எச்சில் ஐஸ்
மதிய நேர வெயிலிலும் அழகான கிராமம். சிறு பிள்ளைகள் தங்களுடைய கூட்டுக்குடும்ப சொந்தங்களான அத்தான், அத்தாச்சி, அக்கா,தம்பி, தங்கை இவர்களுடன் வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். எந்த வீட்டிலும் தொலைக்காட்சியின் கோப வசனம் ஒலிக்கவில்லை. கர் புர் என்று ஏசி ஓடவில்லை, சர் சர் என வாகனம் செல்லவில்லை. ஏனெனில் அது 80 களின் பிற்பகுதி. மனிதர்கள் மனிதர்களோடு வாழ்க்கையை கட்டமைத்து இருந்த பொற்காலம். வயதானவர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர் பெரும்பான்மையினர் வயலுக்கு சென்றிருந்தனர்.
வீட்டின் சிறு குழந்தைகளை பார்த்துக் கொண்டும் சேர்த்துக் கொண்டும் ஒற்றுமையாய் பல்லாங்குழியும், சொட்டாங்கல்லும் விளையாடிக்கொண்டிருந்தனர். பிள்ளைகள் சைக்கிள் மணியோசை கேட்டு மண் ரோட்டைக் கவனித்தனர். அங்கு அழுக்கு லுங்கியும் தலைப்பாகட்டும் அணிந்த ஒரு ஐஸ் வண்டிக்காரர் வந்து கொண்டிருந்தார். அனைவரும் ஓடிச்சென்று அவரை சுற்றி நின்றனர்.அண்ணே ! அண்ணே! என்ன ஐஸ் இருக்குண்ணே என்று சிறுமி வினவினாள். பால் ஐஸ் , சேமியா ஐஸ், கிரேப் ஐஸ் இருக்கு என்றார். எனக்கு! எனக்கு என்று எல்லோரும் தங்களுக்கு பிடித்த ஐஸின் பெயரைச் சொன்னார்கள்.
அவர் தன்னுடைய சைக்கிள் கேரியரில் மர ஐஸ் பெட்டியை கயிற்றுடன் இணைத்திருந்தார். லாவகமாக சைக்கிளை சாய்த்து நின்றுகொண்டு, பெட்டியின் நடுவில் இருக்கும் ஒரு சதுர வடிவ மூடியை எடுத்தார். அப்போது ஒரு சிறுவன் அந்தப் பெட்டியில் இருந்த குச்சி ஐஸ் படத்தில் கையால் கோலம் வரைந்து விளையாடினான். மற்றவர்கள் எக்கி எக்கி உள்ளே பார்க்க முயன்றனர். ஒவ்வொரு ஐஸையும் அவர் வெளியே எடுக்கும் போதும் அந்தப் பிள்ளைகளின் முகத்தில் மகிழ்ச்சித் தாண்டவம் ஆடியது. "அண்ணே! எனக்குத் தாங்க, எனக்குத் தாங்க " என கூச்சலிட்டனர். எல்லோருக்கும் ஒவ்வொன்றாக எடுத்து கொடுத்துவிட்டு பெட்டியை மூடினார்.
"பள்ளிக்கூடம் போகலையா", என்று கேட்டார். "இல்லண்ணே, முழுப் பரீட்சை லீவு ரெண்டு மாசம்" என்று கூறினான் பெரிய பையன்."சரி சரி", என்றார். அப்போது வீட்டுக்குச் சென்று கைநிறைய சில்லறையை எடுத்து வந்து கொடுத்தாள் ஒரு சிறுமி. அதை சரியாக வாங்கி எண்ணிக்கொண்டு மீதியை கொடுத்துவிட்டு அவர் புறப்பட்டார். பிள்ளைகள் அனைவரும் ஒரே குரலில்,"அண்ணே தினமும் வாங்கண்ணே ", என்று அன்போடு கூறினார். அவர் சிரித்த முகத்துடன் கையசைத்து சென்றார்.
இவர்கள் தங்களுடைய ஐஸை சுவைத்துக்கொண்டே அதன் சுவையையும் குளுமையையும் பற்றிப் பெருமை பேசிக் கொண்டிருந்தனர். நாக்கை நீட்டி நீட்டி "கலர் வந்திருக்கா பாரு, கலர் வந்திருக்கா பாரு", என்று பேசிச் சிரித்தனர். அப்போது சிறு குழந்தை ஒன்று தன்னுடைய ஐஸை கீழே போட்டு விட்டது. எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் மும்முரமாக இருந்தனர். ஐஸ் கீழே விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. சுற்றி சுற்றி பார்த்து விட்டு ஓ!! என்று கத்தி அழத்துவங்கியது. பெரியவர்களாக இல்லாத அந்த சிறுமிகளுக்கு வேறு எந்த தொற்று பயமுமில்லை. அருகிலிருந்து சிறுமி ஒருத்தி தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐஸைச் கொடுத்துதும் உடனே குழந்தையின் அழுகை நின்றது.
அழுகையை நிறுத்தியது.....
எச்சில் ஐஸ்.!
நமக்குத் தான் அது எச்சில் ஐஸ்.!
குழந்தைகளுக்கு அது வெறும் பாசம் தோய்ந்த குச்சி ஐஸ் !
Leave a comment
Upload