தொடர்கள்
கதை
உப்புச்சப்பி்லா வாழ்க்கை-பா அய்யாசாமி

20220308220424198.jpg



என்னங்க இன்னைக்கு ஒரு நாள் லீவு போட முடியுமா ? என பரிதாபமாக கேட்ட தன் மனைவி மாலாவை இயலாமையோடு பார்த்தான் ரெங்கன்.

இல்ல, இன்றைக்கு ஆபிஸில் ஆடிட்,நான் இருந்தே ஆகணும், ஏன் ? என கடைசியாக கேட்டதை நினைத்து சிரித்தவள், ஏன் என முதலில் கேட்டிருக்கணும் என்று அவனை கலாய்த்து, போங்க, போய் ஆபிஸையே கட்டிகிட்டு அழுவுங்க என்றாள் சிரித்தபடி..

பள்ளி உணவகத்தில் மகன் ஆதியை,மதிய உணவை சாப்பிட்டுக்கொள் என சொல்லி அனுப்பியவளுக்கு காலை எழுந்ததிலிருந்தே உடல் நிலை சரியில்லை, மாமா அத்தை என கூட்டுக்குடும்பமாக வசித்தும் அத்தைக்கு எழுந்து நடமாட முடியாது, வெளியிலிருந்து வரும் உணவும் உடம்பிற்கு ஒத்துக்கொள்வதுமில்லை,

தமது உடல் நிலை சரியில்லை என்பதைக்கூட வெளிக் காட்டிக்கொள்ளாமல், நாசூக்காக கணவனிடம் கூறியும், பிள்ளையை பள்ளிக்கும் அனுப்பி,சிம்பிளாக சமைத்து வயதான மாமா அத்தைக்கு பறிமாறி, வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து அப்படா என மாலா சற்று உட்காரப்போகும்போது மதியம் மணி இரண்டாகியிருந்து.

உடம்பு இன்னமும் சரியாகவேயில்லை போலிருந்தது மாலாவிற்கு.
நாக்கு மட்டும் ருசி தெரியாமல் கசந்தே இருந்தது.

சாயந்திரமாவது மருந்துவரிடம் போகலாம் என எண்ணியவளுக்கு, ரெங்கனிடமிருந்து போன் வந்தது. ஆபீஸிலிருந்து வர நேரமாகும்.

சரிதான் என மாத்திரை ஒன்றை விழுங்கிவிட்டு இரவு உணவிற்கான அடுப்படி வேலைகளை மீண்டும் கவனிக்கத் தொடங்கினாள்.

மாலை, என்ன டிபன் செய்யட்டும் என அத்தையிடம் கேட்க, மாமாவைக் கேட்டுக்க, என்றதும் மாமா, சிம்பிளாக உப்புமாவே போதுமா, நீ உன் உடம்பைப் பார்த்துக்கொள் என்றார் அக்கறையாக..

அனலாய் உடல் கொதிக்க, அடுப்பில் ஏற்றிய உடைத்த அரிசியும் உப்புமாவாய் கொதித்தது..
அலுவல் முடித்து இரவு தாமாதமாக வந்த ரெங்கனும் பேருக்கு சாப்பிட்டு எழ, மாலாவோ சாப்பிட பிடிக்காமல் உடம்பைக்கீழே கிடத்தினால் போதுமென வேலைளை முடிப்பதற்கு ஆயத்தமானாள்.

அம்மா! என ராப்பிச்சையின் குரல் கேட்டதும், மீதமிருந்த உப்புமாவை எடுத்து போட்டுவிட்டு திரும்பிவிட, இதைக் கவனித்த ரெங்கன் இரு வருகிறேன் என மொபைல் போனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு ஓடியவன் சிறிது நேரங்கழித்து வீட்டிற்குத் திரும்பினான். அதற்குள் அனைவரும் படுத்துறங்க அறைக்கு சென்றியிருந்தார்கள்.

மறுநாள் காலை ரெங்கன் தன் பெற்றோரிடம் நீங்களாவது மாலாவிடம் சொல்லக்கூடாதா ? உப்புமாவில் உப்பே பேடலை என கேட்டதும்,

நீ ஏன் சொல்லலை என திரும்பக் கேட்டார் அம்மா.

அது... நான் வெளியே சாப்பிட்டுவிட்டேன்,சொன்னால் திட்டுவாளே என பெயருக்கு கொஞ்சமாக சாப்பிட்டு எழுந்தேன்மா, நீங்கள்தான் பாவம் இரவு உப்பு போடாத அந்த உப்புமாவை சாப்பிட்டு இருக்கீங்க, அத்தோடு இல்லாமல் மீதம் இருந்ததை பிச்சைக்காரனுக்கும் போட்டு விட்டாள் என தெரிந்து ஓடினேன், சப்பாத்தி ஒன்றினை ஓட்டலிலிருந்து அவனுக்கு வாங்கி கொடுத்தேன் என்ற மகன் ரெங்கனிடம் காலையிலேருந்து மருமகளுக்கு உடம்பு சரியில்லாத நிலையிலும், அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு,
எங்களையும் உதாசீனப்படுத்தாமல், அக்கறையோடு என்ன டிபன் செய்யட்டும் என கேட்டாளே, அது போதுமடா...அவள் குணம் தெரிய.

சுவை மட்டும் எப்போதும் முக்கியமில்லடா, பல கசப்புகளையும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்.

ஒரு நாள் உப்பில்லாமல் சாப்பிட்டால் ஒன்றும் ஆகிவிடாது, ஆனால் அதை நாங்கள் சொல்லியிருந்தால் அவள் மனசு கவலையால் உடைந்திருக்கும். அதனாலேயே சொல்லலை என்றார் அப்பா..

முதுமையில் எங்களைப் போன்றவர்கள் எதிர்பார்ப்பது வாய்க்கு ருசியான சாப்பாடு மட்டுமில்லடா, எதிர்பார்ப்புகளற்ற அக்கறையைதான், அது மாலாவிடமும் உன்கிட்டேயும் இருக்குடா, அதுதாண்டா முக்கியம்.

அம்மா! என்ற குரல் கேட்டு வாசலுக்கு சென்ற மாலாவிடம் "அம்மா உங்கள் உடம்பு தேவலையா? என கேட்டதும் ஆச்சரியமான மாலா அட உனக்கு எப்படி தெரியும் என கேட்டாள்.

உங்க சாப்பிட்டை தினமும் சாப்பிடுபவன் நான், எனக்குத் தெரியாதா ?

நேன்று உப்புமாவில் உப்பே போடவில்லை போல, அய்யாதான் ஓடிவந்து வேற சாப்பாடு பொட்லம் வாங்கிக் கொடுத்துட்டு போனாரு,

அய்யாவோட மனசு யாருக்கு வரும் ? தெனம் வர பிச்சைக்காரன்தானே என என்னை உதாசீனப்படுத்தாமால், நாலுபேரு நல்லா இருக்கணுங்கிற அந்த நினைப்பே நாம பூமில வாழ்ந்தோங்கிறதுக்கு அடையாளம்தான்மா என்றவன், நீங்கள் எல்லோரும் நல்லா இருக்கோணும் என வாழ்த்தியதும் மாமா, அத்தை மற்றும் ரெங்கனை நினைத்து சிலிர்த்துப் போனாள்.