தொடர்கள்
கதை
“தேர்ச்சி வைபவம்…!” வெ.சுப்பிரமணியன்

20220308215139564.jpg

“ஃபோன்ல எல்லாத்தையும் டீட்டெயிலா சொல்ல முடியாது. நீங்க கிளம்பி நாளைக்கு காலையிலேயே இங்கே சென்னைக்கு வந்துடுக்கோப்பா… எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உங்க பிள்ளையும் ஆஃபீஸுக்கு லீவு போட்டிருக்கார்” என்று என் மருமகள் சொல்லவும், பதறிப்போனேன்.

“எனக்கும்… கையும் ஓடலை… காலும் ஓடலை. கிளம்பி வாங்கோன்னு ஒரு தடவை சொன்னாக்கா… உங்களுக்கு புரியாதா? சும்மா… நச்சுநச்சுன்னு ஃபோன் போட்டு வியாக்கியானம் கேட்பேளா?” என்று சிடுசிடுத்தபடியே ஃபோனை வைத்தாள் என் தர்மபத்தினி மைதிலி.

அடுத்தது என் மகனுக்கு ஃபோன் போட்டேன். “என்னடா… எமர்ஜென்ஸினா பணம் எதாவது எடுத்துண்டு வரட்டுமா. நீ ஒண்ணும் கவலைப்படாதே… எந்தப் பிரச்சனையா இருந்தாலும் தைரியமா இரு. என்னால ராத்திரி ‘டிரைவ்’ பண்ண முடியாததாலே, டிராவல்ஸிலே சொல்லி ஒரு ‘ஆக்டிங் டிரைவரை’ ஏற்பாடு பண்ணியிருக்கேன். அந்த டிரைவர் ராத்திரி பதினோரு மணிக்குத்தான் வருவானாம்” என்றேன்.

“நீ சரியான ‘கஞ்சப் பிசினாறின்னு’ அம்மா சொல்லறது சரிதான். எதுக்கு டிரைவருக்காக வெயிட் பண்ணறே. நானே… ‘வாடகைக்கு’ கார் புக் பண்ணித்தரேன். காலையிலேயே வந்துசேரு” என்று பாட்டுவிட்டான். ‘ஆன்லைனில்’ ஒரு காரை புக்பண்ணிவிட்டு, வண்டி நம்பரையும், டிரைவர் பெயரையும், எனக்கு ஃபோன் பண்ணிச் சொன்னான்.

“ஏண்டா…என்னோட பேரன், பேத்திக்கெல்லாம் உடம்புக்கு ஒண்ணும் இல்லையே? நான் கேட்கிறேனே கோவிச்சுக்காதே… நீங்க மூணு பேரும் விவரத்தைச் சொல்லாம ‘புதிர்’ போட்டு பேசறதைக் கேட்டதிலிருந்து, எனக்கு பிளட்-பிரஷர் நார்மலாவே இல்லை. அங்கே என்னதான் பிரச்சனை?” என்றேன்.

“பேரனுக்கு என்ன… இங்கே எங்களோட பிராபளத்தைப் புரிஞ்சுக்கிற வயசா ஆயிடுத்து?. இரண்டு வயசுகூட முடியாத அவன், கொஞ்சம் கூட கவலைப்படாம… நின்ன இடத்திலேயே ‘மூச்சா’ போயிட்டு, அதை காலால மிதிச்சு விளையாடிண்டிருக்கான்” என்றான் என் மகன்.

“உன் பேத்தியோட ஸ்கூல்லே இருந்து இன்னிக்கு சாய்ங்காலம் மூன்று மணிக்கு ஃபோன் வந்தது. உன் பேத்திக்கு….” என்று அவன் ஏதோ சொல்லவந்தபோது, ‘ஃபோன்கால்’ கட்டானது. தொடர்புகொள்ள திரும்பவும் டிரைபண்ணினேன். “நீங்கள் தொடர்பு கொள்ளும் எண்… தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது…” என்று ‘ரெக்கார்டடு வாய்ஸ்’ ஒலிக்கவும், நானும் கலங்கிப் போனேன்.

அன்று இரவில், சென்னைக்கு பயணித்தேன். டிராஃபிக்கில் சிக்கி சித்திரவதைப் பட்டு, மகன் வீட்டுக்குப் போய்ச் சேரும்போது, காலை மணி எட்டாகிவிட்டது.

