தொடர்கள்
கவர் ஸ்டோரி
திங்கள் தங்கையாம் ..தென்றல் தோழியாம்  சரோஜாதேவி ! -மரியா சிவானந்தம் 

20250619055431544.jpg

சரோஜாதேவி !

"மானல்லவோ கண்கள் தந்தது

மயில் அல்லவோ சாயல் தந்தது

தேனல்லவோ இதழைத் தந்தது

சிலை அல்லவோ அழகைத் தந்தது " என்று கவிஞர் இழைத்து இழைத்து எழுதிய அழகுக்குச்சொந்தமான நடிகை.

எழுபது ஆண்டுகளாக , இந்திய சினிமாவின் பெருமைமிக்க பிம்பமாக திகழ்ந்தவர். பத்மபூஷன் , பத்மஸ்ரீ பட்ட்டங்கள் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். அவர் மறைந்தபோதும் அவரது எழிலும் , நடிப்பும், மழலைக் கொஞ்சும் குரலும் எந்நாளும் நம்மால் மறக்கமுடியாது.

எம்ஜியாருடன் 26 படங்கள், சிவாஜியுடன் 22 படங்கள் , ஜெமினியுடன் 17 படங்கள் என்றுதமிழ்த் திரையை ஆண்ட மூவருடன் அதிக படங்களில் நடித்தவர்.

கதாநாயகி என்றாலே காதலியாக ஆடிப் பாடவும் , மனைவியாக கண்ணீர் சிந்தவும் வைத்தஅக்காலத்து தமிழ் சினிமாவில் தனித்துவம் மிக்க பாத்திரங்களை ஏற்று அனாயசமாக நடித்துவிட்டுச் சென்றவர் சரோஜாதேவி .

நாடோடி மன்னன் 'இளவரசி ரத்னா', படகோட்டி 'கண்ணம்மா' ,நீதிக்குப்பின் பாசம் ' கிராமத்துப் பெண் கௌரி',அன்பே வா " கல்லூரி மாடர்ன் பெண் கீதா" கலங்கரை விளக்கம் " மனநலம் பிறழ்ந்த நீலா" இருவர் உள்ளம் 'சாந்தா டீச்சர் புதிய பறவை ' போலீஸ் உளவாளிலதா', என்று விதவிதமான பாத்திரங்கள் அவரது திறமையான நடிப்பை வெளிகொணர்ந்தன.தன்னம்பிக்கையும் , சுயமரியாதையும் கொண்ட அந்த நாயகியை பெண்களுக்குப் பிடித்துப் போனது. அவர் அழகும், இளமையும் மக்களைக் கொண்டாடவைத்தது.

மேலும் பாகப்பிவினை ' பொன்னி', ஆலயமணி 'மீனா', பாலும் பழமும் ' சாந்தி' கல்யாண பரிசு'வசந்தி', பணமா பாசமா 'சாந்தி', தாமரை நெஞ்சம் 'கமலா' பெரிய இடத்துப் பெண் 'புனிதா ' என அவர் ஏற்று நடித்த மாறுபட்ட பாத்திரங்கள் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் . ஆணாதிக்கம் மிக்க அன்றைய காலகட்டத்தில் , அவர் எல்லா வித பாத்திரங்களையும் சவாலாக ஏற்று நடித்து புகழ்க் கொடி நாட்டினார்.

20250619055535422.jpeg

சரோஜாதேவி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அவரது ஆடையும் ,ஒப்பனையும். எவ்விதத்திலும் கண்ணியம் குறையாத உடுத்துவது அவரது அடையாளமாக இருந்தது . அவர்அணிந்த உடைகளைப் போலவே பெண்கள் ஆடைகளை வடிவமைத்துக் கொண்டனர். கதாபாத்திரத்துக்கு ஏற்ப தொங்கல் ,ஜிமிக்கி , கழுத்து நகைகள் , புல்லாக்கு, மாட்டல் என்றுவிதவிதமாக நகைகள் அணிந்துக் கொண்டு நடிப்பது அவரது தனித்துவம்.

"பாலும் பழமும் சேலை " என்று அக்காலத்தில் நம் அம்மாக்கள் உடுத்தியது நம் நினைவுக்குவருகிறது ."பணமா பாசமா"வில் அவர் அணிந்த கழுத்தில் ,கைகளில் பிரில் வைத்த முழங்கை வரை கை வைத்த ரவிக்கை இளம் பெண்கள் ஆசையுடன் அணிந்தனர். அவர்அணியும் கிளோஸ்ட் நெக் பிளவுஸ் இப்பவும் பேஷன் . ஆயிரம் பிளவுசுக்கு மேல்சரோஜாதேவி வைத்திருந்தார் என்கிறார்கள்.

"பறக்கும் பந்து பறக்கும்" பாடலில் அணிந்த 'பாட்டியாலா சுரிதார் ' யையும் அன்பே வா ,கலங்கரை விளக்கம் படங்களில் அணிந்து வரும் லெக்கிங்ஸ்யையும் நம் பெண்கள் இன்றுஅணிந்து வருகிறார்கள். வட்டக் கொண்டையும் சுற்றிய மல்லிகைச் சரமும் ,கொண்டைநடுவில் செருகிய திருகுப்பூவும் ஒரு அழகு என்றால், சுருட்டி விடப்பட்ட 'கர்ல்ஸ்' இன்னும்அழகு. 'ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்' பாடலில் கூந்தலை காற்றில் பறக்கவிட்டவாறு அவர் வருவது , ஒரு மலர் தென்றலில் மிதந்து வருவதைப்போல ரம்மியமாகஇருக்கும்.

மிகவும் எளிமையாக ஒரே மாதிரி உடை அணிந்தது "பெற்றால்தான் பிள்ளையா ?" படத்துக்காக. அவரது இயலபான நடிப்புக்கு மாறாக அதிக சோகமான பாத்திரம் ஏற்றது"குலவிளக்கு " படத்தில்.

மலையாளம் தவிர தென்னிந்திய திரையுலகில் அவர் தொடாத உயரம் இல்லை. புகழ் ஏணியின்உச்சியில் நின்ற போதும் அவர் தன் வேரினை மறக்காதவர் . "தாய்ச் சொல்லைத் தட்டாதே" என்ற எம்ஜியார் படத்தின் தலைப்புக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்.அவர் அன்னை கிழித்தகோட்டைத் தாண்டாமல் மணவாழ்வை ஏற்று , குடும்பத்தை நிர்வகித்துக் கொண்டேசினிமாவில் சாதித்தார்.

திரை உலகை விட்டு விலகிய பின்பும் , அவரது பொருளாதார நிலை உயர்ந்தே இருந்தது. அவர் ஒரு பேட்டியில் சொன்னது போல கணவர் ஹர்ஷாவின் “Don't put all your eggs in one basket” எனும் ஆலோசனைப் படி நல்ல விதத்தில் முதலீடு செய்து எவ்வித குறைவும்இல்லாமல் வாழ்ந்தார். 87 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்தார். எவ்வித கிசுகிசுவில் சிக்கிக்கொள்ளாமல், நற்பெயருடன் வாழ்ந்த நடிகைகளில் ஒருவர் சரோஜாதேவி.

"ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலயமணியின் இன்னிசை நீயே" என்று வியந்துப் பாடப்பட்ட சரோஜாதேவி ஒரு இன்னிசையாக, மின்னும் தாரகையாக நம் மனங்களில் என்றும் குடியிருப்பார் .

யூடியூபில். சரோஜாதேவியின் பாடல்கள் தொகுப்பு கிளிக்கவும்.