தொடர்கள்
கதை
ஒரே ஒரு கமெண்ட் - சுந்தர மணிவண்ணன்

.20260128082326469.jpeg

இன்னிக்கு தாத்தாவுக்கு மூட் ரொம்பவே அப்செட். எதைக் கேட்டாலும் “ஹூம்…” என்ற ஒரே பதில். வீட்டைச் சுற்றி நடந்து கொண்டே இருந்தார்.

சிறிது நேரம் கவனித்துப் பார்த்தேன். காரணம் புரிந்தது. கையில மொபைல் இல்லை!

சக்கரம் போல், இருபத்து நாலு மணி நேரமும் அது அவர் கையில் சுற்றும் .

டீத் வாஷ் முடிந்ததும், அந்த மொபைல் தான் கையில் கண் சிமிட்டும்.

காலை எழுந்ததும் முதல் பார்வை மொபைலுக்கே. இன்று அது கையில் இல்லை. முகமும் சுருங்கி, மனமும் சலிப்பாக இருந்தது.

“மொபைலை எங்க வச்சீங்க தாத்தா? சொல்லுங்க… நான் கண்டுபிடிச்சு தாரேன்,” உதவிக் கரம் நீட்ட ஓடினேன்.

“அந்த மொபைல தூக்கி தூரப் போடுடா!” என்றார் கோபமாக.

“ தாத்தா? ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் இல்லாம உங்களுக்கு நாளே நகராதே. என்ன ஆச்சு?”

அவர் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.

“இப்ப எந்த பயலும் ஒரு கமெண்ட்ஸோ,லைக்ஸோ எதுவும் போட மாட்டேங்கிறான்,” சலிப்பின் உச்சத்துக்குத் தாவினார் தாத்தா.

“முன்னாடி பக்கம் பக்கமா எழுதுவேன். நூற்றுக்கணக்கில் கமெண்ட்ஸ் வரும்.

பாராட்டு, விமர்சனம்னு எல்லாம் கலந்து

இருக்கும். இப்ப எவனும் ஒரு லைக்குக்கூட போட மாட்டேங்கிறான். மனசே வருத்தமா இருக்கு.”

நான் மெதுவாகச் சிரித்தேன்.

“தாத்தா… நீளமா படிக்கிற அந்த காலம் போயிடுச்சு. எல்லாரும் வேகமா வாழ்றாங்க.

‘Brother’ கூட ‘Bro’ ஆயிடுச்சு. Youக்கு U, Areக்கு R. வார்த்தைகளே சுருங்கிடுச்சு. இந்த மொழியெல்லாம் எவன் கண்டு பிடிச்சான்னு தெரியல. காலம் மாறுது, உலகம் வேகமா ஓடுது.”

தாத்தா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து மெதுவாக,

“நேத்து ஏதோ புதுசா ஒரு போஸ்டிங் போட்டேன்னு சொன்னியே.அதுக்கு ஏதாவது புதுசா கமெண்ட் வந்திருக்கா பார் தாத்தா”

ஃபோனை மெதுவாக அவரிடம் நீட்டினேன்.

ஃபோனைத் திறந்தார். திரையைப் பார்த்ததும் தாத்தாவின் முகம் திடீரென மலர்ந்தது.

“ஒரே ஒரு கமெண்ட் வந்திருக்குடா!” குழந்தை போல மகிழ்ச்சியுடன்.

ஒரே ஒரு கமெண்ட். தாத்தா அதுக்கே இவ்வளவு சந்தோஷமாயிட்டார்….

“என்ன விஷயம்?” சொல்லு தாத்தா”. அவசரப் படுத்தினேன்

அவர் சற்றுத் தயங்கினார்.

“போன வாரம் காதலர் தினம். என் பள்ளி நாட்களில் நடந்த ஒரு சிறிய காதல் நினைவை ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன்.”

“யாரைப் பற்றித் தாத்தா?”

“ என் கனகா பற்றி தான்… என் வகுப்பில் என்னோடு படித்தவள். ஒரு நாள், ஒரு காதல் கவிதையை, அவள் கணக்குப் புத்தகத்தில் மறைத்து வைத்து விட்டு, மன்றாடி மன்னிப்புக் கேட்டேன்.

சிரிச்சுக் கிட்டே புத்தகத்தை திருப்பித் தந்தாள்”.

பிறகு அவள் வாழ்க்கை வேற வழியில் போயிட்டது. காலேஜ் படிப்பு, கல்யாணம்னு. இன்னிக்கு அமெரிக்காவில் செட்டில் ஆயிட்டாளாம். அந்த பதிவு அவளுக்குக் somehow கண்ணில் பட்டிருக்கிறது. ஃபிரணட் ரெக்ஸ்ட்டில் கனெக்ட் ஆகிட்டா.

நான் திரையை நெருங்கிப் பார்த்தேன்.

“இன்னும் அந்த ஞாபகத்துல இருக்கீங்களா?” அவள் தந்த கமெண்ட்.

தாத்தாவின் முகத்தில் வெட்கமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு மென்மையான ஒளி படர்ந்தது.

அந்த நிமிஷத்தில் எனக்கு புரிந்தது —

உலகம் வேகமாக மாறுகிறது.

மொழி மாறுகிறது. பழக்கங்கள் மாறுகிறது.

ஆனால் சில நினைவுகள் மட்டும்,

காலத்தைத் தாண்டி, இன்னும் இதயத்துக்குள் அதே வெப்பத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன.