தொடர்கள்
தொடர்கள்
விளம்பரங்களின் பின்னால்!... - ஜி.எஸ்.எஸ்.

2018042514292469.png

போர் என்பது போர்க்களங்களில்தான் நடக்க வேண்டும் என்பதில்லை. எதிராளியின்மீது வீசப்படுவது துப்பாக்கி குண்டாகவோ , ஏவுகணையாகவோதான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றைவிட வன்மையான போர் ஊடகங்களின் மூலம் நடைபெறுகிறது. சில சமயம் நேருக்கு நேர் மோதுகிறார்கள். சில சமயம் நா​சூக்காக காலைவாரிக் கொள்கிறார்கள். அதுவே விளம்பர யுத்தம்.

தவிர முக்கியமாக பார்வையாளர்களின் மனங்களைக் கவர பலவித மனவியல் போர்களையும் இந்த விளம்பர நிறுவனங்கள் நடத்துகின்றன. இவை தொடர்பான அணிவகுப்புதான் இந்த தொடர்.


1. பட்டும் படாமல் நட​க்கும் போர்கள்!

முன்பெல்லாம் ஒரு விளம்பர வாசகம் வெற்றி பெற்றால் அதைப்போலவே போட்டியாளர்களும் விளம்பர வாசகங்களை அமைப்பார்கள். அந்த அளவில்தான் ‘தாக்குதல்’ மைல்டாக இருக்கும். “மைலாப்பூர் என்றதும் நினைவுக்கு வருவது பி.மணியம்மாள் டெக்ஸ்டைல்ஸ்’’ என்ற விளம்பரம் வானொலியில் எடுபட்டது. இதைத் தொடர்ந்து.. “அமைந்தகரை என்றதும் நினைவுக்கு வருவது அலங்கார் டெக்ஸ்டைல்ஸ்’’, “பாண்டி பஜார் என்றதும் நினைவுக்கு வருவது கிருஷ்ண துளசி’’ என்று விளம்பரங்கள் வெளியாயின.

நரசுஸ் காபி விளம்பரத்தில் “காபின்னா நரசுஸ் காபிதான். பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே’’ என்று நடிகர் உசிலை மணி கூறியது மக்களிடையே பிரபலமானதும் வேறு பலரும் இதே போன்ற விளம்பர வாசகங்களைக் காப்பியடித்தார்கள்.

டியூரக்ஸ் ஆணுறை நிறுவனம் தனது போட்டியாளர்களை இப்படிக் கிண்டல் செய்திருந்தது. “எங்கள் போட்டி நிறுவனங்களின் தயாரிப்பைப் பயன்படுத்தியவர்களுக்கு எங்களது ‘மகிழ்ச்சிகரமான தந்தையர் தின’ வாழ்த்துக்கள்’’.

சமீபத்தில் கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் போட்டி நிறுவனங்களான BMW மற்றும் ஆடி நிறுவனங்களுக்கிடையே நடைபெற்ற விளம்பர யுத்தம் பலரையும் கவர்ந்தது. தனது புதிய காரை அறிமுகப்படுத்திய BMW “இப்போது உனது மூவ்’’ என்றது. மூவ் என்பதை வெளியேறுதல் என்ற அர்த்தத்திலும் எடுத்துக் கொள்ளலாம். என்றாலும் அதை சதுரங்க வார்த்தையாக எடுத்துக் கொண்டு BMW ‘Checkmate’ என்று விளம்பரம் செய்தது. பதிலுக்கு ஆடி நிறுவனம் ‘’உங்கள் சிப்பாய் எங்கள் ராஜாவுக்கு ஒருபோதும் இணையாக முடியாது’’ என்றதோடு “இனியும் செஸ் விளையாட விருப்பமில்லை. கா​ரோட்டுவதுதான் எங்கள் விருப்பம்’’ என்றது.

2006-ம் ஆண்டின் தலைசிறந்த தென்னாப்ரிக்கக் கார் என்று ஆடி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தது BMW. வியப்படைய வேண்டாம். அந்த விளம்பரத்தின் கீழே “2006-ன் உலகின் தலைசிறந்த கார் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமிருந்து’’ என்றுதான் குறிப்பிடப்பட்டது. அதாவது ‘ஒரு கண்டத்தில் வேண்டுமானால் உன் தயாரிப்பு தலைசிறந்ததாக இருந்திருக்கலாம். ஆனால் உலகளவில் நாங்கள்தான் டாப்’ என்று கூறாமல் கூறியது.

