தொடர்கள்
சோகம்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - ராம்

20260107094855468.jpeg

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..

இது சினிமா ஹீரோக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கானதும் மட்டுமல்ல. நம்மோடு வாழ்ந்து தன்னைச் சார்ந்தவர்களை ஊக்குவித்து ஒரு ஹீரோவாக வாழ்ந்து மறைந்தவர்களுக்கும் பொருந்தும்.

இந்த வாரம் திருச்சியில் இருந்து ஒரு போன் கால். வெங்கட்ரமணி மாமா தவறிவிட்டார்.

உறவினர் என்ற அளவில் அவர் நெருக்கமானவர் தான். அன்பாக பழக கூடியவர். தொழிலதிபர். பண்பாளர். குடும்பத்தை நேசிப்பவர்.

ஹாங்காங் வந்திருந்த போது அவருடன் பல இடங்களுக்கு சென்று வந்ததும் நினைவுக்கு வந்தது.

இதெல்லாம் தெரியும். ஆனால் அவரது இறுதிச் சடங்கிற்கு வந்த கூட்டம அவரது வரலாறை பறைசாற்றியது.

அவரது இறுதி சடங்கில் மரியாதை செய்வதற்கு பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் ஒரு பொருட்டல்ல.

ஒரு சகாப்தத்தின் முடிவை சொல்லியது அவருக்கு வந்த ஏராள மாலைகள். கூட்டம். கண்ணீர்.

ரமணி என்று அனைவராலும் அழைக்கப்படும் மங்களம் எஸ்டேட்ஸின் நிறுவனர் வெங்கட் ரமணி. ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர்.

பத்து பேரோடு பிறந்த அவர் பெற்றோர் பெரிய பணக்காரர்கள் இல்லை. ஒரு சாதாரண அரசு வேலையில் இருந்தவர் தான். ஆனால் படிப்பின் மகத்துவத்தை அறிந்திருந்தார்கள். பிள்ளைகளை பொறியியல் பட்டப்படிப்பு படிக்க வைத்தார்கள்.

69ல் அவருக்கு கல்யாணத்திற்கு ஒரு வருடம் முன்பு ஒரு மோட்டார் பைக் விபத்தில் தப்பியவர் ரமணி. அவரது மனைவி சந்திராவை கைப்பிடித்தவுடன் அவரது வாழ்க்கை வேகம் பிடித்தது.

45 வயதிலேயே விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு தன்னுடைய கட்டிட தொழிலைத் துவங்கினார்.

அரசு வேலையை துறந்து விட்டு தனியாக தொழில் துவங்க மனைவியின் சம்மதம் இல்லாமல் யாராலும் ஜெயிக்க முடியாது.

கூட்டுறவு வீட்டு திட்டங்கள் அவருடைய யோசனை தான். திருவாணைக்காவலில் இயங்கும் மங்களம் கன்வெஷன் ஹால் திருமணங்களுக்கு மட்டுமல்ல உள்ளூர் இசை ரசிகர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். திருச்சி பகுதியில் ஃபிளாட் அறிமுகப்படுத்தியதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.

பணம் பண்ணுவது யாராலும் முயற்சித்தால் கைகூடும். ஆனால் ஊனமுற்ற குழந்தைகளுக்காக அவர் இலவசமாக கட்டி கொடுத்த பள்ளியும், அன்னை ஆஷ்ரமும் அவரது தர்ம சிந்தனைக்கு ஒரு சான்று.

அவரது தாத்தா காலத்திலிருந்தே அவர் குடும்பம் திண்ணியத்தில் இருக்கும் சுப்ரமண்ய சுவாமி கோவிலை ஆதரிப்பது அவர் தொடர்ந்து தடைபடாமல் செய்து வந்த நல்ல காரியம்.

அவரது சில தர்ம காரியங்கள் வெளியே தெரிந்தவை. தெரியாமல் செய்த அன்னதானங்கள் ஏராளம்.

அவருக்கு வெளிநாடுகள் சுற்றி பார்ப்பதில் அலாதி ஆர்வமுண்டு. பயணங்கள் அவரது ஆகப் பெரும் அனுபவங்கள்.

அவரது நாணயத்திற்கும், வியாபாரம் என்று வந்தால் அந்த வியாபார தர்மத்திலிருந்து மீறாமல் இருந்ததற்கும் சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

மூன்று மகன்களுக்கு தன்னுடைய வியாபார உலகை வெற்றிகரமாக விட்டுச் சென்றிருக்கிறார்.

அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும் அவரது குணமும், பணிவும், நட்பும், சமூக சிந்தனையும் எத்தனை ஆழமானது என்று.

வியாபாரத்தை விட அவர் தன் குடும்பத்தாருக்கு விட்டுச் சென்ற அற்புத குணம் தான் ஆகப் பெரும் சொத்து.

அவர் மகன்களும், மருமகள்களும், பேரப் பிள்ளைகளும் அதை பல மடங்கு காப்பாற்றுவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.