மருத்துவர் ஆகும் கனவில் நீட் எழுதி தோல்வியுற்ற மங்களூரை சேர்ந்த ரிதுபர்ணா என்ற மாணவி பொறியியல் துறையில் படித்து இன்று ரூ72 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேரவிருக்கிறார்.
தன் தந்தையின் யோசனைபடி சாயாதிரி பொறியியல் கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் & ஆட்டோமேஷன் துறையை தேர்ந்தெடுத்தார்.
மருத்துவம் கிடைக்கவில்லை என ஆரம்பத்தில் மனம் தளர்ந்தாலும் புதிய துறையை தேர்ந்தெடுத்தப்பின் அதில் மிகுந்த ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தார்.
முதல் வருடத்தில் புதிதாக அறுவடை மற்றும் மருந்து தெளிப்பான் கருவியை கண்டுபிடித்து கோவாவில் சர்வதேச புதுகண்டுப்பிடிப்பாளர்கள் மாநாட்டில் தங்கப்பதக்கம் வாங்கினார்.
மங்களூர் மாநகர கார்ப்பரேஷனுக்காக குப்பைக்கழிவுகளை அகற்றுவதற்கு ஒரு மொபைல்ஆப் கண்டறிந்து அதற்கான பாராட்டை பெற்றார்.
கல்லூரியில் படிக்கும் போது தனது தொழிற்பயிற்சிக்காக மெர்சிடஸ், ரோல்ஸ்ராய்ஸ், ஃபெராரி நிறுவனங்களில் விண்ணப்பித்தார்.
3 மாதங்கள் கழித்து ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்து, அங்கே தொழிற்பயிற்சியாளராக சேர்ந்தார். ஆரம்பத்தில் இந்த பயிற்சி மிகுந்த சவாலாக இருந்தது.
ஆனால் அதற்குப்பிறகு வேலையை நன்கு புரிந்துக்கொண்டு சவாலாக இருந்ததை சாதனையாக மாற்றிக்கொண்டார்.
ரிதுபர்ணாவின் தொழில்நுட்ப அறிவையும் அவரது உழைப்பையும் கண்ட ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் ரூ72 லட்சம் வருட சம்பளத்திற்கு பணி நியமனக் கடிதம் வழங்கியுள்ளது.
இன்னும் சில மாதங்களில் ரிதுபர்ணா படிப்பை முடித்தவுடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் ஏரோஸ்பேஸ் துறையில் ஜெட் இன்ஜின் உற்பத்தி பகுதியில் வேலைக்கு சேர்ந்துவிடுவார்.
ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்திலேயே ஜெட் உற்பத்தி துறையில் மிக இளம் வயதில் சேர்ந்த பெண் என்கிற சாதனையை 20 வயது ரிதுபர்ணா படைத்திருக்கிறார்.
“செய்யும் வேலையில் ஆர்வமும், 200% கடின உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயம் “ என்கிறார் ரிதுபர்ணா.
ரிதுபர்ணாவின் விஷயத்தில் கடவுள் ஒரு வாசலை மூடினால் மறு வாசலை திறந்துவைப்பார் என்று சொல்வது சரியாக இருக்காது.
ஏனெனில் இந்தியா முழுவதும் ஆங்காங்கே நீட் தேர்வில் நடக்கும் தகிடுதத்தங்கள், மாணவர்களின் தற்கொலைகள், நீட்டில் வெற்றிப்பெற்றாலும் படித்து வெளியே வரும் மருத்துவர்களுக்கு சில ஆயிரங்களில் சொற்ப சம்பளம், உயர்படிப்புக்கு மீண்டும் நீட் தேர்வு, கடுமையான போட்டிகள், நேரங்காலம் இல்லாத பணி என பல கஷ்டங்கள் கொண்டு மருத்துவப்படிப்பும், மருத்துவர் வேலையும் ஒரு சிக்கலான நிலையாக உள்ளது.
ரிதுபர்ணாவுக்கு மருத்துவம் கிடைக்காமல் போய், பின் ரோபாட்டிக்ஸில் சாதித்தது உண்மையில் கடவுள் அவர் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படுவதை தடுத்து, வளமான எதிர்கால பாதையை காண்பித்திருக்கிறார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
Leave a comment
Upload