தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - 13. பரணீதரன்

20230321195623542.jpg

20230321195711613.jpg

20230321200030234.jpg

அடுத்த வாரம் ஓரெழுத்து ஒரு மொழி அதாவது, ஒரு சொல் என்றதைப் பற்றிக் கூறுவதாய் சொல்லியிருந்தார் நம்ம பரணீதரன்.

இனி அவர் அது பற்றிக் கூறுவதைக் கேட்ப்போம்.

மேலே உள்ள படங்களை பாருங்கள். முதலில் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ‘ஆ’வின்பால் அதாவது பசுவின் பால். அதற்கு அடுத்து உள்ளது ‘மா’வின் பழரசம் அதாவது மாம்பழத்தின் ஜூஸ். அதற்கு அடுத்து உள்ளது கீழே உள்ள சுவாரசியமான கதையின் கதாநாயகன் ஆரைக்கீரை.

ஓரெழுத்து ஒரு மொழி என்பது ஒரு எழுத்தே ஒரு சொல்லாக பயன்படுவது. அவை நன்னூலின் படி மொத்தம் 42. ஆனால் நாம் இன்று அதற்கு மேலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தேனீ தேனீ…

ஏதாவது புரிந்ததா ? இங்கு நான் பயன்படுத்தி உள்ளது ஓரெழுத்து ஒரு மொழி இலக்கணமாகும்.. இப்பொழுது நீங்கள் இதை சுலபமாக கண்டுபிடிக்க இன்னுமொரு குறிப்பு தருகிறேன்… தேன் ஈ தேன் ஈ… இப்போது இதற்கு அர்த்தம் புரிந்ததா ? அதாவது தேனை சாப்பிடக்கூடிய ஈயே(தேன் ஈ) எனக்கு கொஞ்சம் தேன் கொடு (தேன் ஈ)...

நீங்கள் எல்லோரும் கோ-ஆப் டெக்ஸ்(co-optex) கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை தமிழ்ப்படுத்தினால் கோ (அரசன்) ஆப்(யின்-of) டெக்ஸ்(ஆடை). அதாவது ஆடைகளின் அரசன் என்று பொருள்படும் J

கீழே உள்ளவைகளே நாம் பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தும் ஓரெழுத்து ஒரு மொழிகள் ஆகும்.

அ - சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா

ஆ - பசு, ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்

இ - சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.

ஈ - பறக்கும் ஈ, தா, குகை, தேனீ, கொடு.

உ - சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்

ஊ - இறைச்சி, உணவு, ஊன், தசை

எ - வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்

ஏ - அம்பு, உயர்ச்சிமிகுதி

ஐ - அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை, ஐந்து, வியப்பு

ஒ - மதகு, (நீர் தாங்கும் பலகை), வினா.

