தொடர்கள்
கதை
பக்கத்து வீடு - எஸ்.மீனா

20260128082125107.jpeg

லேசாகமழை தூறிக்கொண்டிருந்த

ஒரு மாலைப் பொழுது. ஆபீஸ் முடிந்து ராஜேஷ் வீட்டுக்கு சீக்கிரமே திரும்பிக் கொண்டிருந்தான். வீட்டை நெருங்கும்போது பக்கத்து பில்டிங்கில் இருந்து சமையலின் வாசனை!.. சட்... இன்றைக்கு சீக்கிரமே ஆரம்பித்து விட்டார்களா.. என்று மனதுக்குள் முனகியபடி உள்ளே நுழைந்தான். வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பெண் ரம்யாவும் பிள்ளை விக்னேஷும் "ஹய் அப்பா சீக்கிரம் வந்துட்டாரு" என்று கத்தியபடி ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள்.

சமையலறையில் இருந்து சத்தம் கேட்டு வெளியே வந்தாள் அவன் மனைவி வித்யா.

" என்ன ஆச்சரியமா இருக்கு அதான் மழை தூரது போல இருக்கு.. " புன்னகைத்தபடி.. காப்பியை கலந்து கொண்டு வந்தாள்..

"அப்பா நாளைக்கு லீவு தானே, நம்ம பீச்சுக்கு போலாமாப்பா.". என்று கொஞ்சலாக வந்து மடியில் வந்து குழந்தைகள் உட்கார்ந்தன..

"ஓ போலாமே.. அப்பா கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன் நீங்க விளையாடுங்க" என்ற ராஜேஷ்

"என்ன வித்யா இன்னைக்கு ரொம்ப சீக்கிரமே பக்கத்துல இருந்து ஸ்மெல் வருது.. அது என்னமோ ஒரு மாதிரி எரிச்சல் ஆயிடுது"...என்றான் மூக்கைத் தேய்த்துக் கொண்டே...

வித்யா ராஜேஷின் குழந்தைகள் இருவரும் கேந்திரிய வித்யாலயாவில் படிக்கிறார்கள். ஸ்கூலுக்கு பக்கத்துல இருக்கட்டும் என்று இந்த வீட்டுக்கு குடி த்தனம் வந்து ரெண்டு வருஷம் ஆகிறது. நியாயமான வாடகை, தண்ணீர் வசதி, எல்லாம் நன்றாகத் தான் இருக்கு.ஆனால் பக்கத்தில் இருந்து சதா வரும் அந்த வாசனை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அது மட்டுமில்லை.காலை 4 மணிக்கு கேட்கும் குக்கர் விசில், பெரிய பாத்திரங்களை உருட்டல்.. ஆட்களின் பேச்சு சத்தம்.. போதாக் குறைக்கு அந்த நேரத்தின் அமைதிக்கு பொருந்தாத சத்தமாக கேட்கும் சினிமாப் பாடல்கள்.....

இஞ்சி பூண்டு மசாலா எல்லாம் வேண்டாம் என்று ஒதுக்குபவன் இல்லை. அளவாக சாப்பிடுவார்கள். ஆனால் பக்கத்தில் முனியாண்டி விலாசுக்கு இணையான ஒரு ஹோட்டலின் சமையலறை இவர்களை ஒட்டின மாதிரி....எந்த நேரமும் அங்கிருந்து வரும் வாசனை வித்யாவிற்கும் அவனுக்கும் எல்லாம் சேர்த்து ஒரு தினுசான உணர்வு..இருவரும் அமைதியான சூழலில் இருந்து பழகிய வர்கள்...

" இது என்ன புதுசா? எனக்கு பழகியே போச்சு போங்க " என்றாள் அலுப்போடு...

" இன்னும் கொஞ்ச நாள் தான் வித்யா அதுக்கப்புறம் இங்கே இருந்து கிளம்பிடலாம் "

" கிளம்பி என்ன செய்யறது.. பிள்ளைங்க ஸ்கூல் பக்கத்துல இருக்கு இல்ல... "

" அடுத்த மாசம் டிரான்ஸ்பர் போட்டுவிடுவார்கள் வித்யா... எப்படியும் கிளம்பித் தான் ஆகணும்..

