தொடர்கள்
பொது
"திருக்குறள் வேதங்களின் காப்பியா? -" - முனைவர். இரா.நாகசாமி விளக்கம்

கட்டுரை, படங்கள், வீடியோ - முத்ரா

20180425182601181.png

முனைவர் இரா. நாகசாமி தொல்லியல் துறையில் முதல் இயக்குநராக 1966 முதல்1988 வரை பணியாற்றியவர். காஞ்சிபுரம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர். யுனெஸ்கோவால் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இனங்காணுவதிலும், பாதுகாப்பதிலும், இந்திய அரசாங்கத்தின் ஆலோசகராகவும் பணிபுரிந்தவர். இத்துறையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கல்வெட்டுகள் இவரது தலைமையில்தான் கண்டறியப்பட்டிருக்கும். இவரது கட்டுரைகள் உலகின் பிரதான மொழிகள் பலவற்றிலும் யுனெஸ்கோவால் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய அரசு சமீபத்தில் இவருக்கு பத்மபூஷன்விருது வழங்கி கௌரவித்தது. உடம்புக்குத்தான் முதுமையே தவிர மனதுக்கில்லை என்பதை இவரைப் பார்த்து நாம் அறிந்து கொள்ளலாம்.

விகடகவிக்காக நேர்காணல் வேண்டும் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது, ‘இன்னிக்கு ஒரு நாலு மணிக்கு வாங்களேன்என்றார். மூன்று மணிக்கெல்லாம் கிளம்பி, பெசண்ட் நகரில் உள்ள அவரது வீட்டை மூன்றேமுக்காலுக்கெல்லாம் அடைந்தேன். கோடை வெயில் மண்டையை பிளந்தது.. ஒரு வேளை நாகசாமி சார் தூங்கிக் கொண்டிருக்கலாம். என்று நினைத்து பதினைந்து நிமிடங்கள் காத்திருப்புக்குப் பின் அழைப்பு மணியை அழுத்தியபோது அடுத்த விநாடியே கதவைத் திறந்து புன்னகையுடன் நம்மை வரவேற்றார். நெற்றி நிறைய நீறு பூசி பளிச்சென்றிருந்தார்.

20180425183137425.png

சொல்லுங்க எதுக்காக இப்ப பேட்டி?

ஐயா, நீங்கள் சமீபத்தில் எழுதின திருக்குறள்புத்தகத்தில் திருக்குறள் என்பது வேதங்களின் சாரம் என்று குறிப்பிடுகிறீர்கள். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த நூலை எழுதினீர்கள் என்று விகடகவி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இயலுமா? என்று ஒரு கேள்விதான் கேட்டேன். அதற்கான பதிலை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நமக்காக அளித்தார். அந்த பதிலின் சாரம்

நான் சில வருடங்களுக்கு முன் படித்த தமிழ்என்ற ஆங்கிலப் புத்தகம்.(Tamil – David Shulman) டேவிட் ஷூல்மேன் எழுதியது. ஆக்ஸ்போர்டு நிறுவனம் வெளியிட்ட நூல். அதில் திருக்குறளானது தனி ஒரு புலவரால் எழுதப்பட்டது அல்ல. ஓராயிரம் வருடங்களாக பலரால் ஆங்காங்கே எழுதப்பட்டு இருந்த செய்யுட்களை எல்லாம் தொகுத்துக் கொடுக்கப்பட்டது என்றே நான் நம்புகின்றேன் என்று அவர் குறிப்பிடுகின்றார். இந்தப் புத்தத்தை எழுதியவர் தமிழ் விரோதி இல்லை. அவர் ஒரு மொழியியல் ஆர்வத்தில் இந்த நூலை எழுதியிருக்கிறார். அவரது அந்தக் கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதற்கு எதிர்வினையாகத்தான் இந்த திருக்குறள்என்ற புத்தகத்தை எழுதினேன். தொடர்ந்து திருக்குறளை ஆழ்ந்து படித்து ஆராய்ந்தேன்.

கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன் திருக்குறள் பற்றிய இரண்டு ஆங்கில நூல்களை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆங்கிலேயப் பாதிரியாரான, ‘லஜாரஸ்என்பவர் 1855-ல் திருக்குறள் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் எழுதியிருக்கிறார். அதில் திருவள்ளுவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு நமக்கு தெளிவாக கிடைக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். அத்துடன் திருக்குறளின் செய்யுட்களுக்கு மிகச்சரியான ஆங்கில விளக்கத்தை அவர் தந்திருக்கிறார். மற்றொரு நூலாசிரியர் ஜி.யூ. போப். இவரும் பாதிரியார். இவர் தன்னுடைய நூலை 1856-ல் வெளியிட்டு இருக்கிறார். இவர் எழுதிய நூலை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் இந்த நூலைப் பற்றிய முன்னுரையில், ‘இதை நான் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்கவில்லை. அதன் கருத்தை எடுத்துக்கொண்டு என் போக்கில் எழுதியிருக்கிறேன்என்று விளக்குகிறார்.

போப் இங்கே அதிக நாட்கள் இருந்தவர். தமிழை நன்கு கற்றவர். அவர் தன் பணிகளை முடித்துக்கொண்டு லண்டன் சென்று 1906-ல் காலமானார். அப்பொழுது அவர் சார்ந்த கிருஸ்துவ மெஷினெரிகளுக்குச் சொன்ன விஷயம் என்னவென்றால், ‘நாம் வெளிநாடுகளுக்கு செல்வது எதற்காக? அந்த ஊர்களில் இருப்பவர்களை கிருத்துவ சமயத்துக்கு மதம் மாற்றம் செய்யத்தான் செல்கிறோம். நாம் முதல்லே அங்குள்ள மொழிகளை நன்கு தெரிந்து கொண்டு அதை வன்மையாகத் தாக்கி நம்முடைய கிருத்துவ சமயத்தை அங்கே போதிக்க வேண்டும். இதற்காகத்தான் நாம் அங்கே போய் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாதுஎன்று கூறியிருக்கிறார். இது அவரே சொன்னது. இதை சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் பதிப்பித்து இருக்கிறார்கள். ஆக அவர் தமிழ் படிச்சது எதற்காக என்றால் அவர் மதத்தை பரப்புவதற்காகத்தான். இதை இங்குள்ள அநேகர்கள் படித்து இருக்க மாட்டார்கள். போப் எழுதிய நூலில், வள்ளுவரைப் பற்றிச் சொல்லும் போது அவர் கிருத்துவ மதத்தைச் சார்ந்தவர்(!) என்று சொல்கிறார்.

இதை அவர் எப்படிச் சொல்கிறார்? என்றால் கற்பனையான யூகத்தின் அடிப்படையில் சொல்கிறேன்என்று எழுதியிருக்கிறார். திருக்குறளை திருவள்ளுவர் பைபிளின் சாரத்தில் இருந்துதான் எழுதியிருக்கிறார். அந்தக் காலத்தில்(முதல் நூற்றாண்டு) இலங்கையைச் சேர்ந்த வியாபாரி ஏலேலசிங்கன்என்பவன் சென்னை மயிலாப்பூருக்கு வந்திருந்தான். அவன் ஒரு கிருத்துவன். அவனை திருவள்ளுவர் மயிலாப்பூர் கடற்கரையில் சந்தித்தார். அந்த வியாபாரி பைபிளின் கருத்துக்களை திருவள்ளுவரிடம் சொல்ல, திருவள்ளுவர் அதை செய்யுளாக்கி, திருக்குறளாக வடித்தார் என்று சொல்கிறார். இது வரலாற்றுக்கு ஒப்பக்கூடிய ஒரு கருத்தல்ல. இந்த நூலாசிரியர், ‘வள்ளுவர் கிபி. 9ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்என்று சொல்கிறார். வள்ளுவரின் காலமோ 2000 வருடங்களுக்கு முற்பட்டது. பல ஆய்வுகளுக்குப் பின் இதை அரசே ஒப்புக்கொண்டு வள்ளுவர் ஆண்டு என்றே அறிவித்துள்ளார்கள். ஆக இதை சான்றின் அடிப்படையாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது.


முனைவர் நாகசாமியின் விரிவான வீடியோ பேட்டி இங்கே:


இதை எல்லாம் படித்த நான் திருக்குறளை ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட பத்து உரையாசிரியர்கள் திருக்குறளுக்கு விளக்கமெழுதி இருக்கிறார்கள். இதில் பரிமேலழகர் எழுதிய உரை முக்கியமானது. இவர் பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். இவர் மட்டும் உரையெழுதாவிட்டால் பல குறள்களுக்கு விளக்கமே தெரிந்திருக்காது. அவருடைய உரையையும் ஆழ்ந்து ஆராய்ந்துதான் என்னுடைய நூலை ஆக்கியிருக்கின்றேன்.

