தொடர்கள்
அரசியல்
காணாமல் போன கட்சி கட்டுப்பாடு - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட் !

20230219161432797.jpeg

ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் நான் தூக்கமில்லாமல் அவதிப்படுகிறேன் பொழுது விடிந்ததும் இன்று என்ன புதிய பிரச்சினை வருமோ என்று பயந்து பயந்து தான் எழுந்து கொள்கிறேன் என்று பேசி இருக்கிறார். அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் முதல்வரை தூக்கமில்லாமல் செய்வது தொடர்கிறது. சமீபத்தில் கூட அமைச்சர் பொன்முடி மேடையில் பேசும் போது நீங்க எல்லாம் எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சீங்க என்று சொல்லி அதே போல் இன்னொரு கூட்டத்தில் ஒரு பெண்மணியை வாய மூடு என்று சொல்லிவிட்டு உன் வீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்று கேட்க அந்தப் பெண்மணி அவர் போய் சேர்ந்துட்டாரு என்று சொல்ல கிண்டலாக அமைச்சர் பொன்முடி நல்ல வேளை தப்பிச்சார் என்று அந்த பெண்மணியை அசிங்கப்படுத்தி விட்டார். இது போன்ற வீடியோ தொடர்ந்து வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

இது போதாது என்று தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீடு புகுந்து நடத்திய தாக்குதல் காவல் நிலையத்தில் புகுந்து செய்த வன்முறை திமுக தலைமைக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர் மீதும் நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

திருச்சி ஸ்டேட் பேங்க் ஆபிஸர்ஸ் காலனியில் புதிதாக போடப்பட்ட இறகு பந்து மைதானத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். குறிப்பிட்ட இந்த இடம் திருச்சி சிவா வீட்டுக்கு அருகில் இருக்கிறது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி சிவா அழைக்கப்படவில்லை அழைப்பிதழில் அவர் பெயர் இல்லை இதனைக் கண்டித்து நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு வந்த அமைச்சர் நேருவின் காரை வழிமறித்து அவருக்கு கருப்பு கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள் திருச்சி சிவா ஆதரவாளர்கள். .அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்திருக்கிறது இந்த விஷயம் எல்லாம் தெரியாமல் அமைச்சர் நேரு அங்கிருந்து தஞ்சையில் நடக்க இருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டார்.. ஆனால், நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மற்றும் பைக் நாற்காலிகளை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து கருப்புக் கொடி காட்டி காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருச்சி சிவா ஆதரவாளர்களையும் காவல் நிலையத்தில் புகுந்து அவர்களைத் தாக்க முற்பட்டிருக்கிறார்கள்.. அவர்களை தடுக்க போன பெண் காவலர் ஒருவருக்கும் பலத்த காயம் இவை எல்லாம் வீடியோவாகி வைரலானது. இந்த விஷயம் கேள்விப்பட்ட அமைச்சர் நேரு கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக போய் சரண் அடைய வேண்டும் அப்படி இல்லாவிட்டால் என்னை கைது செய்ய சொல்லி நான் காவல் நிலையத்துக்கு போய் விடுவேன் என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகு தான் காவல் நிலையத்திற்கு நேருவின் ஆதரவாளர்கள் சென்று சரண் அடைந்திருக்கிறார்கள்.

20230219161531539.jpeg

​இந்த விஷயம் கேள்விப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் ரொம்பவும் அப்செட் ஆனார். அவர் இது சம்பந்தமாக அமைச்சர் நேரு திருச்சி சிவா இருவரிடமும் பேச விரும்பவில்லை பொதுச் செயலாளர் துரைமுருகனை அழைத்து நீங்களே பேசுங்கள் என்ன நடவடிக்கையோ அதை எடுங்கள் என்று சொல்லிவிட்டார். துரைமுருகன் நேருவின் ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிப்பு செய்தார். கைது செய்யப்பட்டாலும் ஜாமினில் வெளி வராதபடி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

