
சபேசன் 20 வருஷம் கழிச்சு நல்லூருக்கு வந்தான்.
காரணம்: அந்தக் காலத்தில் ஊரில் அவன் செய்த பாவங்களுக்கு, துரோகங்களுக்கு,இப்போ பரிகாரம் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது.
சபேசன் பெரிய அரசியல் கட்சியின் சென்னைப் பக்கத்து வட்டச் செயலாளன்.
கடந்த சில தினங்களாக இந்த வட்டத்துக்கு கட்டம் சரியில்லை.
கட்சி மேலிடத்துக் கோபங்கள்,
சின்ன, பெரிய,வீடுகளுக்குள் சிக்கல்கள்,
அவன் அக்யூஸ்ட் ஆன, அடிதடி,ஏமாற்று, கொலை கேஸ்கள் சில தூசி தட்டி கோர்ட்டில் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட டென்ஷன்.
நண்பனும் கட்சிக்காரனும் ஆன செந்தில் கேட்டான்.
"என்னப்பா யோசிச்சுக்கினுக்கிற?"
" ஆவடி பெரிய ஜோசியர் என் ஜாதகம் பார்த்து சொன்னாரு. வாழ்க்கையில நான் நிறைய துரோகம் பண்ணி இருக்கேனாம். அப்படி நான் தப்பு செஞ்ச சில ஆளுங்களைப் போய் பார்த்து பிராயச்சித்தமா பணம் கொடுத்து மன்னிப்பு கேட்க சொல்றாரு.
'அவங்களுக்கு எவ்வளவு நஷ்டம் ஆச்சோ அதுபோல ஆயிரம் மடங்கு பணம் கொடு.
அப்புறமா ஒரு பூஜை பண்ணா எல்லாம் சரியாயிடும்.' ன்றாரு. எங்கே எவ்வளவு தப்பு செஞ்சோம்னு சரியா இப்ப ஞாபகம் இல்லையே! அதுதான் ஊர்ல போயி அங்க அந்த மாதிரி நான் துரோகம் செஞ்ச ஆளுங்கள தேடிப் பார்க்கலாம் என்று ஒரு ஐடியா!" கட கட என்று சிரித்தான்.
சபேசனுக்குத் தன் ஸ்கார்பியோவில் தனியாக நீண்ட பயணம். நெல்லையில் தங்கிப் பின் வண்டி ஓட்டிக்கொண்டு நல்லூர் சென்றான். மூன்று சூட்கேஸ்களில் ஜிப் தாங்காமல் வெடிக்கும் அளவு பணம்.
பெருமாள் கோவிலுக்குப் பின்னால் வண்டியை நிறுத்தி,சர்வ ஜாக்கிரதையாகப் பூட்டினான்.
கோவில் வாசல்ல அந்த காலத்தில் இருந்த மனநலம் குன்றிய பிச்சைக்காரனைக் காணவில்லை. அவனை மிரட்டிப் பலமுறை பணம் பிடுங்கி இருக்கான் சபேசன். சில்லறையா ஒரு நூறு ரூபாய் கிட்ட இருக்கலாம்.
அவன் கிடைச்சா பிராயச்சித்தமா ஒரு லட்சம் ரூபாய் (நூறு xஆயிரம் ) கொடுத்து விடலாம்.ஆனால் அவன் இல்லையே!
கோவில் வாசலில் பூக்கடையில் இருந்த கிழவியும் இப்போ இல்லை. தன் பேத்தி நகைக்காக ஹார்லிக்ஸ் பாட்டில்ல அவள் சேர்த்து வைத்த மூவயிரம் ரூபாயை, அவளுக்குத் தெரியாமல் சபேசன் அபேஸ் செஞ்சான் அப்போ.
இப்போ,கிழவியைப் பற்றி கடையில் கேட்டான்.