திருக்குறளைப் பொறுத்தவரை மூன்று நான்கு கருத்துக்கள் இந்திய நாடு முழுவதும் பரவியிருக்கக்கூடிய அடிப்படையிலேதான் எழுதப்பட்டது என்பதற்கு எந்தவித சந்தேகமும் இல்லை. திருக்குறளானது அறம், பொருள், இன்பம், என்று மூன்று பகுதிகளைக் கொண்டது. இதை அனைத்திந்திய ரீதியில் புருஷார்த்தம்என்று சொல்வார்கள். இதன் பொருள் என்னவென்றால், தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று நான்கு பகுதிகள். இதையே வேதங்களும் கூறுகின்றன. வேதத்தை அறத்திலே கொண்டு வந்தவர்கள் தர்ம சாஸ்திரம் எழுதியவர்கள். அவர்கள் வேதத்தைக் காட்டிலும் காலத்தால் பிற்பட்டவர்கள். முதலாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தவர்கள்.

புருஷார்த்தம் என்பது நம் சங்க இலக்கியங்களிலேயே குறிக்கப்பட்டிருக்கின்றது. அரசனானவன், அறத்தையும், பொருளையும், இன்பத்தையும், நாட்டுகின்றான் என்று இரண்டு மூன்று இடங்களில் வருகின்றது. அறம் பொருள் இன்பம் ஆற்றும் பெருமஅப்படின்னு புறநாநூற்றில் பாடல் இருக்கிறது. ஆக சங்க காலத்திலேயே, அறம் பொருள், காமம், இருந்திருக்கின்றன. அறம் என்பது தர்மம், பொருள் என்பது அர்த்தம், காமம் என்பது காமம். ஆக மூன்றும் புருஷார்த்தங்கள். இது அடிப்படைத் தத்துவம், மனித நெறி. ஆக எங்கேயோ இருக்கிற பாட்டுகளை எடுத்து திருக்குறள் எழுதிவிட்டார் என்பது அர்த்தமல்ல. மனிதன் எப்படி நெறியுடன் வாழவேண்டும் என்று வரையறுத்து அதை மிக அழகாக, வலுவாக தமிழிலே எழுதப்பட்டதுதான் திருக்குறள்.

இதே விஷயங்கள் தர்மசாஸ்திரங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சாஸ்திரங்களிலெல்லாம் மிகவும் பழமையானது மனுவினுடைய தர்ம சாஸ்திரம். இந்த மனுவினுடைய தர்மத்தை நம்முடைய கல்வெட்டுகள் எல்லாம் கூறுகின்றன. நம் அரசர்கள் எல்லாம் கூறுகின்றார்கள். பல அரசர்கள், தங்களை மனுவுக்குச் சமமானவன்என்று சொல்லியிருக்கின்றார்கள். பாண்டிப் பெருமன்னன், தன்னை பற்றிச் சொல்லும் பொழுது மனுபவன்அதாவது, அறத்தை நிலை நிறுத்துவதிலே நான் மனுவுக்கு ஒப்பானவன் என்று சொல்கிறார். பல்லவர்கள் தங்களை மனுதர்ஷித மார்க்கத்தில் வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். சோழ மன்னர்கள் அத்தனை பேரும் மனுவையே தங்களின் நீதிக்கு எடுத்துக்காட்டாகக் கொள்வார்கள். மனு நீதிச் சோழன்என்பது இன்றுவரை வழங்கும் வழக்கு. ஊர்ப்புரங்களில் போனால் மனுநீதி சோழனுடைய வரலாறு நாட்டிய நாடகங்களாக இன்றும் நடத்தப்படுவதுண்டு. ஆக மனுவினுடைய தர்மம் நம் தமிழ்நாட்டு மக்களுடன் பின்ணிப் பிணைந்து தொடர்ந்து வருகின்ற ஒரு நெறி.

மனுவினுடைய நூலைப் படித்துப் பார்த்தால், அதிலும் மற்றும் தொல்காப்பியம், சங்க இலக்கியம், பின் வந்த சிலப்பதிகாரம் ஆகிய எல்லாவற்றிலுமே தர்மம், அர்த்தம், காமம் இவற்றிற்க்கு முதலிடம் கொடுத்திருக்கிறார்கள். ஆக இந்த மூன்றுதான் மனித நெறி. இவற்றைத்தான் வள்ளுவர் தமிழில் கட்டமைத்திருக்கிறார் என்பது என்னுடைய கருத்து. இது ஒரு பகுதி.

