தொடர்கள்
கதை
பேய் இருக்கா? இல்லையா? -தில்லைக்கரசிசம்பத்

20250619062109293.jpeg

“டேய் அப்பவே சொன்னேன் செகண்ட் ஷோ வேணாம்னு.. கேட்டியா.. இப்ப இந்த கும்மிருட்டுல தனியா 8 கிமீ சைக்கிள மிதிச்சுக்கிட்டு போறோம்.. பயமா இருக்கு டா!” என்றான் மணி

“என்னடா பயம்? பேய் பயமா?”என சைக்கிள் ஒட்டிக்கொண்டே பின் சீட்டில் அமர்ந்திருந்த மணியை பார்த்து நக்கலாக சிரித்தான் சரவணன்

“உனக்கென்னடா சரவணா ? நீ சாமிய நம்ப மாட்ட.. பேயையும் நம்ப மாட்ட. எங்க அப்பத்தா சொல்லும் சாமிக்கு மரியாதை கொடுக்குற மாதிரி பேயிக்கும் மரியாதை கொடுத்து அத தொந்தரவு பண்ணாம ஒதுங்கி போயிடனுமாம். அர்த்தசாமத்துல கருப்பாவும் உச்சி பகல்ல பச்சையாவும் கண்ல தென்படுமாம். அந்த நேரத்துல நாம வாய்க்காவரப்பு களத்துமேட்டு கிணறு கிட்ட எல்லாம் போக கூடாதுனு சொல்லும்”.

“ஹாஹா.. மணி..நீ கவலையே படாத.. இதோ இன்னும் அரை கிலோ மீட்டர்ல ஊர் சுடுகாடும் அது பக்கத்துல பேய் குளமும் வரும். அங்கன இறக்கி விடுறேன் உன்ன. இருந்து பேசிட்டு காலைல வீட்டுக்கு வா..”

“டேய் சரவணா! விளயாடாதடா! எனக்கு ஒரு சந்தேகம். ஏண்டா அந்த குளத்துக்கு பேய்குளம்னு பேரு வச்சாங்க?”

“ 60 வருசத்துக்கு முன்ன அந்த குளத்துல விழுந்து யாரோ தற்கொலை செஞ்சிக்கிட்டாங்களாம். அதிலிருந்து இன்னைய வரை ஏகப்பட்ட பேரு இதுல விழுந்து செத்துப்போயிருக்காங்க. செத்தவங்க எல்லாம் அப்பப்ப கண்ல படுவாங்களாம். ஏன் 3 மாசம் முன்னாடி நம்ம களத்துமேட்டுத்தெரு புஷ்பா அக்கா இதுல விழுந்து தானே செத்து போச்சு!”

“இந்த குளத்துலேயே எதுக்கு இத்தனை பேரு விழுந்து சாகுறான்?”

“பக்கத்துலேயே சுடுகாடு இருக்குல்ல..ஈசீயா அடக்கம் பண்ணிடலாமுன்னு இதுல விழுந்து சாவுறாங்க போல.. ஹாஹாஹா..பேசாம சாவு குளம்னு பேர் வச்சிருக்கலாம். “

“ஏய் சரவணா! மெதுவா பேசுடா! நான் கூட கேள்விப்பட்டேன். செத்துபோன அந்த புஷ்பா அக்கா அடிக்கடி இந்த குளக்கரையில தென்படுதாம். அம்மா சொல்லிச்சு.பயமாருக்கு..”

“என்னடா மணி! சும்மா பயம் பயம்னு.. ஹீஹீ.. சாவுக்கு பயந்தா பேயாக முடியுமா? “

“வாயை மூடுடா கொரங்கு.. உன் கூட சினிமா அதுவும் நைட்ஷோ பாக்க வந்தேன் பாரு . என் புத்திய…சரி.. சுடுகாட்டையும் குளத்தையும் தாண்டி போற வரை தயவு செஞ்சு கொஞ்சம் வாயை மூடிட்டு வா.”

