தொடர்கள்
அழகு
செஞ்சிக் கோட்டை - மாலா ஶ்ரீ

20250619060313787.jpeg

உலகமெங்கும் பல்வேறு புராதன இடங்களை ஐ.நா-வின் யுனெஸ்கோ குழு நேரில் ஆய்வு செய்து, அவற்றில் ஒன்றை ஆண்டுதோறும் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், மால்லபுரம் புராதன சிற்பங்கள், நீலகிரி மலை ரயில், கும்பகோணம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் உள்பட பல்வேறு இடங்கள் ஏற்கெனவே புராதன சின்னங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

20250619060438788.jpeg

கி.பி.1678 முதல் 1697-ம் ஆண்டுவரை செஞ்சிக் கோட்டையை தலைமையிடமாக மராட்டியர்கள் ஆண்டு வந்தனர். அதனால் இக்கோட்டையும் யுனெஸ்கோவின் பிரதான பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு, செப்டம்பர் 27-ம் தேதி செஞ்சிக் கோட்டையின் மலையுச்சி வரை யுனெஸ்கோவின் இந்திய பிரதிநிதி ஹவாஜங் லீ ஜெகாம்ஸ் தலைமையிலான தேர்வு குழு ஆய்வு செய்தது. இந்த ஆய்வில், கோட்டையில் உள்ள கல்யாண மஹால், யானை குளம், தர்பார் மண்டபம், நெற்களஞ்சியம், கோட்டை பாலம், மலைமீதுள்ள மற்றொரு நெற்களஞ்சியம், பீரங்கிகள் போன்ற பல்வேறு வரலாற்று சின்னங்களை யுனெஸ்கோ குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

இத்தேர்வு குழுவின் பரிந்துரையை ஏற்று, மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி ஆண்ட 11 கோட்டைகள் மற்றும் தமிழகத்தின் செஞ்சிக் கோட்டை ஆகியவற்றை கடந்த சில நாட்களுக்கு உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

20250619060534236.jpeg

இதுகுறித்து விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில், ‘‘கி.பி. 13-ம் நூற்றாண்டு முதல் செஞ்சிக் கோட்டை பல்வேறு ஆட்சியாளர்கள் மூலம் மாற்றங்களை சந்தித்து வருகிறது. கடந்தகால வரலாற்றில், தென்னிந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைகளில் ஒன்றாக திகழ்கிறது. அன்றைய காலத்தில் மராட்டிய மன்னர் சிவாஜியின் ஆளுகையின்கீழ் ராணுவ கேந்திரமான செஞ்சிக் கோட்டை, தற்போது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது!’’ என்று தெரிவித்தார்.