# மகளதிகாரம் #
பால்ய நாட்கள் துவங்கி
நிறைவேறாக் காதல்கள் வரை
நினைவின் இண்டு இடுக்கெல்லாம்
ஒவ்வொன்றாய்
உள்நுழைந்து
இயல்பாய் வெளியேற
உதவிக்கொண்டிருக்கிறார்கள்
அப்பாக்களுக்கு
மகள்கள்
எதிர்பாரா ஒரு பொழுதில்
பெற்றவளை இழந்துவிட்டு
அனாதையாக நிற்கிற அப்பாவை
தன் மடியில் கிடத்தி
பிஞ்சு விரல் கொண்டு
விழிநீர் துடைத்து
ஏனென்றே தெரியாது
தானும் அழுகையில்
சட்டென உருமாறி
அம்மாவாகிவிடுகிறார்கள்
அவர்கள்
Leave a comment
Upload