றிய அனைத்தையும் மறந்து இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவராய் திண்ணன் அந்தச் சிவலிங்கத்தை ஓடிச்சென்று கட்டிப்பிடித்து மகிழ்ச்சியுற்றார்.

சிவபெருமானும் கண்ணப்ப நாயனாரும்:

திண்ணனின் (கண்ணப்ப நாயனார்) உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் அளவிலாப் பேரானந்தம் பொங்கித் திளைத்தது. மேலும் இந்தக் காட்டில் சிவனுக்கு உணவளிப்பது யார்? சிவனை காக்க ஆளில்லாது தனியாக இருக்கின்றாரோ? அவருக்குத் துணையாக யாருமே இல்லையே என்று எண்ணி, சிவலிங்கத்தைச் சுற்றி வந்த போது அங்கே பூக்கள் இருப்பதைக் கண்டு நாணனிடம் வினவ, சிவ கோசரியார் என்பவர் ஆகம விதிமுறைப்படி குடுமித் தேவருக்கு பூஜை செய்வதை பற்றி சொன்னார். பின்பு இவர் எப்போது சாப்பிட்டாரோ என திண்ணன் மனம் கலங்கினார். உடனே ஓடிச்சென்று, தான் கொன்ற பன்றியை ஆற்றங்கரையில் தீயில் இட்டுப் பக்குவப்படுத்தி இறைச்சியைத் தன்னுடைய ஒரு கையில் எடுத்துக் கொண்டார், மறு கையில் வில் இருந்ததால் வாய் நிறைய ஆற்று நீரையும், காட்டில் பூத்திருந்த பூக்களை தன் தலையில் செருகியும் கொண்டு வந்தார். வாயில் உள்ள நீரை சிவபெருமான் மேல் உமிழ்ந்தார். தலையிலிருந்த மலர்களை சிவபெருமான்மீது உதிர்த்தார். பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை உண்ண வேண்டுமென வேண்டினார். இறைவனும் அதை ஏற்றுக்கொண்டார். பின் இரவு முழுவதும் வில்லேந்திக் காவல் புரிந்தார். திண்ணன் காலை விடிந்தவுடன் மீண்டும் குடுமித் தேவருக்குத் திருவமுது தேடி வரப் புறப்பட்டார். வழக்கம் போல, மறுநாள் காலை பூஜை புரிய வந்த சிவ கோசரியார் இறைவன் மீதிருந்த இறைச்சி முதலானவற்றைக் கண்டு வருந்தினார், பின் அவற்றை நீக்கித் தூய்மை செய்து பூஜை செய்து விட்டுச் சென்றார்.

அடுத்து, திண்ணனாரும் வந்து இறைச்சி முதலானவற்றை வைத்து வழிபட்டார். அன்றும் அதே போல் கண் அயராது சிவனுக்குப் பாதுகாப்பாக இருந்தார். மீண்டும் இதேபோல் அடுத்த நாளும் சிவகோச்சாரியார் அதே நேரத்தில் வர, அங்கு இறைச்சி முதலானவை இருப்பது கண்டு வருந்திச் சிவ கோசரியார் இறைவனிடம் முறையிட்டுவிட்டு, வீட்டிற்குச் சென்று உறங்கினார். தினமும் பூசைக்கு திண்ணனார் சிவபெருமானைத் தனக்குத் தெரிந்த முறையில் வழிபட்டுக் கொண்டிருக்க, சிவ கோசரியார் இந்த இருவித வழிபாடு பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டித் தவித்தார். அவரின் மனவேதனையைப் போக்க சிவபெருமான் அவரின் கனவில் வந்து “திண்ணனாரின் அன்பு வழிபாட்டை நாளை மறைந்து நின்று பார்ப்பாயாக!” என்று கூறி மறைந்தருளினார். அதேபோல அடுத்த நாள் சிவகோசரியார் மறைந்து நிற்க திண்ணனார் அதேபோன்று இறைச்சியைச் சிவனுக்குக் கொண்டு வந்தார்.