"அந்தக் கெளவி எப்பவோ இந்தக் கடையை என்கிட்ட வித்துட்டு பத்தமடைக்கு போயிட்டு. போயி ஒரு வருசத்துல செத்தும் போச்சு. "
கிழவி கதையும் இப்படி ஆச்சா?
"சரி. கிச்சானு ஒருத்தர் நம்ம ஊர்ல உண்டு.என் வயசு இருக்கும். அவங்க அப்பா கூட பேட்டையில் தங்க நகை செய்கிற கடை வைத்திருந்தாரு."
" ராமநாத ஆசாரியின் பிள்ளை கிருஷ்ணன் பத்தி கேட்குதீயளா? அந்தக் கடையை இப்போ கிருஷ்ணன்லா நடத்துறாரு."
"அவர் எங்கே இருக்கார்?"
"கெளக்கு தெருவுல"
"மேற்குத் தெருவுல அவர்களுக்கு இரட்டை மாடி வீடு உண்டே!"
"ராமநாத ஆசாரி போனபின் ரொம்ப பண க்கஷ்டம்லா. பாவம் வீட்டை வித்துட்டாக."
" ராமநாத ஆசாரி போயிட்டாரா? "
"அவரு போய் இருபது வருஷம் ஆகுதுல்லா! அவர் மேல கோவில் நகை திருடின கேஸ் விளுந்துட்டு. அதான் தாங்காம போயிட்டாருன்னு சொல்லுவாக."
கிச்சா என்ற கிருஷ்ணன் வீட்டு டோர் நம்பரை அடையாளம் கேட்டுக்கொண்டான்.
"வீட்ல இருப்பாகளா?"
"இன்னிக்கு நியாயத்துக்கிளமல்லா? வீட்லதான் இருப்பாக. அவகளும் இன்னிக்கி காலைல கோவிலுக்கு வருவாக. அந்தா வர்ராகளே! " என்று எதிரில் நூறு அடியில் வந்து கொண்டிருந்த மனிதனைக் காட்டினான் பூக்கடைக் காரன்.
சபேசன் உற்றுப் பார்த்தான். கிச்சாவே தான். நாற்பதில் ஐம்பதாகத் தெரிந்தான். தலையில் பாதி முடி இல்லை. மீதி வெள்ளை. இஸ்திரி போடாத, உலர்த்திய வேட்டி போல முகச்சுருக்கங்கள்.
சபேசன் வேகமாகச் சென்று கிச்சா முன் நின்று சிரித்தான். கிச்சா நின்றான். பேசவில்லை.
" கிச்சா,உன் கோபம் எனக்கு புரியுது.நான் இருபது வருஷம் முன் என் நகையை உன்கிட்ட கொண்டு வந்து வச்சு, பணம் கேட்டேன். ஞாபகம் இல்லையா?"
கிச்சா கோபம், வெறுப்பு கலந்து பார்த்தான்.
2005 ஆம் வருஷத்தின் போது கிச்சா சபேசன் இருவருக்கும் இருபது வயது தான் இருக்கும். இருவரும் நண்பர்கள் தான். பத்திலிருந்து பிளஸ் டூ வரை ஒன்றாகப் படித்து ஒன்றாகவே ஃபெயிலானவர்கள் வேற.
அப்பா கொஞ்சம் வசதியானவர் என்பது தவிர கிச்சாவுக்கு என்று ஸ்பெஷல் ஆக ஒரு தகுதியும் இல்லை.ஆனால் நல்லவன்.
சபேசன் தோற்றம், பேச்சு, தைரியம், எல்லாவற்றிலும் கிச்சாவை முந்தியவன்.
கிச்சாவுக்கு நண்பன் சபேசனின் ரத்தத்தில் ஊறிய அயோக்கியத்தனம் பற்றி ஓரளவுக்கு தெரியும்.
ஆனாலும் சபேசன் மீது ஒரு மாதிரியான ஹீரோ ஒர்ஷிப் அவனிடம் இருந்தது. தன்னிடம் இல்லாத, நிறைய ஈர்க்கும் சக்தியும்,வாழ்க்கைக்கு வேண்டிய சாமர்த்திய குணங்களும்,பேச்சும், சபேசனிடம் இருந்ததாக நினைச்சான்.
கிச்சாவின் அடுத்த வீட்டுப் பெண் லோக்கல் ஐஸ்வர்யா ராயான பானு.
கிச்சாவுக்கு அவள் மீது ஒரு ஓரக் கண் இல்லாமல் இல்லை ஆனால் "இவ லெவலே வேற "என்று பிரமிப்புடன் விட்டு விடுவான்.
ஆனால் சபேசன் அவளை மடக்கி விட்டான்.மேலப்பாளையம் அலங்கார் தியேட்டர்ல ஆங்கிலப் படத்துக்கு போனபோது,புடவைத் தலைப்பால் தலையில் முக்காடு இட்ட பானு கூட சபேசனையும் சேர்ந்து கிச்சா பார்த்து விட்டான்.
அடுத்த நாள் சபேசன் கிட்ட கேட்டான். சபேசன் ஒப்புக்கொண்டான். "வெளில இப்பொழுது சொல்லாதே கிச்சா. எங்களது காதல் உயிருக்கு உயிரானது. தோற்றால் செத்துடுவோம்." என்றான்.
"பானு நல்ல பொண்ணுடா.அவளை ஏமாத்திட மாட்டியே.?"
"சாமி சத்தியமா மாட்டேன். ஆனா அவங்க வீட்டுல ஒப்புக்க மாட்டாங்களோ ன்னு சந்தேகம் இருக்கு."
"அதைக் காரணம் சொல்லி பின்னாடி கழண்டுக்க வழி தேடாதே . ஏதாவது உதவி வேண்டுமானா கேளு. நான் செய்கிறேன்."
" நிச்சயமா கேட்கிறேன் கிச்சா. "
ஒரு மாதம் கழித்து ஒரு நாள் மதியம் வந்தான் சபேசன்.
"நானும் பானுவும் இன்று இரவு பஸ்ஸில் சென்னை போய் நாளை ரிஜிஸ்டர் ஆபீஸ்ல திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்.எனக்கு அர்ஜெண்டா இருபதாயிரம் ரூபாய் வேணும்.இந்த அஞ்சு பவுன் தங்க நெக்லஸ அடமானமா கொடுக்கிறேன்."
"எங்க அப்பாவோட நகைக்கடையில் அடமானம் எல்லாம் கிடையாது. நகை வியாபாரம் மட்டும்தான்."
"அது தெரியும். இப்போ ரொம்ப அவசரம். உங்க வீட்ல இருக்கும் உங்க அப்பாவோட இரும்பு பெட்டிக்குள்ள நிச்சயம் பணம் இருக்கும்.உனக்கு அதைத் திறக்கவும் தெரியும்னு சொல்லி இருக்கே. என்னுடைய நகையை உள்ள பத்திரமாக வைத்துவிட்டு இருபதாயிரம் ரூபாய் எடுத்து என்கிட்ட கொடு. அவ்வளவுதான்.இந்த பணம் உடனே கல்யாண செலவுக்கு தேவை. பத்தே நாளில் பணத்தை நான் திருப்பிடறேன்.அதுக்குள்ள யாருக்கும் தெரியாது.சென்னையில் நல்ல வேலை கிடைச்சிருச்சு.பானுவும் நானும் சென்னையில் செட்டில் ஆவது உன் கையில் தான்."
கிச்சாவுக்கு வேறு வழி தெரியல.சபேசன் சொன்னபடி செய்தான்.
இருபதாயிரம் ரூபாயுடன் நகர்ந்தான் சபேசன். "பானுவை இரவு ஒன்பது மணிக்கு பஸ் ஸ்டாண்டில் பார்த்து கூட்டிக்கிறேன்." என்றான்.