சைக்கிளை வேகமாகவே ஓட்டிக்கொண்டு வந்த சரவணன் சுடுகாட்டின் எதிரில் இருந்த சாலை வேகத்தடுப்பில் சைக்கிளை வேகமாக ஏற்றி இறக்கினான்.

சைக்கிள் அடுத்து குளத்தை நெருங்கியபோது சாலையோரத்தில் இருந்த புளியமரங்கள் காற்றில் விர் என்று சத்தத்தோடு ஆட, தூர கண்மாய் கரையிலிருந்த பனை மரங்களும் ஆடி சத்தம் எழுப்பின. குளத்தை கடந்ததும் களைப்பில் அதன்பின் மெதுவாகவே சைக்கிளை மிதித்து கொண்டு வந்த சரவணன், மணியிடம்

“ அதான் பேய் குளத்தை தாண்டி வந்தாச்சே. இன்னும் ஏண்டா சைலண்ட்டா வர? பயம் போகலையா?”என்றதற்கு மணி “ ம்..” என்றான்.

“மெயின்ரோட்டிலேயே போனா இன்னும் லேட்டாகும். குறுக்கு மண் பாதையில சைக்கிள விட்டா சீக்கிரம் ஊருக்குள்ள போயிடலாம். ஓகேயா?”

“சரிடா!”

“என்னடா மணி..! சுரத்தே இல்லாம பேசுற? தூக்கம் வந்துடுச்சா? சரியான சொங்கி பயடா நீ!”

“ஏ! கம்முனு ஓட்டுடா” என்றான் மணி.

“ஆமா இந்த கோவத்துக்கு ஒன்னும் கொறைச்சலில்ல! “ என்று முணுமுணுத்தான் சரவணன். அந்த ஒத்தையடி மண் பாதை முடியும் இடத்தில் தனியாக உள்ள ஒரு வீட்டை நெருங்கியபோது சைக்கிளிலிருந்து மணி குதித்து இறங்கினான்.

“ ஏய் மணி?! என்னடா? இது நம்ம புஷ்பா அக்கா வீடு தானே? ஏன் இங்கேயே இறங்கிட்ட?“

“ ஆமா.. நீ போடா.. நான் கொஞ்சம் காலாற நடந்து வரேன்.

“ஏண்டா கிண்டல் பண்ணதுக்கு கோச்சிக்கிட்டியா?”

“அதெல்லாம் இல்லடா.. பின்னாடி உக்காந்து வந்தது முதுகு வலிக்குது. நீ போ. நான் பின்னாடியே வந்துடுவேன்” என்றபடி அந்த வீட்டின் அருகே நின்றான் மணி.

“சரி . பத்திரமா வந்து சேரு” என்றபடி சைக்கிளை வேகமாக மிதித்த சரவணன், 10நிமிடங்களில் தனது வீடு இருக்கும் தெருவில் நுழைந்தான்.

சரவணன் வீடும் , மணி வீடும் பக்கத்து பக்கத்து வீடுகள். தெரு முனையில் நுழையும் போதே மணி வீட்டின் முன்பு யாரோ இருவர் பைக்குடன் நிற்பது போல் தெரிந்தது.

“ யாருடா? அதுவும் இந்த நேரத்துல” என மனதில் நினைத்தபடி வேகமாக பெடலை மிதித்து அருகே சென்ற சரவணன் அதிர்ச்சியில் உறைந்தான்.

“ டேய் நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டாடா? சுடுக்காட்டுக்கு எதிரே ஸ்பீட்பிரேக்கர்ல சைக்கிள் ஏறுனப்ப நான் கீழ விழுந்தது கூட தெரியாம நீ பாட்டுக்கு சைக்கிள ஓட்டிக்கிட்டு போயிட்ட. “நில்லுடா நில்லுடா”னு எப்படி கத்துனேன் தெரியுமா? காதே கேக்காத மாதிரி போயிட்ட. விழுந்த வேகத்துல என் கால் எசகுபிசுகா சுளுக்கிடுச்சு. எந்திரிக்க கூட முடியல . நல்லவேளை செல்வன் அண்ணன் அந்த நேரம் ரோட்டுல பைக்கோட வந்தாரு. அவரு பின்னாடி ஏறி மெயின்ரோடு வழியா இதோ இப்பதான் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். டேய் சரவணா? ஏண்டா இப்படி பேய் முழி முழிக்கிற?” என மணி சரவணனை உலுக்க “ அப்ப என் பின்னாடி வந்தது?! ஐயய்யோ!” என அலறியபடி சைக்கிளை ரோட்டிலேயே போட்டுவிட்டு தன் வீட்டுக்குள் வேகமாக பாய்ந்து ஓடினான் சரவணன்.