அடுத்ததாக, மனிதனாகப் பிறந்தவன் முதலில் கல்வி கற்க வேண்டும். முதலில் சொல் - இதுதான் மொழியில் முதல் படி. இந்த சொல்லை நன்கு உச்சரித்துப் பழகவேண்டும். ஒரே வார்த்தையாக இருந்தாலும் உச்சரிக்கும் விதத்தில் கருத்து மாற்றம் வரும். இதைத்தான் அட்சரம்என்று சொல்வார்கள். அட்சர அப்பியாசம்என்று உபநிடதத்திலேயே சொல்வார்கள். இப்பவும் மிகச் சிறிய கிராமங்களில் ஐந்து வயதான குழந்தையை முதல்முதல் படிக்க அனுப்பும்போது அவனுக்கு பட்டு வேட்டி கட்டி, மாலை போட்டு வாத்தியார் வீட்டுக்கு அனுப்பி னா எழுதுப்பா என்று சொல்வார்களே அது அகரம்’ – ‘அகர முதல எழுத்தெல்லாம்என்றால் எழுத்து முழுவதும் அகரம். அதாவது சொல்லை ஒலிக்கும் மரபைக் குறிக்கிறது. மாணவனாகக் கல்வி கற்க துவங்குவது முதல் அத்தியாயம் என்பது தெளிவாகிறது.

இதை அட்சரா- அட்சரம் நேயம்என்கிறார் மனு. எழுத்திலிருந்து அறியாததை அறியக்கூடியது. அதனால் எழுத்திலிருந்து முதல் சூத்திரம் என்கிறார். ஆக, இங்கே முதல்லே அறத்துப்பாலில், இப்போ கடவுள் வாழ்த்துன்னு நாம சொல்கிறோமே, அது என்னைப் பொறுத்தவரை கடவுள் வாழ்த்தாகத் தோன்றவில்லை. மாணவனுக்கு முதல் முதலில் சொல்லைக் கற்றுக்கொடுக்கக் கூடிய சூத்திரம் என்றே எண்ணுகின்றேன்.

அதற்கடுத்து,

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றான் தொழாஅர் எனின்.

இதன் பொருள், நன்கு கற்றறிந்து தெளிந்த ஆசான் உனக்கு குருவானால் தான், நீ கற்கும் கல்வி பயனுள்ளதாக இருக்கும் என்பதே, இதையே மனு பாத ஸ்பர்ஷனைஅதாவது திருவடியைத் தொழுதல்என்று சொல்கிறார். அறத்துப்பாலின் முதல் அத்தியாத்தில் பல இடங்களில் வள்ளுவர் திருவடி, திருவடிஎன்று சொல்லிக்கொண்டே வருகின்றார்.

இரண்டாவது அத்தியாயம் வான் சிறப்பு’ - மழை பெய்தால்தான் அனைத்து உயிர்களுக்கும் உணவு கிடைக்கும். குறிப்பாக மாணவப் பருவத்தில் அந்தக் காலத்திலே மாணவர்கள் பள்ளிக்குச் சென்று படிப்பதில்லை. ஆசானின் வீட்டில் தங்கித்தான் படிப்பதுண்டு. மாணவனானவன், பக்கத்து வீடுகளுக்குச் சென்று உணவை யாசகம் பெற்று ஆசான் வீட்டுக்குக் கொண்டு வந்து தரவேண்டும். இதை, ‘பிக்ஷா வந்தனம்னு சொல்லுவாங்க. ஆக ஆசானுக்கும் மாணவனுக்கும் அதுதான் உணவு. இப்போதும் பக்கத்து நாடுகளான, கம்போடியாவிலும், தாய்லாந்தில் பௌத்தர்கள் மத்தியிலும் இது இன்னும் வழக்கத்தில் உள்ளது. இதைத்தான் வள்ளுவர், ‘அமிழ்துஎன்று குறிப்பிடுகின்றார்.

