தொடர்கள்
கதை
வாழ்க்கையின் வட்டத்துள் - சுந்தர மணிவண்ணன்.

2026001708255472.jpeg

திடீரென்று வந்த அந்த ஃபோன் அழைப்பு, என்னைத் திடுக்கிட வைத்தது.

அவருக்கா? என்னால் நம்ப முடியல.

துல்லியம்.

இதற்கு மறு வார்த்தையே அவர் தான் ..

அத்தனை அக்யூரசி.

பிறந்த தேதி, நேரம்,இடம்.இவற்றைச் சொன்னால் போதும்.

லக்னத்தில் தொடங்கி, எந்த வீட்டிற்கு யார் யார் அதிபதி, யார் கண்ணில் எவர் எவர்.

அத்தனையும் மனத்தளவில் அலசி ஆராயும், ஆற்றல் படைத்தவர்.

தஸா புக்தி, காலம், விளைவுகள் என, இவர் கணக்கில் இம்மி அளவு, எதுவும் பிசகாது.

அவர், வாக்ய பஞ்சாங்கம் வழி வந்தவர்.

நம்பிக்கை இல்லாத எனக்கு , கொஞ்சம் துளிர் விட்டது.

அடிக்கடி அணுகலானேன்.

வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு

பிரச்சினைகள்.

எல்லா கேள்விகளுக்கும் இதமாக பதில் சொல்லுவார்.

சில நேரங்களில் “தைரியமாக செய்” என்பார்.

சில நேரங்களில், என் வேகத்தைத் தடுக்கவும் செய்வார்.

செய்யலாமா, வேண்டாமா?. ஓரிரு நேரங்களில் அவருக்கே சந்தேகம் வரும்.

சற்று யோசித்து, பின் செய் யென்பார்.

சக்ஸஸ் கனியாகி, கைமேல் வரும்.

“எப்படி?” என்பேன்.

“அது பாபாவின் அருள் வாக்கு” என்பார்.

அவருக்குள் ஒரு தெய்வ சக்தி.

அவர் வரைந்த கோட்டை, நான் தாண்டியதில்லை..

ஜாதகம் தவிர, பொதுவான விஷயங்களையும், பேசுவோம்.

மற்ற விஷயங்களைப் பற்றியும் நிறைய பேசுவார். எனக்கு தெரிந்ததை நானும் சொல்லுவேன்.

பரஸ்பரம் பகிர்வுகள் உண்டு. பயனுள்ளதாக இருக்கும்.

அவருக்கு அரசியல் பிடிக்கும்.

எந்தக் கட்சிக்கும் மல்லுக் கட்ட மாட்டார்.

அரசியல் வாதிகள், சினிமா ஸ்டார்கள், இவரைத் தேடி வருவர் .

“ இப்ப படத்துக்கு பூஜை போடாதீங்கன்னு சொல்லுவேன். அந்த பிரபல நடிகர் கால் ஷீட் கொடுக்கறேன்னு சொல்லிட்டார் சார்.மறு படியும் அவரை பிடிக்க முடியாது . வேற வழியிருக்கா சார் ? கெஞ்சுவார்.

“கிரஹங்கள் இருக்கிற இடத்தில தான் இருக்கும். உங்களுக்காக அதை நான் நகர்த்த முடியாதுங்க. கண்டிப்பா இப்ப செய்யாதீங்க.

சில கிரகங்கள் தற்சமயம் உங்களுக்கு ஃபேவரா இல்ல”.

“நான் அடித்துச் சொல்லியும், கேட்காம செஞ்சுட்டு, கையைக் கடிச்சுண்டு வந்து நிற்பார் ” இப்படியும் சிலர்.

“நாமினேஷனை ஃபைல் பண்ணுங்க.ஒரு சின்ன லக் இருக்கு. ஜெயிக்க சான்ஸ் இருக்கு என்பேன்”.

“சார் என்னை எதிர்க்கிறவர் ரொம்ப பவர் ஃபுல் கேண்டிடேட் சார்”

“ட்ரை பண்ணுங்க” தைரியப்படுத்துவார்

“நேரோ எஸ்கேப். எட்ஜ்ல நின்னு ஜயிச்சுட்டேன் சார்” சந்தோஷத்தோடு சொன்னவரும் உண்டு.

ரொம்பவும் பிஸியானவர்.

“ ஆடிட்டர்,வக்கீல் போல நீங்களும் பிஸியா இருக்கீங்க”.

தமாஷாய்க் கேட்பேன்.

“பிரச்சனைன்னு வந்த பின், ஆடிட்டர்,அட்வகேட்னு போவாங்க”.

“பிரச்சனை ஏதாாது வருமான்னு தெரிஞ்சுக்கவே, எங்கிட்ட தான் சார் முதல்ல வருவாங்க”.

இந்த ஃபோன் அழைப்பு வருவதற்கு முன், அவரிடம் பேசினேன்.

“நாளைக்கு வாங்க.நிதானமா பார்த்துச் சொல்றேன்” என்றார்.

அதற்குள் இப்படியா. அவருக்கா நெஞ்சு வலி.

அந்த நெஞ்சு வலி, அவரை மட்டுமல்ல,

அவரிடம் அதீத நம்பிக்கைக் கொண்டிருந்த அனைவரையும், உலுக்கிப் போட்டது.

நேரில் சந்திக்க ஆஸ்பிடல் விரைந்தேன்.

I.C.Uவில்,இதயத் துடிப்பின் ஏற்ற இறக்கத்தை நொடிக்கு, நொடி காட்டிக் கொண்டிருக்கும் மானிட்டரின் கண்காணிப்பில் இருந்தார்.

நான் உள்ளே சென்றதும்,கண்களைத் திறந்து மெல்லப் பேசினார்.

“ சார்…. எல்லாருக்கும் துல்லியமா சொல்லுவீங்க., நீங்க உங்கள பத்தி செக் பண்ணிக்கலையா”

“நமக்குன்னு வரும்போது, நம்ப கண்ணை மறைச்சுடும் சார். இது தான் ஜோதிஷம் பார்க்கிறவங்க விதியோ? தெரியல”.சோர்ந்து போய் பதில் சொன்னார்”.

டாக்டரிடம் கேட்டேன். சிறிது நேரம் மெளன மானார்.

“ அவருடைய இதயம் மிகவும் பலவீன மாக உள்ளது. இன்னொரு அட்டாக் இமீடியட்டா வந்தா, தாங்க மாட்டார். “ கடவுள் தான் கை கொடுக்கணும்.”

நம்பிக்கை இல்லாமல் கை விரித்தார் டாக்டர். நம்பர் ஒன் கார்டியாலஜிஸ்ட்.

வாழ்க்கையின் வட்டத்துள் — வந்து போகும் கணக்குகள் எத்தனை….எத்தனை…..

விடைகள் மட்டும்…….”நமக்கும் மேலே ஒருவனடா” !.

“ அவன் எழுதிய கோடில் ஓடும் AI தானோ நாமெல்லாம்” .