நிருபர்கள் முதல்வரை பேட்டிக் காண்பது வழக்கம். ஆனால் வினோதமாக அன்று ராஜஸ்தான் முதல்வர் S.C.மாத்தூர் அவனை பேட்டிக் கண்டார். ‘புதிதாக கட்சி தொடங்கிய NTR ஜெயிப்பாரா?’ என்று கேட்டார் அவர்.
‘நிச்சயம் ஜெயிப்பார்’ என்று அவன் சொன்னான். அதற்கு அவன் குறிப்பிட்ட காரணங்கள், ‘கடவுள் வேஷங்களில் நடித்து வந்த என்.டி.ராமராவ், தேவுடுவாகவே கருதப்பட்டார். ஆந்திர மக்களுக்கு சினிமா ரசனையும் அதிகம், பக்தியும் அதிகம். இரண்டும் என்.டி.ஆருக்கு சாதகமான அம்சங்கள்’ என்றான்.
‘ஜெயிக்க அது மட்டுமே போதுமா?’ என்று மாத்தூர் கேட்டார். அவன் சொன்னான்: ‘‘பிரதமர் ராஜீவ்காந்தி சமீபத்தில் ஆந்திர முதல்வர் அஞ்சையாவை பொதுவெளியில் கடிந்து கொண்டு அவமானப்படுத்தினார். ஒரு முதல்வரை அவமானப்படுத்துவது, அந்த மாநிலத்தையே அவமானப்படுத்துவது என்று எடுத்துக் கொண்டார் NTR. இதையொட்டி என்.டி.ஆர். ஆந்திர மக்களின் கௌரவத்தை மீட்பதாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். எனவே அவர்தான் ஜெயிப்பார்’ என்றான். அப்படித்தான் நடந்தது.
அவன் சொன்னது போலவே என்.டி.ஆர். ஆட்சியமைத்தார். அவரது அதிர்ஷ்டம் சில காலம் விடுமுறை எடுத்துக் கொண்டது. அவர் அமெரிக்கா சென்றிருந்த போது, காங்கிரஸ் கட்சி தகிடு தத்தம் செய்து, பாஸ்கர்ராவ் என்பவரை முதல்வர் ஆக்கியது. முறைகேடுகளுக்கு உதவியவர் அப்போதைய கவர்னர் ராம்லால். விடுவாரா என்டிஆர். எம்எல்.ஏக்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று ஜனாதிபதி ஜெயில்சிங் முன்பு நிறுத்தி, மறுபடியும் முதல்வர் ஆனார். அந்த சந்தர்ப்பத்தில் ‘கவர்னர்கள் எல்லாம் வில்லன்கள்.’ என்று ஒரு அமர வாசகத்தைச் சொன்னார் என்.டி.ஆர்.
யாராவது கவர்னரிடம் இதுபற்றி கேட்டுவிட வேண்டும் என்று நினைத்து அவன் துடித்தபோது, சிக்கியவர் புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கோனா பிரபாகர் ராவ் என்கிற ஆந்திரபிரதேச அரசியல்வாதி. அவரைப் பேட்டி கண்டான் இப்படி:
‘‘ஐயா தாங்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்ததாகக் கேள்விப்பட்டேனே?’’
‘‘ஆமாம் ஆமாம், சினிமா தான் முதலில், பிறகுதான் அரசியல் நுழைவு.’’
‘‘அப்படியானால் என்.டி.ஆருக்கு முன்னதாக நீங்கள் அரசியலுக்கு வந்தீர்கள் என்று சொல்லலாமா?’’
‘‘என்.டி.ஆர் இப்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார், நான் எப்போதோ வந்துவிட்டேன்.’’
‘‘அப்படியானால் என்.டி.ஆர்.ருக்கு வெகுகாலத்திற்கு முன்பே நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டீர்கள் என்று சொல்லலாமா?’’
‘‘ஆமாம், அப்படித்தான்.’’
‘‘என்.டி.ஆர்.ருக்கு முன்னதாகவே சினிமாவிலும் நடித்திருக்கிறீர்கள் அல்லவா?’’
‘‘ஆமாம் ஆமாம்’’.
‘‘சினிமாவில் என்ன வேஷம் உங்களுக்கு?’’
‘‘வில்லன் வேஷம்’’.
‘‘அது சரிதான், அந்த வேஷத்திற்கு தகுந்த பர்சனாலிட்டி உங்களிடம் இருக்கிறது’’.
‘‘அதுதான் என் பலம்’’.
‘‘சினிமாவில என்.டி.ஆர். ஹீரோ, நீங்கள் வில்லன் அப்படித்தானே?’’
‘‘இப்போ என்.டி.ஆர். முதல்வரா இருக்காரு, நீங்கள் கவர்னரா இருக்கீங்க-’’.
‘‘அந்த வரிசை சரிதான், அதுதானே வரலாறு’’.
‘‘அது சரி கவர்னரெல்லாம் வில்லன்கள் என்று என்.டி.ஆர் சொல்கிறாரே, அது பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?’’