பொதுவாக தர்ம சாஸ்திரங்களில் எந்த மரபில் வைத்துள்ளார்களோ, அதையேதான் வள்ளுவரும் பின்பற்றியிருக்கிறார். மூன்றாவது, ஒழுக்கம். அதாவது நீத்தார் பெருமை’ – அப்படிங்கிற அதிகாரம். இதிலே நீத்தார் என்பதை சிலர் துறவு என்று தவறுதலாக பொருள் கொள்கின்றார்கள்.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

அதாவது, கல்வி கற்கச்செல்லும் மாணவன், கடுமையான ஒழுக்க நெறிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

நான்காவது, ‘அறம் வலியுறுத்தல்அதாவது தர்மம்’. தர்மம் என்றால் சத்தியம் சொல்ல வேண்டும். தாயைக் கண்போலக் காக்கவேண்டும். அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்னு சொல்வோமே அதுதான் அறன் வலியுறுத்தல். ஆக திருக்குறளின் முதல் நான்கு அத்தியாயங்கள், மாணவனுடைய வாழ்க்கை முறையை, படிப்பு முறையை, ஒழுக்கத்தை, ஆசானிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய விதியை, அறத்தின் பால் பட்டு ஒழுக்கத்தை நிலைநிறுத்தக்கூடிய தன்மையை குறிப்பிடுவது. தர்ம சாஸ்திரத்திலே, பிரம்மச்சரிய விரதம்னுவாங்க. மனுவினுடைய வரிசையிலே முதலில், சொல், அன்னம், ஒழுக்கம், அறம். இதே வரிசையில்தான் வள்ளுவரும் சொல்லியிருக்கிறார்.

அடுத்து, இல்வாழ்வான், இல்லறம் என்று கூறுகின்றார் வள்ளுவர். இதை தர்ம சாஸ்திரங்களில் கிரகஸ்தன் என்று குறிப்பிடுகிறார்கள். நல்ல பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, நல்ல மக்களைப் பெற்று இன்புற்று வாழவேண்டும். குடும்பத்தினரைப் பேணிக் காக்கவேண்டும் என்று இல்லறத்தில் குறிப்பிடுகின்றார்.

அடுத்து, மூன்று கடமைகளைப் பற்றி சொல்கிறார். தேவன், ரிஷி, பித்ருக்கள் - இவர்களுக்கு நாம் நீரினால் தர்ப்பணம் செய்வதைப் பற்றி வள்ளுவர் சொல்லியிருக்கிறார். இதையே தர்ம சாஸ்திரங்களிலும் குறிப்பிடுகின்றார்கள்.

அடுத்தபடியாக,வள்ளுவர் ஐந்து மகா வேள்விகளைப் பற்றிச்சொல்கிறார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்

கைம்புலத்தார் றோம்பல்தலை

யாரிவர்கள்? தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், நான், ஆகியோர். இவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை தவறாமல் செய்யவேண்டும். இவற்றையே தர்மசாஸ்திரங்களில் பஞ்சமஹாயக்ஞம்என்று குறிக்கப் படுகின்றது. இது இந்து சமூதாயத்தினருக்கு மட்டுமேயானது. மற்றவர்களுக்கு இந்த ஐந்து வேள்விகள் செய்வதில்லை. இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

அறத்துப்பாலின் ஆரம்பத்தில் மாணவனின் கடமைகள், இரண்டாவது மணமானவனின் செயல்பாடுகள், மூன்றாவது தாபத நிலை, தபஸ்வி நிலை, எல்லாவற்றையும் அனுபவித்து முடித்தபின் அவன் விரும்பினால் காட்டுக்குப் போய் விடலாம். அதைப் பற்றி சொல்கின்றார். நான்காவது துறவு பற்றிச் சொல்கிறார். ஆக இதிலே பிரமச்சாரி, கிரகஸ்தன், தபஸ்வி, சந்நியாசி ஆகிய நான்கு ஆஸ்ரமங்கள் தனிப்பட்ட மனிதனுடைய நெறிக்கு வேண்டியது என்னங்கிறதை இவர் வரிசைப்படுத்தி வள்ளுவர் சொல்கிறார். இதையே ஏற்கெனவே தர்மஸாஸ்திரங்கள் அதே வரிசையில் வரிசைப்படுத்துகின்றன.