" அப்படியாங்க எந்த இடத்துக்கு " என்றாள் கொஞ்சம் கவலையோடு

" " அடையாறு தான் போடுவாங்க, அங்க ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கலாம்.. வீடு கூட அமைஞ்சா மாதிரி தான் வச்சுக்கோயேன்... "

" அதுக்குள்ளவா.. எப்படிங்க.."

" என்னோட பிரண்டு தம்பி வீடு அங்க இருக்கு. அவங்க குடும்பத்தோட துபாய் போயிடறாங்களாம். நம்பிக்கையான ஆளா இருந்தா வீடு வாடகைக்கு விடலாம் அப்படின்னு சொன்னான்... எனக்கு இப்போ ட்ரான்ஸ்பர் ஆகும் னு தெரிஞ்சதும் நீயே இருந்துக்கோடா ராஜேஷ்னு "சொல்லிட்டான். என்றான் மலர்ச்சியோடு....

குழந்தைகளிடம் சொன்னபோது

,ஓ நோ!"நாங்க எங்க பிரண்டுகளை விட்டுட்டு எப்படி வரது என்று இரண்டு பேரும் அழ ஆரம்பித்து விட்டார்கள். குழந்தைகளை ஒருவாறு சமாதானம் பண்ணி, மறுநாள் நால்வரும் அடையாறுக்கு போய், வீட்டை பார்த்து வந்தார்கள். சின்ன பிளாட்ட தான். எல்லா வசதியும் இருந்தது. இரண்டு பக்கமும் பெரிய பெரிய வீடுகள். வலது பக்கம் இருந்த வீடு பழங்காலத்து வீடாக இருந்தாலும் மாமரமும் பலா மரமுமாக அழகாக இருந்தது. அவர்களுக்கு பிடித்து விட்டது.

அடுத்த மாதமே குழந்தைகளுக்கு விடுமுறையில் வீட்டை மாற்றி விட்டார்கள். ஸ்கூலும் மாறியாச்சு. அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளோடு ரம்யாவும் விக்னேஷும் சட்டென்று ஒட்டிக்கொண்டு விட்டார்கள். ஒரு வழியாக எல்லாம் செட் ஆகி நிம்மதியை உணர்ந்தான் ராஜேஷ்.

பக்கத்து வீட்டு தோட்டத்தில் குழந்தைகள் நன்றாக விளையாடுவார்கள். ஆறு மாதம் சென்று இருக்கும். பக்கத்து வீட்டில் ஏதோ கட்டுமான வேலை ஆரம்பித்தது.

தடையாக இருந்த சில மரங்களை எடுத்து விட்டார்கள். இரண்டு மூன்று ரூம்கள் ஷீட் போட்டு, சுவர் எடுத்து வெள்ளையடித்து எல்லாம் கடகடவென்று ஆகிவிட்டது. வீடு கை மாறிவிட்டது. பால் காய்ச்சி ஆகிவிட்டது... பேச்சு சத்தம்,ஆட்கள் நடமாட்டம் என்று பரபரப்பாக இருந்தது.

ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்த ராஜேஷுக்கு மூக்கை துளைத்தது! முனியாண்டி விலாஸ் மசாலா வாசனை! சாய்பாலா கேட்டரிங்காரர் அந்த வீட்டை வாங்கி விட்டார்களாம். கன்னத்தில் கைவைத்தபடி சொன்னாள் வித்யா!

குழந்தைகள் சத்தம் வாசலில் கலகலவென்று கேட்டது. புது நண்பர்களோடு அவர்கள் விளையாட ஆரம்பித்து விட்டார்கள்! அவர்கள் உலகம் தான் எத்தனை நிர்மலமாக.எளிதாக சின்ன எதிர் பார்ப்புகளோடு..... சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைப். பொருத்திக் கொண்டு...

அவனுக்கு அவர்களை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது! குழந்தை கள், மௌனமாக ஏதோ சொல்வது போல் தோன்றியது அவனுக்கு!