தொடர்கள்
கல்வி
சட்டம் தன் அன்பைச் செய்யும்! - மோனா

20250618084929715.jpeg

அந்த பொன்னிறக் காலையில்… சென்னை கேளம்பாக்கம் வி.ஐ.டி. வளாகம் – மகாத்மா காந்தி ஆடிட்டோரியம், நூற்றுக்கணக்கான இளம் மாணவ மாணவிகளின் பரவச முகங்களை வரவேற்றுக்கொண்டிருந்தது.

ஒருவரையொருவர் முதன் முதலாகச் சந்திக்கும் அந்த மெல்லிய அறிமுகம். கை குலுக்கி, தோள் அணைத்து, பெயர் பரிமாறிக் கொண்ட அழகு. எங்கெங்கோ வளர்ந்து, வேறு வேறு இடத்தில் பள்ளிக்காலம் முடித்து, இன்று முதல், இனி ஐந்து ஐந்தாண்டு சேர்ந்து சட்டம் படிக்கப்போகிற துறுதுறு தலைமுறை.

‘Freshers’ Induction Program 2025’ என்று மேடை நீல வெண்மை வண்ணத்தில் மின்ன, அரங்கம் அமைதியின் குளுமையில் மிதக்க… மேடையில் வெளிச்சமாக நுழைந்தார் சென்னை ஹை-கோர்ட்நீதியரசர் A.D. ஜெகதீஷ் சந்திரா.

அடுத்த ஒரு மணி நேரம்…. அந்த அரங்கமே நம்பிக்கைக் கிரகமாக தனித்துத் தெரிந்தது. பொதுவாகவே, நிஜமாகவே சட்டம் படிக்க, வாசிப்பும், நாள்தோறும் நாட்டு நடப்பைக் கவனிக்கும் ஆர்வமும், சமூக அக்கறையும், சார்பில்லாப் பார்வையும் அவசியம்.

அதை அடிக்கோடிட்டுக் காட்டும்படி அமைந்தது பேசியவர்களின் உரை. குறிப்பாக, G.V. செல்வம் அவர்களின் பேச்சின் எளிமை, வலிமையான வாழ்வியல் உதாரணங்களைக் கொண்டிருந்தது. P.H. அரவிந்த் பாண்டியன் அவர்களின் பேச்சில் நகைச்சுவையும், ஆழமும் நிரம்பியிருந்தது. இறுக்கமாக இல்லாமல், ஐந்து வருடங்கள் கலை, விளையாட்டு போன்றவற்றிலும் ஈடுபட்டுப் படிப்பது நல்லது என்று உற்சாகப்படுத்தினார்.

2025061808500715.jpeg

நிறைவாகப் பேசிய உயர்நீதிமன்ற நீதியரசர் A.D. ஜெகதீஷ் சந்திரா” சிறுவயதில் தனக்கு முன்னோடிகளாக விளங்கிய ஜி.ஆர். எட்மண்ட், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் ஆளுமைப் பண்புகளச் சிலாகித்துவிட்டு, “ பள்ளிக் கல்விக்குப் பிறகு என்ன படிக்கவேண்டும் என்ற குழப்பமில்லாமல் சட்டம் படிக்க விரும்பியதைப் பாராட்டுகிறேன். சட்டக்கல்வி வெறும் சம்பாத்தியக் கல்வியல்ல; மனித வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவல்ல அரிதான கல்வி. டாக்டர் அம்பேத்கார் சொன்னதுபோல் சட்டம், சமூக மாற்றத்தைக் கொண்டு வரும் கருவி. நீங்கள் வாங்கும் பட்டம், நீதியை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், பலரது வாழ்வை உயர்த்தவும் உதவட்டும். உங்கள் பயணம் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் மகிழ்ச்சி தரும்படி அர்த்தமுள்ளதாக அமையட்டும்.” என்று வாழ்த்தி நிறைவுசெய்தபோது, மாணவர்களும் மாணவிகளும் முகம் மலர்ந்து, நிமிர்ந்து அமர்ந்து கைத்தட்டினார்கள்.

2025061808504179.jpeg

உள்ளே மாணவப் பயிர்களுக்குத் தன் பேச்சால் உரமூட்டிய நீதியரசர் A.D. ஜெகதீஷ் சந்திரா, வெளியே விழா அரங்க வாசலில் புது மரக்கன்று ஊன்றி, தன் கரங்களால் நீர் ஊற்றினார்.