ஆக முதலாவது, புருஷார்த்தம், மேலே குறிப்பிட்ட நான்கு ஆஸ்ரமங்கள், மூன்றாவது இன்றியமையாததாக அந்தணன், அரசன், வணிகன், வேளான் என்று நான்கு பிரிவுகள் பற்றி ஆங்காங்கே சொல்லிக்கொண்டே செல்கிறார் வள்ளுவர். முதலாவது அறத்துப்பால் என்பது தனிப்பட்ட மனித வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள், அடுத்த நிலையில் அவன் சமுதாயத்துக்கு வருகின்றான். இவன் சம்பாதிக்க வேண்டும். குடும்பத்தை, குழந்தைகளையும் உறவினர்களையும் காப்பாற்ற வேண்டும். மற்றவர்களோடு சேரும்போது பிணக்குகள் ஏற்பட்டால் தன் சமயோசிதத்தால் அதிலிருந்து வெளிவரவேண்டும். வெளிநாட்டினர் நம் நாட்டின் மீது படையெடுக்கக்கூடும். உள்நாட்டுக் குழப்பங்களை சரி செய்ய வேண்டும். சமூகத்தைக் காத்து நாட்டை காப்பவன் அரசன். இந்த அரசனே அத்தனைக்கும் பொறுப்பு. நாட்டு மக்களின் பாதுகாப்பு இவனைச் சார்ந்தது. அரசனின் குண நலன் என்ன? அரசு பரிபாலனம் என்றால் எப்படி செய்வது? அரசன் தன்னிச்சைப்படி செயல்படாமல், தன் அறிவார்ந்த அமைச்சர்களின் ஆலோசனையின்பால் செயல்படுவது.

ஆக அமைச்சர்களின் பணி என்ன? அரசை நடத்த படை பலம் வேண்டும். சேனாதிபதி வேண்டும். அரசின் பொருளாதாரத்தை நிமிர்த்துபவன் வணிகன், அவனது செயல்பாடுகள். இது எல்லாவற்றிக்கும் முதலாக உழவன். அவன் உழுதால்தான் தானியம் கிடைக்கும். ஆக வாணிகம், பொருள், காப்பாற்றுதல், இவை அத்தனைக்கும் நடுவே இவன் இருப்பதால் அதை பொருளதிகாரம் என்கிறார் வள்ளுவர்.

இந்த பொருளதிகாரத்தின் பெரும்பகுதி அர்த்தசாஸ்திரத்தின்சாரத்தில் இருந்து எழுதப்பட்டது. கெளடில்யர் என்பவர் எழுதிய நூல் அது. பொருளதிகாரத்தில் உள்ள அத்தனை விஷயங்களும் அதில் உள்ளது. அர்த்த சாஸ்திரமும் புருஷார்த்தமும், திருக்குறளுக்கு ஐநூறு, அறுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அர்த்தசாஸ்திரம், தர்மசாஸ்திரம், மனு தர்மம், போன்ற சாஸ்திரங்களில் உள்ள விஷயங்கள் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்று எழுதியவர்களே குறிப்பிடுகின்றார்கள். திருவள்ளுவர் இந்த வழி நூல்களில் உள்ள விஷயங்களை அதே வரிசையில் கையாள்கிறார் ஆகவே நான் திருக்குறளை வழி நூல் என்றே சொல்லுவேன்.

சரி! காமத்துப்பால் என்பது எந்த வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது?

நான் மட்டும் குறிப்பிடவில்லை. டாக்டர் மு.வ, உ.வே.சாமிநாதய்யர் போன்றோர் காமத்துப்பால் பற்றிக் குறிப்பிடுகையில் மற்ற குறள்கள் போல காமத்துப்பால் இல்லை. ஒரு நாடக பாணியில் உள்ளது. அதாவது நாடக வழக்கு எனலாம். இரண்டு பேர் நாடக மேடையில் தலைவன், தலைவின்னு சொல்லலாம். பாலியலைப் பற்றிப் பேசுவது போல அமைந்துள்ளது என்று மு.வ-வும், உ.வே.சா-வும் அவர்களது நூல்களில் சொல்லியிருப்பதை, அப்படியே என் புத்தகத்தில் தந்திருக்கிறேன். தவிர, பரிமேலழகர், காளிங்கள் போன்ற உரைதாரர்கள், வள்ளுவர் காமத்துப்பாலைப் பொறுத்தவரை, ‘இன்பநூலாரின்நூல்களை பின்பற்றி எழுதியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். இதிலே இரண்டு விஷயங்கள் உள்ளன. நாடகம் என்பது நாட்டிய சாஸ்திரத்திலிருந்து வருவது. அதிலிருந்தும் அடுத்து வாத்ஸ்யாயனார் எழுதிய காமசூத்திரம் என்ற நூலில் இருந்தும் காமத்துப்பால் எழுதப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே நல்ல பெண்ணை மணம் புரிந்து வாழவேண்டும்என்று சொல்லி விட்டார். இங்கு பிறன் மனை விழையாமைபற்றி குறிப்பிடுகின்றார். பொது மகளிரை நாடக்கூடாது. அப்படி செல்பவன் சிறப்பானன் இல்லை. என்கிறார் வள்ளுவர். இதையே நாடக சாஸ்திரங்களும், தர்மஸாஸ்திரங்களும் சொல்கின்றன.