என்ன உளறிவிட்டு போகிறான் என அவனை புரியாமல் பார்த்த மணி, செல்வத்திடம் “ அண்ணே! இவன் என்னை வர வழியெல்லாம் பேய் பேய்னு பயமுறுத்திக்கிட்டே வந்தான். இப்ப என்னன்னா அலறி அடிச்சுக்கிட்டு ஓடுறான். ஆமா நீங்க எப்ப துபாயிலிருந்து வந்தீங்க? திடீர் பயணமா?“ என்று சிரித்தபடி கேட்க செல்வமும் “ ஆமாப்பா ! ஊருக்கு வந்துசேர நைட்டு 8 மணி ஆகிட்டு. ஒரு நண்பரை பாக்க வேண்டி உடனே பைக்க எடுத்துட்டு கிளம்பிட்டேன். வர லேட்டாச்சு. அப்ப தான் உன்னை வழியில பாத்தேன்.” என்று புன்னகைத்தபடி சொன்னார்.

“அண்ணே நீங்க ரொம்ப டயர்டா பாக்கவே முகமெல்லாம் வெளுத்து போய் இருக்கிங்க. போய் தூங்குங்க. நாளைக்கு நானும் சரவணனும் உங்க வீட்டுக்கு வரோம்” என்றவன் வீட்டு வாசல்கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். கதவை திறந்து வெளியே வந்த மணியின் அம்மா “ என்னடா தனியா நின்னு பேசிக்கிட்டு இருக்க? உள்ள வாடா?” என சத்தம் போட்டார். “ தனியாவா..? செல்வம் அண்ணே வந்திருக்காருமா” என்றபடி திரும்பினால் அங்கே செல்வத்தையும் காணும்.. பைக்கையும் காணும். துணுக்குற்ற மணி “ அம்மா இங்க செல்வம் அண்ணே.. பைக்கில ஒன்னா.. இப்ப நின்னாரே! பைக் சத்தம் கூட கேக்கல! எப்படி டக்குனு போனாரு” என தடுமாற,

மணியின் அம்மா அவன் சொன்னதை சரியாக காதில் வாங்காமல் “ என்னடா செல்வம்ங்குற? துபாய் செல்வம் தானே?உனக்கு சேதி யார் சொன்னா? பாவம்டா.. நானு அப்பா எல்லாம் செல்வம் வீட்டுக்கு போயி 11 மணி வாக்குல தான் வீட்டுக்கு திரும்பி வந்தோம். இன்னைக்கு காலைல துபாயில செல்வம் மாரடைப்பு வந்து செத்துப்போயிட்டானம்ப்பா! நைட்டு 8 மணிக்கு தான் தகவல் வந்துச்சாம். தெருவே அல்லோகலமா போச்சு. பாடி வர 10 நாளுக்கு மேல ஆகுமாம். டேய் மணி.. மணி.. ஏண்டா மயக்கம் வந்த மாதிரி சாயுற.. ! டேய் டேய் .. என்னங்க.. இங்க ஓடியாங்களேன் நம்ம பையனுக்கு என்னாச்சுன்னு பாருங்களேன்” என அலறினார் மணியின் தாய். மறுநாள் ஊரே செல்வத்தின் வீட்டில் குவிந்திருக்க சரவணனும் மணியும் தத்தம் வீட்டில் ஜுரத்துடன் போர்த்திக்கொண்டு படுத்து கிடந்தனர்.

சரி சொல்லுங்க......பேய் இருக்கா இல்லையா ???