கண்ணப்ப நாயனார்!!

திருக்காளத்தி நாதர் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்ட, வலக் கண்ணில் இருந்து உதிரம் பெருகும்படிச் செய்தார். அதனைக் கண்ட திண்ணனார், செய்வதறியாமல் திகைத்தார். அருகில் இருந்த மூலிகை செடிகளின் சாறை எடுத்து வந்து சிவ லிங்கத்தின் கண்ணில் விட்டார். ஆனாலும் இரத்தம் வழிவது நிற்கவில்லை, திடீரென்று திண்ணனாருக்கு ஒரு யோசனை தோன்றவே தன் கண்ணைப் பிடிங்கி சிவனின் எந்தக் கண்ணில் உதிரம் வருகின்றதோ அந்த இடத்தில் தன்னுடைய கண்ணை அப்பினார், உடனே உதிரம் வழிவது நின்றது. இதனைக் கண்டு மகிழ்ந்து ஆடினார். திடீரென்று சிவபெருமானின் மற்றொரு கண்ணிலிருந்து உதிரம் வழியத் துவங்கியது. இதனைக் கண்ட திண்ணன் தன்னுடைய இன்னொரு கண்ணையும் பிடுங்கி இறைவனுக்குக் கொடுத்துவிடலாம் என்று எண்ணினார். தம் மறு கண்ணையும் பெயர்த்துவிட்டால் இறைவனின் இடக்கண்ணைச் சரியாகக் கண்டறிய முடியாது என்பதால், அடையாளத்துக்காகத் தம் காலின் பெருவிரலை இறைவனின் உதிரம் பெருக்கும் கண் மீது ஊன்றிக் கொண்டார். அம்பினால் தம் இடக்கண்ணைப் பெயர்க்கத் தொடங்கினார். திண்ணனின் இந்தப் பக்தியைக் கண்டு மறைந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவ கோசரியார் மெய்சிலித்தார்.

அப்போது சிவபெருமான் கண்ணப்பருக்குக் காட்சியளித்ததோடு மட்டுமல்லாமல்... “கண்ணப்பா நில்!” என்று அவர் கைகளைப் பிடித்து நிறுத்தி மற்றொரு கண்ணைப் பறித்து எடுக்க விடாமல் தடுத்தார். மேலும் அவருடைய வலது கண்ணை அவருக்கே திருப்பித் தந்ததால், திண்ணனுக்கு மறுபடியும் பார்வை வந்தது. “அன்பிலும் பக்தியிலும் ஒப்பற்றவனே! நீ என் வலப்பக்கமாக இருப்பாயாக!” என்று அவரது பக்தியை மெச்சினார். சிவபெருமானின் திருவாயினாலே கண்ணப்பர் என்றழைக்கப்பட்டு அறுபத்து மூன்று நாயன்மார்களில் சிறப்புமிகு முக்கிய நாயனாராக கண்ணப்பர் போற்றப்படுகிறார்.

கண்ணப்ப நாயனார்

குருபூஜை நாள்:

சிவபெருமானுக்கு, தனது கண்களை தானமாக வழங்கி மோட்சம் பெற்ற, கண்ணப்ப நாயனாரின் குருபூஜை விழா தை மாதம் மிருகசீரிஷ நட்சத்திர நாளன்று கண்ணப்ப நாயனார் முத்தியடைந்தத் திருத்தலமான திருக்காளத்தி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் நடைபெறுகின்றன. திருக்காளத்தி திருக்கோயில் வளாகத்திலும், கண்ணப்பர் மலையிலும் கண்ணப்ப நாயனாருக்கு தனிச் சந்நிதி உள்ளது. எல்லா சிவாலயங்களிலும் தை மாதம் மிருக சீரிஷம் நட்சத்திரத்தன்று கண்ணப்ப நாயனாரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது.

“திருச்சிற்றம்பலம்”

அடுத்த பதிவில் கலிய நாயனார்...