தொடர்கள்
பொது
கீழடி நாகரீகம் மறைக்கப்படுகிறது(?!) அமர்நாத்தின் கோபம்-தில்லைக்கரசிசம்பத்

20250618202225165.jpeg

தமிழகத்தின் கீழடி ஆராய்ச்சி முடிவுகள் பற்றிய மத்தியரசின் தொடர்ந்த தயக்கம், அறிக்கைகள் வெளியிடப்படாமல் தடுப்பது, கீழடி காலத்தை குறைக்கும் முயற்சிகள் என பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

கீழடி ஆராய்ச்சியில் இந்தியதொல்துறை இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணா தயாரித்த அறிக்கையை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை.

அமர்நாத்தின் அறிக்கையில் கீழடியின் காலத்தை மாற்றுமாறு நெருக்கடிக்கொடுக்கப்பட்டது.

20250618202422307.jpeg

இது குறித்து சமீபத்தில் அமர்நாத் “அறிக்கையில் மாற்றங்கள் செய்வது குற்றமும் ஒழுக்கவிரோதமும் ஆகும். அப்படி செய்தால் நான் குற்றவாளி ஆகிவிடுவேன்!” என கூறியிருந்தார்.

கீழடியின் தகவல்கள் வெளியானால் மத்திய கல்விக்கட்டமைப்பிலும், தேசிய பாடத்திட்டங்களிலும் மாற்றங்களை உண்டாக்கும் அளவுக்கு வரலாற்று உண்மைகளை அது கொண்டிருக்கிறது என கூறப்படுகிறது.

அதிலும் தமிழகத்தின் சங்ககாலம் என்பது பொய்யான கதையல்ல , அது உண்மையான வரலாற்று தகவல்கள் என்பதை அமர்நாத் உறுதிப்படுத்துகிறார்.

சிந்துசமவெளி நாகரீகம், வேத காலம், மவுரிய, ஹர்ஷவர்தன் காலத்தையே பேசிவரும் மத்தியரசு சிந்துசமவெளிக்கு சமமான சங்ககால வரலாற்றை ஏன் பேசமறுக்கிறது என கேள்வி எழுப்புகிறார்.

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துகள், “தமிழி” (Tamil-Brahmi) வடஇந்திய ப்ராமியிலிருந்து கொண்டு வரப்பட்டவையல்ல, தமிழகத்திலேயே உருவானவை என ஐராவதம் மகாதேவன் , நீலகண்டசாஸ்திரி போன்ற மொழியியலாளர்கள் கருதுகிறார்கள்.

2019ல் கீழடி அகழாய்வில் 72க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துக்கள் மற்றும் சிறு குறியீடு வரிசைகள் (graffiti marks) கொண்ட பானை ஓடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன.

தமிழ்நாட்டின் தொல்லியல்துறையின் சமீப ஆய்வு, 140தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட 15,184 குறியீட்டுச்சின்னங்களில் 90%சிந்து எழுத்து குறியீடுகளோடு ஒத்துப்போகும் என கண்டறிந்தது.

இது “தமிழி” எவ்வளவு பழமை வாய்ந்தது என்பதை குறிக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களின்அடிப்படையில் சங்ககாலம் கிமு300 முதல் கிபி300 வரை என்றுதான் இதுவரை கூறிவந்தனர்.

தொல்லியல் அடிப்படையில் (கீழடி,ஆதிச்சநல்லூர், அரிக்காமேடு அகழ்வுகள்)மூலம் சங்ககாலம் என்பது கிமு600–கிமு100 வரை தொடர்ந்த காலக்கட்டமாகும் .
அதாவது கீழடி நகரநாகரிகம் சங்ககாலத்திற்கு முன் நிலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

