தொடர்கள்
கவர் ஸ்டோரி
தொழிற்சாலை. - அது ஒரு எழிற்சாலை - ப.ஒப்பிலி

20230218013029242.jpeg

ஓசூர் டிவிஎஸ் தொழிற்சாலையில் வருடத்தில் முந்நூற்று அறுபத்தைந்து நாட்களும் இரு சக்கர வாகனங்கள் தயார் செய்யும் சத்தம்கேட்டுக்கொண்டே இருக்கும். இந்த சத்தம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அந்த தொழிற்சாலைக்கு உள்ளேயே ஐம்பது ஏக்கர் பரப்பில் ஒரு வனம்உருவாக்கப்பட்டு அந்த பகுதி பறவைகளின் சரணாலயமாக மாறி உள்ளது பலருக்கு பெரும் வியப்பை தரும்.

பறவைகளின் குஞ்சுகள் எழுப்பும் ஒலி, வேலைக்கு வரும் அனைவரையும் வரவேற்கும் விதமாக இருக்கும். வாருங்கள் ஓசூர் டிவிஎஸ் தொழிற்சாலைக்குள்உள்ள ஒரு வனத்தை சுற்றி வருவோம்.

இங்கே உள்ள சத்தத்தை எல்லாம் பொருட்படுத்தாது முதல் ஆறு மாதங்கள் பல விதமான பறவைகள் வலசை வந்து, கூடு கட்டி குஞ்சு பொரித்து, பின்அந்த குஞ்சுகள் பறப்பதற்கு தயாராகும் வரை தங்கி செல்கின்றன, என்கிறார் எஸ்டேட் மேனேஜ்மென்ட் துணை தலைவர் பி வெங்கடேசன்.

கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்த ஐம்பது ஏக்கர் வன பரப்பில் நூற்றுக்கும் அதிகமான பறவை இனங்கள் வலசை வந்து செல்கின்றன. அவற்றில் குறிப்பாக செங்கால் நாரைகள் அதிக எண்ணிக்கையில் இங்கே தொடர்ந்து வந்து கூடு கட்டி இன விருத்தி செய்வது ஒரு பெரிய ஆச்சரியம், என்கிறார் அவர்.

பறவை இன ஆராய்ச்சியாளர் ம பாலச்சந்திரன் கூறுகையில் செங்கால் நாரைகள் மிகவும் புத்திசாலியான பறவைகள். திருநெல்வேலியில் உள்ளகூந்தகுளம் பறவைகள் சரணாலயத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு சென்றோம். அங்குள்ள செங்கால் நாரைகள் காலில் ஒரு வளையத்தை பொருத்திஅப்பறவை எங்கெல்லாம் செல்கிறது என்பது குறித்து ஆராய்ச்சி செய்வதாக இருந்தோம். அதற்காகத்தான் வளையம் பொறுத்த சென்றோம்.

எங்களுடன் ஒரு பறவை பிடிப்பவரையும் அழைத்து சென்று இருந்தோம். புதிதாக ஒருவர் நம் பகுதிக்குள் நுழைகிறார் என்பதை அறிந்த நாரைக்கூட்டம்உடனடியாக இந்த தகவலை பரிமாறி கொண்டு அங்கிருந்து பறந்து சென்று விட்டன. இந்த சம்பவம் எங்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

செங்கால் நாரை குஞ்சு முட்டையில் இருந்து வெளி வந்த பின்பு அதை அதன் பெற்றோர்கள் இருவரும் சேர்ந்தே வளர்ப்பது மற்றொரு அதிசயம். பெண்பறவை கூட்டிலே குஞ்சுடன் அமர்ந்து கொள்ளும். வெயிலால் வெப்பம் ஏற ஏற, பெண் பறவை தன் சிறகுகளை குடை போல விரித்து குஞ்சுகளின் மேல்வெயில் படாமல் காக்கும். இம்மாதிரி வேறு ஒரு பறவை இனம் தனது குஞ்சுகளை பாதுகாத்து பார்த்ததில்லை என்றார் பறவையாளர் திருநாரணன்.

ஆண் பறவைதான் குஞ்சுகளுக்கும் தனது பேடைக்கும் தண்ணீரும் உணவும் கொணர்ந்து தர வேண்டும். எனவே ஆண் பறவை பல முறை கூட்டை விட்டுபறந்து செல்ல நேரிடும். பொதுவாக செங்கால் நாரைகள் இன விருத்திக்காக கூடுகளை தாங்களே காட்டும். சில சமயங்களில் வேறு பறவைகளின்கைவிடப்பட்ட கூடுகளை கூட செங்கால் நாரைகள் முட்டை இட பயன்படுத்திக்கொள்ளும், என்கிறார் அவர்.

கூந்தக்குளத்திற்கு வலசை வரும் பறவைகள் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக பாதுகாத்து வரும் பால் பாண்டி கூறுகையில், இந்தசரணாலயத்திற்கு வரும் செங்கால் நாரைகள் தங்கள் கூடுகளை கிராமத்தில் உள்ள வீடுகளின் மொட்டை மாடிக்கு அருகில் உள்ள கிளைகளில் கட்டும். ஏனென்றால், அந்த கிராமத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு எந்த தொந்தரவும் தர மாட்டார்கள் என்பதை அப்பறவைகள் நன்கு அறிந்திருந்தனர், என்கிறார் அவர்.

அதே போல பறவை குஞ்சுகள் தவறி கீழே விழுந்து விட்டால் அவைகளை பத்திரமாக எடுத்து மீண்டும் அதன் கூட்டுக்குள்ளேயே விட்டு விடுவார்கள். சமைக்க வைத்திருக்கும் மீன்கள் கிராமத்தில் உள்ளவர்கள் பறவைகளுக்கு உணவாக கொடுப்பது பல முறை நானே பார்த்தேன் என கூறுகிறார் அவர்.

20230218013305508.jpg

நாற்பது ஆண்டுகளுக்கு முன் சென்னை செம்பியத்தில் உள்ள சிம்ப்ஸன் டிராக்டர் தொழிற்சாலையில் இம்மாதிரியான ஒரு பெருங்காடு இருந்தது. ஓசூர்போலவே இங்கும் பல விதமான மரங்கள் இருந்தன. அதில் பறவைகள் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து வந்தன. அவற்றை வ குருசாமி என்ற ஒருஊழியர் தனி கவனம் செலுத்தி பாது காத்து வந்தார். இந்த தொழிற்சாலையில் உருவாக்கிய டிராக்டர்களை வெளியில் கொண்டு வந்து வைப்பார்கள். அந்தபுத்தம் புதிய டிராக்டர்களில் பறவைகளின் எச்சங்கள் விழும். தொழிற்சாலை நிர்வாகம் அந்த எச்சங்களை துடைக்க தனியாக ஆட்களை நியமித்தனர். அவர்களின் பணி புதிய டிராக்டர்கள் சுத்தம் செய்வது.

20230218013806220.jpg

தமிழகத்தில் இந்த தொழிற்சாலை தான் முதன் முதலாக பறவைகளுக்கென்று புகலிடம் கொடுத்த ஒன்று. இன்றும் அந்த தொழிற்சாலையில் பறவைகள் வந்து கூடு கட்டி குஞ்சு பொரித்து செல்கின்றன. சிம்ப்சன் நிர்வாகமும் அந்த பறவைகளை எப்போதும் போல் பாதுகாத்து வருவது போற்றுதலுக்குரியது, என்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.