காரிலிருந்து பதட்டத்துடன் இறங்கிய என்னைக் கண்டதும், “ஹையா… தாத்தா வந்தாச்சு” என்று ஓடிவந்த என் பேத்தியைக் கண்டதும் “அப்பாடா… இவளுக்கு ஒன்றுமில்லை” என்று என் மனம் சமாதானமடைந்தது.

வீட்டுக்குள் போனதும், “அம்மா, என் பேரன், உன்னோட பெண்டாட்டி, எல்லாரும் எங்கேடா?” என்றேன் என் மகனிடம்.

“தாத்தா… எல்லாரும் தூங்கறாங்க. நீ வரப்போறேன்னு சொன்னதாலே… நான் சீக்கிறமே எழுந்துட்டேன்” என்றாள் என் பேத்தி.

“அப்பா… என்னோட ஆஃபீஸ்லே இருந்து அர்ஜென்ட் கால் வந்ததாலே, ‘லாகின்’ பண்ணியிருக்கேன். முக்கியமான ‘ஆஃபீஸ் இஷ்யூ’ ஓடிண்டிருக்கு” என்றவன், அவனது கம்பியூட்டரோடு ஐக்கியமானான்.

“தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த என் மனைவியிடம், “எதுக்குடி… அலப்பறை பண்ணி, திருச்சியிலேயிருந்து, என்னை வரச்சொல்லிட்டு… கும்பகர்ண தூக்கம் போட்டிண்டிருக்கே?” என்றேன்.

“தாத்தா… நேத்திக்கு சாய்ங்காலமே… எனக்கு இரண்டாம் கிளாஸ் ரிசல்டை ‘ஆன்லைன்ல’ போட்டுட்டாங்க. ஆனால் நான் பாஸா… ஃபெயிலான்னு தெரியாததாலேதான்… எல்லாருமே டென்ஷணா இருந்தாங்க” என்றாள் என் பேத்தி.

‘நித்திரை’ கலைந்து, எழுந்து வந்த என் மருமகள், “வாங்கோப்பா… என்றாள். “நேத்திக்கு, சாய்ங்காலமே இவளுக்கு ‘ரிசல்ட்’ டிக்ளர் பண்ணிட்டாங்க. ஆனால், இவளோட ஸ்கூல் “வெப்ஸைட்’ ஓப்பனே ஆகலை. ஸ்கூலுக்கே ஃபோன் பண்ணிக்கேட்டோம். ‘சர்வர் டவுனாயிருக்கு’… நாளைக்கு காலையிலே ரெஸ்டோராயிடும்னு, ரொம்பக் கூலா, ‘இர்ரெஸ்பான்ஸிபிளா’ பதில் சொன்னாங்க” என்றாள் சலித்துக்கொண்டே.

“ஏம்மா… எட்டாம் கிளாஸ் வரைக்கும்… குழைந்தைகளை ஃபெயிலாக்கக் கூடாதுன்னு, ‘அரசாங்க’ உத்தரவே இருக்குங்கிறது தெரியுமா… தெரியாதா?” என்றேன்.

“அப்பா… இவ படிக்கிற ‘பிரைவேட்’ ஸ்கூல்ல, ‘ஃபெயில்னு’ டிக்ளர் பண்ணமாட்டாங்க. ‘புரமோட்டடு’ அல்லது ‘பென்டிங்னு’ ரிசல்ட்டு வரும். ‘பென்டிங்னு’ வந்துடுத்துன்னா… ஸ்கூலுக்கு பேரன்ட்ஸை வரச்சொல்லி, குழந்தையோட ‘டி.சியை’ குடுத்து அனுப்பிடுவா” என்றாள் என் மருமகள்.

“அப்படி செஞ்சுதான் பார்க்கட்டுமே… சுப்ரீம் கோர்ட்வரையில் போய் வாதாடி, அந்த ஸ்கூலையே நாரடிச்சுடுவேன்” என்றேன்.