ஔ - பூமி, ஆனந்தம்

க - வியங்கோள் விகுதி

கா - காத்தல், சோலை

கி - இரைச்சல் ஒலி

கு - குவளயம்

கூ - பூமி, கூவுதல், உலகம்

கை - உறுப்பு, கரம்

கோ - அரசன், தந்தை, இறைவன்

கௌ - கொள்ளு, தீங்கு

சா - இறத்தல், சாக்காடு, மரணம், பேய், சாதல்

சீ - லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல், திருமகள்

சு - விரட்டுதல், சுகம், மங்கலம்

சே - காலை, எருது, அழிஞ்சில் மரம்

சை - அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்

சோ - மதில், அரண்

ஞா - பொருத்து, கட்டு

தா - கொடு, கேட்பது

தீ - நெருப்பு , தீமை

து - உண் கெடு, பிரிவு, உணவு, பறவை இறகு

தூ - வெண்மை, தூய்மை

தே - கடவுள், நாயகன், தெய்வம்

தை - தமிழ்மாதம், தைத்தல், பொருத்து

நா - நான், நாக்கு

நி - இன்பம், அதிகம், விருப்பம்

நீ - முன்னிலை ஒருமை, நீக்குதல்

நூ - யானை, ஆபரணம், அணி

நே - அன்பு, அருள், நேயம்

நை - வருந்து, நைதல்

நோ - துன்பப்படுதல், நோவு, வருத்தம்

நௌ - மரக்கலம்

ப - நூறு

பா - பாட்டு, கவிதை, நிழல், அழகு

பூ - மலர்

பே - மேகம், நுரை, அழகு, அச்சம்

பை - கைப்பை, பாம்புப் படம், பசுமை, உறை

போ - செல், ஏவல்

ம - சந்திரன், எமன்

மா - பெரிய, சிறந்த, உயர்ந்த, மாமரம்

மீ - மேலே , உயர்ச்சி, உச்சி, ஆகாயம், உயரம்

மூ - மூப்பு, முதுமை, மூன்று

மே - மேல், மேன்மை

மை - கண்மை (கருமை), அஞ்சனம், இருள்

மோ - மோதல், முகர்தல்

ய - தமிழ் எழுத்து என்பதின் வடிவம்

யா - ஒரு வகை மரம், யாவை, இல்லை, அகலம்

வ - நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்

வா - வருக, ஏவல், அழைத்தல்

வி - அறிவு, நிச்சயம், ஆகாயம்

வீ - மலர் , அழிவு, பறவை

வே - வேம்பு, உளவு

வை - வைக்கவும், கூர்மை, வைக்கோல், வைதல், வைத்தல்

வௌ - வவ்வுதல், கௌவுதல், கொள்ளை அடித்தல்

நொ - நொண்டி, துன்பம்

ள - தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்

ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்

று - எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

உயிர்மவி லாறுந் தபநவி லைந்துங்

கவசவி னாலும் யவ்வி லொன்றும்

ஆகு நெடினொது வாங்குறி லிரண்டோ

டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின - நன்னூல்

இன்று நாம் வாட்ஸ் அப் செயலியில் ஆங்கிலத்தில் உரையாடும் பொழுது, பல பெரிய சொற்களை ஓர் எழுத்தாக மாற்றி பயன்படுத்துகிறோம் உதாரணமாக see (பார்) என்பதை c என்று எழுதுகிறோம். அதேபோல் are என்று சொல்லை r என்றும் you (நீ) என்ற சொல்லை u என்றும் எழுதுகிறோம். இதை இப்போதுதான் நாம் ஆங்கிலத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளோம் ஆனால் அந்த காலத்திலேயே தமிழில் இவ்வாறான பெரிய சொற்களுக்கு ஒரு எழுத்தை வைத்து அந்த சொல்லைக் குறித்துள்ளனர்.

ஒருமுறை ஔவையாரை பழிக்க நினைத்த ஒரு புலவர் அவரை மரியாதை குறைவாக ‘டி’ (இன்றும் கூட பெண்களை வாடி போடி என்று கூறுபவர்கள் உண்டு) என்ற பதத்தை பயன்படுத்துவதற்காக ஒரு விடுகதையை போடுகிறார். அந்த விடுகதை இதுதான் : ஒரு காலடி நாலிலைப் பந்தலடி. இதற்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உள்ளன. முதல் அர்த்தம் - அடியிலே ஒரு கால் இருக்கும், நான்கு இலைகள் கொண்ட பந்தல் இருக்கும். அந்த பந்தல் நமது காலடி போல் இருக்கும். இன்னொரு அர்த்தம் - ஒரு கால் இருக்குமடி, நான்கு இலைகள் பந்தல் போன்று இருக்குமடி என்பது.

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்

கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னாய் அது

இதற்கு ஔவை கூறிய பதிலில் தான் ஓரெழுத்து ஒரு மொழி உள்ளது.

எட்டேகால் - 8 ¼ - தமிழில் 8 என்ற எண்ணை ‘அ' என்ற எழுத்தால் குறிப்பார்கள்.

¼ (கால்) என்ற எண்ணை ‘வ' என்ற எழுத்தால் குறிப்பார்கள்.

இவை இரண்டையும் சேர்த்தால் அவ என்ற சொல் வரும்.

எட்டேகால் லட்சணமே என்றால் அவலட்சணமே (அசிங்கமே),

எமனேறும் பரியே - எமனின் வாகனமான எருமையே,

மட்டில் பெரியம்மை வாகனமே - மட்டில் (மூளையில்) பெரியம்மை (மூத்த தேவி என்ற மூதேவி) வாகனமே (கழுதையே),

முட்டமேல் கூரையில்லா வீடே - குட்டிச் சுவரே,

குலராமன் தூதுவனே - குலராமன் (பரசுராமன், பலராமன் என்று பல இராமர்கள் இருந்ததால் ஸ்ரீராமரைக் குறிப்பதற்காக குலராமன்(ஸ்ரீராமன்) என்று கூறுகிறார்கள். தூதுவனே - அனுமான் குரங்கினத்தை சேர்ந்தவராகையால் குரங்கே என்று குறிப்பிடுகிறார்,

ஆரையடா சொன்னாய் அது - யாரை அடா ( ஒரு ஆண்பிள்ளையை மரியாதை இல்லாமல் அழைப்பது) டீ என்று சொன்னாய்…

இதற்கு இன்னொரு விதமான பொருளும் உள்ளது

எட்டேகால் லட்சணமே - கால்களை வேகமாக எட்டிப் போட்டு நடக்கும் லட்சணமே (அழகனே)

எமன் - என்னுடைய இனத்தானே (கவிஞனே)

ஏறும் பரியே - வளரும் பரியே (செல்வமே). பரி என்று சொல்லிற்கு குதிரை, காசு, பணம், செல்வம் போன்ற பல பொருள்கள் உள்ளது.

மட்டில் பெரியம்மை வாகனமே - மட்டில் பெரிய - மூளையில் பெரியவனே, அம்மை வாகனமே - பார்வதி தேவியின் வாகனமான சிங்கமே

முட்டமேல் கூரையில்லா வீடே - மேலே கூரையேயில்லாமல் இருக்கும் வானத்தைப் போன்றவனே

குலராமன் தூதுவனே - ராமனுடைய கதையான ராமாயணத்தை எழுதி அதன் மூலமாக ராமனுடைய பெருமையை அவனுடைய தூதனை போன்று கூறுபவனே (புலவர் கம்பராக இருந்தால்). இன்னொரு பொருள் அனுமானை போன்ற பலசாலியே (புலவர் ஒட்டக்கூத்தராக இருந்தால்).

ஆரையடா சொன்னாய் அது - ஆரை(ஆரைக்கீரை) அடா (மறைத்து) சொன்னாய் அது (நீ கூறிய பொருள்)

அடுத்த வாரம் எழுத்துக்களைப் பற்றிய சில சந்தேகங்களைத் தீர்க்க உள்ளார்.