தொடர்கள்
அனுபவம்
கவர்னரின் ஊட்டி விசிட். ! டென்ஷனான உள்ளூர்வாசிகள் - ஸ்வேதா அப்புதாஸ்

20230218012519936.jpg

கடந்த வாரம் 7 ஆம் தேதி தீடீர் என்று ஐந்து நாள் ஊட்டி விசிட் என்று சென்னையில் இருந்து குடும்பத்துடன் ஊட்டி வந்து சேர்ந்தார் கவர்னர் ஆர் .என் .ரவி .

கோவையில் விமான நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் கோத்தகிரி வழியாக ஊட்டி வந்தார் .

வழிநெடுகிலும் காவல் துறையின் கெடுபிடி மிக அதிகமாக இருந்தது . போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்து போனது இதனால் அன்னுர் மேட்டுப்பாளையம் கோத்தகிரி என்று ஊட்டி வரை உள்ளூர் வாசிகளும் .. சுற்றுலாக்களும் மிகவும் வெறுத்து போயினர். கவர்னரின் கான்வாய் கோத்தகிரி அருகில் மாமரம் என்ற இடத்திற்கு வருவதற்குள் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் ஒரு சிறிய காட்டு வழியினுள் வலு கட்டாயமாக தள்ளிவிட்டனர் காவல் துறையினர் .யானை சர்வசாதாரணமாக வந்து போகும் இடமான அங்கு மக்களை தள்ளி விட்டது பலரை கோபமுற செய்தது .அவசரமாக கண் சிகிச்சைக்கு செல்பவர் , தன் மகன் தேர்வு எழுத செல்ல வேண்டும் என்று கூறி காவலர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டது .

" கேரளாவில் எங்க ஆளுநர் , முதல்வர் எங்கு சென்றாலும் ஒரு பக்கம் போக்குவரத்து தடையில்லாமல் செல்லும் இங்கு என்ன அதிசிய ஆளுநரா இவர்" என்ற ஆக்ரோஷ சப்தத்தை காதில் வாங்கவில்லை போலீஸ் . ஒருவர் கவர்னர் மேல் கர்நாடக கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்று கத்தி கூறினார் .

ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி சென்றனர் மக்கள் .

காலியான சாலையில் சர் ...சர் ..என்று கவர்னரின் கான்வாய் கடந்து சென்றது .

20230218012730163.jpg

இப்படிப்பட்ட சங்கடம் தொல்லை ஐந்து நாட்களுக்கு தொடர்ந்தன .

ஊட்டி , கோத்தகிரி, சாம்ராஜ் , குன்னூர் , கூடலூர் , கள்ளிக்கோட்டை சாலைகள் கவர்னரால் திக்குமுக்காடியது .கவர்னர் சென்ற வழிகளில் பல கடைகள் காவல் நண்பர்களால் மூடப்பட்டன .

மஞ்சூர் சாம்ராஜ் தனியார் எஸ்டேட் சென்று சுற்றி பார்த்து வரும் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது .

அதே போல 10 ஆம் தேதி கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி சென்றார் ஊட்டி முதல் வைத்திரி வரை போக்குவரத்து பாதித்து சுற்றுலாக்கள் உள்பட அனைவரும் மிகவும் சிரமப்பட்டார்கள் .

கவர்னரின் வைத்திரி விசிட் தன் நண்பர் ஒருவரை போய் நோக்கிவிட்டு பின் டீ ஸ்டேட் மற்றும் வாசனை பொருட்கள் spices விளையும் இடத்தை உன்னிப்பாக பார்த்து விட்டு வந்துள்ளார் என்ற பேச்சு எழுந்துள்ளது

கவர்னரை நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் வேணுகோபால் சந்தித்து பேசியுள்ளார் .

" மே மாதம் ஊட்டி 200 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வட கிழக்கு மாநில பழங்குடியினர்களின் கலை நிகழ்ச்சிகளை பொட்டானிக்கல் கார்டனில் உங்கள் தலைமையில் நடத்த வேண்டும் " என்று கேட்க ஓகே சொல்லிவிட்டாராம் .

