தொடர்கள்
அனுபவம்
The elephant Whispers. - தி.குலசேகர்

20230217193944125.jpeg

இந்த ஆவணப்படத்தின் ஆகச் சிறந்த பாங்கு இது கண்முன் விரிகிற நிஜ சம்பவம் என்கிற உணர்வை தருவது தான்.

தொழில்நுட்ப ரீதியாக இதில் வரும் வாய்ஸ் ஓவரை படம் நெடுகிலும் தேவைக்கேற்ப பொருத்தமாக பொம்மன் பெள்ளி இருவருமே தந்து இருக்கிறார்கள். அது இயக்குநர் கார்த்திகியின் தனித்துவமாக பார்க்கலாம்.

பொம்மன் பெள்ளி மலைவாசிகள். தொலைந்து போன அல்லது அனாதை ஆகிப் போன ஒரு யானைக்குட்டி இவர்களிடம் வந்து சேர்கிறது.

அதன் பெயர் ரகு. அதன் பெற்றோர் மின்சாரம் தாக்கி மரித்திருப்பார்கள். அதனால் நொடியில் ஆதரவற்று திக்கற்று நிற்கும்.

பெள்ளி முதல் கணவன் புலி அடித்து இறந்து இருப்பான். இரண்டாவது கணவன் தான் பொம்மன்.

பெள்ளியின் முதல் கணவன் வழி பிறந்த மகள், மகளின் மகள் என அனைவரிடமும் பொம்மன் எந்த வித்தியாசமும் இல்லாமல் தன் மகள் மற்றும் பேத்தியாகவே பாவித்து அன்பு காட்டுகிறான்.

இவர்களுக்கென பிறந்த பெண் குழந்தை சமீபத்தில் தான் இறந்து இருக்கும்.

அவர்களுக்கு அந்த குழந்தையாகவே அந்த குட்டி யானை தோன்றுகிறது.

உயிருக்கு மேலாக அன்பு காட்டி அப்படி கவனிக்கிறார்கள்.

அது இவர்களிடம் வந்து சேர்ந்த போது மெலிந்து போய் உயிரை மட்டும் பிடித்துக் கொண்டு வந்திருக்கும். பிழைப்பது சந்தேகம் என்கிற நிலை.

காட்டில் போய் விட்டாலும் அந்த யானை பொம்மன் பெள்ளி இருவரும் இருக்கிற இடத்திற்கே திரும்பத் திரும்ப வந்து விடுகிறது.

காட்டு லாக்கா அவர்களிடமே ரகு என்கிற அந்த யானையை வளர்க்கிற பொறுப்பை தருகிறது.

பிரமாதமான முன்னேற்றம். சற்றும் எதிர்பாராத வகையில் தேறி, துள்ளிக்குதித்து விளையாட ஆரம்பிக்கிறது.

அவர்கள் இருவர் மீதும் உயிராய் பழகுகிறான் ரகு. அவர்களோடு உரிமையோடு உறவாடுகிறான்.

அபரிமிதமான புத்தி கூர்மை. நகைச்சுவை உணர்வு. குதூகலம். பாசம். பேரன்பு. இதன் கலவை தான் ரகு.

எப்போதும் விளையாட்டு தான். இரவில் அவர்களை பிரிந்து அருகில் உள்ள அதற்கான கூடாரத்தில் இருக்கிறபோது கண்ணில் நீர் வைத்து விடும். அப்போது பொம்மன் கையை பிடித்துக் கொண்டு விடாது. அவன் திண்பண்டம் ஏதாவது தந்து போக்குக் காட்டி செல்வான்.

நடுநிசியில் பசிப்பதாக பொய் சொல்லி அழைக்கும். பெள்ளி பால் கொண்டு போய் தந்தால், அவள் தலையில் துதிக்கையை வைத்து பிடித்துக் கொள்ளும்.

அதிகாலையில் நதிக்கு அழைத்துச் சென்று பிரஷ் வைத்து தேய்த்து குளிக்க வைப்பான். அப்போது, அது துதிக்கை நிறைய தண்ணீர் உறிஞ்சி அவன் மீது பீச்சி அடிக்கும்.

பிற்பாடு காட்டுப்பகுதியில் உள்ள பசுந்தளைகள் வெட்டிக் கொண்டு வந்து போடுவான்.

மதியம் புத்துணர்வு மையத்தில் இருந்து உணவு கட்டிகள் பெற்று வந்து, பிசைந்து ஊட்டுவான்.

பெள்ளி தன் முந்தானையில் அவனுக்கு திண்பண்டம் வைத்து இருப்பதை, ரகு சேட்டை செய்யும் போது தந்து தாஜா பண்ணுவாள்.

ஆசியாவிலேயே முதன் முதலாக ஆதரவில்லாமல் தனித்து விடப்பட்ட ஒரு யானைக்குட்டியை வளர்த்து ஆளாக்கிய சாதனையை இந்த எளிய தம்பதியினர் நிகழ்த்திக் காட்டி இருப்பதோடு, ரகுவோடு சேர்ந்து தமிழகத்தை சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி க்கு ஆஸ்கர் விருதும் வாங்கித் தந்து இருக்கிறார்கள்.

உள்ளபடியே தமிழுக்கு இன்னொரு மகுடம் சூட்டும் விதத்தில், முதன் முறையாக தமிழ் படம் ஒன்றிற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கப்பட்டிருக்கும் ஆகச் சிறந்த பெருமை.