தொடர்கள்
கதை
திருமாளிகைக்கதவு - சத்யபாமா உப்பிலி

2022030821372663.jpg

“ எம்பெருமானாரை வரவேற்க நான் முதலில் வைகுண்டம் செல்ல வேண்டும் என்று ப்ரார்த்தித்தேன். அரங்கனும் அருளினான்” மகிழ்ச்சி பொங்க, பெருமிதத்துடன் கூறிய தன் கணவரை சற்று உற்று நோக்கினாள் ஆண்டாள். சராசரி பெண்ணானால் அழுது அறற்றி இருக்கவேண்டும். ஆண்டாளால் முடியாது. கூரத்தாழ்வானின் மனைவி, பராசரரின் தாய். “எம்பெருமானாரின் சேவையே நமக்கு முக்தி. தங்கள் சித்தம்” என்று கை கூப்பி, நிதானமாகக் கூறினாள்.

மனம் தயாராகத் தொடங்கியது அந்த தருணத்திற்காக. நிலம் சாய்ந்து, வாழ்விலும், மரணத்திலும் கூட குருவின் சேவையே குறிக்கோளாகக் கொண்ட தன் கணவனின் திருப்பாதங்களைத் தன் மடியில் கிடத்தினாள்.

எத்தனை காதங்கள் கடந்த பாதம். ஒவ்வொரு அடியும் உடையவரை நோக்கியே வைக்கப்பட்டது. இப்பாதங்கள் அரசனாகவும் பவனி வந்தது ஆண்டியாகவும் பவனி வந்தது. ஸ்ரீபாஷ்யம் எழுதுவதற்காக காஷ்மீர் வரை சென்றது, காவி உடுத்தி மன்னனின் முன் உடையவராய் நின்றது. மெதுவாக கால்களைப் பிடித்து விட்டாள். அழக்கூடாதென்றாலும் கண்கள் குளமாகின. வைராக்யமாய் வெளிவராமல் நின்றது கண்ணீர். அவளின் ஓவ்வொரு அணுவுக்கும் தெரியும் எதைச் செய்யவேண்டும் எது வேண்டாமென்று. மனம் அலை பாயத்தான் செய்கிறது. எவ்வாறு அமைதி கொள்ளமுடியும்! உடையவரே மேலும், கீழும் அலைந்து கொண்டு தான் இருக்கிறார்.

“எல்லாவற்றிற்க்கும் ஆரம்பம் அந்த கதவின் மணி தான்.” என்ன சொன்னாலும் நிற்காமல் நினைவு பின்னோக்கிச் சென்றது. “இவரின் திருமாளிகைக் கதவின் ஒசையை இரவில் அரங்கன் கேட்டானாம், அது என்ன ஒலி என வினவ, நம்பியோ இது கூரத்திலிருந்து வரும் கூரத்தாழ்வானின் கதவோசை என்றாராம். அரங்கனுக்குத் தெரியாதா என்ன! அவன் கேள்வியின் அர்த்தம் யாருக்கு எப்படி புரிந்ததோ! மூடிய தன் திருமாளிகை கதவு தன்னால் இனி திறக்கப்படாது என்று முடிவு கொண்டார். வெறும் கதவாக தான் நினைத்தது அதிகாரம், செல்வாக்கின் சின்னமாக இருந்தது புரிந்தது. வெறும் கதவின் ஒலியாக இருந்த மணியோசை, பதவி, பகட்டின் அறைகூவலாக இருந்தது புரிந்தது. விட்டு விலகினார், இராமனுஜனை நோக்கிப் பயணித்தார்.

சிந்தனை ஒட்டத்தை நிறுத்த முடியவில்லை அவளால். பாதங்களைத்தொட்டு த்யானம் மட்டுமே செய்ய எண்ணினாலும், மனம் அங்கேயும் இங்கேயுமாய் அலையத்தான் செய்கிறது,

தன்னை மணந்தால் ஆயுள் பங்கமெனும் விதியுடன் ஜெனித்தாள். குடும்பமே தனக்கு எதிரான போது கை கொடுத்து மணந்த இவர் தன் கணவர் மட்டுமா?

கூரத்தின் அரசர் யாரோ ஒரு பெண்ணை, அதுவும் அவரின் ஆயுள் குறைய காரணமாகக் கூடிய பெண்ணை மணந்தால் சுற்றம் பார்த்துக்கொண்டா இருக்கும்! அதையும் சமாளித்து தன்னை தோழியாய் பார்த்த இவர் தனக்கு நண்பன் மட்டுமா?

தன் ஞானத் தேடலிலும் என்னை தன் உடனே அழைத்துச் சென்ற அவர், தங்க தட்டை தூக்கி எறிந்து, இனி வழியில் பயமில்லை என்று பற்றற்ற நிலையை போதித்த அவர் எனக்கு குரு மட்டுமா?

ஞான பிம்பங்களாய் இரு குழந்தைகள்! தந்தை வழி தவறாதவர்! என் மூலம் உலகிற்க்கு கொண்டு வரப்பட்டவர்கள். இந்த பேறையும் எனக்கு கொடுத்த அவர் யாதுமாகி நின்றவரல்லவா!

என்னை உணரச்செய்து, தாழ்மை களையச் செய்து, ஞானத்தின் தேடலை காண்பித்தவர்.

உள்ளே செல்லச் செல்ல கலங்கியது. கலங்கியது தெளிந்தது. ஆமைதியாக அவரைப் பார்த்தாள். உடையவர் வழி ஆழ்வானின் வழி, ஆழ்வானின் வழி என் வழி என்றிருந்தேன்!. அவரை வரவேற்க இவர் முன் செல்கிறார். இவரை வரவேற்க்க நான் சென்றிருக்க வேண்டுமோ! மறுபடியும் சற்றே குழம்பி தலை நிமிர்ந்தாள். கூப்பிய கைகளுடன், அமைதியாய் தன் தந்தை அருகே அமர்ந்திருக்கும் மைந்தர்களைக் கண்டாள். மீதமிருக்கும் இரு அர்த்தங்கள். ஏதோ புரிந்தும் புரியாதது போல் இருந்தது.
ஏதிர் காலத்தில் உலகமே மெச்சி வாழ்ந்து, அரும் சேவை செய்து, இறுதியில் தன் மடியில் தலை வைத்து பரமபதம் காணப்போகும் பராசரரைக் கண்டாள்.

அவளுக்குத் தெரியாது, கால் கொண்ட அவள் மடி ஒரு நாள் தன் மகனின் சிரம் கொள்ளப் போகிறதென்று. ஆழ்வார் மெல்ல மெல்ல இறைவனடி செல்ல, தன் அருகே அமர்ந்து கை பிடித்த மகனைக் கண்டாள். மெலிதாக புன்னகை செய்தாள்.