அதுவரை எல்லாக் கேள்விகளுக்கும் மகிழ்ச்சியுடன் பதில் சொல்லிக்கொண்டு வந்த கோனா பிரபாகர் ராவ் இந்த கேள்விக்குப் பதில் சொல்லத் தடுமாறினார். அவர் முகத்தைப் பார்த்தாலே கேள்வி அவரை ரொம்பவும் சங்கடப்படுத்தியது என்று தெரிந்தது.
நெய்வேலியில் ஒரு சின்ன அறையில் என்.எல்.சி இயக்குனர்கள் நான்கு, ஐந்து பேர்கள் உடன் இருக்க அந்த பேட்டி நடந்தது. நிருபரின் கேள்வியும், கோனா பிரபாகர்ராவின் தவிப்பும் அந்த இயக்குனர்களை வாய்விட்டு சிரிக்கத் தூண்டியது. ஆனால் மரியாதை காரணமாக சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள்.
கவர்னருக்கு விடை கொடுத்த பிறகு அந்த இயக்குனர்கள் ‘‘எத்தனை நாட்களாக இந்த கேள்வி கேட்க திட்டமிட்டாய்’’ என்றார்கள்.
அவன் சொன்னான், ‘திட்டம் எதுவும் இல்லை. கவர்னர்கள் எல்லாம் வில்லன்கள் என்ற என்.டி.ஆரின் வாசகம் என்னை கேள்வி கேட்கத் தூண்டியது’.
அதே நெய்வேலியில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் அவனிடம் ஒரு பேட்டியில் அகப்பட்டுக் கொண்டார். அந்த சமயத்தில் அவர் விபசார தடைச்சட்டத்தில் பெண்கள் மட்டுமின்றி இனி ஆண்களும் கைது செய்யப்படுவார்கள் என்ற சட்ட திருத்தத்தை ஒரு மசோதாவாக முன்வைக்க இருந்தார். அதைக் குறிப்பிட்டு கேட்டபோது அவர், ‘‘ஆண்களும் தப்பு செய்கிறார்களே?’ என்றார். பெண்ணும் அதற்கு உடந்தைதானே என்ற அர்த்தத்தில் அவன் ஆங்கிலத்தில் ஒரு கேள்வியை வீசினான்:
““Afterall woman is also a party to it.”
இதைக் கேட்ட எம்.ஜி.ஆர், ‘‘இதில் பார்ட்டி வித்தியாசமெல்லாம் பார்க்ககூடாதுங்க. எல்லா பார்டியும் ஒண்ணா சேர்ந்து மசோதாவை நிறைவேத்தணும்’’ என்றார்.
கேள்வி கேட்கப்பட்ட விதத்தில் பார்ட்டி என்பது உடந்தை என்ற அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் கட்சி என்று எம்.ஜி.ஆர். பேசியது அவரைச் சுற்றி இருந்த கலெக்டர், எஸ்.பி., என்.எல்.சி டைரக்டர்கள் ஆகியோரை சிரிக்கத் தூண்டியது. ஆனாலும் மரியாதை காரணமாக அவர்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள்.
எம்.ஜி.ஆர் சென்ற பிறகு, ‘‘ஏனப்பா, போயும் போயும் அவர்கிட்ட இங்கிலீஷ்ல கேள்வி கேட்டியே? பேசாம தமிழ்ல கேள்வியை கேட்கக் கூடாதா?’’ அவன் சொன்னான், ஆங்கிலத்தில் கேட்க வேண்டும் என்று திட்டமிட்டு கேட்கவில்லை, அந்த சந்தர்ப்பத்தில் அந்த வார்த்தைகள் வந்துவிட்டன.
அந்த பேட்டியின் போது உடனிருந்த கலைமணி என்கிற எம்.எல்.ஏ அடுத்த சில மாதங்களில் மந்திரியானார். அவர் மந்திரி ஆன அதே தினத்தில் அவரைச் சந்தித்து, வாழ்த்து தெரிவிக்க விரும்பிய தினமலர் நிருபர் குருமணி அவனையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். இருவரும் கலைமணியைச் சந்தித்து வாழ்த்து சொன்னார்கள். விடைபெறும் நேரத்தில் அவர் குருமணியை தனியாக அழைத்தார்.
அவன் நாகரிகம் கருதி வெளியே நின்றிருந்தான். குருமணி வந்ததும் ‘மந்திரி என்ன சொன்னார்?’ என்று கேட்டான். அவர் சொன்னார், “உங்களைப் பற்றித்தான், நாளை சிதம்பரத்தில் நடைபெற இருக்கும் நிருபர் சந்திப்பில் ஹிண்டு நிருபர் கேள்விகள் எதுவும் கேட்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் புதுசு, எங்கள் தலைவரையே அவர் கேள்விகளால் துளைப்பார், அவர்கிட்ட கொஞ்சம் சொல்லி வையுங்க’’ புது மந்திரியின் பயம், அவன் பேனாவிற்கு கிடைத்த வெற்றி. அவன் பேனா ஓர் கூர் ஆயுதம்.
Leave a comment
Upload