அடுத்த அதிமுக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால் உலகளவில் மெசப்படோமியா, ஈரான், துருக்கி பகுதிகளில்(கிமு 1200–1000 ) தான் முதன்முதலில் இரும்பு பயன்பாட்டுக்கு வந்தது என்பதை உடைத்து பழந்தமிழகம் தான் உலகில் இரும்பை முதன்முதலில் பிரித்தெடுத்தார்கள் என்ற தகவல் உலக வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரியலூர் திருச்சி (கிமு 1500–1300) ஆதிச்சநல்லூர்(கிமு 2613), சிவகலை(கிமு3345)புகலூர், மற்றும் கீழடி சுற்றியுள்ள பகுதிகளில் இரும்பு உருக்கல் குழாய்கள், உலோக உருக்க பட்டறைகள் , இரும்புச்சூளைகள், இரும்பாயுதங்கள் போன்றவை கண்டறியப்பட்டதன் மூலம் தமிழகத்தின் இரும்புக்காலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

இதனை பிரபல ஆய்வகங்கள் (Beta Analytic Testing Laboratory, Florida, USA, International Radiocarbon Dating Laboratories, Chicago, USA ) மட்டுமில்லாமல் சில பிரெஞ்சு, ஜப்பானிய, மற்றும் ஆஸ்திரேலிய கல்வி நிறுவன ஆய்வுகூடங்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக மத்தியரசின் தொல்லியல்துறை இந்த ஆதாரங்களை அங்கீகரிக்கவில்லை. அதன் மதிப்பீட்டையும் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த கீழடி ஆய்வுமுடிவுகளின்படி “தமிழர்கள் கிமு8ஆம் நூற்றாண்டிலேயே ஆழமான அறிவுசார் பண்பாட்டைப் பெற்று இருந்தனர். நகரஅமைப்பு, கழிவுநீர் வடிகால், முழுமையான இரும்புஉபகரணங்கள், எழுத்து, தையல், உலோகவேலை, தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தி, வர்த்தகம் என அனைத்தும் வளர்ந்த நிலையிலிருந்தன. தமிழர்கள் வேறு எந்த இனத்தின் ஆதிக்கத்திலுமில்லாமல் வளர்ந்துள்ளனர். தமிழகம் ஒரு தன்னிறைவு வாய்ந்த நாகரிகம்.”என்கிறார் அமர்நாத்.

உலகில் முதன்முதலில் தமிழரினம் இரும்பை கண்டுபிடித்தது என்றால், அந்த சமூகம் அதற்கேற்ப தொழில்நுட்ப, சமூக, மற்றும் கலாச்சாரவிழுமங்களை கொண்டிருந்தது நிரூபணம் ஆகிறது.

சும்மா போகிறப்போக்கில் ஆய்வுகளை சரிவர நடத்தாமலேயே வாய்க்கு வந்ததை அடித்துவிடுவதை போலல்ல இந்த கீழடி ஆய்வு முடிவுகள்.

ரேடியோகார்பன் டேட்டிங்,வெப்ப ஒளிர்வுகாலக்கணிப்பு(Thermoluminescence (TL Dating), தொல்லியல் அடுக்கியல் விஞ்ஞானம் (Stratigraphy) என்ற அத்தனை தொழில்நுட்ப ஆய்வுகள் கொண்டு, வெளிநாட்டு அறிவியல்ஆய்வு நிறுவனங்களின் துணையோடு அறிவியல்ப்பூர்வமாக கீழடியில் ஆய்வுகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தனை சான்றுகள் இருந்தும் ஏன் இதை ஏற்க மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை. 2015ல் கீழடிஅகழாய்வை ஆரம்பத்தில் இந்தியதொல்துறைஅமைப்பு( ASI )தான் மேற்கொண்டது.

திடீரென எந்த காரணத்தினாலோ 2018ல் மத்தியரசு பின்வாங்கி, அதனை தமிழ்நாட்டரசின் தொல்லியல்துறைக்கு மாற்றியது.

மத்தியரசு தனது தயக்கத்தை உதறி தள்ளிவிட்டு கீழடி பெருமையை இந்தியாவின் பெருமையாக அங்கீகரிக்கவேண்டும்.

நம் வரலாற்றுப்பெருமையை நாமே அழிப்பது நியாயமல்ல. அமர்நாத் கூறுவதுபோல அது வரலாற்றின் மிகப்பெரிய துரோகமாகிவிடும்.