​இந்த விஷயம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி சேர்ந்த இன்னொரு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யா மொழியை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறார். .அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சர் நேரு எனக்கும் நான் வளர கூடாது என்று கட்டையைப் போட்டு பிரச்சனை செய்கிறார் என்பது உண்மைதான். ஆனால், குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் அண்ணன் நேருவின் பங்கு என்று எதுவும் இல்லை எல்லாமே அவருக்கு தெரியாமல் தான் நடந்திருக்கிறது. பிரச்சனைக்கு ஆரம்பம் திருச்சி சிவா ஆதரவாளர்கள் அண்ணன் நேருவுக்கு கருப்பு கொடி காட்டியதுதான். இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று தெரிந்ததும் காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க சொல்லி அண்ணன் நேரு சொல்லி இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் இதை முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார் அதன் பிறகு தான் நேருவை தொடர்பு கொண்டு யார் காரணம் என்ற விவரம் எல்லாம் தேவையில்லை நீங்கள் திருச்சி சிவா வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து சமாதானப்படுத்துங்கள் கட்சித் தலைவர் என்ற முறையில் இது என் உத்தரவு என்று சொல்லிவிட்டார் அதனைத் தொடர்ந்து திருச்சி சிவா வீட்டிற்கு சென்று எனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் நேரு திருச்சி சிவாவிற்கு தெளிவுபடுத்தினார். அதன் பிறகு அமைச்சர் நேரு நிருபர்களிடம் பேசும் போது புதிய இறகு பந்து அரங்கை திறந்து வைக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள் எனது தொகுதி என்று தான் அதனை திறந்து வைத்தேன் அப்படி வரும்போது வழியில் ஒரு சிலர் எங்களது அண்ணன் பெயரை அழைப்பிதழில் போடாமல் எப்படி வரலாம் என்று கேட்டார்கள் அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை போய் பாருங்கள் நான் என்ன செய்ய முடியும் என்று கூறிவிட்டு நான் புறப்பட்டு விட்டேன் என்னுடைய துரதிர்ஷ்டம் எனக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை போலீசார் பெரிய வேனில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்கள். எனக்கு பின்னாடி அந்த வேன் இருந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டது. எனக்கு தெரியாது அதற்குப் பிறகு நடக்க கூடாத விஷயங்கள் நடந்து விட்டது அதுவும் கழக குடும்பத்தில் இருக்கக்கூடியவர்ஒருவரின் வீட்டில் நடந்துள்ளது டென்னிஸ் அரங்கை திறந்து வைத்துவிட்டு தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நான் போய்விட்டேன் அப்போதுதான் காவல் நிலையத்தில் தாக்குதல் நடைபெற்றதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள். இந்த விரும்பத்தகாத சம்பவம் காரணம் தகவல் பரிமாற்ற குழப்பம்தான் இனி இப்படி நடக்காது என்றார் அமைச்சர் நேரு.

​திருச்சி சிவாவை நேரில் சந்தித்த அமைச்சர் நேரு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள் எனக்கு தெரிந்திருந்தால் இதை நான் அனுமதிக்க மாட்டேன் இனி இது மாதிரி சம்பவங்கள் நடக்காது நடக்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

​இதனைத் தொடர்ந்து திருச்சி சிவா நிருபர்களிடம் பேசும் போது நடந்தது நடந்ததாக இருக்கட்டும் நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என்ற தலைவரின் குரல் எங்கள் செவியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டோம் நடந்த சம்பவங்களுக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நேரு சொன்னார் நான் அதைக் கேட்டுக் கொண்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

​இன்னும் சில தினங்களில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடக்க இருக்கிறது. ஒரு கட்சித் தலைவர் கட்சிக் கட்டுப்பாடு பற்றி ஒரு பெரிய விளக்கம் கூட்டமே நடத்த இருக்கிறாராம். அப்போது நிறைய பிரச்சனைகள் வெட்ட வெளிச்சமாகும் என்கிறது அறிவாலய வட்டாரம்.