
புருஷனைப் பந்தாடிய மனைவிகள் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள் என இதோ ஒரு சான்று.
ஔவை பசியில் சோர்ந்து போய் நடந்து வருவதைக் கண்டு ஒரு சாது கணவனுக்கு மனம் பொறுக்க வில்லை. உணவருந்த வருமாறு ஔவையை வீட்டுக்கு அழைத்து வந்தான்.
வீடு நெருங்கிய போதே மனைவியின் ஆங்காரப் போக்கு நினைவுக்கு வந்தது. ஔவையை திண்ணையில் அமர்த்தி விட்டு உள்ளே போனான்.
தலை வாரிக் கொண்டிருந்த மனைவியின் அருகே அமர்ந்தான். அவளை தாஜா செய்யும் வண்ணம்,அவள் முகத்தில் விழுந்த தலைமுடியை சீப்பினால் வாரினான். பேன் கூடப் பார்த்து நீக்கினான். விருந்துக்கு ஒரு கிழவியை அழைத்து வந்திருப்பதாய் மெல்லவே சொன்னான்.
அவ்வளவு தான் ! அந்த சாதுவை அவள் திட்டித் தீர்த்தாள். சாமியாட்டம் ஆடினாள். கையில் பழைய முறத்தை எடுத்துக் கொண்டு அடிக்க துரத்தலானாள். இதையெல்லாம் கண்ணுற்ற ஔவைப் பாட்டி நமக்கென அந்தக் காட்சியை நேர்முக வர்ணனை செய்கிறாள் பாருங்கள்:
இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன்வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்தியே
பாடினாள் ஆடினாள் பாரப் பழமுறத்தாற்
சாடினாள் ஓடோடத் தான்."
அந்தக் கணவனின் நிலை கண்டு இரங்கி மேலும் பாடினாள் . அதையும் கேளுங்கள். இதற்கு என் விளக்கம் தேவையில்லை. அத்தனை எளிய, சுடும் வரிகள்:
சண்டாளி சூர்ப்பநகை தாடகையை போல் வடிவு
கொண்டாளைப் பெண்டென்று கொண்டனையே - தொண்டா!
செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.
ஹூம்ம்... என்னா அடி!!

Leave a comment
Upload