ஆக, மூன்று பால்களாப் பிரிக்கப்பட்ட திருக்குறள் ஏற்கெனவே இருந்த, தர்மசாஸ்திரம், அர்த்தசாஸ்திரம், நாட்டியசாஸ்திரம், காமசாஸ்திரத்திரம் இவற்றில் உள்ள சாராம்ஸத்தை எடுத்துக் கொண்டு அற்புதமான தமிழில், யாரும் எழுத முடியாத அற்புதமான கட்டமைப்பிலே, அந்தக் காலத்தில் நிரவி, நிறைந்து இருந்த தமிழ்நடையில் வள்ளுவர் எழுதியிருக்கிறார். அதற்கு ஈடு இணையற்ற, தமிழ் நூல் கிடையாது. ஆக இது தமிழர்களின் அடிப்படை நூல், இதற்குக் காரணமாக இருந்தவை தர்மசாஸ்திரங்கள், அவற்றிக்கு வேராக இருந்தவை வேதங்கள்.

தமிழ்மொழி என்பது வேதங்களுக்கெல்லாம் மூத்த மொழி. திருவள்ளுவர் வேதங்களின் சாரத்தைக் கையாண்டு எழுதவேண்டும் என்ற அவசியம் என்ன?

ஏற்கெனவே நான் சொன்னதுதான். பொதுவாக நாம் இதுபோன்ற விஷயங்களில் உணர்வுப்பூர்வமாகத்தான் முடிவுகளை எடுக்கின்றோம். அறிவுபூர்வமாகசிந்திப்பது இல்லை. தமிழ் மூத்த மொழி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் திருக்குறளைப் பொறுத்தவரை அது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்டது. ஆனால் வேதங்கள் தோன்றிய காலம் என்பது கிட்டத்தட்ட 3,500 வருடங்களுக்கு முன்பானது. ஆக திருக்குறளுக்கு முன்னே 1500 வருடங்கள் மூத்தவை வேதங்கள். திருவள்ளுவர் சமஸ்கிருதத்தினால் ஆன வேதங்களை முழுமையாக கற்று அறிந்திருக்கிறார் என்று முடிவுக்கு வரலாம். அதிலிருந்துதான் பல விஷயங்களை அவர் குறளாக வடித்திருக்கிறார். போப் என்பவர் பைபிளில் இருந்து திருக்குறள் வந்தது என்றார். பிறகு பல பேர் பல இடங்களில் வடித்த செய்யுளின் தொகுப்பு திருக்குறள் என்றார்கள். அதையெல்லாம் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? இதை நான் ஏற்றுக்கொள்ளாத மனநிலையில் திருக்குறளையும், வேத சாஸ்திரங்களையும் ஆராய்ந்தபோது நான் அறிந்த முடிவுகளை வைத்துத்தான் என்னால் உறுதிபடச்சொல்ல முடிகின்றது.

திருவள்ளுவர் வேதங்களைப் படிக்காமலேயே திருக்குறளை வடித்திருக்க வாய்ப்பு உண்டா? அல்லது அவர் வேதங்களைப் பற்றியறியாமல் தனது சொந்தக் கருத்தாக அறம், பொருள், இன்பம் என்று பகுத்து தந்திருக்க வாய்ப்பு உண்டுதானே!

உண்டு. ஆனால், அவர் சொந்தக் கருத்தாக சில குறள்களை வேண்டுமானால் தந்து இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான குறள்கள் வேதங்களின் சாரம் என்பதை ஆதாரத்துடன் நான் இந்த நூலில் தந்திருக்கிறேன். குறிப்பாக, செங்கோன்மை அதிகாரத்தில் வருகின்ற மூன்றாவது குறள்,

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.

இதன் பொருள் என்னவென்றால் அந்தணர்க்கு உரித்தான வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலை பெற்றது மன்னவன் செங்கோல் அரசனால் செலுத்தப்படுகின்ற செங்கோல். இதே பொருள் கொண்ட, ஏன் இதே வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்ட சமஸ்கிருத சூத்திரம் மனுசாஸ்திரத்தில் உண்டு.

அடுத்து, நான் முன்பே குறிப்பிட்டதை நினைவு படுத்துகிறேன்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்

கைம்புலத்தார் றோம்பல்தலை

இந்தக் குறளானது வேத சாஸ்திரங்களில் பஞ்சமஹாயக்ஞம்என்று குறிக்கப்படுகின்றது. இது இந்து சமூதாயத்தினருக்கு மட்டுமேயானது. இது வேதங்களை அறிந்த அனைவருக்கும் தெரியும்.

