தொடர்கள்
ஆன்மீகம்
கோரிக்கைகளை நிறைவேற்றும் கோவை கோனியம்மன்!! - சுந்தரமைந்தன்.

20230322092551479.jpg

அகிலம் காக்கும் அன்னை பராசக்தி ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு திருநாமத்தில் அருளாட்சி புரிகிறாள். வளமையும், பெருமையும் மிக்க கோவை மாநகரத்தில் காவல் தெய்வமாகவும் தனிப் பெரும் அரசியாகவும் அருள்மிகு கோனியம்மன் என்ற பெயரில் அருளாட்சி நடத்துகின்றார்.


கோனியம்மன் கோயில் கோவை மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலை மையமாகக் கொண்டே கோவை நகரம் அமைக்கப்பட்டது. கோவை மாநகரில் கோட்டை ஈசுவரன் கோவில், பேட்டை ஈசுவரன் கோவில் என்ற இரண்டு சிவாலயங்களுக்கு இடையில் பழம் பெருமையுடன் விளங்குவது அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில். கோவை மாநகரின் மூன்று கண்கள் போல விளங்கும் கோயில்களில் ஒன்றாக வீற்றிருந்து பராசக்தியின் அம்சமாக அருள்புரிகிறாள். சிவபெருமானைப் போன்று வலது செவியில் குண்டலமும், இடது செவியில் தோடும் அணிந்து காட்சி அளிக்கிறார். கோனியம்மனை பார்க்கும் போது சிவமும் சக்தியும் வேறு வேறல்ல என்பதை உணர்த்துகிறது.


அறுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கோயிலுக்குச் சோழ, பாண்டிய, நாயக்க, மைசூர் மன்னர்கள் பல விதங்களில் திருப்பணிகளைச் செய்துள்ளனர். கோனியம்மன் கோயிலில் திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு பெற, தொழில் விருத்தி அடைய வேண்டிக் கொள்ளுகின்றனர்.

ஸ்தல வரலாறு:
கொங்கு நாடான இன்றைய கோவை மாநகரம் பல நூற்றாண்டுகளுக்கு முன் காடுகளாகவும், முட்புதர்களாகவும் இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் என்பவர் அதனைச் சீர்படுத்தி ஒரு புதிய ஊரை உருவாக்கினார். கோவன் அமைத்த புத்தூர் என்பதால், கோவன் புத்தூர் என அந்த ஊர் அழைக்கப்பட்டது. அந்த ஊரே இன்று கோயம்புத்தூர் என அழைக்கப்படுகிறது. நல்லாட்சி செய்து வந்த கோவன், மக்கள் நலம் பெற்றுச் செழிப்புற வாழச் சிறு நிலத்தைச் சீரமைத்து அங்குக் கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கிய பின், கோவன் புத்தூர் மக்கள் செழிப்புற்றுத் திகழ்ந்தனர். அதன்பின், இருளர்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.
கோவன் ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்ற மன்னன் ஆண்டு வந்தார். அப்போது, சேர மன்னன் படையெடுத்து வர, தன் நாட்டையும், நாட்டு மக்களையும் காக்கும் பொருட்டு, கோவன்புத்தூரின் மையத்தில் ஓர் கோட்டையையும், மண்மேட்டையும் கட்டி, காப்புத்தெய்வமான அம்மனை “கோயம்மா” என்று பெயரிட்டு வைத்து வழிபட்டார். இளங்கோசர் வணங்கி வந்த கோயம்மாவே கோனியம்மா என மருவியது. பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோயிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் ’மகிசாசுர மர்த்தினி’ அமைப்பில் சீரமைத்தார். கிராமமாக இருந்த கோவன்புதூர், இன்று முக்கிய பெரிய நகரமாக விளங்க அருள் செய்து விளங்குபவள் கோனியம்மன். கோவை நகர மக்களும், கோனியம்மனையே முக்கிய தெய்வமாகவும், தலைமை தெய்வமாகவும் ஏற்றுக்கொண்டு போற்றி வழிபட்டு வருகின்றனர்.

