சூரிய ஸ்தலம் - சூரியனார் கோயில்

இக்கோயில் நவக்கிரக ஸ்தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறைக்கு அருகிலுள்ள ஒரு பழமையான கோயில். தமிழ்நாட்டில் சூரிய பகவானை முதன்மை தெய்வமாகக் கொண்ட சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
இக்கோயிலில் சூரிய பகவான் அவரது தேவியர்களான (இடது புறத்தில்) உஷா , (வலது புறத்தில்) பிரத்யுஷா தேவிகளுடன் கருவறையில் காட்சி தருகிறார். உஷா என்பது காலைச் சூரிய ஒளி; அதாவது சூரியன் உதிக்கும் முன் தோன்றும் ஒளி. பிரத்யுஷா என்பதைப் பிரதிபலிப்பு, நிழல் (சாயா ) என்று சொல்லலாம். இங்கு மற்ற எட்டு கிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இது நவக்கிரக தோஷங்களுக்குப் பரிகார தலமாக விளங்குகிறது. சூரியனார் கோயில் வந்து வணங்குபவர்களுக்குச் சூரியபகவான் அருளால் செல்வம் வளம் பெருகும், ஆரோக்கியம் மேன்படும் என்பது ஒரு நம்பிக்கை. இந்த கோயில் குலோத்துங்கச்சோழரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்பதை (கி.பி 1060 தொடக்கம் 1118 வரையிலாக காலப்பகுதி) கோயில்களில் இருக்கும் கல்வெட்டியிலிருந்து அறியப்படுகிறது.

ஸ்தல புராணம்:
இக்கோவில் முன்பு அர்க்க வனம் என்று அழைக்கப்பட்டு பின்னரே சூரியனார் கோயில் என்று மாறியதாகக் கூறப்படுகிறது.
காலவ முனிவர் என்பவர் எதிர்காலத்தைக் குறித்துக் கணிப்பதில் வல்லவராய் இருந்தார். தனக்குத் தொழுநோய் வரப் போவதை முன் கூட்டியே அறிந்து, அக்கொடிய நோயில் இருந்து தன்னை காத்துக் கொள்ள நவக்கிரகங்களை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவ வலிமையில் அகமகிழ்ந்த நவக்கிரகங்கள் அவருக்குக் காட்சி புரிந்து வரம் அளித்தனர். தான் எழுதிய விதியை மாற்றியதால் கோபம் கொண்ட பிரம்மா, காலவ முனிவர் அடைய வேண்டிய துன்பங்களை நீங்கள் அடைவீர்களாக என்று நவகிரகங்களைச் சபித்தார். அவரது சாபத்தால் தொழு நோயை அடைந்த நவக்கிரகங்கள் சாப விமோசனம் வேண்டி மன்றாடினார். அதன்படி நவகிரகங்கள் பூலோகத்தில் வெள்ளை எருக்கு வனத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தனர். அவர்கள் முன் சிவபெருமான் தோன்றி இத்தலம் உங்களுடைய தலமாக விளங்கும். பல்வகைத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு உங்களை வழிபடும் பக்தர்களுக்கு நீங்கள் அனுக்கிரகம் செய்வீர்களாக என அருளினார் என்பதே இத்தலத்தின் வரலாறு ஆகும்.
ஸ்தல அமைப்பு:
இக்கோயிலின் இராஜகோபுரம் மேற்கு நோக்கியவாறு மூன்று நிலைகளையும் ஐந்து கலசங்களையும் உடையது. இராஜ கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்ததும் நேராகக் கொடிமரம், பலிபீடம், மற்றும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை (அசுவம்) நின்ற நிலையில் உள்ளது. கருவரை மண்டபத்தில் நுழைந்ததும். இடதுபுறம் விஸ்வநாதர், விசாலாட்சி தாயார், சிவன் பார்வதி, நந்தியம்பெருமான், நடராஜர், சிவகாமி, விநாயகர், முருகன் ஆகியோர்களின் சந்நிதிகளும் பள்ளியறையும் அமைந்துள்ளன.