அப்புறம் இருபது வருஷம் கழிச்சு இன்று தான் ரெண்டு பேரும் பார்க்கிறார்கள்.
சபேசன் பேச ஆரம்பித்தான்.
" ரொம்ப சாரி.உன்கிட்ட நான் மன்னிப்பு கேட்கிறேன்.என்னால் அந்தக் காலத்தில் உனக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்கு நான் பிராயச்சித்தம் பண்ண வந்துருக்கேன். நஷ்ட ஈடு கொடுக்கிறேன்."
"சரி.எங்க அப்பாவக் கொடு!"
"அப்பாவா?"
" நீ நகையை கொடுத்துட்டு பணம் வாங்கிட்டு போயிட்ட. அப்புறம் நீ சொன்ன மாதிரி திரும்பி வரல.
ஒரு மாசத்தில் சந்திரஹாரம் என்ற நகை.. சேரன்மாதேவி பக்கத்து கோவிலில்.. புதுசா யாரோ பக்தர் ஒருவர் உற்சவருக்கு போட்டது.., திருடப்பட்டது என்று அந்த கோவில் அர்ச்சகர் போலீசில் சொல்ல போலீஸ் எங்க அப்பாவிடம் 'யாராவது இந்த நகையை உங்க கடையில் அடகு வைத்தார்களா?' என்று கேட்க, அப்பாவுக்கு கோபம்.'நான் அதெல்லாம் செய்யறது இல்லை' என்று கத்த, கடுப்பான போலீஸ் எங்க வீட்டுல முதல்ல சோதனை போட, இரும்பு பெட்டியில் நகை இருந்தது. நீ கொடுத்து நான் வெச்சது தான். ஆனா அது கோவில் நகைன்னு சொல்லி அப்பாவை நகை திருட்டுக்காக அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனாங்க.எனக்கு உண்மையைச் சொல்ல முதல்ல பயம்.தவித்தேன்.அடுத்த நாள் காலை ஸ்டேஷன் போய் உண்மையை சொல்ல முடிவு செஞ்சேன். அதுக்குள்ள போலீஸ் அப்பாவை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க,..அது கவரிங் நகை. கோவில் நகை இல்லை.. ன்னு.
அன்னைக்கு மத்தியானமே பிரஷர் அதிகமாகி செரிபரல் ஹாமரேஜ் ல அப்பா போயிட்டாரு. "
"ஐயோ! என்னால் தான் எல்லாம் ஆச்சுப்பா. ஆனா நான் இதுக்கெல்லாம் உனக்கு பரிகாரம் பண்ணறேன். நான் உன்கிட்ட வாங்கின இருபதாயிரம் ரூபாய் மாதிரி ஆயிரம் மடங்கு திருப்பித் தரேன். உனக்கு ரெண்டு கோடி தரேன். ரூம்ல ரெண்டு சூட்கேஸ் இருக்கு.ஒவ்வொன்றிலும் ஒரு கோடி."
"உன் பணத்தின் வாசனை கூட வேண்டாம். வெறும் கவரிங் நகையை என்னிடம் கொடுத்து ஏமாத்தினவன் தானே நீ. சரி, பானுவை விட்டுட்டு நீ மட்டும் அன்று ஏன் ஓடினாய்? சொல்லு. அவளை ஏமாற்றி நீ எடுத்துக் கொண்ட அவளுடைய முப்பது பவுன் தங்க நகைகள் மட்டும் போதும்..அவ வேஸ்ட் லக்கேஜ்... என்றுதானே? "
பதில் இல்லாமல் மௌனமாக நின்றான் சபேசன்.
பின், " என்னை மன்னித்தேன் என்று ஒரு வார்த்தை சொல்லு கிச்சா. உன் வீட்டுக்கு வந்து பணப்பெட்டிகளை வைத்துவிடுகிறேன். " என்றான்.
