தொடர்கள்
ஆரோகியம்
விரல்களில் விந்தை - 4 வாயு முத்ரா ரஜனி சுப்பிரமணியம் 

20230320210022386.jpg

பஞ்ச பூதங்களாலான பிரபஞ்சத்தைப் போன்று, மனித உடலும் நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகியவற்றால் உருவானதே. இந்த ஐந்து தன்மைகளும் உடலில் தேவையான அளவில் இல்லாதபோது ஆரோக்கியம் குறைந்து, நோய்கள் தோன்றுகின்றன.

பஞ்ச பூதங்களின் குறியீடுகளாகத் திகழும் விரல்களைக் கொண்டு முத்திரைகளைப் பயிற்சி செய்து நோய்களிலிருந்து மீள்வோம். நோய்கள் இனி வருவதையும் தடுப்போம்.

முத்திரைகளை இயன்றவரை காலையில் உணவிற்கு முன்னர், தரையில் விரிப்பின் மீது அமர்ந்தோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களை தரையில் பதியுமாறு வைத்தபடியோ, இரு கைகளையும் மடி மேல் வைத்து பயிற்சி செய்யலாம். முதுகுத் தண்டு நிமிர்த்திய நிலையில், உடலை தளர்த்தி, அமைதியாகவும், மன ஒருமைப்பாட்டுடனும் செய்வது முழுப்பலனை அளிக்கும்.

நமது உடலில் பிராணன், அபானன், வியானன், சமானன் போன்ற பத்து வகையான வாயுக்கள் உள்ளன. ஒவ்வொரு வாயுவும் ஒவ்வொரு செயலைச் செய்கிறது. அவை அதனதன் விகிதத்தில் இருந்தால்தான், மனிதனின் உடலியக்கம் சரியாக இருக்கும். மாறுபடும்போது, தச வாயுக்களும் ஒழுங்காக இயங்காத நிலை ஏற்பட்டு வாயு சம்பந்தமான வலிகள் உடலில் தோன்றுகின்றன. வாயு முத்திரை செய்யும் போது, உடலிலுள்ள தச வாயுக்களும் சமமாக இயங்குவதால் இந்த வலிகளிலிருந்து விடுதலைப் பெறலாம்.

இப்போது வாய்வுத் தொந்தரவிலிருந்து நம்மை மீட்டு, வாழ்வளிக்கும் வாயு முத்திரையை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ஆள்காட்டி விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்து, அதன் மேல் கட்டை விரலை படத்தில் காட்டியுள்ளபடி லேசாக அழுத்த வேண்டும். சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவற்றை நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

வாயு முத்திரையைத் தொடர்ந்து செய்வதால், கீல்வாதம், முடக்க வாதம், பக்க வாதம், முக வாதம் போன்ற பலவகை வாத நோய்களிலிருந்து விடுபடலாம். தினமும் 15 முதல் 45 நிமிடம் வரை செய்வது நல்ல பலனைத் தரும். நோய் குணமானதும், பயிற்சி செய்வதை நிறுத்தி விடலாம்.

கணினியை வெகுவாகப் பயன்படுத்தும் தகவல் தொழில் நுட்ப (IT) வேலையாளர்களும், அதிகமாக வாகனம் ஓட்டுபவர்களும் செர்விகல் ஸ்பாண்டிலைடிஸ் எனப்படும் கழுத்து வலியால் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் மூன்று வேளையும் 5 நிமிடம் வாயு முத்திரையை பயிற்சி செய்தாலே போதும். கழுத்து வலி அதிகமாக உள்ளவர்கள் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை 2 நிமிடம் பயிற்சி செய்யலாம். கழுத்துப் பட்டையை பயன்படுத்துபவர்கள், நாளடைவில் அதை உபயோகிப்பதை நிறுத்தி விடலாம்.

இந்த முத்திரை, வயிறு மற்றும் குடல்களிலிருந்து கெட்ட வாயுவை வெளியேற்றும். மலச்சிக்கல் நீங்கும். கை கால் வலி, மூட்டு வலி தீரும். கைகால் நடுக்கம், இடுப்பு பிடிப்பு, தசை பிடிப்பு, தசை வலி சரியாகும். வாயுத் தொல்லையினால் வரும் நெஞ்சு வலி, மூட்டு வலி, கழுத்து வலி போன்றவை தீரும். இந்த முத்திரை செய்யும்போது, கெட்ட காற்று வெளியே தள்ளப்படுவதால், பதட்டம், பரபரப்பு, மன அழுத்தம் போன்றவை மறைந்து மனம் அமைதியடையும். தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஏற்படும்போது, முகத்தை தண்ணீரால் கழுவி புத்துணர்ச்சி அடைந்தவுடன், இந்த முத்திரையைச் செய்து சரியாகலாம்.

இந்த வாயு முத்திரையை பயிற்சி செய்து, நமது உடலில் தச வாயு இயக்கங்களை சரிபடுத்தி, வாய்வுத் தொந்தரவுகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

-தொடரும்