பழவேற்காடு சிந்தாமணீசுவரர்

பழவேற்காட்டில் அமைந்துள்ள கருங்காலி கிராமத்துக் கோவிலடித் தீவில் உள்ள சிந்தாமணீசுவரர் திருக்கோயில், எண்ணற்ற மகான்களும் மன்னர்களும் வழிபட்டுப் பேறுபெற்ற கோயிலாகும்.
புராண காலத்தோடு தொடர்புடைய இக்கோயில், வட தமிழ்நாட்டின் உச்சியில் ஆந்திர எல்லையை ஒட்டி வங்கக் கடலோரம் அமைந்துள்ள இயற்கை எழில் வாய்ந்த ஊராகப் பழவேற்காட்டில் திகழ்கிறது.
இரணாசூரன்
இராவணனுடைய வம்சத்தில் தோன்றிய அசுரன், இரணாசூரன், பலகாலம் தவம் செய்து ஆயிரம் சிங்கத்திற்கு இணையான பலம் பெற்று, தொடர்ந்து வெற்றிகளையே கண்டுவந்தான். சென்னைபட்டினத்தை அடுத்த திருவொற்றியூருக்கு வடதிசையில் இரணாவூர் என்றொரு நகரை உருவாக்கி அங்குக் கோட்டை கட்டி ஆட்சி புரிந்து வந்தவன், இந்திரன் இல்லாத நேரம் பார்த்து இந்திரன் குமாரனான சயந்தனுடன் போர் செய்து அங்கிருந்த அபூர்வ சிந்தாமணியைத் திருடிக் கொண்டு பூலோகம் வந்தான்.
'கத்தி வாக்கம்'
"சிந்தாமணியைக் காணாத இந்திரன் பிரம்மனிடம் கூற , பிரம்மன் நடந்தவற்றைத் தன் ஞானதிருஷ்டியால் எடுத்துரைத்தார். உண்மையைத் தெரிந்துகொண்ட இந்திரன், இரணாவூருக்கு வந்த அசுரனுடன் போரிட்டான். நிலையைப் புரிந்துகொண்ட இரணாசூரன் சிந்தாமணியை விழுங்கிவிட்டு, இந்திரனின் சேனைகளையெல்லாம் வெட்டியெறிந்தான். எனினும், இந்திரன் தனது அஸ்திரத்தினால் அசுரனைத் தனிமைப்படுத்தினான். அவன் இந்திரனைக் கொல்லக் கத்தியைத் தூக்கியபோது, இந்திரன் அவன் உடலை வெட்டி வீழ்த்தினான். அப்போது சிந்தாமணி வெளிப்பட்டது. இந்திரனின் கத்தி விழுந்த இடமே இன்று 'கத்தி வாக்கம்' என்றழைக்கப்படுகிறது", என்று பனையபுரம் அதியமான், எழுத்தாளர், தெரிவிக்கிறார்.
'புழுதிவாக்கம்' உருவான கதை
"அவ்வேளையில் விண்ணுலகு வரை புழுதி பரந்த இடம் 'புழுதிவாக்கம்' என்றழைக்கப்படுகிறது".

அசுரனை அழித்ததால் இந்திரனுக்குத் தோஷம் உண்டாயிற்று. இதனால், பிரம்மனுடன் திருவொற்றியூர் சென்று துருவாச முனிவரை அடைந்து தம் துன்பத்திற்குப் பரிகாரம் வேண்டினார். அவர், கிழக்குக் கடற்கரையில் ஆரணி நதிக்கும் திருவொற்றியூருக்கும் இடையே திருப்பாலைவனத்திற்குத் தென்கிழக்கே சிவலிங்கத்தை நிறுவி, பூசை செய்து வந்தால் தொல்லை நீங்கும் என்றார், ஒரு பிராமணர் உருவில் வந்த செல்வ விநாயகர் அந்த இடத்தைக் காட்டிவிட்டு மறைந்தார், அந்த இடம் 'காட்டுப்பள்ளி' என்று அழைக்கப்படுகிறது. பிரம்மனும் முதலில் செல்வ விநாயகரை நிறுவி, சிவகாமிவல்லி உடனுறை சிந்தாமணீசுவரரை நிறுவி, அதனருகே ஒரு திருக்குளத்தையும் உண்டாக்கினான். பூசையை ஏற்ற இறைவன், இந்திரனுக்குக் காட்சி தந்தார். அவரின் ஆணைப்படி அந்த இடம் 'கோயிலடி' என்றும், இறைவன் 'சிந்தாமணிநாதர்' என்றும், தீர்த்தம் 'இந்திர தீர்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்திரன் தன் வழிபாட்டை நிறைவு செய்து தோஷம் நீங்கிப் புதிய பொலிவுடன் இந்திர லோகம் சென்றான்.
(தொடரும்)
-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)

Leave a comment
Upload