தொடர்கள்
அனுபவம்
உழைப்பவருக்கென ஒருநாள் -மரியா சிவானந்தம்.

20220329164823364.jpg

ஆர்த்திடும் யந்திர கூட்டங்களே

உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ -நீங்கள்

ஊர்த் தொழிலாளர் உழைப்பினில்

உதித்தது மெய்யல்லவோ (பாரதி தாசன் )

இந்த பூமிப்பந்தின் சுழற்சியுடன் சுழன்றுக் கொண்டே இருக்கும் ஒரு இனம் உழைக்கும் வர்க்கம் . உலகத்தின் முகத்தை திருத்தி அமைத்து , காடுகளை சீர்த்திருத்தி , மலைகளைக் குடைந்து சுரங்கம் அமைத்து , நிலத்தைப் பண்படுத்தி உணவை விளைவிக்கும் விளைநிலமாக்கி , வீடு சமைத்து நாம் வாழ ஏற்ற இடமாக மாற்றியவர் தொழிலாளர்களே. சக்கரம் , நெருப்பு கண்டறிந்து ஆயுதங்கள் செய்து, தொழில்கள் துவங்கி மனித சமூகம் மாண்புற வாழ்ந்திட வழி செய்ததில் ஆயிரம் ஆயிரம் ஆண்டு கால மனித உழைப்பு உள்ளது. அவ்வுழைப்பின் மகத்துவத்தைக் கொண்டாடும் நாள் மே தினம் .

இரண்டு நூற்றண்டுகளுக்கு முன் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் ஒரு நாளில் 16-18 மணி நேரம் வரை தொடர்ந்து பணி செய்ய வேண்டி இருந்தது . காலை முதல் இரவு வரை அவர்கள் கடின உழைப்பைத் தர வேண்டிய சூழல். அப்போது தொழிலாளர்களுக்காக போராடிய மார்க்ஸ் 'உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் "என்று அறைக்கூவல் விடுத்தார். பொதுவுடைமை கருத்துக்கள் உலக அரங்கில் அரங்கேறிய அக்காலகட்டத்தில் 1886 ஆம் ஆண்டு மே முதல் தேதி அன்று ஒன்று பட்ட வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு தந்தார் .

அமெரிக்காவின் முக்கிய தொழில் நகரங்களில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர் .சிகாகோவின் மெக்காரமிக் ஹார்வெஸ்ட்டிங் மெஷின் தொழிற்சாலை வாசலில் 7000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு கோஷங்கள் எழுப்பினர் . அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் உயிர் இழந்தனர் . தொழிற்சங்க வரலாறுகளில் முதன்மையான போராட்டமாக இப்போராட்டம் கருதப்படுகிறது. பின் வரும் நாட்களில் மேதினம் கொண்டாடப்பட இந்நாளே அடிப்படையாக அமைந்தது .

இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை , வார விடுப்பு, மருத்துவ சலுகைகள், சம வேலைக்கு சம ஊதியம் போன்ற வசதிகள் ஒரே நாளில் வந்து விடவில்லை. இரு நூறு ஆண்டுகளாக தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டங்கள் தந்த பலன்கள் இவை . அரசு பல நலத்திட்டங்களை உழைக்கும் மக்களுக்கென அமல் படுத்தி வருகிறது .அரசியல் நிர்ண்ய சட்டம் மட்டும் அன்றி , தொழிலாளர் சட்டம், குறைந்த பட்ச ஊதிய சட்டம் , தொழிற்சாலைக்கான சட்டங்கள் என்று பல்வகை சட்டப் பாதுகாப்பு திட்டங்களை அமல் படுத்தி இருக்கின்றன . பாதுகாப்பான பணிச்சூழலில் ஆண்களும், பெண்களும் தம் வேலைகளைச் செய்ய சட்டங்கள் வழி வகுக்கின்றன .ஆனால் நிஜத்தில் அவ்வாறு இல்லை என்றே சொல்லலாம் .

இன்னும் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது . .டி துறை, பிபிஓ க்களில் பணி செய்பவர்களின் வேலை நேரம் எட்டு மணி நேரத்தை தாண்டியும் செல்கிறது . பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தராத நிறுவனங்கள், மருத்துவ விடுப்பு , பிரசவ விடுப்பு தராத நிர்வாகங்களும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. பெண்களுக்கான தனி கழிவறை இல்லாத கடைகளில் இன்னும் பெண்கள் வேலை செய்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அவ்வளவு ஏன், சமீபத்தில் தானே ஜவுளிக் கடைகளில் நின்றுக் கொண்டே வேலை செய்யும் பெண்களுக்கு இருக்கை வசதி தர வேண்டும் என்று கேரள அரசாணை இயற்றி உள்ளது ?

