
திமுக ஆட்சிக்கு வந்ததும் கொட நாடு வழக்கு மீண்டும் ஆரம்பம் முதல் விசாரணை செய்யப்பட்டது. முந்தைய அதிமுக அரசு இந்த வழக்கை ஏனோ தானோ என்று நடத்தி மூடுவிழா நடத்த முயற்சி செய்தார்கள் என்று திமுக வெளிப்படையாக குற்றம் சுமத்தியது. அதன் தொடர்ச்சியாக விசாரணை அதிகாரி விசாரணைக்குழு எல்லாமே மாற்றி அமைக்கப்பட்டது. வழக்கும் பரபரப்பானது ,கொடநாடு கொலை வழக்கு அதிமுகவை சற்று தூங்கவிடாமல் செய்தது குறிப்பாக எடப்பாடியை. காரணம் கொலை நடந்தபோது எடப்பாடி முதல்வர் சசிகலா சிறையில் இருந்தார்.
கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்குழு சசிகலாவை விசாரிக்க முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. சசிகலாவிடம் ஏன் விசாரணை என்ற கேள்விக்கு விசாரணைக்குழு சொன்ன பதில் கொடநாடு பற்றி முழு விவரம் சசிகலாவுக்கு தெரியும்.எடப்பாடி ஆட்சி காலத்தில் இந்த வழக்கில் சில தகவல்களை மறைத்து குற்றப்பத்திரிகை பதிவு செய்தார்கள் என்ற சந்தேகம் இன்றுவரை விசாரணைக் குழுவிற்கு இருந்து வருகிறது .அவர்களுக்கு புதிதாக கிடைத்த சில தகவல்கள் இதை உறுதிப்படுத்துகிறது .எனவே இந்த சந்தேகங்களுக்கு சசிகலா எப்படி பதிலளிக்கிறார் என்பதையும் யோசித்துதான் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.ஏற்கனவே சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கிடம் விசாரணைக்குழு விசாரித்தது அதைத்தொடர்ந்து சசிகலாவிடம் இப்போது விசாரணை கடைசியாக எடப்பாடியை விசாரிப்பது என்பது விசாரணைக்குழு திட்டம் இந்தத் தகவல் தான் எடப்பாடியை தொடர்ந்து சங்கடப்படுத்தி வருகிறது.
சசிகலாவிடம் அவர் வீட்டுக்குச் சென்று விசாரணை செய்தார்கள்.தி.நகரில் உள்ள சசிகலா வீட்டிற்கு மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் நீலகிரி எஸ்பி ஆஷிஷ் ராவத் உட்பட எட்டு பேர் சசிகலா வீட்டிற்கு சென்றார்கள். காலை பத்தரை மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் மாலை என்று மொத்தம் 6 மணி நேரம் என்று இரண்டு நாள் விசாரணை நடந்தது.
முதல் நாள் விசாரணையின் போது அதிகாரிகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். சில நிமிடம் சம்பிரதாயமாக பேசினார்கள். அதைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட 300 கேள்விகள் கேட்டு இருப்பார்கள். சில கேள்விகளுக்கு எனது வழக்கறிஞரிடம் கேட்டுவிட்டு இதற்கு பதில் சொல்கிறேன் என்றார் சசிகலா.விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது, எழுத்துப்பூர்வமாக டைப் செய்யப்பட்டுபடித்து பார்க்க வைத்து கையொப்பம் வாங்கினார்கள் அதிகாரிகள்.
சில கேள்விகளுக்கு எனக்கு தெரியாது மேனேஜர் நடராஜனிடம் கேளுங்கள்,அவருக்கு தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.
கொடநாடு எஸ்டேட் பற்றி பேசும் போது சற்றே உணர்ச்சிவசப்பட்டு அக்காவுக்கு பிடித்த இடம் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென்றால் கொட நாடு செல்வதை தான் விரும்புவார்.பெரும்பாலும் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் அங்கு போய் ஓய்வு எடுத்துக்கொண்டு ரிலாக்ஸ் செய்துகொள்வார் என்றார் சசிகலா. அதேபோல் கொலை செய்யப்பட்ட பகதூர் பற்றி குறிப்பிடும் போது நல்ல வேலையாள் விசுவாசம் ஆனவர் என்று சொல்லியிருக்கிறார்.விசாரணை முடிந்ததும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் எந்த சந்தேகத்திற்கும் கேட்கலாம் .கொலையாளியை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்குங்கள். கொடநாடு அக்கா கோவில் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் சசிகலா.
தற்போது கொடநாடு வழக்கு சம்பந்தமாக ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 200 பேரிடம் கொடநாடு வழக்கு சம்பந்தமாக நடந்து முடிந்துள்ளது.கொடநாடு வழக்கை விசாரித்த டிஎஸ்பி சுரேஷ் பணியிடை மாற்றம் நீலகிரி மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா தேனி மாவட்டத்திற்கு மாற்றம் என்று வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் எடப்பாடி இடம் விசாரணைக் குழு விசாரிக்க இருக்கிறது. அடுத்த மாதம் பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமில்லை.....

Leave a comment
Upload