
அன்று (21-02-2026) பெங்களூர் சொவ்டய்யா நினைவு மண்டபத்தில் (உடுப்பா சங்கீத விழாவின் சார்பாக) நடந்த பத்மஸ்ரீ ரஞ்சனி பத்மஸ்ரீ காயத்ரி சகோதரிகளின் கச்சேரி, எப்போதும் போல் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
ஆம், இந்த சகோதரிகள், கர்நாடக இசைத்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசால் 2026 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளனர் என்பது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி.
நிமிடத்துக்கு ஒரு முறையேனும் "ஆஹா ", "சபாஷ்", "பலே" என்று ரசிகப்பெருமக்கள் பொதுவைப்போல் சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்றால் அதற்க்கு பல காரணங்கள் இருந்தன.
விறுவிறுப்பாக தீக்ஷிதரின் பேகடா ராக கீர்த்தனையுடன் (வல்லப நாயகஸ்ய) கச்சேரி துவங்கியது.
அந்த ஆரம்ப கீர்த்தனையிலேயே பொங்கி வழிந்துக்கொண்டிருந்த சபை மயங்கிவிட்டது. பிறகு, ஒரு விஸ்தாரமான வராளி ஆலாபனை காயத்ரியிடமிருந்து. பிடில் விதுஷி சாருலதா ரகுராம் அந்த அற்புதமான ஆலாபனைக்கு தகுந்த பதில் கொடுத்தார். ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் "கருண ஏலா கண்டே" எனப்படும் அடிக்கடி கேட்கப்படாத க்ரிதி விஸ்தாரமாக கையாளப்பட்டது.
அடுத்து, கனகதாசரின் வலஜமுகி என்று தொடங்கும் கானடா ராக பாட்டு. தேன் மழை கொஞ்சம் கனக்கத்தொடங்கியது.
ரஞ்சனி மாண்டு ராகத்தை ஆரம்பித்தார்.
என்ன பாட்டாக இருக்கும் என்று நினைத்த என்னை - பாட்டு அல்ல பல்லவி என்னும் விதத்தில் விஸ்தாரமாக ஆலாபனை செய்தார். அந்த அற்புதமான எடுப்புக்கு காயத்ரி மேல் ஸ்தாயியில் மெருகு ஏற்றினார். ஆஹா! மழை கன மழையாக மாறியது. நானும் என் கை வரிசை காட்டுகிறேன் என்று சாருலதாவும் தனக்கே உரிதான விதத்தில் பிடில் வாசித்தார்.
பாரோ க்ரிஷ்ணய்யா என்கிற புரந்தர தாசர் பாட்டின் முதல் வரியில் மிக அழகாக, ஆனால், மிகை இல்லாமல் இரு சகோதரிகளும் மாற்றி மாற்றி பாடி சபையை ஒருமத்தமாக கவர்ந்து விட்டார்கள். அப்போதுதான் எனக்கு இந்த ரிவியூவின் தலைப்பு தோன்றியது: அந்த மாண்டு ராக மயக்கத்திலிருந்து மீண்டு வரமுடியாமல் போனதுமட்டும் இல்லை. மீண்டும் மீண்டும் அந்த மாண்டு கேட்டுக்கொண்டே இருக்காதா என்று மனம் ஏங்கியது.
பாரதியாரின் தீராதவிளயாட்டுப்பிள்ளை பாடலில் "கள்ளால் மயங்குவது போலே" என்ற வரியை லால்குடி ஜெயராமன் அதி அற்புதமாக வாசித்திருப்பது எல்லோரும் அறிந்ததே: இன்று அந்த சரணம் மாண்டு ராகத்தில் ஏன் பதிக்கப்பட்டது என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது!
பாதி மயக்கத்தில் அடுத்து வந்த ராகமாலிகை, தனி ஆவர்த்தனம், விருத்தம், அபாங், மங்களம் எல்லாம் ஆனந்தமாக இருந்தும் கச்சேரி முடிந்த வெகு நேரம் வரை அந்த மாண்டு ராகமே காதில் ரீங்காரித்துக்கொண்டிருந்தது.

Leave a comment
Upload