"வீட்டு பக்கம் வந்து தொலைக்காதே.என் மனைவி பானுவுக்கு உன்னை சுத்தமாக பிடிக்காது."
சபேசன் பேசாமல் திரும்பி நடந்தான். "வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா" என்று எண்ணிக் கொண்டான்.
கார்க்கு சென்று வேட்டி,துண்டு, சோப்பு டப்பா எடுத்துக்கொண்டு ஆத்தங்கரைக்கு போனான்.
"எவ்வளவு வருஷம் ஆச்சு இங்க குளிச்சு? நிறைய மாறி இருக்கு. இங்கு ஒரு பெரிய படித்துறை வேற கட்டப்பட்டிருக்கு.மணி பத்து ஆச்சு. ஒரு பய இல்ல. இறங்கி ஆனந்தமா குளிக்கலாம். ஆனால் ஆழம் அதிகமாக இருக்குமோ? சுழல் ஏதாவது இருக்குமோ? நமக்கு நீச்சல் வேற வராது. " என்று எண்ணிய போது.. தூரத்திலிருந்து கந்தல் உடையுடன்,ஒரு நடுத்தர வயது ஒல்லி மனிதன் சத்தம் போட்டு பாடிக்கொண்டே வந்து கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்தபோது சபேசனுக்கு தெரிந்து விட்டது.
"அந்த காலத்தில் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்த மனநலம் குன்றியவன் தானே இவன்?. இவனை எவ்வளவோ முறை ஏமாற்றி பயமுறுத் பணத்தை பிடுங்கி இருக்கிறோம்.இவன் கிட்டயே பணத்தை கொடுத்து பரிகாரத்தையும் இப்போ முடித்து விடலாமே!" என்று எண்ணி அந்த மனிதனை அழைக்க, அவன் ஓடி வந்தான்.
" என்னப்பா நான் யாருன்னு தெரியுதா?" என்றான் சபேசன்.
" சரியா தெரியலையே சாமி" என்றான் அந்த மனிதன்.
" நீ கோவில் வாசலில் உட்கார்ந்து இரு. நான் குளிச்சிட்டு வந்து உனக்கு ஒரு பரிசு கொடுக்கிறேன்.சரியா? "என்றான் சபேசன்.
"சரி "
"இப்ப ஒரு காரியம் பண்ணு. நான் அந்தப் படித்துறையில் இறங்கி குளிக்கப் போகணும். எந்தப்பக்கம் போனா ஆத்துல ஆழமோ சுழலோ இருக்காதுன்னு சொல்லு. எனக்கு நீஞ்ச தெரியாது. சரியா சொல்லுப்பா."
அந்த மனிதன் யோசித்தான். பின்,
"படித்துறை கீள் படில இறங்கி அப்படியே திரும்பி ஆத்தோட கிளக்கு பக்கமா போங்க.அங்கிட்டு தான் ஆளமா இருக்காது.சுளியும் இருக்காது.. நல்லா குளிக்கலாம்."
பின் கொஞ்சம் நின்று மெதுவாக தனக்குள் சொல்லிக் கொண்டான். சபேசனை பார்த்துக் கொண்டிருந்தான்.
"என்னை அந்தக் காலத்திலே எவ்வளவு ஏமாத்தி,விரட்டி இருக்கீக. நாம மறந்துடுவமா. படித்துறைக்கு கிளக்கா போனா எக்கச்சக்க ஆளமாய் இருக்கும்.நிறைய சுளி இருக்கும். நீரு நல்லா ஏமாந்தீரு!" என்ற படியே அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
படித்துறையின் கடைசி படியில் இறங்கி வேகமாகச் செல்லும் ஆற்று நீரில் கிழக்கு பக்கமாய் திரும்பி விரைவாக நடக்கத் தொடங்கினான் சபேசன்.
ஆறு அவனுக்கு சரியான பரிகாரம் செய்யத் துவங்கியது.......

Leave a comment
Upload