எழுந்து வந்த என் மகன் “என்னப்பா… உனக்கு பைத்தியம் பிடிச்சுடுத்தா... அந்த ஸ்கூல்ல இடம் கிடைக்க எவ்வளவு ‘பகீரத பிரயர்த்தனம்’ பண்ணியிருப்பேன். செகண்டு ஸ்டான்டர்டு ரிசல்ட் போடறதுக்கு முன்னாடியே, மூணாங்கிளாஸுக்கான ஃபீஸ் ‘ரூபாய் ரெண்டு லட்சத்தை’ கட்டியாச்சு. பணம் கட்டிட்டதாலே நிச்சயமா ‘உன் பேத்திக்கு பாஸ்’ போட்டிருப்பாங்க. இருந்தாலும்… ரிசல்ட்டை கண்ணால பார்க்கிற வரைக்கும், ‘திரிசங்கு சொர்கத்திலே’ இருக்கிறமாதிரி பயமாத்தான் இருக்கு” என்றான் வெளிறிய முகத்துடன்.

“நீங்கதாண்டா… பைத்தியம் பிடிச்சு அலையறீங்க” என்று சொல்லி விட்டு, என் பேத்தியிடம், “பரீட்சையெல்லாம் நல்லாதானே எழுதியிருக்கே?” என்று கேட்டேன்.

“மாத்ஸிலே ஒரு மிஸ்டேக்… மத்தபடி எல்லாமே ரைட்டாதான் எழுதியிருக்கேன் தாத்தா” என்றாள் என் பேத்தி.

“மாத்ஸிலே… நீ ஸ்டிராங்காச்சே. ஏன் தப்பா எழுதினே? என்றேன். “அரையும் அரையும் சேர்ந்தா எவ்வளவுன்னு கேட்டிருந்தாங்க… நான் ‘ஸைபர்னு’ எழுதிட்டேன் தாத்தா” என்று அவள் சொல்லவும், “அவ அப்படி எழுதினதுக்கு நீதான் காரணம்” என்று சொன்ன என் மகன், என்னை முறைத்தான்.

“ஆமாம் தாத்தா… நீ தானே அன்னிக்கு சொன்னே… உன்னோட அம்மா ஒரு ‘அரை லூசு’, அப்பா ஒரு ‘அரை லூசு’, இரண்டு ‘அரையும் சேர்ந்தா சைபர்னு’. அதான் நான் அப்படி எழுதினேன்” என்று என் பேத்தி சொல்லவும், நான் ‘திருதிருவென’ முழித்தேன்.

“குழந்தை இப்படி அபத்தமா பரீட்சையிலே எழுதினதுக்கு முழுக்காரணமும் நீங்கதான்” என்று என்னை குற்றவாளியாக்கினாள் மைதிலி.

ஏங்கடா… இதுக்காகவா… குழந்தையை இரண்டாம் கிளாஸிலே ‘ஃபெயில்’ பண்ணிடுவாங்கன்னு பயந்து கிடக்கீங்க?” என்று சொல்லியபடியே, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

அறுபது வருடங்களுக்கு முன்னர்… எனது இரண்டாம் வகுப்புக்கான ‘ரிசல்ட்’ வந்தநாள் என் மனக்கண்முன்னே நிழலாடியது.

எனது இரண்டாம் வகுப்பின், முழு ஆண்டுத்தேர்வு எழுதி முடித்த மறுநாளே… என் பள்ளிக்கூட டீச்சர்கள் இருவர், காலை ஒன்பது மணியளவில் என் வீட்டுக்கு வந்தார்கள்.

“அவர்களைக் கண்டதும், “அம்மா… ஸ்கூல் டீச்சர் வந்திருக்காங்க” என்று ‘தண்டோரா’ போட்டுவிட்டு, பக்கத்துவீட்டு தோழி ‘நூர்ஜஹானுடன்’ தாயக்கட்டம் விளையாட்டைத் தொடர்ந்தேன்.

‘வாங்கோ…’ என்ற அம்மாவிடம், “உங்க பையன் ராகவன், இரண்டாம் வகுப்பு ‘பாஸாயிட்டான்” என்று சொல்லி, ஒரு டப்பாவிலிருந்து, கைநிறைய ‘ஆரஞ்சு மிட்டாயை’ எடுத்து அம்மாவிடம் கொடுத்தார் என் டீச்சர்.

கூடவந்த இன்னோரு டீச்சரோ, “ராகவனோட பெயரை… மூன்றாம் வகுப்பு பதிவேட்டிலே சேர்த்திட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘நூர்ஜஹானின்’ அம்மா ‘சுபீதா’ வந்தாள்.