கவர்னர் போன்ற வி ஐ பி கள் ஊட்டி வந்தால் ஊட்டியில் உள்ள தங்களையே வி ஐ பி களாக அறிமுகம் செய்து கொண்டு சில ஊட்டி சீமான்கள் சந்திப்பது வழக்கமான ஒன்று . அதே சமயம் பத்திரிகையாளர்கள் கூட இவரை சந்திக்க முடியவில்லை என்பது வேடிக்கையான ஒன்று .

கவர்னரின் ஊட்டி விசிடில் மகிழ்ச்சியான நேரம் மகளிர் தினத்தன்று மாவட்டத்தின் மகளிர் வழக்குரைஞர்கள் சந்தித்து அவர்களின் புதிய சங்கத்தின் வாழ்த்துக்களை பெற்றது .

பத்தாம் தேதி மாலை கேரளா கதகளி நடனத்தை ரசித்து பார்த்தனர் கவர்னரும் குடும்பத்தினரும் .

11 ஆம் தேதி ஊட்டியில் நடைபெற்று வரும் ஊட்டி 200 மற்றும் புத்தக திருவிழாவை நேரில் பார்வையிட்டார் கவர்னர் ஆர் .என் .ரவி .

புத்தக கண்காட்சியை பார்வையிட்ட கவர்னர் இரண்டு சிறுவர்கள் புத்தகங்களை பார்த்து கொண்டிருந்ததை ஆச்சிரியமா பார்த்து அவர்களை கட்டி பிடித்து " நிறைய புத்தகங்களை படியுங்கள் கீப் இட் அப் " என்று கூறினார் .

அப்துல் கலாம் அறக்கட்டளை மாற்று திறனாளி ஓவியர் முத்து வரைந்த ஓவியங்களை பார்த்து பிரமித்து போயினார் .

20230218012551951.jpg

கவர்னர் ஊட்டி வந்த செய்தி அறிந்தவுடன் அவரை பளிச் என்று வரைய துவங்கிவிட்டாராம் முத்து . கவர்னர் நேரடியாக இவரின் அரங்குக்கு வர அவரின் உருவ ஓவியத்தை முத்து அன்பு பரிசாக கொடுக்க அசந்து போய் அன்பாக பெற்று கொண்டு பாராட்டியுள்ளார் கவர்னர் .

கவர்னரை கவர்ந்த அடுத்த அரங்கு பழங்குடியினரின் அபூர்வ புகைப்படங்கள் .இந்த படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் மதிமாறனிடம் பாறை ஓவியங்களை பற்றி கேட்டுள்ளார் .

"நீலகிரியில் கிறிஸ்து பிறப்பிற்கு முன் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன " என்று மதி கூற 'இது உண்மையில் அபூர்வம் ' என்று மலையாளத்தில் கூறி நகர்ந்துள்ளார் .

அன்று மதியம் முதுமலை தெப்பக்காடு சென்று யானைகளின் முகாமை பார்வையிட்டார் தன் குடும்பத்துடன் .

யானையை பற்றிய 'The Elephant whisperers' ' என்ற ஆவண படத்துக்கான ஆஸ்கார் விருது திங்கள்கிழமை வருகிறது என்று கவர்னருக்கும் யாருக்கும் தெரியாது .

அது தெரிந்திருந்தால் ஒரு விழாவே முதுமலையில் நடந்திருக்கும் .

ஒரு வழியாக தன் ஊட்டி விசிட்டை முடித்துக்கொண்டு ஞாயிற்று கிழமை காலை சென்னை திரும்ப நிம்மதி பெருமூச்சில் நீலகிரி வாசிகள் . நல்ல வேளை பள்ளி பொது தேர்வு துவங்குவதற்குள் கவர்னர் இடத்தை காலி செய்துவிட்டார் என்று கூறுகிறார்கள் .

மீண்டும் கோடை சுற்றுலாக்களின் கூட்ட நெரிசலில் மே மாதம் கவர்னர் ஊட்டி வருகிறார் என்பது மீண்டும் நீலகிரியில் புளியை கரைத்துள்ளது.

இனியாவது ஹெலிகாப்டரில் வந்து இறங்கட்டும். எங்க அன்றாட வாழ்க்கையில் மண்ணைப் போடாமல் வந்து போகட்டும் என்று 'ஆசீர்வதிக்கிறார்கள்' பொதுமக்கள்.