தொடர்கள்
கல்வி
வெற்றி - உழைப்பின் மறுபக்கம் -மரியா சிவானந்தம்

வாகை சூடும் தமிழ்

20220524111601286.jpg

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன ..தம் நீண்ட கால உழைப்பின் பலனை மதிப்பெண்களின் வடிவில் மாணவ மாணவியர் ருசிக்கும் காலம் இது.

ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மூவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் தருணம், இத்தருணம். கடந்த இரண்டாண்டுகளில் பள்ளிகள் வழக்கமான விதத்தில் இயங்காத போதிலும் ஆசிரியர்களின் உழைப்புக்கும் , மாணவரின் விடா முயற்சிக்கும் பலனாக சிறப்பான தேர்வு முடிவுகளை இந்த ஆண்டு காண முடிகிறது .

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வை 9,12.364 மாணவர்கள் எழுதினார்கள் . இவர்களுள் 8,21,994 தேர்வு பெற்றுள்ளனர். இது 90.07% தேர்ச்சி சதவீதம் ஆகும். மாணவர்கள் 85.83% சதவீதமும் , மாணவியர் 94.38% சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர் .பிளஸ் 2 வகுப்பு தேர்வை 8,06,277 பேர் எழுதினார்கள்.அவர்களுள் 7,55,998 பேர் தேர்ச்சி பெற்றதில், தேர்ச்சி சதவீதம் 93.76% ஆகும். இந்த தேர்ச்சி விகிதத்தில் மாணவர்கள் 90.96% மாணவிகள் 96.32 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போலவே மாணவியர் அதிக சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். 2,268 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சியைக் காட்டியுள்ளன . இதில் 246 அரசுப்பள்ளிகள் என்பது கூடுதல் சிறப்பு . +2 தேர்வில் 97.95 சதவீததம் பெற்று பெரம்பலூர் மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வில் 97.22% சதவீத வெற்றியுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

பள்ளி இறுதியை முடிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை அவர்கள் பெறும் மதிப்பெண்கள் தீர்மானிக்கிறது என்பது எதார்த்தம். அந்த மதிப்பெண்களைப் பொறுத்தே அவர்களை தங்கள் விரும்பும் கல்வியைப் பெற முடியும். எனவே, மாணவ மாணவியர் முழு மூச்சுடன் உழைத்து நல்ல மதிப்பெண்கள் பெற இரவு பகலாக உழைப்பதைப் பார்க்கிறோம். பிளஸ்2 தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 656 பேர் 591க்கு மேல் பெற்றவர்கள். அவ்வாறே பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 491 க்கு மேல் பெற்ற மாணவர்கள் 629 பேர். சிறந்த மதிப்பெண்கள் பெற மாணவர்கள் கடுமையாக போராடுகிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு .

பொறியியல் கல்வி ,மருத்துவக்கல்விக்கு கணிதம், பௌதிகம், வேதியியல் , உயிரியல் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் .எனவே அந்த பாடங்களில் சிறந்த மதிப்பெண்கள் பெற, முழு மதிப்பெண்கள் பெற மாணவர்கள் கடும் முயற்சி செய்வார்கள். மொழிப்பாடங்களில் முழு மதிப்பெண் பெற அந்த அளவு முனைப்பைக் காட்ட மாட்டார்கள். இரண்டாம் மொழியாகிய ஆங்கிலத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுபவர்கள் உண்டு. ஆனால் முதல் மொழியான தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவது அபூர்வம். அந்த அபூர்வ சிறப்பு இந்த கல்வி ஆண்டில் வாய்த்துள்ளது. +2 வில் ஒரு மாணவியும், பத்தாம் வகுப்பில் ஒரு மாணவியும் தமிழில் முதல் முறையாக நூற்றுக்கு நூறு வாங்கி சாதனை படைத்துள்ளனர் .

திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவி எம்.ஜி .கீர்த்தனா பிளஸ் 2 தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு வாங்கி சாதனை செய்துள்ளார். அவ்வாறே பத்தாம் வகுப்புத் தேர்வில் திருச்செந்தூர் அருகே உள்ள காஞ்சி சங்கரா மெட்ரிக் பள்ளியில் பயிலும் துர்க்கா தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று வெற்றிக்கொடி நாட்டி உள்ளார். இந்த சிறப்பு அனைவரையும் புருவங்களை உயர்த்தி வியப்புடன் நோக்க வைத்துள்ளது . தமிழில் முழு மதிப்பெண்கள் பெற முடியாது என்பதால் மாணவர்கள், பிரஞ்சு, ஜெர்மன், இந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளை முதல் மொழியாக தேர்வு செய்து படிப்பதைப் பார்க்கிறோம் . கீர்த்தனா, துர்காவின் சாதனையால், தமிழை இனி மாணவர்கள் புறக்கணிக்க மாட்டர்கள் .