சாதாரண நாட்களில் தொழிலாளர் நிலைமை பரிதாபம் என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலத்தில் அவர்கள் அடைந்த துயரம் சொல்ல முடியாதது . லாக் டௌன் காலத்து கதைவடைத்த வீடுகள், வெறிச்சோடிய சாலைகள் , தகரம் கொண்டு அடைத்த கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் நம் மனக்கண் முன் வருகின்றன .உடன் , மூடி விட்ட திரை அரங்கங்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள் , சிறுதொழில் நிறுவனங்கள், நெசவாலைகள், தொழிற்சாலைகள் என்று கதவடைத்த இடங்களில் பணி செய்து வந்த தொழிலாள தோழர்கள் தெருவுக்கு வந்து திண்டாடிய காட்சி நிழலாடுகிறது . இவர்களில் பூ விற்பவர்கள் போன்ற சிறு வியாபாரிகளும் வாழ்வாதாரம் இன்றி வாடி நின்றனர் .

சில நிறுவனங்கள் மனிதாபிமானத்துடன் நடந்துக் கொண்டாலும் , பெரும்பாலான தலைமைகள் தங்களிடம் வேலை செய்பவர்களை நட்டாற்றில் விட்டனர். மூடி விட்ட தொழில் நிறுவனங்கள் தம் ஊழியருக்கு சம்பளம் தராமல் அலைய விட்டனர் . சிலர் அரை சம்பளம் தந்தனர். நிரந்தர ஊழியர்கள் தம் சேமிப்பில் தப்பித்துக் கொண்டனர் . தற்காலிக ஊழியர் நிலையோ மிகக் கொடுமையாக இருந்தது .தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கும் இதே நிலைமைதான் . வருவாய் இல்லாத ஆசிரியர்கள் ,ஆசிரியத் தொழிலை விட்டு விட்டு வீதியில் இறங்கி காய்கறி விற்றனர் .ஓட்டுனர்கள் கிடைத்த வேலைகளில் வயிறு நிரப்பினர் .

லாக் டௌனைக் காரணம் காட்டி சில தொழிற்சாலைகள் ,ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் .work from home நிறுவனங்களுக்கு லாபகரமாக இருந்தது .மின்சார கட்டணம் இல்லை .கட்டிட வாடகை தர வேண்டியது இல்லை . நிலைமை சீரடைந்து லாக் டௌன் விலக்கிக் கொண்ட பின்பும் இன்னும் work from home செய்கிறார்கள் . ஆட்குறைப்பில் அகப்பட்டுக் கொண்டவர்களில் தற்காலிக ஊழியர், ஒப்பந்த ஊழியர் மட்டும் அன்றி நிரந்தர ஊழியரும் உண்டு. இவர்களுக்குப் பரிந்து நடவடிக்கை எடுக்க, எந்த தொழிலாளர் அமைப்போ , அரசோ முன் வரவில்லை என்பது நிதர்சனம். கொரோனா மரணங்களுக்கு கணக்கெடுப்பு நடத்திய அரசுகள் பட்டினி சாவுகளைப் பற்றி கவலைப்படவில்லை . வட இந்தியாவில் சொந்த ஊருக்கு பயணப்பட்ட தொழிலாளர்களின் பட்ட துன்பங்களை நாம் கண்கூடாக கண்டோம் .

பிற நாடுகளை ஒப்பிடுகையில் நம் தொழிலாளர்கள் அடையும் சலுகைகள் குறைவே .இன்னொரு லாக் டௌன் வந்தால் அரசு தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் . இலவசங்கள் , நிவாரணங்கள் அவர்தம் கண்ணீரை ஓரளவே துடைக்கும்.

ஒவ்வொரு மே தினமும் உழைப்பின் மேன்மையை, உழைப்பாளர்களின் உரிமைகளை நமக்கு நினைவு படுத்துகிறது. மேதினப் பொது விடுமுறையை , தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகளை காண்பதில் செலவிடுவதை தவிர்த்து , அந்நாள் குறித்த சிந்தனைகளை மனதில் நிறுத்துவோம் .

உழைப்பைப் போற்றுவோம்,, உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் .

இவ்வுலகம் உழைப்பவர்களுக்குச் சொந்தமானது.

மேதின வாழ்த்துக்கள்