தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் மிக முக்கியத்துவமும், தெய்வீகமும் நிறைந்த மாதம் ஆடி. இந்த மாதம், இறை வழிபாட்டிற்கும், இயற்கைக்கும் மிகவும் உகந்தது. மேலும்
இது "கற்கடக மாதம்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் குலதெய்வம், கிராம தேவதை, மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
ஆடி மாதத்தில் பண்டிகைகள், கோயில் திருவிழாக்கள் என்று வந்தபடியே இருக்கும். ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட வேண்டியிருப்பதால் இறைவனைத் துதிப்பதற்கும், சிந்தனை செய்வதற்கும் ஆன்மிக ஸ்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் பண்டைக்காலம் தொட்டுத் தவிர்க்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர ஆடி மாதம் விவசாயத்திற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் "ஆடிப்பட்டம் தேடி விதை" என்பது போல, இந்த மாதத்தில் விதை விதைக்கும் காலம் ஆரம்பமாகிறது.
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவது வழக்கம். அறிவியல் பூர்வமாக ஆடி மாதத்தில் பருவநிலை மாறுபடுவதாலும் காற்று அதிகம் வீசும் காலம் என்பதாலும் பலவிதமான நோய்கள் பரவும். பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ற எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத் தெய்வத்தின் பிரசாதம் என்ற பெயரில் கூழ், மோர், இளநீர், வேப்பிலை ஆகியவற்றைச் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.
ஆடி மாத மகிமை:
ஒரு வருடத்தின் மாதங்கள் இரு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் எனவும், தை முதல் ஆனி வரை உத்தராயணம் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன.
மழைக்காலத் தொடக்கமான தட்சிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கு ஏற்றதாகவும், உத்தராயணம் திருமணம், உபநயனம், கிரக பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாக இருப்பதாகவும் ஜோதிட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துப் பண்டிகைகளும், விரதங்களும் தொடர்ந்து வருகின்றன.
தமிழ் மாதத்தின் நான்காவது மாதமான ஆடி, ‘தேவர்களுக்கு இரவு நேரத்தின் தொடக்க மாதம்’ என்று புராணங்கள் கூறுகின்றன. இந்தக் காலத்தில், பகல் பொழுது குறைவாகவும், இரவுப் பொழுது நீண்டும் இருக்கும்.
விண்ணுலகில் இருந்த வேப்ப மரம் மண்ணுலகம் வந்த அதிசயமும் இந்த ஆடி மாதத்தில்தான்.
பூமாதேவி அவதரித்த மாதமாக ஆடி மாதம் சொல்லப்படுகிறது.“அரங்கநாதனையே மணப்பேன்” என்ற உறுதியுடன் வாழ்ந்த ஆண்டாள் திரு அவதாரம் செய்ததும் ஆடிப்பூரம் திருநாளில்தான்.
கருடாழ்வார் ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். அவரது பிறந்த தினம் ‘கருட பஞ்சமி’ எனக் கொண்டாடுகிறோம்.
அம்பிகைக்குச் சங்கர நாராயணராகச் சிவபெருமான் காட்சி அளித்தது , கஜேந்திர மோட்சம் நடந்தது , இப்படிப் பல தெய்வீக நிகழ்வுகள் எல்லாம் இந்த ஆடி மாதத்தில் தான் நடந்தது .
பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மனின் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.
ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட அம்மனுக்குச் சக்தி அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் மட்டும் சக்திக்குள் சிவன் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம்.
அப்பரடிகளுக்கு திருவையாற்றில் சிவபெருமான் கைலாயக் காட்சி அருளியதும், ஆடி மாதம் ஸ்வாதியில் சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் கயிலையில் இருந்து வெள்ளையானையை அனுப்பி இறைவன் அழைத்துக் கொண்டதும் மற்றும் பட்டினத்தார், பெருமிழலைக் குறும்ப நாயனார், மூர்த்தி நாயனார், புகழ்ச்சோழ நாயனார் முக்தி பெற்றது என்று பற்பல தெய்வீக அற்புதங்கள் நிறைந்து இருப்பதாலும் ஆடி மாதம் ஒரு தெய்வீக மாதம் என்றால் மிகையில்லை.
இந்த ஆடிமாதத்தில் தான் கற்புக்கரசி “கண்ணகி” தனக்குத் தவறாக நீதி வழங்கிய பாண்டிய மன்னனின் மதுரை மாநகரை எரித்ததாக வரலாறு கூறுகிறது.
தெய்வீகப் பண்டிகைகள் நிறைந்த ஆடி மாதம்:
ஆடி மாதத்தில் எல்லா நாளும் தெய்வீகம் நிறைந்தவை.
எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை. ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடிப்பண்டிகை, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, வரலக்ஷ்மி விரதம், ஹயக்ரீவர் ஜெயந்தி, ஆகிய பண்டிகைகள் தொடர்ந்து வருகின்றன.
அம்மன் ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கரகம் எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், போன்ற விழாக்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆண்டு (2025)ஆடி மாதம் ஜூலை 17 -ம் வியாழக்கிழமை துவங்கி, ஆகஸ்ட் 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.
தெய்வீக மணம் கமழும் ஆடி மாதத்தில் வரும் பண்டிகைகள், மற்றும் திருவிழாக்களை நாம் கொண்டாடி, இறைவனை மனமுருகி வழிபட்டு அனைத்து வளங்களையும் பெறுவோம்!!
Leave a comment
Upload