துர்காவை விகடகவி இதழுக்காக தொடர்பு கொண்டு வாழ்த்தினோம் .

அவர் ,' என் அப்பா செல்வகுமார் ,ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலர், அம்மா ஹேமா. அண்ணன் ராம் நாராயண் பி.எஸ்.சி (ஜியாலஜி) படிக்கிறார் . ஆறாம் வகுப்பில் இருந்து காஞ்சி சங்கரா மெட்ரிக் பள்ளியில் தான் படித்து வருகிறேன். எல்லா பாடங்களையும் நன்றாக படிப்பேன். தமிழில் கூடுதல் கவனம் செலுத்தினேன். எனது தமிழாசிரியை செல்வி ஆன்லைனில் தேர்வுகள்,சிறு தேர்வுகள் ந்டத்திக் கொண்டே இருப்பார் .அவரது முயற்சியால் என் வகுப்பில் நிறைய பேர் தமிழில் நல்ல மார்க்குகள் வாங்கி உள்ளனர் .நானும் சென்டம் எடுத்துள்ளேன் "என்றார் .

2022052411164589.jpg

"Objective type கேள்விகள் இருந்தால் மட்டுமே முழு மதிப்பெண் சாத்தியம். ஆனால் உங்களால் எப்படி சென்டம் எடுக்க முடிந்தது ?' என்ற வினாவை எழுப்பினோம். ஒரு மார்க் கேள்விகள் 12 மார்க்குக்குத்தான் . மற்றவை 2 மார்க் , 3 மார்க் ,8 மார்க் கேள்விகள் என கலந்துதான் இருக்கும் .எல்லாமே நன்றாக எழுதினேன் என்றார் . செய்யுள்,உரைநடை ,மனப்பாடப்பகுதி , இடம்சுட்டி பொருள் விளக்கு, இலக்கணம் என்று எல்லாமே ஒரே வினாத்தாள் தான். பொதுக்கட்டுரை 'சாலை பாதுகாப்பு' பற்றி தேர்ந்தெடுத்து எழுதினேன் .எதிலும் மார்க்கு குறையவில்லை " என்றார் ."எதைப் படித்தாலும் புரிந்து படிக்க வேண்டும் ,விரும்பி படிக்க வேண்டும் . எந்த அழுத்தமும் இன்றி ரிலாக்ஸ்சா படிக்க வேண்டும் .எங்க வீட்டில் அந்த சூழலை என் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் "என்றார். தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற போதும் , அவரது இலக்கு விவசாயப் படிப்புதான் ..'கனவு மெய்ப்படட்டும்" என்று வாழ்த்தி விடை பெற்றுக் கொண்டோம்.

துர்க்காவிடம் பேசிய பின்பு, நம் ஐயத்தை தீர்த்துக் கொள்ள தமிழாசிரியையும், மேலப்புலம் தலைமை ஆசிரியையுமான பரமேசுவரியிடம் தொடர்பு கொண்டோம் .

"தமிழ்த் தேர்வில் எழுத்துப்பிழை, சந்திப்பிழைக்கு மதிப்பெண் குறைப்பது இல்லையா ?" என்று கேட்ட போது , " ஆம் , பிழைகளுக்கு மதிப்பெண் குறைப்பது உண்டு. அதனால் பொதுக்கட்டுரையில் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு உண்டு " என்றார் . முழு மதிப்பெண் பெற வேண்டுமாயின் அக்கட்டுரை கருத்துச்செறிவுடன், பிழையின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும் . அப்படி இருந்தால் மட்டுமே நூற்றுக்கு நூறு சாத்தியமாகி இருக்க வேண்டும் .

இந்த இரண்டு "நூற்றுக்கு நூறு 'மதிப்பெண்களும் தமிழ் மாணவரிடையே பெரும் நம்பிக்கையை விதைத்திருக்க வேண்டும். நல்ல முயற்சியும் , பயிற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்ற தன்னம்பிக்கையை இவர்களின் சாதனை நமக்குச் சொல்லாமல் சொல்கிறது .

தமிழன்னையும் பெருமிதத்துடன் தமிழ் மாணவரின் உள்ளங்களில் அரியணையில் வீற்றிருக்கிறாள் , மகுடஞ்சூடி .