தொடர்கள்
அரசியல்
சரோஜாதேவி- மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.நூருல்லா

அரவணைத்த அரசியலை புறக்கணித்த சரோஜாதேவி

2025061820391045.jpeg

எம்ஜிஆர் உடன் ஜோடி போட்டு, அதன் மூலம் ரசிகர்களின் இதயங்களில் ஆளுமைச் செலுத்தி வந்தவர் சரோஜாதேவி. சிக்கலான சமயங்களில் கூட சிக்கிடாத நடிகை தான் சரோஜாதேவி.

1980-ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமைச்சரவை டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிறகு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடந்தது.

அப்போது தமிழ்நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் நிகழ்த்திய எம்ஜிஆர், "நான் என்ன குற்றம் செய்தேன் ? என் அமைச்சரவையை ஏன் டிஸ்மிஸ் செய்தார்கள் ?" என்ற ஒற்றை வினாவை வைத்துக் கொண்டு, தமிழக மக்களின் இதயங்களை ஈர்த்து, வாக்குகளை வசீகரித்துக் கொண்டவர் தான் எம்ஜிஆர்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை முடித்துச் சென்னை திரும்பிய எம் ஜி ஆருக்கு வாழ்க்கையில் முதல் முறையாக தன் உடல்நிலை பற்றிய கவலை தோன்றியது.

இனியும் பரபரப்பான அரசியலில் ஊருக்கு ஊர் சுற்றி அலைந்து தேர்தல் பிரச்சாரம் செய்வது தன் உடலுக்கு ஒத்து வராது என்பதை அவர் உணர்ந்தார். ஆனாலும் தன்னைப் போன்ற மக்கள் செல்வாக்குள்ள ஒருவரைக் கொண்டுதான் ஓரளவுக்கேனும் ஈடு கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

இவ்வாறாக அவர் சிந்தித்தபோது, முதலில் எம்ஜிஆர் கவனத்திற்கு வந்தவர் சரோஜாதேவி தான். திரைப்படங்களில் பெரிதாக தலை காட்டாமல் அமைதிமயமான வாழ்க்கையை பெங்களூரில் அனுபவித்துக் கொண்டிருந்தவர் சரோஜா தேவி. அவரை எம்ஜிஆர் அழைத்தார். அரசியலுக்கு வருமாறு வேண்டினார். "திரைப்படங்களில் ஒன்றாக நடித்து, வெற்றிக் கொற்றத்தைப் பற்றிப் பிடித்தோமே! அதேபோல அரசியலிலும் அதிசயச் சாதனைகளை நிகழ்த்திக் காட்டலாம்" என்று சரோஜாதேவி இடம் எம்ஜிஆர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் சரோஜா தேவியோ அரசியலுக்குள் வரத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். " எதிர்ப்பாளர்களுக்கே இடம் இல்லாமல் அடக்க ஒடுக்கமாக வாழ்க்கையை நடத்தி வருகிறேன். பரபரப்புகளோ, சுறுசுறுப்புகளோ எனக்கு இனி ஒத்து வராது" என்று மன்றாடி ஒதுங்கிவிட்டார் சரோஜாதேவி. அவரின் முடிவு எம்.ஜி.ஆருக்கு ஏமாற்றத்தைத் தந்தாலும், அவரின் தீர்க்கமான எண்ணத்திற்கு மதிப்பளித்து, அனுப்பி வைத்து விட்டார்.

இந்த வகையில் அரசியலின் முதல் அழைப்புக்கே அவர் இசையாமல் ஒதுங்கிப் பதுங்கிப் போய் விட்டார்.

சரோஜாதேவி அரசியல் களத்தில் அதிரடிகளைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர். அதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்ல முடியும். தமிழ்ப் படங்களில் அவர் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில், திரும்பிய பக்கமெல்லாம் சரோஜாதேவியைப் பற்றிய பேச்சு என்ற நிலை இருந்தது. அப்போது ஒரு முறை தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையே பெங்களூரில் கடும் மோதல் வெடித்தது. தமிழகத்திலும் கர்நாடகத்திலும் உள்ள பத்திரிகைகள் அலறித் துடித்தபடிச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

அப்போது சென்னையில் ஒரு பத்திரிக்கை வித்தியாசமான ஒரு செய்தியைப் போடத் திட்டமிட்டது. அதன்படி, அந்த பத்திரிகையின் சினிமா நிருபர் ஒரு காரில் சரோஜாதேவி வீட்டை நோக்கிச் சென்றார். வழியில் சாலைகளில் சிதறிக் கிடந்த சில கற்களை எடுத்துக்கொண்டார். சரோஜாதேவியின் வீட்டருகே காரை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கினார் அந்த சினிமா நிருபர். அவரும், கார் டிரைவருமாகச் சேர்ந்து அந்தக் கற்களை எடுத்து சரோஜாதேவி வீட்டில் மீது சரமாரியாக வீசினர்.

கல்வீச்சுக் கலவரமோ என்று கதி கலங்கிய சரோஜாதேவி வீட்டு கூர்க்கா, ஓடோடி வெளியே வந்தார்.

அவரைப் பார்த்த அந்த சினிமா நிருபர், டிரைவரை அழைத்துக் கொண்டு, காருக்குள் நுழைந்து, அவசர கதியில் கிளம்பிச் சென்று விட்டார்.

மறுநாள் காலை அந்த நிருபரின் பத்திரிக்கையில் எட்டு பத்தி செய்தி வெளியாகி இருந்தது.

