
மனிதர்களுடன் உறவாடுவது போல் சொற்களுடனும் உறவாடுபவர்கள் எழுத்தாளர்களும், நிருபர்களும் தான். எழுத்தாளருக்கு இருக்கும் இலக்கிய நாட்டம் நிருபருக்கும் இருந்தால் கட்டுரைகள் சுவையாகவே இருக்கும். இலக்கியத்தின் அழகே தனி. நல்ல மொழிநடை ஒரு நிருபரின் எழுத்தை ரசிக்க வைக்கிறது.
பிரபல ஆங்கில எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமான டாக்டர் சாமுவெல் ஜான்சன், ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வகுத்த இலக்கணம் இது, “Truth recommended by elegance and elegance sustained by truth”. இதில் புரிய வேண்டியது என்னவென்றால் உண்மையை நயமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த நயத்தை உண்மை தாங்கிப் பிடிக்க வேண்டும் என்பது. ஒரு நிருபரைப் பொருத்தவரை உண்மை என்பது தகவல். ‘Elegance" என்பது மொழிநடை. இந்த இரண்டும் இருந்தால் ஒரு நிருபர் தன் பத்திரிகை அலுவலகத்திலும், வாசகர்கள் வட்டத்திலும் நன்மதிப்பைப் பெறுவார்.
எதை எழுத வேண்டும் என்பதுபோல், எப்படி எழுத வேண்டும் என்பதும் முக்கியம். அதற்குச் சரியான சொற்கள் தேவை. செய்திக்குத் தகுந்த சொற்கள் அகராதியிலிருந்து தான் வர வேண்டும் என்பதில்லை. அகத்திலிருந்து பிறக்க வேண்டும். ஒரு நிருபருக்கு இருமொழிப் புலமை தேவை. தகவல்கள் எல்லாம் தாய்மொழியில் மட்டும் கிடைப்பதில்லை. சொற்கள் மீது காதல் கொண்டு ஒரு கவிஞர் சொற்பந்தல் போடலாம். ஆனால் ஒரு நிருபர் அப்படிச் செய்வதற்கில்லை. தேவையான சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சொற்களை குவிக்கக்கூடாது. செங்கல் குவியல் வீடாகுமா? கவிதைகளைப் படிக்கும் வாசகரின் மனோநிலையும், செய்தியைப் படிக்கும் வாசகரின் மனோநிலையும் வேறு வேறு. அழகான சொற்களை கவிதையில் காண்கிறான் வாசகன். பத்திரிகை படிக்கும் வாசகனுக்கு செய்தியே முக்கியம். மொழிநடை இரண்டாம் பட்சம். இருந்தாலும் நல்ல மொழிநடையை விட்டுவிடக் கூடாது.
கவிதைகளில் இலக்கிய கட்டுரைகளில் எதுகை மோனையும், அடுக்கு மொழியும் அடைமொழிகளும் வாசகர்களை கவரும். அந்த அளவுக்கு மொழியின் முக்கியத்துவத்தை ஒரு நிருபர் தன் செய்தியில் தரலாகாது. செய்தி முக்கியம். அதற்கு துணை நிற்பது மொழி.
அதனால் நிருபர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு இலக்கண முரண், ‘An adjective is the natural enemy of the noun’. இந்த அமர இலக்கண வாசகம் செய்தி எழுதும்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
அதீத அடைமொழிகள், Noun -னைக் கொன்றுவிடும். ஒரு நிருபருக்கு மொழிபெயர்ப்புத் திறமையும் தேவை. சில சமயம் ஆதார ஆவணங்களிலுள்ள சில வரிகளை மொழிபெயர்த்து மேற்கோள் காட்டவேண்டியிருக்கும். ஆகவே தமிழ் நிருபர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவு தேவை. ஆங்கில நிருபர்களுக்கு தமிழ் மொழி அறிவு தேவை. சும்மாயிருக்கும் நேரங்களில் இளம் நிருபர்கள் தாமாகவே மொழிபெயர்ப்பு பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. அதற்கு சொல்வளம் மட்டும் போதாது, இலக்கிய ஞானமும் தேவை.
சென்னையில் ஒரு இதழியல் கல்லூரி தொடங்கப்பட்டபோது Bilingual Journalist ஆன அவன் அந்தக் கல்லூரியில் Bilingual Journalism கற்பிக்கப்பட வேண்டும் என்று யோசனை சொன்னான். சரியான மொழிபெயர்க்கப்படாத வாசகங்கள் செய்தியை திரித்துச் சொல்லிவிடும் ஆபத்து இருக்கிறது. சமீபத்தில் அந்தக் கல்லூரியை தொடங்கிய ஒரு மூத்த பத்திரிகையாளர் சசிகுமார் என்பவரை ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்தான். அப்போது அவர் அந்த யோசனை பரிசீலனையில் இருப்பதாகச் சொன்னார். எல்லோரும் தாமதமாகவே செயல்படுகிறார்கள். பத்திரிகை பயிற்சி நிறுவனங்களும் அப்படித்தான் செயல்பட வேண்டுமா என்கிற கேள்வி இன்னமும் அவனது மனதை துளைத்துக் கொண்டிருக்கிறது.
ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு தமிழ் நாவலில் ‘உள்ளீடு இல்லாத சட்டை ஒன்று நடந்து போவது போல் இருந்தது’ என்று தளர்ந்த நடையில் சென்ற ஒரு கதாபாத்திரத்தை குறிப்பிட்டிருந்தார் அந்த கதாசிரியர்.
அந்த வாக்கியத்தை அவன் பத்து நண்பர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்து தாருங்கள் என்று இமெயில் மூலம் அனுப்பினான். இரண்டு பேர் சரியாக வரவில்லை என்று எழுதினார்கள். மீதி நபர்கள்,
Empty shirt walking, blank shirt walking, shirt without man image’
என்றெல்லாம் எழுதினார்கள். எதுவும் சரியில்லை என்று அவன் சொன்னபோது, அவனையே கேட்டார்கள், சரியான மொழிபெயர்ப்பு எது என்று? அவன் சொன்னான்,
He walked like a disembodied shirt’ என்று. இதைப்படித்த நண்பர்கள் தங்களுக்கு disembodied என்ற வார்த்தை தட்டுப்படவில்லை என்றார்கள். உங்களுக்கு எப்படி அந்த வார்த்தை வசப்பட்டது கச்சிதமாக மொழிபெயர்ப்பதற்கு என்று கேட்டார்கள்.
அவன் சொன்னான், ‘அதற்குத் தேவை அகராதி அறிவல்ல, இலக்கிய ஞானம்’ அதற்கு அவன் மேற்கோள் காட்டியது ஆங்கிலக் கவிஞர், ஜான் கீட்ஸ் எழுதிய “Ode to a Nightingale” என்ற பாடலில் disembodied voice என்ற வார்த்தைகள் வருகிறது. பரிட்சைக்காக படிக்காமல் இலக்கிய ரசனைக்காகப் படித்தால் அந்த வார்த்தைகள் என்றும் நினைவில் நிற்கும். பயன்படுத்த முடிகிறது என்றான்.
இங்கே Body, Embody, Embodied, Disembodied என்று சொல் விரிவுபடுகிறது. அந்தக் கவிதை அவன் தன் கல்லூரி நாட்களில் படித்தது (1963). உடன் படித்த ஒருவன் கேட்டான், ‘50 வருடங்களுக்கு மேலாக இதை எப்படி நினைவில் வைத்திருக்கிறாய்?’ அவன் சொன்னான், ‘நான் பரிட்சைக்காக படிக்கவில்லை மறந்து போவதற்கு, இலக்கிய ரசனைக்காகப் படித்தேன், நினைவில் இருக்கிறது.’ இலக்கிய ஞானம் எல்லாப் பத்திரிகையாளர்களுக்குமே தேவை, குறிப்பாக செய்திக் கட்டுரைகள் எழுதுபவர்களுக்கு. ஆனால் எல்லோருக்கும் இது இருப்பதில்லை. இருந்தால் வளமான மொழிநடை சாத்தியம்.
இங்கே ஒரு உதாரணத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். அவன் ஒரு சமயம் விடுமுறைக்காக லண்டனுக்கு சென்றிருந்தான். அது அவனுக்கு மிகவும் பிடித்தமான நகரம்.
அன்று காலை பிரபல டைம்ஸ் இதழின் Tabloid வடிவ சிறப்பிதழைப் பார்த்தான். முழுபக்கத்திலும் குறுக்கு நெடுக்கமாக இருந்த படம் மூடப்பட்ட ஒரு கண் இமை. அதற்கு மேலே இருந்த வாசகம், ‘A Supplement on Sleep அவன் அதைப் படித்துவிட்டு என்ன இப்படி Dull and Drab ஆக எழுதியிருக்கிறார்களே என்று வருந்தினான். அந்தச் சிறப்பிதழை அவன் தயாரித்திருந்தால், மூடிய கண் இமைப் படத்தின் கீழே, As tired eyelids on tired eyes - Lord Tennyson என்று குறிப்பிட்டிருப்பான்.
இங்கிலாந்திலுள்ள ஒரு ஆங்கிலப் பத்திரிகையாளர் மூடப்பட்ட கண் இமையின் புகைப்படத்தை பெரிதாகப் போட்டு, வெறுமனே தூக்கச் சிறப்பிதழ் என்றா எழுதுவது? Tennyson என்ற கவிஞரின் அருமையான கவிதை வரிகளை தலைப்பாக போட்டிருக்க வேண்டாமா? கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர் இருவருக்குமே ஏன் அந்தக் கவிதை வரிகள் நினைவுக்கு வரவில்லை. அவர்கள் இலக்கிய ஞானம் இல்லாதவர்கள். அதே தூக்கச் சிறப்பிதழை அவன் தமிழில் தயாரித்திருந்தால், ‘தூக்கம் கண்களை தழுவட்டுமே’ என்று கண்ணதாசனின் வரியை படத்தின் தலைப்பாக கொடுத்திருப்பான். இலக்கியத்தின் அழகே தனி. அது செய்திக்கு மெருகூட்டுகிறது.
இலக்கண சுத்தமாக எழுதுவது முக்கியம். இலக்கிய ஞானத்துடன் எழுதுவது அழகு. இந்த இரண்டும் இருந்தால் ஒரு நிருபரின் செய்திக்கட்டுரைகள் இலக்கியமாகவே நிலைத்து நிற்கும்.

Leave a comment
Upload