ஒரு சமயம் “நாங்கள் மாறிவிட்டோம்’’ என்ற வாசகங்களுடன் மும்பை சாலை ஓரத்தில் ஒரு விளம்பரம் காணப்பட்டது. அதை வைத்தது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். அதாவது தங்கள் பணியாளர்களின் சீருடை வண்ணங்களை அவர்கள் சிறப்பாக மாற்றிவிட்டார்களாம். அடுத்த சில நாட்களில் அதற்கருகே வேறொரு விளம்பரப் பலகை காணப்பட்டது. போட்டி நிறுவனமான கிங்ஃபிஷர் “நாங்கள்தான் அவர்களை மாற்ற வைத்தோம்’’ என்று விளம்பரம் ​செய்திருந்தது. மேலும் சில நாட்களில் இந்த இரண்டு விளம்பரப் பலகைகளுக்கும் மேலாக வேறொரு விளம்பரம் முளைத்திருந்தது. “நாங்கள் மாறவேயில்லை. ஏனென்றால் நாங்கள்தான் தலைசிறந்த விமான சர்வீஸ்” - இது கோ ஏர்வேஸ்.

இதைப் பார்க்கும்போது ஒரு பழைய நிகழ்வு நினைவுக்கு வருகிறது. “இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம். போய் இதயம் நல்லெண்ணெய் வாங்கிட்டு வாங்களேன்’’ என்ற விளம்பரம் மிகப் பிரபலமாகி அதைக் கூறிய நடிகையே ‘நல்லெண்ணெய் சித்ரா’ என்று ​ஒரு காலத்தில் அழைக்கப்பட்டார்!. இதைத் தொடர்ந்து ஆனந்தம் நல்லெண்ணெய் தன் விளம்பரத்தில்.. “இது பொம்பளைங்க சமாச்சாரம் மட்டுமில்லை.. பொதுவான சமாச்சாரம்தான். சமைக்கிறது பொம்பளைங்கன்னாலும் சாப்பிடறது நாம எல்லாரும்தானே’’ என்றார்கள்.

சில சமயம் திரைப்ப​ட விளம்பரங்களில் கூட இந்த நேரடித் தாக்குதல் இருந்தது. ஒரே கால கட்டத்தில் வெளியான அரங்கேற்றம், மறுபிறவி ஆகிய திரைப்படப் போஸ்டர்கள் ஓர் உதாரணம். மறுபிறவி படக்காரர்கள், “இது மானத்தை விற்ற ஒரு பெண்ணின் கதையல்ல. ஒரு குடும்பப் பெண்ணின் உணர்ச்சிப் போராட்டம்’’ என்று போஸ்டர் வெளியிட, பதிலுக்கு

அரங்​கேற்றம் பட தரப்பிலிருந்து “இப்பிறவியே போதும். வேண்டாம் மறுபிறவி. இப்படிக்கு அபலை லலிதா’’ என்று எதிரொலித்தார்கள்.

ஹீரோ ஹோண்டாவின் விளம்பர வாசகம் ஒன்று பரவலானது. “நிரப்புங்கள். ​மூடுங்கள். மறந்து விடுங்கள்’’ (Fill it, shut it, forget it). இதைத் தொடர்ந்து டி.வி.எஸ். சுசுகி நிறுவனம் நாளிதழ்களில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. “அவர்கள் சொல்லாமல் விட்டதை நீங்கள் மறக்கணுமா?’’ என்ற தலைப்பில் இரு பைக்குகளின் சாதக, பாதகங்களை நிளமாக விவரித்தது.

சென்னை அண்ணா சாலையில் ஒரு விளம்பரத்தைப் பார்த்ததுண்டு. ‘’ஒரே தரமுடைய இரண்டு பானங்களில் அதிக விலை கொடுத்து போன்விடாவை வாங்குதைவிட குறைந்த விலை கொடுத்து நியூட்ரமுலை வாங்குங்கள்’’என்று

“அவங்க உஜாலாவுக்கு மாறிட்டாங்க. அப்போ நீங்க?’’ என்று உஜாலா விளம்பரம் ஒன்று கூற, அதன் போட்டி விளம்பரம்..

“ரீகல் வெண்மை மாறாது. மாறவே மாறாது’’ என்றது.

இவையெல்லாம் உரசல்கள்தான். தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சிகள் என்றும் கூறலாம். ஆனால் நேரடியான பீரங்கித் தாக்குதல்களும் உண்டு. அவற்றில் நகைச்சுவையைவிட எதிராளியை துவைத்து எடுக்க வேண்டும் என்ற போக்குதான் தூக்கலாகத் தெரிகிறது. அவற்றையும் வரும் பகுதிகளில் பார்த்துவிட்டு விளம்பர உலகின் மனவியல் கோணங்களுக்குள் செல்வோம். அது நாம் நினைப்பதைவிட ஆழமானது, தந்திரமானது.

(தொடரும்)