பீஷ்மர் (பிரபாஸன்)
முன்னரே கண்டபடி எட்டாம் வசுவான பிரபாசன் கங்கையின் மைந்தனாக பிறந்து, கங்கையால் வளர்க்கப்பட்டு இளவரசனாக சந்தனுவை அடைந்தான். வசிஷ்டர் சாபத்தின் படியே பெண் இன்பத்தை துறந்து சந்தனுவின் மகனான பீஷ்மர் தேவ விரதன் ஆனான்.
களவாடும் விருப்பத்தால் பெற்ற சாபத்தின்படி சந்ததியின்றி திகழ்ந்தான். வசிஷ்டரிடமே வேதம் பயின்று சாத்திரங்களில் வல்லவன் ஆனான்; புகழ் பெற்றான்.
தான் செய்த சத்தியத்தின்படி சத்யவதியின் வம்சத்திற்காக தன்னை அர்ப்பணித்தார். அவரே காசி ராஜன் மகள்களின் சுயம்வரத்தில் பங்கேற்றார். மன்னர்களின் நகைப்புக்கும் (மன்னன் சால்வனை தோற்கடித்ததோடு அம்பையை மணக்க மறுத்து) அரசகுமாரி அம்பையின் கோபத்துக்கும் ஆளானார். ஆகவே பழியும் சிகண்டியாக வடிவெடுத்தது.
தேவர்களிடம் பயிற்சி பெற்றிருந்தும் அவர் அரசகுமாரர்களை ராஜ பரிபாலனம் செய்ய தகுதியானவர்களாக ஆக்க வில்லை; திருதிராஷ்ட்ரனும் துரியோதனனும் சிறந்த ஆட்சி புரிய முடியவில்லை.
கௌரவ அணிக்கு தலைமை ஏற்று 10 நாட்கள் வழி நடத்தினார். ஐந்தாம் நாள் துரியோதனிடம் "என்னால் இயன்றவரை போரிடுவேன்" என்றார். ஒன்பதாம் நாள் பீஷ்மரை வணங்கிய அர்ஜுனனிடம் தன்னை வெல்ல வழியும் சொன்னார்;அவ்வாறே அடுத்த நாள் வீழ்ந்தார்.
மகாபாரத யுத்தத்திற்கு பின் தருமனுக்கு உபதேசம் செய்தார். எது நல்லாட்சி என்றும் மன்னன் கடைபிடிக்க வேண்டிய 31 குணங்களையும் தருமனுக்கு உபதேசித்தார்.
குறளும் பொருளும்
பிறர் பொருளை வஞ்சித்து களவாடுவோம் என்று நினைப்பது கூட தீமையானது.
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல் 282
திருடர்கள் இங்கேயே பூவுலகில் சாவார்கள்; திருடாதவர்கள் சொர்க்கம் போவார்கள்.
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தேள் உலகு 290
களவாடும் விருப்பம் அதன் விளைவு வரும்போது மாளாத்துன்பம் தரும்.
களவின் கண் கன்றிய காதல் விளைவின் கண்
வீயா விழுமம் தரும் 284
எப்போதும் தீராத ஆசையை நீக்கி விட்டால், மாறாத பேரின்பம் கிடைக்கும்.
ஆரா இயற்கை அவா நீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும் 370
புகழில்லாமல் வாழ்வது வாழ்க்கை அல்ல; பழி இல்லாமல் வாழ்வதே வாழ்க்கை.
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர் 240
ஒருவன் ஒரு காரியத்துக்கு உரியவனா என்று தெரிந்த பின் அவனை அதற்கு தகுதியானவனாகச் செய்ய வேண்டும்.
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரியனாகச் செயல் 518
Leave a comment
Upload