திருக்கோயில் அமைப்பு:
கோவை மாநகரில் கோட்டை ஈசுவரன் கோயில், பேட்டை ஈசுவரன் கோயில் என்ற இரண்டு சிவன் கோயில்களுக்கு இடையில் பழம் பெருமையுடன் விளங்குவது அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில். மூன்று கோயில்கள் முக்கண் போலவும் அதில் கோனியம்மன் திருக்கோவில் நடுவில் உள்ள நெற்றிக்கண் போலவும் அமைந்துள்ளது. கோவை மாநகரின் மையமாகவும் கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
கோனியம்மன் திருக்கோயில் எண்பத்து நான்கு அடி உயரத்தில் ஒன்பது கலசத்துடன் ஏழுநிலையுடன் இராஜகோபுரம் அமைந்துள்ளது. வெளிப்பிரகாரத்தில் நுழைவாயிலில் கிழக்கு திசையில் பழைய அரசமரத்தடியில் பத்து கரங்களுடன் கம்பீரமாகப் பஞ்சமுக விநாயகர் வலஞ்சுழி திருமேனியாக வீற்றிருக்கிறார். இரண்டு பக்கங்களிலும் ராகு - கேது விக்ரகங்கள் காட்சி தருகின்றன. இங்கு நாக தோஷ நிவர்த்திக்குப் பிரார்த்தனை செய்கின்றனர்.
கர்பகிரஹத்தில் கோனியம்மன் வடக்கு நோக்கி, எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், அக்னி, சக்கரம், மணி ஏந்தி வலது காலை மடித்து பீடத்தின்மீது வைத்துக்கொண்டு, இடது காலைக் கீழே தொங்கவிட்டபடி காட்சியளிக்கிறார். சிவனைப் போல, இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்து, சிவசக்தி ஸ்வரூபமாக அமர்ந்திருக்கின்றார். அம்மன் சந்நிதிக்கு எதிரே சிம்ம வாஹனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர். திருக்கோயில் சுற்றுப்பிரகாரத்தில் சாந்த விநாயகர் சந்நிதியும், ஸ்ரீ வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளது. அம்மனுக்கு வலப்புறத்தில் நவகிரக சந்நிதியில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் அருள்பாலிக்கிறார்கள். இங்கு நவக்கிரக நாயகர்கள் தம்பதி சமேதராக வீற்றிருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த நவக்கிரகங்களை வணங்குவதால், கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். கர்பகிரஹத்திற்கு பின்பகுதியில் ஆதி கோனியம்மன், துர்க்கை, சப்தமாதர்கள், வீரபத்திரர், கருப்பர், முனீஸ்வரர் உள்ளனர்.

ஸ்தல பெருமை:
இன்றும் இப்பகுதில் வாழும் மக்கள், கோனியம்மனிடம் உத்தரவு கேட்ட பின்பே அனைத்து சுபகாரியத்தையும் செய்வர். இவர்கள் கோனியம்மனை, "கோவையின் அரசி" எனவும், "கோவை மாநகர காவல் தெய்வம்" எனவும் அன்புடன் அழைக்கின்றனர்.
இத்தலத்தில் காமிக ஆகமம் வழிபாட்டு முறையில் பூஜைகள் நடைபெறுகின்றன. நாகலிங்க மரம், மகிழ மரம், அரச மரம் இக்கோயிலின் ஸ்தல விருட்சம் ஆகும். இந்த கோயிலில் காலையில் மட்டும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகப் புனித நீர் நோய்தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது. இங்கு சத்ரு சம்ஹாரத்துக்காகச் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன, இத்தலம் சிறந்த பிரார்த்தனைத் தலமாகவும் விளங்குகிறது. குழந்தைப் பேறு, வேலை, திருமணம், தொழில் முன்னேற்றம் போன்றவற்றிற்காக நேர்ந்து கொள்ளப்படும் பிரார்த்தனைகள் உடனடியாக நிறைவேறுவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர்.

விசேஷ பூஜை:
இந்த கோயிலில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. தமிழ் மாதப்பிறப்பு, ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல், தீபாவளி போன்ற நாட்களிலும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றது.