“மீனா… நூர்ஜஹான் ஊருக்கு போயிருந்ததாலே முழுஆண்டு பரீட்சை எழுதலையே… அவளை என்ன செய்யப்போறாங்க?” என்று என் அம்மாவிடம் சந்தேகமெழுப்பினாள் சுபீதா.

“பரீட்சை எழுதலைன்னா ஃபெயில்தான்... மறுபடியும் இரண்டாவதே படிக்கட்டும், அவளுக்கு பாஸ் போட முடியாது” என்றார் டீச்சர்.

“என் பையன் ராகவனும், இவ பொண்ணு நூர்ஜஹானும் ஒண்ணாத்தான் படிப்பாங்க… இல்லேன்னா… என் ஆத்துக்காரரிடம் சொல்லி, இரண்டுபேரையும், பக்கத்து ஊரிலே இருக்கிற பிரைவேட் ஸ்கூலுக்கு அனுப்பிடறேன். அதோட உங்க ஸ்கூல்ல நன்னாவே பாடம் சொல்லித்தர மாட்டேங்கிறேள்னு சொல்லி, என் ஃபிரென்ட்ஸோட குழந்தைகளையும், உங்க ஸ்கூல்ல இருந்து பிரிச்சுக் கொண்டுபோய் அந்த பிரைவேட் ஸ்கூல்ல சேர்க்கச் சொல்லிடறேன்” என்று மிரட்டும் தொனியில் பேசினாள் என் அம்மா.

“அடடே… இதுக்குப்போய் கோவிச்சுக்கிறீங்களே… முழுஆண்டுப் பரீட்சை எழுதலைன்னா ‘குடியா’ முழுகிப்போயிடும். ‘நூர்ஜஹானையும்’ மூன்றாம் வகுப்பு லிஸ்டிலே சேர்த்துட்டோம்” என்ற டீச்சர்கள்… ‘சுபீதாவின்’ கையிலும் ஆரஞ்சு மிட்டாய்களை நிரப்பினார்கள்.

அப்படி… இரண்டாவதிலிருந்து, மூன்றாம் வகுப்புக்கு, ‘பரீட்சையே எழுதாமல்’ பாஸ்போட, டீச்சரே வீடு தேடிவந்த காலம் ஒரு ‘கனாக்காலம்’.

“குழந்தையோட ஸ்கூல் ‘வெப்-ஸைட்டு’ ஓப்பனாயிடுத்தாம்” என்ற என் மருமகளின் கூக்குரல், என் ‘நினைவை’ நிகழ்காலத்துக்கு இழுத்துவந்தது.

“இவளோட கிளாஸ்மேட் ‘சிந்துவோட’ அம்மாதான் ஃபோன் பண்ணினாள். சிந்துவோட ரிசல்ட் ‘பென்டிங்னு’ போட்டிருக்காம். இத்தனைக்கும் அது நல்லா படிக்கிற குழந்தை” என்று புலம்பினாள் என் மருமகள்.

பதட்டத்துடன்… என் பேத்தியின் ‘ரிசல்டை’ அவனது லாப்டாப்பில் தேடினான் என் மகன். அவளது பெயருக்கு நேராக… ‘புரமோட்டடு’ என்று பார்த்தபின்தான், எல்லோருக்குமே நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

“அப்பா… உங்க பேத்தி மூன்றாம் கிளாசுக்கு ‘புரமோட்’ ஆயிட்டா…” என்று ஆனந்தக் கூத்தாடினாள் என் மருமகள். பேத்திக்கு ‘திருஷ்டி’ கழித்தாள் என் மனைவி. என் மகனோ… ‘ஆனந்தக் கண்ணீர்’ வடித்தான். என் பேத்தியோ… “தாத்தா பிளீஸ்… ‘தாயக்கட்டம்’ விளையாட வா” என்று என் கையைப் பிடித்து இழுத்தாள்.

“எனக்கோ… ‘நானும், நூர்ஜஹானும்’ இரண்டாம் வகுப்பிலிருந்து புரமோட்டாகி அடுத்த கிளாஸுக்கு போன… “தேர்ச்சி வைபவம்” மீண்டும் ரீ-வைண்டானது.