கருவறையில் மூலவர் சிவபசூரியநாராயணர் என்ற திருநாமத்தோடு நின்றபடி திருமணக்கோலத்தில் இடது புறத்தில் உஷாதேவியுடனும், வலது புறத்தில் பிரத்யுஷாதேவியுடனும் இரு கரங்களிலும் செந்தாமரை மலர் ஏந்தி மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் சூரியபகவான் அருள்பாலிக்கிறார். இங்கு பிங்கலனும், தண்டியும் துவாரபாலகர்களாக இருக்கின்றனர். கருவறையின் மேல் ஏகதள விமானத்தின் நான்கு மூலைகளிலும் குதிரைச் சிற்பங்கள். விமானத்தைச் சுற்றி பன்னிரு உபசூரியர்கள் அமர்ந்த நிலையில் இருக்கின்றனர். மூலவர் மண்டபத்தில் குரு பகவான் நின்ற கோலத்தில் சூரிய பகவானை நோக்கிக் காட்சியளிக்கிறார். அவர் முன் யானை வாகனம் மற்றும் பலி பீடம் அமைந்துள்ளது. மூலவரைத் தரிசித்து வெளியேறும் போது பிரகாரத்தில் தேஜஸ் சண்டிகேஸ்வரர் அருள் புரிகிறார். பிரகாரத்தில் புதன், சனி, குரு, ராகு, கேது, செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆகிய எட்டு கிரகங்களும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். மேலும் இடது மூலையில் கோள்வினை தீர்த்த விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இவர் நவகிரகங்களால் ஏற்படும் கெடு பலன்களைத் தீர்த்து, நன்மைகளை வழங்கக் கூடியவர். கோயில் வளாகத்தில் சூரியனின் தேரை பிரதிபலிக்கும் வகையில் சக்கரங்கள் பொறிக்கப்பட்ட அமைப்பு உள்ளது.
ஸ்தல தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.
ஸ்தல விருட்சம் : வெள்ளெருக்கு.
ஸ்தல பெருமை:
சூரியனுக்கு இந்தியாவில் இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில். தெற்கே இந்த சூரியனார் கோயில். கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது. நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கக் கூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது. இங்கு குரு பகவான் பார்வையில் சூரிய பகவான் அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மத்தியில், (தமிழ் தை மாதம் ஆரம்பம்) பொங்கல் திருநாள், இந்த சூரிய கடவுளை முன்னிறுத்தியே கொண்டாடப் படுகின்றது. கண்களால் கண்டு வணங்கக் கூடிய சக்திவாய்ந்த தெய்வமாக மனதில் கொண்டு பல்வேறு உருவகங்களில் ஆராதிக்கப் படுகின்றார்.

இந்தக் கோயிலில் அனைத்து கிரகங்களுக்கும் தனித்தனியே பூஜைகள் நடைபெறுவதால், பக்தர்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியாக வழிபட்டு நன்மை பெறலாம். தமிழ்நாட்டில் நவக்கிரகங்களுக்கு என்று ஒன்பது கோயில்கள் தனித்தனியாக இருந்தாலும் அத்தனை தலங்களையும் வழிபட்ட பலன் இந்த சூரியனார் கோவிலுக்கு உண்டு.
கோயில் திருவிழாக்கள்:
இக்கோயிலில் ஆண்டு தோறும் தை மாதத்தில் வரும் இரதசப்தமி விழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. இரதசப்தமி அன்று சூரியனார் கோயிலில் விசேஷ அபிஷேகங்களும், தேரோட்டமும் நடைபெறும். இது தவிர, வருடபிறப்பு, தமிழ் மாதப் பிறப்பு ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் இங்கு மிகவும் விசேஷமானவை.
இது தவிர, சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

பிரார்த்தனைகள்:
நவகிரக தலங்களில் சூரிய தலம் முதன்மை என்பதால் பக்தர்கள் அனைவரும் தங்களது பல்வேறு மனக் குறைகள், கண் நோய், இருதய நோய், மற்றும் மஞ்சள் காமாலை ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டோரும் நோய் நீங்க பிரார்த்தனை செய்கின்றனர்.
குறிப்பாக ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச்சனியால் தோஷமுள்ளவர்கள், வேறு கிரக தோஷமுள்ளவர்களுக்கும் இந்த சூரியனார் கோவிலுக்கு 12 ஞாயிற்றுக் கிழமை வந்து பிரார்த்தனை செய்து வழிபட்டு வரத் தோஷங்கள் நீங்கும் மற்றும் காரியத் தடைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இங்கு 12 ஞாயிற்றுக்கிழமைகள் தங்கி வழிபடுவதும் சிறப்பு. ஆதித்திய ஹ்ருதய பாடலை பாடி வழிபடுதலும் நன்று.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7:00 மணி முதல் 12:30 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்; ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை திறந்திருக்கும்.
கோயிலுக்கு செல்லும் வழி:
கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ தொலைவிலும் ஆடுதுறைக்கு அருகேயும் அமைந்துள்ளது.
சூரியனார் கோயிலுக்குச் செல்ல, கும்பகோணம் அல்லது மயிலாடுதுறைக்கு இரயிலில் அல்லது பேருந்தில் வந்து, அங்கிருந்து உள்ளூர் பேருந்து அல்லது ஆட்டோ மூலம் ௯ செல்லலாம்; கோயில் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ளது, திருமானங்குடி காளியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லலாம்.
நவக்கிரக தோஷங்கள் நீங்கி, நல்ல வாழ்க்கை அமைய சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபடுவோம்..!!

Leave a comment
Upload