அக்னி திருமணம்:
இத்தலத்தில் சிவபெருமானுக்குத் தனிச் சந்நிதி இல்லாததால், அம்மன் சந்நிதி முன் யாகம் வளர்த்து, சிவபெருமான் அக்னி ரூபத்தில் அம்மனை மணந்து கொண்டதாக ஐதீகம். மாசி மாதத்தில், திருக்கோயில் முன் அக்னிக் குண்டம் அமைக்கப்பட்டு, அதில் ஒளிரும் அக்னியையே சிவபெருமானாகப் பாவித்து, அருகில் வைக்கப்படும் தீர்த்த கலசத்தின் மேல் திருமாங்கல்யம் அணிவித்து பூஜை செய்யப்பட்டு பின்னர் அது அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. இதற்கு, அக்னி திருமணம் என்று பெயர். அக்னி திருமணத்திற்கு மறுநாள் தேரோட்டம் நடைபெறும்.

பரிகாரங்கள் :
இந்த கோயில் உள்ள கோனியம்மனை வேண்டிக்கொண்டால் திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிட்டும், நோய்கள் நீங்கும், தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. கோனியம்மனை வேண்டி தங்கள் பெண், பிள்ளைகளுக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து, அதன் மேலே மஞ்சள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ வைக்கின்றனர். கோனியம்மன் சாட்சியாகத் திருமணத்தை உறுதி செய்கின்றனர்.நோய் நீங்கவும், மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டிக்கொள்கின்றனர். திருமாங்கல்ய காணிக்கை:
திருமணத்தடை நீங்க கன்னியர், அம்மனிடம் மனம் உருக வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயம் வந்து அன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, திருமாங்கல்யத்தை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். மாவிளக்கு போடுதல்:
அம்மை, தீராத நோய்கள், பிற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டால் இக்கோயிலுக்கு வந்து கோனியம்மனுக்கு மாவிளக்கு இட்டு, பொங்கலிட்டுப் படைத்தால் அன்னை அந்த நோய்களில் இருந்து நிச்சயம் காப்பாற்றுவார் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்:
இந்த கோயிலில் ஆடி மாதம் முழுவதும், தினந்தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகின்றது. இது போன்று வேறெங்கும் நடப்பதில்லை.
மாசி மாதத்தில் பதினான்கு நாட்கள் திருவிழா சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றது.
நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் அம்மனுக்கு விதம் விதமாக அலங்கரித்துச் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
தேர்த் திருவிழா :
கோவை மாநகரில் நடைபெறும் திருவிழாக்களில் கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழா குறிப்பிடத்தக்கது. கோவை நகரில் இந்த கோயிலில் மட்டுமே தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது. மாசி மாதம் பதினான்கு நாட்கள் தேர்த்திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தெப்பம், தீர்த்தவாரி, வசந்த உற்சவம் என்று விமரிசையாக விழா நடக்கிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழாவில் லட்சக் கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். அம்மன் தேரில் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி. இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றுச் செல்கின்றனர். மாசி மாதத்தில் தேர்த்திருவிழா காணும் கோனியம்மன், பக்தர்களின் வாழ்க்கையைக் கோணலின்றிக் காப்பாற்றிடுவாள் என்பது ஐதீகம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்தக் கோவில் தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோயிலுக்குச் செல்லும் வழி:
இக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2கி.மீ தொலைவிலும், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 6.2 கிலோமீட்டர் தொலைவிலும், கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும், கோவை ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்திலும் அமைந்துள்ளது.

கோவையின் காவல் தெய்வம்
கொங்கு மண்டலத்தில் தன்னிகரற்ற தெய்வம்
ஓம் சக்தி தாயே போற்றி
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி
கோனியம்மன் தாயே போற்றி
சக்தி வழிபாடு மேன்மை செய்யும் நம் வாழ்வை

நமது அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிடும் கோவை கோனியம்மன் கோயில் சென்று தரிசிப்போம்…
ஓம் சக்தி.. பராசக்தி…