தொடர்கள்
அனுபவம்
தங்கத்தினும் தரம் மிக்க பத்மா - மரியா சிவானந்தம்

20260016103730488.jpg

தங்கம் தினமும் விலையேறிக் கொண்டிருப்பதை ஒரு பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் நாம்.

ஒரு பவுன் லட்சத்தைத் தாண்டி ஓடிக் கொண்டு இருப்பதால், ‘இனி எப்படி தங்க நகைகள் வாங்கப் போகிறோம்?” என்ற எண்ணம் தோன்றாதவர்கள் யாரும் இல்லை. ஏழை எளிய மக்களின் நிலை இன்னும் கடினம். எப்படி சேமித்தாலும் தங்கம் வாங்க முடியாது என்ற தீர்மானத்துக்கு அவர்கள் வந்து விட்டனர்.

இந்நிலையில் தானாக கண்டெடுத்த 45 சவரன் நகைகளை தானே எடுத்துக் கொள்ளாமல் அவற்றைக் காவல் துறையிடம் ஒப்படைத்து உரியவரிடம் சேர்ப்பித்துள்ளார் ஓர் எளிய பெண்மணி பத்மா. அவர் சென்னை தி.நகரில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக வேலை செய்பவர் அவர்.

20260016103823207.jpg

சென்ற ஞாயிறு அன்று கிருஷ்ணாம்பட்டையைச் சேர்ந்த ரமேஷ், 45 சவரன் நகைகள் அடங்கிய பையை தி நகரில் தவற விட்டிருக்கிறார். ஒரு ஐஸ்கிரிம் டப்பாவில் வைத்த பையை ஒரு தள்ளு வண்டியில் வைத்து நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தவர், மறதியாக அதை விட்டு விட்டு சென்று விட்டார். சற்று நேரம் கழித்து வந்துப் பார்த்தால் அந்த பை காணவில்லை.பதறிப் போனவர் பாண்டி நகர் காவல் நிலையத்தில் புகாரைப் பதிவு செய்தார்.

இடையில் அந்தப் பகுதியில் தூய்மை பணி செய்யும் பத்மாவின் கண்ணில் அந்த பெட்டி பட்டது, அதைத் திறந்துப் பார்த்து நகைகள் இருப்பதைக் கண்டு சற்றும் தாமதிக்காமல், கணவரை உடன் அழைத்துச் சென்று பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் வியப்பில் ஆழ்ந்த காவல் துறையினர் ரமேஷை அழைத்து நகைகளைத் தந்தனர்.

20260016103310152.jpg

இந்த பூமியில் நேர்மையும், உண்மையும் இன்னும் மறையவில்லை என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு. பத்மா நினைத்திருந்தால் அந்த நகைகளை எடுத்துச் சென்று இருக்கலாம் . அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் 45 லட்சம் சம்பாதிக்க முடியாது. அவரது வாழ்க்கையே, வசதியாக மாறி இருக்கலாம்.

ஆனால் பிறரது பொருளைக் கவர்ந்துக் கொள்ள நினைக்காத அவரது உயர்ந்த மனம் அதைச் செய்ய விடவில்லை. மாறாக நேர்மையின் வழி நின்று ஒரு நல்ல முன்னுதாரணத்தை நம் சமூகத்துக்கு தந்துள்ளார். ஏமாற்று வேலைகளும், பொய்யும், புரட்டும் பெருகி வரும் காலங்களில் பத்மா போன்றவர்கள் நம்பிக்கையை, உழைப்பின் பெருமையை, சத்தியத்தின் பால் நிற்கும் பாங்கினை உரத்துக் கூறுகிறார்கள்.

மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பத்மா இந்த பொங்கலுக்குத் தன் கம்மலை விற்று செலவைச் சமாளிக்க திட்டமிட்டு இருந்துள்ளார் என்றால் அவரது பொருளாதார நிலைமையை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.

பத்மாவின் கணவர் சுப்பிரமணி ஆட்டோ ஓட்டுநர். ஐந்தாண்டுகளுக்கு முன் அவரது ஆட்டோவில் பயணி ஒருவர் தவற விட்ட ஒருலட்சம் ரூபாயைக் காவல் துறையிடம் ஒப்படைத்தவர்.கணவரும், மனைவியும் ஒரே மனத்தவராக நேர்மையை உயர்த்திப் பிடிப்பதை பார்க்கையில் பெருமையாக இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பத்மாவின் பெயர் தமிழகமெங்கும், ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கிறது. அவரைப் பாராட்டி மீடியாக்களும், செய்தித்தாள்களும் புகழாரம் சூட்டுகின்றன. தமிழக முதல்வர் அவரை நேரில் அழைத்து ஒரு லட்ச ரூபாய் காசோலை தந்து பாராட்டி பேசியுள்ளார். லலிதா ஜுவல்லரி அதிபர் திரு கிரண்குமார் தம்பதியை வீட்டுக்கு அழைத்து, உபசரித்து ஒரு வெள்ளித்தட்டைப் பரிசளித்து அனுப்பியுள்ளார்.

20260016104241756.jpg

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு என்று தூய்மைப்பணியாளர்கள் தம் வாழ்வாதாரத்துக்காக போராடி வரும் போது அவர்களில் ஒரு பெண்மணி மிக உயர்ந்த நேர்மையைக் கடைப்பிடித்து வாழும் செயலைக் கண்டு நாம் பிரமிக்கிறோம். அவர்களுக்குக்கான கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்

"என் முகத்தைப் பார்த்து கூட யாரும் பேச மாட்டார்கள்.இன்று எல்லோரும் என்னைப் பார்த்துப் பேசுகிறார்கள், பாராட்டுகிறார்கள் ' என்கிறார் பத்மா.அவரது பணி பெற்றுத்தராத மரியாதையை அவரது நடத்தை அவருக்கு அளித்துள்ளது. இவரால், இவர் போல எளியப்பணிகளைச் செய்பவரைப் பற்றிய பார்வைகள் மாறி விடும் .

"No legacy is so rich as honesty" என்ற ஆங்கில பழமொழிக்கு இலக்கணமாக திகழும் பத்மாவின் நேர்மை ஒரு அழகான மரபை மீண்டும் புதிப்பித்துள்ளது . இந்த சமூகத்தின் மேல் அன்பும், அக்கறையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

தன் உழைப்பில் நம்பிக்கை வைத்துள்ள, அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படாத பத்மாவின் மனம் தங்கத்தை விட உயர்ந்தது. இந்த சமூகம் பத்மாக்களைப் பத்திரமாக, பொன் போல போற்றிக் கொள்ள வேண்டும்.

அவர்களே இம்மண்ணின் வெளிச்சக் கீற்று.

பிரதிபலன் எதிர்பாராது அவர் இச்செயலைச் செய்திருந்தாலும், அவரது பொருளாதரம் உயர உதவ வேண்டும். அயல்நாடுகளில் செய்வதைப் போல crowd funding வழியாக பணம் சேகரித்து அவர் வறுமையைப் போக்க வேண்டும் .