இதற்கு மேல் உங்களுக்கு வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்? எனது திருக்குறள் புத்தகத்தில் இதே போல பல குறள்களை எழுதி அதற்கான மூலம் வேதங்களில் எந்த இடத்தில் என்ன மாதிரியாக குறிப்பிடப்பட்டுள்ளது என்கின்ற விவரங்களையும், சமஸ்கிருத சூத்திரங்களுடன் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள்.

தமிழ் மொழி காலப்போக்கில் வருகின்ற மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தன்னிலை மாறாது இருக்கக்கூடிய வலுவான மொழி. எதைப் பார்த்தும் பயப்பட வேண்டியதில்லை. மாற்றுக் கருத்தை வரவேற்கின்றேன். ஆனால் முதலில் என் நூலைப் படித்துவிட்டு இவர்கள் மாற்றுக் கருத்தைத் தெரிவிக்கட்டும். மனுநீதிக்கெல்லாம் கூட தமிழில் மொழிபெயர்ப்பு கிடைக்கின்றது. ஆனால் குறள் மாதிரியான செய்யுட்களை மொழிபெயர்க்க முடியாது. அத்தனை விதமான கருத்துக்கள் அதன் பின்னால் உள்ளன. ஒரே குறளில் ஏழு கடலைப் புகுத்திவைத்தான்னு ஒரு புலவன் சொன்னான். அத்தனை கருத்துக்களின் உள்ளடக்கத்தையும் ஒரு குறளுக்குள், இரண்டு வரிக்குள் கொண்டு வந்த கட்டமைப்பு அதுதான் திருவள்ளுவரின் பெருமை, அதுதான் சக்தி. இன்று உலகம் முழுதும் வியாபித்து திருக்குறள் நிற்பதற்கு அதுதான் காரணம். அவர் வேதங்களை கருத்துக்களை அவதானித்து எழுதினார் என்று சொன்னால் அது தன் பெருமையை இழந்தாவிட்டது. முன்னிலும் பெருமை பெற்று விளங்கும் என்பதுதான் உண்மை. மாற்றுக் கருத்து சொல்பவர்கள் வரலாற்றின் அடிப்படையில், காலத்தின் அடிப்படையில், சான்றுகளின் அடிப்படையில் சொல்லுங்கள் வரவேற்கின்றேன். என்று முடித்தார் நாகசாமி.

உலகில் இருக்கின்ற எந்த ஒரு படைப்பும் விமர்சனத்துக்கு அப்பார்பட்டதல்ல. நாகசாமி போன்ற தொல்லியல் மேதைகள் ஒப்பிட்டு எழுதுவதில் தவறில்லை. எந்தப் படைப்பும் ஏதாவது ஒரு வித பாதிப்பினால் எழுதப்படுவதுதான் இயல்பு. நாகசாமி, திருக்குறளுக்கு முன்னால் அந்தக்கால கட்டத்தில் தர்ம சாஸ்திரங்களில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்று ஆதாரங்களுடன் முன்வைக்கின்றார். வரிசைக்கிரமப் படுத்துகின்றார். கிராமங்களில் பெரியவர்கள், ஒரே மாதிரியான பழைய கதைகளைச் சொல்வார்கள். அதை கேட்டவர்களே திரும்ப திரும்ப கேட்டாலும், கேட்கும் இளைஞர்களுக்கும், சொல்லும் பெரியவர்களுக்கும், சலிப்பு ஏற்பட்டதில்லை. அதே கதையை இன்றைய இளைஞர்கள், நாளை முதியவர்கள் ஆனதும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வார்கள். அப்படித்தான் நீதி நூல்களும்.

அன்பு, பாசம், காதல், நட்பு, பகை, இது எல்லாமே உலகம் முழுதும் நிறைந்து பொதுவாக இருப்பவை. அதைப்போல எந்த சாஸ்திரங்களில் இருந்து வள்ளுவர் எடுத்து கையாண்டு இருந்தாலும் தமிழ்என்ற செம்மொழியில் இரண்டு வரிகளுக்குள் கட்டமைக்கப்பட்டபோதுதான் அதன் பெருமை உலகை அடைந்தது. உலகம் வியந்தது. நாகசாமி போன்ற விமர்சகர்களும் அதே வித பிரமிப்போடு திருக்குறளை வியக்கிறார்கள் என்பதே உண்மை.