"தமிழர்- கன்னடர் போராட்டம் எதிரொலி

சரோஜாதேவி வீடு மீது சரமாரி கல்வீச்சு"

- இப்படியாகச செய்தி வெளியாகி இருந்தது.

சரோஜாதேவி வீட்டு கூர்க்காவோ, நேராக சரோஜாதேவி இடம் சென்றார். அந்த பத்திரிகை நிருபர் வந்து கல் வீசியது பற்றி அவரிடம் எடுத்துச் சொன்னார். சரோஜாதேவிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏராளமான முறை அந்த நிருபர் தொடர்ந்து சரோஜாதேவி வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தவர் தான். "அப்படிப்பட்டவருக்கு நம் மீது கோபமா? " என்று புரியாமல் சரோஜாதேவி திகைப்டைந்தார்.

அடுத்த ஓரிரு நாட்களுக்குப் பின்னர், ஷூட்டிங் களத்தில் அந்த நிருபரைத் தற்செயலாகப் பார்க்கின்ற சூழல் சரோஜாதேவிக்கு ஏற்பட்டது. அவரைப் பார்த்ததும், நிருபர் நைசாக நழுவப் பார்த்தார். ஆனால் சரோஜாதேவியோ, அவரை எட்டிப் பிடித்துக் கிட்ட நெருங்கி விட்டார்.

"நான் என்ன தப்பு செய்தேன் ? என் மேல் கோபமா ? என் வீட்டிற்கு மேல் கல் வீசி இருக்கிறீர்களே !!" என்று அப்பாவித்தனமாகக் கேட்டார்.

அந்த சினிமா நிருபர், தன் நிறுவனம் மூலம் தனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையைப் பற்றி விவரித்தார்.

"ஓஹோ அப்படியா சமாச்சாரம் என்னிடம் முன்னரே சொல்லி இருந்தால், என் வீட்டுக் கூர்க்காக்களைக் கொண்டும் கல்வீச்சு நடத்தச் சொல்லி இருப்பேனே!" என அப்பாவித்தனமாகக் கருத்து தெரிவித்தார் சரோஜாதேவி.

இப்படிப்பட்ட அரசியல் அறியாத அப்புரானியால் எம்ஜிஆர் வழியில் எப்படிச் செல்ல முடியும்?

நடிப்புப் பணியை விட்டு, அமைதிமயமான வீட்டு வாழ்க்கையில் இருந்த அவருக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டது. காவிரி பிரச்சனை தொடர்பாக, கர்நாடகத்தில் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையே போராட்டம் வெடித்து, நிலவரமே கலவரமாகிப் போனது.

அப்போது கன்னட மொழியால் களமாடியவர்கள், சரோஜாதேவி வீட்டுக்குச் சென்றனர். தமிழர்களைக் கண்டித்து, தமிழ்நாட்டின் அணுகு முறையை எதிர்த்து அறிக்கை விடுமாறு வேண்டினர். அவரோ மறுத்தார். ஆர்ப்பாட்டக்காரர்களோ அதட்டியும், மிரட்டியும் கேட்டனர். சரோஜா தேவியோ திட்டவட்டமாக ஒதுங்கிப் போனார். அப்போது அவர் சொன்ன ஒரு வாசகம் வரலாற்றில் நிலைக்கத் தக்கது.

"என் நடிப்புத் தொழில் என்பது தமிழ் மக்கள் எனக்குக் கொடுத்த நன்கொடை. வெற்றிக்கொடி பறக்கும் அளவுக்கு உச்சிக்கு நான் சென்றதற்குக் காரணமே தமிழ் ரசிகர்கள் எனக்குக் காட்டிய அன்பும் ஆதரவும் தான். ஆகவே தமிழர்களை எதிர்த்தோ, தமிழ்நாட்டைக் கண்டித்தோ எந்த அறிக்கையையும் கொடுக்க மாட்டேன்" என்று தீர்மானமாகத் தெரிவித்து விட்டார். தன் பண்பாட்டை விட, தமிழர்களின் பண்பாட்டுக்குச் சரோஜாதேவி கொடுத்த முக்கியத்துவம் என்பது முத்திரைச் சித்திரமாகும்.

கர்நாடகத்தில் இருக்கின்ற பிரபலமான கட்சி ஒவ்வொன்றும், சரோஜாதேவிக்கு மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்க முன்வந்தன. ஆனாலும் சரோஜாதேவி லாவகமாக அதிலிருந்து தப்பிப் பிழைத்து ஒதுங்கிப் போய்விட்டார்.

கர்நாடக முதலமைச்சராக இருந்தவரும், மத்திய அமைச்சராகக் கோலோச்சிய வரும், பெங்களூரைத் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டில், இந்திய அளவில் முதன்மைத்துவம் மிக்க மாநகராக மாற்றிக் காட்டியவர் என பன்முகத் திறன் காட்டிய எஸ்.எம்.கிருஷ்ணா, இளமைக் காலத்தில் சரோஜாதேவியை மணக்க விரும்பியதாகவும், அந்த ஒரு தலைக் காதல் ஈடறாமல் போயிற்று என்றும் அந்த காலகட்டத்தில் பரவலாகப் பேசிக் கொண்டதுண்டு. அப்போதும் கூட சலனப்படாமல், சபலம் தொடாமல், அமைதியாக நின்று அடக்கமாக வாழ்ந்தவர் சரோஜாதேவி.